இலங்கைச் செய்திகள்


கிளிநொச்சியில் பதற்றமான சூழ்நிலை

பெண் அதிகாரி தாக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக வழக்குப் பதிவு

விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை : சபாநாயகர் சபையில் தகவல்

ஆஸியில் கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜையான கமர் நிசாம்தீனுக்கு நீதி கோரி தேரர்கள் உள்ளிட்டோர் போராட்டம்

யாழ். பருத்தித்துறையில் பதற்றம்  ; தென்னிலங்கை மீனவர்களை மீட்பதில் பொலிஸார் - மீனவர்களுக்கிடையில் இழுபறி

தமிழமுதம் மாபெரும் தமிழ் விழா யாழில் 


கிளிநொச்சியில் பதற்றமான சூழ்நிலை


19/09/2018 கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களின் கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்தவர்கள் அகற்ற முயன்றதால் அங்கு சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

சாந்த புரம் பகுதியில் கடந்த காலங்களில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் விவசாயத்தினை மேற்கொண்ட பின்னர் கைவிட்ட நிலத்தில் பொதுமக்கள் தற்காலிக கொட்டகைகளை அமைத்து வாழ்கின்றனர்.
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில்  அம்பாள்நகர் பகுதியில் காணப்படுகின்ற படித்த மகளீர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தனியார் காணிகளை  மீள்குடியேற்றத்தின் பின்னர்  இராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர்  தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
தற்போது குறித்த காணிகள்  அவர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில் சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த காணியற்ற வறிய மக்கள் குறித்த காணியில் கொட்டில்களை அமைத்து குடியிருக்க  முற்பட்ட போது. இன்றைய தினம் மீண்டும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தை சேர்ந்துவர்கள் அக்காணிகளை பிடிக்க முற்பட்ட போது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களின் குடிசைகளை பலவந்தமாக அகற்றியுள்ளனர் இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நிலையில் அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்ப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
நன்றி வீரகேசரி பெண் அதிகாரி தாக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

19/09/2018 திருகோணமலை, பட்டனமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முருகாபுரி கிராமசேவைப் பிரிவின் பெண் அதிகாரி தாக்கப்பட்டதையும் அவரது அலுவலக உடமைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட பெண்கள் அமையம், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இராவணசேனை போன்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டமானது இன்று காலை 9.00 மணியளவில் பட்டனமும் சூழலும் பிரதேச செயலகத்தின் முன் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முரகாபுரி கிராம சேவகர் ஜமாலியாவில் அமைந்துள்ள அலுவலகத்தில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு வந்த குண்டர்கள் மற்றும் அரசியல் வாதி ஒருவரும் அத்துமீறி அலுவலகத்தினுள் நுழைந்து பெண் அதிகாரியை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அவர் மீது தாக்குதல் நடத்தி, கொலை அச்சுறுத்தல் விடுத்தனர்.
இந் நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டார். இச் செயற்பாடானது சட்டத்தின் மீது பொது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இழக்கச் செய்வதாகவும், இதற்கு உரிய நீதி எமக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரியே மேற்படி அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.  நன்றி வீரகேசரி 
புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக வழக்குப் பதிவு

18/09/2018 புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் இன்று வழக்குப் பதிவு செய்தனர்.
பெண் சட்டத்தரணிக்கு எதிரான குற்றப்பகிர்வை முன்வைக்க சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுமதி வழங்குமாறு பொலிஸார் கோரியமைக்கு அமைய ஒப்புதல் வழங்கிய நீதிமன்றம், வழக்கை வரும் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
புத்தரின் உருவம் பொறித்த சேலை அணிந்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி ஒருவரை யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் பொலிஸார் தேடினர்.
இந்தச் சம்பவம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
பொலிஸ் அவசர இலக்கமான 119 இற்கு வந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் அந்தச் சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவேண்டும் – அவரைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று அங்கிருந்த சட்டத்தரணிகளிடம் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் பொலிஸாரால் தேடப்பட்ட சட்டத்தரணி நீதிமன்ற வளாகத்திலிருந்து வீடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்துக்குள் மீளவும் வருகை தந்த சம்பந்தப்பட்ட பெண் சட்டத்தரணியை யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் வழங்க வைத்தார்.
எனினும் பெண் சட்டத்தரணி, பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த வேளை புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணித்திருக்கவில்லை.
“இந்தியாவிலுள்ள நண்பர் ஒருவரால் எனக்கு சேலை ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதில் புத்த பெருமானுடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்று நான் அறிந்திருக்கவில்லை. புத்தரை அவமதிக்கும் எண்ணத்தில் நான் அந்தச் சேலையை அணிந்திருக்கவில்லை” என்று இளம் பெண் சட்டத்தரணி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.
யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்த விவகாரம் மேற்கொண்ட நடவடிக்கை எடுப்பதிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எனினும் சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின், அந்தப் பெண் சட்டத்தரணியை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது கைபேசியின் ஒளிப்படம் எடுத்த விவகாரம் பூதாகரமானது.
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கைபேசியை பெண் சட்டத்தரணி மிரட்டிப் பறித்தெடுத்தார் என்ற குற்றச்சாட்டு பொலிஸாரால் முன்வைப்பட்டது.
பொலிஸாரின் இந்த அத்துமீறல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் உறுதியாகத் தீர்மானித்தது. பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வது தொடர்பிலும் சங்கம் ஆராய்ந்து வருகிறது.
இந்த நிலையில் பெண் சட்டத்தரணி, புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்து வந்த விவகாரத்தை கையிலெடுத்த பொலிஸார், அதனை நீதிமன்றுக்குக் கொண்டு வந்துள்ளனர். நன்றி வீரகேசரி விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை : சபாநாயகர் சபையில் தகவல்

18/09/2018 பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தொடர நடவடிக்கையெடுத்துள்ளதாக  சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்து தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக சபாயாகரான நீங்கள் இந்த சபைக்கு அறிவித்திருந்தீர்கள். அதன்படி சட்ட மா அதிபரினால் அது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டதா? அது வழங்கப்பட்டிருந்தால் அது என்ன? அவ்வாறு வழங்கப்படாவிட்டால் அதனை எப்போது பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றீர்கள்? என சபாநாயகரிடம் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.
இதன்போது பதிலளித்த சபாநாயகர் சட்டமா அதிபர் தேவையான நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது வழக்கு தொடரவும் நடவடிக்கையெடுத்துள்ளார் என தெரிவித்தார். நன்றி வீரகேசரி ஆஸியில் கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜையான கமர் நிசாம்தீனுக்கு நீதி கோரி தேரர்கள் உள்ளிட்டோர் போராட்டம்

18/09/2018 அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையான கமர் நிசாம்தீனுக்காக நீதி கிடைக்க வேண்டும் என கோரி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைதி போராட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

இதில் பௌத்த தேரர் உட்பட பலர் கலந்து கொண்டு கமர் நிசாம்தீனுக்கு நீதி கிடைக்க வேண்டும், கமர் நிசாம்தீனுடனான தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சென்தோமஸ் கல்லூரி மற்றும் கொழும்பிலுள்ள ஆசியன் சர்வதேச பாடசாலையின் பழைய மாணவரும் சிட்னி சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தற்போது உயர் கல்வியைத் தொடர்பவருமான கமர் நிசாம்தீன் என்பவர் தீவிரவாத குற்றச்சாட்டில் அண்மையில் அவுஸ்திரேயாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ். அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி ஆளுமைகளைப் படுகொலை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்கான திட்டங்களை தீட்டிய குற்றச்சாட்டின் பேரிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றுக் கொண்டவாறே அவுஸ்திரேலிய பொலிஸ் பிரிவின் உயர் மட்ட செயற்திட்டமொன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தருணத்திலேதான் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
கணினி, இணைய பாதுகாப்பு கற்கைகளில் தேர்ச்சி மிக்க இவர் அவுஸ்திரேலிய பொலிஸ் பிரிவில் கண்காணிப்பு, கணினி பாதுகாப்பு தொடர்பான மென்பொருள் உருவாக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.   
சிட்னியில் பயங்கரவாத தாக்குதலொன்றை நடத்துவதற்கான திட்டங்களை உள்ளடக்கிய, கமருடையது என நம்பப்படும் குறிப்புப் புத்தகமொன்றை சக பணியாளர் கண்டெடுத்து பொலிசாரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 


யாழ். பருத்தித்துறையில் பதற்றம்  ; தென்னிலங்கை மீனவர்களை மீட்பதில் பொலிஸார் - மீனவர்களுக்கிடையில் இழுபறி

18/09/2018 வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனாலும் அந்த மீனவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில் அங்கு வந்த காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையினரை களமிறக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தத நிலையில் திடீரென தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை பொலிஸார் தம்முடன் அழைத்துச்சென்றனர். 
இதனால் மேலும் குழப்பம் அதிகரித்ததுடன் பொலிஸ் மற்றும் அப் பகுதி மீனவர்களுக்கிடையே முரண்பாடுகளும் ஏற்பட்டு பதற்றமானதொரு சூழல் நிலவியது.
இதேவேளை தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பேர்களில் ஆறு பேரை பலவந்தமாக. பொலிஸார் மீட்டுச் சென்றனர் .
ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து அங்குள்ள அருட்தந்தை ஒருவர் மூலமாக ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.
இவ்வாறு குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது போதிலும் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அங்கு நின்ற அப் பகுதி மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் பலரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 


தமிழமுதம் மாபெரும் தமிழ் விழா யாழில்

17/09/2018 நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் என்ற தொனிப் பொருளில் இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்துகின்ற தமிழமுதம் - மாபெரும் தமிழ் விழா நேற்று யாழில் நடைபெற்றது
தமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களை வெளிக் கொணரும் வகையில் கலாசார ஊர்வலம் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் இருந்து ஆரம்பித்து பல்கலைக்கழக மருத்துவ பீட மைதானத்தைச் சென்றடைந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜக்சன் லீமா தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் ஈழத் தமிழர் விடுதலையில் பேரவாக் கொண்ட ஓவியர் எனப் புகழப்படும் தமிழக ஓவியர் புகழேந்தி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். 
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன், பல்கலைக்கழக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்வுகள் இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
நன்றி வீரகேசரி
No comments: