வாழ்வை எழுதுதல் - அங்கம் 03 மருந்துள்ள வாழ்வே குறைவற்ற செல்வம்! ஊடகங்கள் உருவாக்கும் மருத்துவ நிபுணர்கள் !! - முருகபூபதி


எனது முதல் சிறுகதை கனவுகள் ஆயிரம் (1972 ஜூலை)  மல்லிகையில் வெளியானதும்  அதனைப்படித்த சுலோ அய்யர் என்பவர், எனது பிரதேச மொழிவழக்கினையும் கதையின் போக்கினையும் பற்றி  தனது நயப்புரையை அடுத்த மாதம் மல்லிகை ஆண்டுமலரில் எழுதியிருந்தார்.
அவர் யார்? என்பதை பின்னர்தான் அறியமுடிந்தது. அவர் தபால் திணைக்களத்தில் பணியாற்றிய ரத்னசபாபதி அய்யர் எனவும் மல்லிகை ஜீவாவின் நண்பர் எனவும் அவரது மனைவி சுலோசனா என்றும் அறிந்துகொண்டேன்.
அதன்பிறகு அவரும் எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைந்துவிட்டார். அந்த 1972 ஆம் ஆண்டு சிலமாதங்களேயான குழந்தையாக இருந்த அவரது மகள் பானுவுக்கும் மணமாகி அவரும் தற்பொழுது இரண்டு பெரிய ஆண்மகன்களுக்கு தாயாகிவிட்டார்.
எனக்கு பானுவும் (இன்றும்) ஒரு குழந்தைதான். மெல்பனில் பானுவின் கணவர் கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் டீக்கின் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். மெல்பனில் எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் அவரும்  இணைந்துவிட்டார்.
ரத்னசபாபதி அவர்கள் சுவாரஸ்யமாகப்பேச வல்லவர். அவர் உதிர்த்த உண்மையும் இனிமையும் கலந்த பல கதைகளை இன்னமும் மறக்கத்தான் முடியவில்லை. அவர் தமது மனைவியுடன் தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். மெல்பன் வரும் சந்தர்ப்பங்களில் சந்திப்பேன். ஈழத்தில் திருகோணமலையில் பிறந்து தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த இலக்கிய ஆளுமை தருமு சிவராமின் நண்பரான ரத்னசபாபதி,   அவரைப்பற்றியும் என்னிடம் பல கதைகளைச்சொல்லியிருக்கிறார்.
கடந்த வாரம் ஶ்ரீகௌரி சங்கர் - பானு வீட்டில் நின்றபோது, ரத்னசபாபதி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
அவர் இலங்கையில சேகரித்துவைத்திருந்த இலக்கிய பொக்கிஷங்கள் பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு இங்கிலாந்துக்கு வந்துசேர்ந்துள்ள தகவலையும் சொன்னவர், அவற்றில் புதையுண்டிருக்கும் சில அரிய தகவல்கள் அடங்கிய பதிவுகளை ஸ்கேன் செய்தும் அனுப்பியிருந்தார்.
அதில் ஒன்று தமிழகப்படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருந்த கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. வேலூருக்கு அருகாமையில் கரடிக்குடி என்ற கிராமத்திலிருக்கும்  மயானத்தில் அமைந்துள்ள தருமு சிவராமின் கல்லறையில் ராமகிருஷ்ணன் ரோஜா மலர்களை வைத்து வணங்கியமைபற்றியும் அவரைச்சூழ்ந்துகொண்டு அவ்வூர் சிறுவர்களும் அஞ்சலி செலுத்தியமை பற்றியும் எழுதியிருந்த கட்டுரையை படித்தேன்.

தருமு சிவராம் உட்பட பலரும் விடைபெற்றுவிட்ட கதையை ரத்னசபாபதி சொல்லிக்கொண்டிருக்கையில், குறுக்கிட்டு, " உங்கள் உடல் நலம் எப்படி?" எனக்கேட்டேன்.
" நான் ஒரு மாத்திரை சாப்பிடுகிறேன். எனது மனைவி சுலோ ஐந்து மாத்திரை விழுங்குகிறாள்! சுலோவாக விழுங்குகிறாள்!! " என்றார்.
எண்ணிக்கையிலும் வித்தியாசம், அவர் சொன்னவிதத்திலும் வித்தியாசம் இருந்தது. சாப்பிடுவதற்கும் விழுங்குவதற்கும் இடையில் நூழிழை வித்தியாசம்தான். ஒன்று மென்று விழுங்குவது! மற்றது மெல்லாமல் உட்கொள்வது!
ரத்னசபாபதி தனது ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பவர். வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்பவர். எதனையிட்டும் அலட்டிக்கொள்ளமாட்டார். சிரிக்காமல் அவர் சொல்லும் கதைகள் கேட்டு  நாம்தான் சிரிப்போம்.  சிறந்த கதை சொல்லி.
1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தையடுத்து யாழ்ப்பாணம் சென்றவிடத்தில்,  எமது எதிர்காலம் குறித்து மல்லிகை ஜீவாவுடன் பேசிக்கொண்டிருந்தோம். ரத்னசபாபதியும் அருகில் இருந்தார். நண்பன்  காவலூர் ஜெகநாதன், "தான் குடும்பத்துடன் தமிழகம் சென்று செட்டில் ஆகப்போகின்றேன்." என்றான்.
எனது அப்பா வழியில் உறவினர்கள் அங்கிருப்பதனால் என்னையும் குடும்பத்துடன் வந்துவிடச்சொன்னான். மற்றும் ஒரு நண்பர் தான் ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்லவிருப்பதாகச்சொன்னார்.
இதனைக்கேட்டுக்கொண்டிருந்த ரத்னசபாபதி, இடையில் புகுந்து,             " போறவன் எல்லாம் போங்கோடா. நானும் ஜீவாவும் இந்த மண்ணைவிட்டு எங்கும் போகமாட்டோம்" என்றார்.
ஆனால், அதனை அவர் அன்று சொன்ன தோரணையில் இங்கு என்னால் சொல்லமுடியாது. அந்த  வார்த்தைகளை தணிக்கை செய்துகொள்கின்றேன்!
காவலூர் ஜெகநாதன் சென்னையில் அண்ணா நகரில் குடியேறி சிலவருடங்களில் இனம்தெரியாதவர்களினால் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டான்.
ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வதாகச்சொன்ன அந்த நண்பர் என்னவானார்?  என்பது தெரியாது.
மல்லிகை ஜீவா நாட்டை விட்டு அகலாமல், அரசியல் அழுத்தங்களினால் இலங்கைத் தலைநகருக்கு இடம்பெயர்ந்தார். அதற்கான காரணங்களையும் இங்கு தணிக்கை செய்கின்றேன்.
நானும் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துவிட்டேன். அதன்பின்னர் எனது வாழ்விலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
"தாயகம்விட்டு அகலமாட்டேன்" என்று 1983 இல் சொன்ன நண்பர் ரத்னசபாபதியும் புலம்பெயர்ந்துவிட்ட மக்கள் மருமக்களின் அழுத்தம் கூடிய அழைப்பினால் தவிர்க்கமுடியாமல் லண்டன் வந்துவிட்டார். இப்பொழுது லண்டன் - அவுஸ்திரேலியா மார்க்கத்தில் பேரப்பிள்ளைகளுக்காக அவ்வப்போது பயணித்துவருகிறார். இடையில் தாயகத்தில் இறங்கி ஊர் சுற்றிவிட்டு மீண்டும் விமானம் ஏறுகிறார்
தாயகம்விட்டு   புகலிடத்திற்கு விமானம் ஏறிய எம்மிடம்  சில உறவுகளும் மிக நெருக்கமாகி ஐக்கியமாகிவிட்டன. அவற்றின் பெயர்கள்: நீரிழிவு, ஆத்ரைட்டீஸ்,  இரத்த அழுத்தம், நெஞ்செரிவு, ஆஸ்த்துமா, மூட்டுவாதம்,  இதய அடைப்பு,   கொலஸ்ரோல், அல்ஸர்.
இவர்கள் என்னுடனும் நிரந்தரமாகிவிட்டனர். தினமும் இவர்களுடன் ஆறேழு  மாத்திரைகள் போராடுகின்றன. எப்பொழுதும் இன்சுலின். இதய அடைப்பு வரும் வேளைகளில் நாக்கின் கீழே Spray செய்யும் மருந்து மற்றும் மாத்திரைகளுடன் பயணங்களும் மேற்கொள்கின்றேன்.
அதனால் எவரைக்கண்டாலும் எவருடன் தொலைபேசியில் பேசினாலும் அவர்களது உடல்நலத்தை முதலில் கேட்டுக்கொள்வதும் வழக்கமாகிவிட்டது.
" உனக்கும் கீழே வாழ்பவர் கோடி, நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு" என்று கவியரசரும் சொல்லியிருப்பதனால், அவ்வாறு கேட்டும் ஆறுதல் பெறலாம் அல்லவா?
அப்படித்தான், அன்றும் லண்டனில் இருக்கும் நண்பர் ரத்னசபாபதியுடன் பேசும்போதும் சுகநலன் விசாரித்தபோது அவர்                          "  ஒரு மாத்திரை சாப்பிடுகிறேன். எனது மனைவி ஐந்து மாத்திரை விழுங்குகிறாள்." எனச்சொன்னார்.
எனது பாட்டி தையலம்மா தனது வாழ்நாளில் மருந்து மாத்திரைகளை நாடவில்லை!  95 வயது வரையும் வாழ்ந்தார்கள்.  பாட்டியும் அம்மாவும் எனக்கு  வல்லாரைச்சாறு தந்தார்கள். தூதுவளை துவையல் செய்து தந்தார்கள். முருங்கைக்கீரை சுண்டித்தந்தார்கள். தினமும் ஒரு கீரைவகை உணவில் இருந்தது.
இந்த 21 ஆம் நூற்றாண்டில் புதுப்புது வியாதிகள் அறிமுகமாகியுள்ளன. அவற்றுக்கான சிகிச்சை முறைகளிலும் நாளுக்கு நாள் புதிய புதிய கண்டுபிடிப்புகள்!
மாத்திரைகளின் பக்கவிளைவுகள் பற்றியும் நிறைய எழுதமுடியும். ஒன்றுக்கு ஒன்று எதிரி. எதிரிக்கு எதிரி நண்பனாகும் மாத்திரைகளும் உண்டு.
அவுஸ்திரேலியா சிட்னியிலிருக்கும் எழுத்தாளர் கவிஞர் அம்பி, ஒருதடவை நான் வதியும் மெல்பனுக்கு வரும்போது வழக்கமாக தான் நீரிழிவுக்காக உணவின் பின்னர் எடுக்கும் மாத்திரையை கொண்டுவருவதற்கு மறந்துவிட்டார். பின்னர் என்னிடமிருந்த மாத்திரைகளை பயன்படுத்தினார்.
மீண்டும் சில மாதங்களுக்குப்பின்னர் அவர் வருவதற்கு முன்னர் தொலைபேசியில் தனது வருகை பற்றிச்சொன்னார்.
" இம்முறை மறக்காமல் உணவுக்குப்பின்னர் எடுக்கும் மருந்துகளை எடுத்துவாருங்கள்" என்றேன்.
அதற்கு அவர்," நான் உணவுக்குப்பின்னர் எடுக்கும் மருந்தைக்கொண்டு வருகின்றேன். நீர் உணவுக்கு முன்னர் நாம் எடுக்கும் மருந்தை வாங்கிவையும்" என்றார். அவர் வந்தபின்னர் நாமிருவரும் இரண்டு மருந்துகளையும் உட்கொண்டோம்.
அப்பொழுது , "அமெரிக்காவில் இதய நோயளிகளுக்கு இரவில் சிவப்பு வைன் ஒரு கிளாஸ் அருந்தக்கொடுக்கிறார்களாம்." என்று அம்பி சொன்னார். அவர் சொல்கிறாரா? அல்லது உள்ளே சென்றது சொன்னதா தெரியவில்லை!
அதனை நம்பிக்கொண்டு,  எனது ஒரு  இலங்கைப்பயணத்தில்  ஒரு  முன்னாள் பத்திரிகை ஆசிரியருக்கும்   மற்றும் ஒரு தகைமைசார் பேராசிரியருக்கும்  "ரெட் வைன் " போத்தல்கள் எடுத்துச்சென்று கொடுத்தேன். அவர்களின் மனைவிமார் தங்கள்  கடைக்கண்ணால் என்னைப் பார்த்தனர். அவற்றைப்பெற்றவர்கள் பரவசத்துடன்  வைன்போத்தலைப் பார்த்தனர்!
எனது சில இலக்கிய நண்பர்கள் மருத்துவர்களாகவும் இருக்கிறார்கள். மருத்துவர் என்றால் அவர்களுக்கு நோய் நொடி இல்லாதிருக்குமா? இருக்கிறது! மருத்துவத்தொழில் செய்யும் எனது இலக்கிய நண்பர்கள் சிலர் இலங்கை புகலிட இதழ்களில் மருத்துவ ஆலோசனைகளும் குறிப்புகளும் எழுதிவருகின்றனர்.
அவர்களில் ஒருவர் மெல்பனுக்கு வந்தசமயத்தில் நீரிழிவுக்கு எடுக்கும் ஒரு மாத்திரையை என்னிடம் வாங்கிப் பாவித்தார். அவரும் நீரிழிவு சம்பந்தமாக இன்றும் பத்திரிகைகளில் அடிக்கடி எழுதிவருகிறார்.
தெருவோரங்களில் வாழும் கூலித்தொழிலாளர்கள் இரவு உணவுக்குமுன்னர் சிறிது அருந்திவிட்டு ஆழ்ந்த உறக்கம்கொண்டு காலையில் துயில் எழுந்து கடமைக்குச்செல்கின்றனர்.
பல பெரியசெல்வந்தர்களுக்கு தூக்கமாத்திரை எடுத்தால்தான் உறக்கம்வருகிறது. உடல் எடையை குறைக்க வீட்டில் இயந்திரம் வைத்து  தினமும் அதில் வேகமாக நடக்கிறார்கள்.  
தந்தை செல்வநாயகம், அமைச்சர் செல்லையா குமாரசூரியர் உட்பட பல அரசியல்வாதிகள் காலிமுகத்தில் காலை - மாலை வேளைகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர் அருகில் இல்லாமலேயே அவ்வாறு நடந்துவருவதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால், இன்று நிலைமை அவ்வாறில்லை. இலங்கையின் முன்னாள் அதிபரின் மனைவியும் காலிமுகத்தில் காற்றுவாங்கவும் நடைப்பயிற்சிக்கும் சென்றார். தனித்து அல்ல. பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சகிதம். எதிரே வந்த மனநிலை பாதிக்கப்பட்டவர் அருகில் வந்து பேசமுற்பட்டதை தடுத்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்,  அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் அந்த அம்மையார் காலிமுகத்திற்கு வரவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவரை பார்க்கவரும் உறவினர்கள் - நண்பர்கள்  உத்தியோகப்பற்றில்லாத  மருத்துவர்களாகி ஆலோசனை சொல்லும் கொடுமைகளையும் பார்த்திருப்பீர்கள்.
அச்சு ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் மருத்துவக்குறிப்புகளும் மருத்துவ ஆலோசனைகளும் பெருகிவிட்டன. ராசி பலன் மாத பலன் வருட பலன் வியாழ மாற்றம் சனி மாற்றக்குறிப்புகளும் பெருகிவிட்டிருப்பதைப்போன்று,  எதை உண்ணும்போது எந்த மாத்திரை எடுக்கக்கூடாது, எந்தநேரத்தில் எந்த மாத்திரையை தவிர்க்கவேண்டும், எதற்கு எது எதிரி முதலான ஆலோசனைக்குறிப்புகளும் ஊடகங்களில் பெருகிவிட்டன. அவற்றைப்பார்க்கின்றவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் கலாசாரம் இந்த கணினியுகத்திலும் வரப்பிரசாதமாகியிருக்கிறது
அவற்றைப்படிக்கும் வாசகர்களும் " மருத்துவர்"களாகிவிடுகின்றனர்.
எனது மனைவி வழி உறவினர் ஒருவர். பொறியிலாளர். அவருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு இருந்திருக்கிறது. எமக்கும் சொல்லவில்லை. யாரோ தெரிவித்த ஆலோசனையின் பிரகாரம் ஆயுர்வேத சிகிச்சைக்காக தாயகம் திரும்பி நிரந்தரமாக அங்கு வாழத்தலைப்பட்டார். சிறிது காலம் ஆயுர்வேத சிகிச்சை செய்துபார்த்தார். சரிவரவில்லை. மீண்டும் அங்கேயே ஆங்கில சிகிச்சைக்கு மாறினார். அதுவும் சரிவரவில்லை. திடீரென்று அவரை இறைவன் " இங்கே வா. உனக்கு நல்ல சிகிச்சை தருகின்றேன்" எனச்சொல்லி அவரை தம்மிடம் நிரந்தரமாக அழைத்துக்கொண்டார்.
" இங்கிருந்தால் சிறுநீரக மாற்றுச்சிகிச்சை செய்தாவது அவரை காப்பாற்றியிருக்கலாம் " என்று உறவினர்கள், நண்பர்கள் சொன்னார்கள்.
எளிதாக சொல்வதற்கு ஒரு பதில் இருக்கிறது: "எல்லாம் விதிப்படிதான் நடக்கும்"
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று அடிக்கடி நவீனமாற்றங்கள் குறித்து பேசிக்கொள்கிறார்கள். ஆனால், புதியன மோசமான அனுபவங்களையும் தந்திருக்கின்றன.
அண்மையில் இலங்கை சென்று திரும்பிய ஒருவர் சொன்ன தகவல் சற்று வித்தியாசமானது. அங்கும் Fast Food கலாசாரம் பெருகியிருக்கும் அதேசமயம், அங்கு   இயற்கை மருத்துவத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பவர்கள் பற்றியும்  கதைகதையாகச் சொன்னார். காலையிலேயே கருஞ்சீரகப்பொடியை தண்ணீரில் கலந்து குடித்து நீரிழிவைக் கட்டுப்படுத்துபவர்கள் -  மருந்து நெல்லிக்காய் அடிக்கடி சாப்பிட்டு அந்த  உபாதையை தவிர்ப்பவர்கள்  பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு, அவ்வையாரும் அதியமான் என்ற மன்னனுக்கு நெல்லிக்காய் கொடுத்த கதையையும் சொன்னார்.
எனது கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அதில் ஆங்கிலத்தில் இவ்வாறு இருந்தது:
Celery - Coriander - Parsley - Cucumber - Green apple - Turmeric bulb  - Harbanero pepper-Lemon - Pavtkai ( Bitter gourd )Apple cider vinegar (1tbsp)   
அனுப்பியது எனது இரண்டாவது புத்திரி! என்ன இது?  என்று கேட்டேன்.
" அப்பா அவற்றையெல்லாம் வாங்கி கிரைண்டரில் போட்டு அடித்து தினமும் காலையில் வெறும்வயிற்றில் குடியுங்கள். உங்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாள்.
அவள் தனது அனுபவத்தில் சொல்லியிருந்தாள்.  அவளுக்கும் யாரோ சொல்லிக்கொடுத்திருக்கவேண்டும். எனினும் அவளும் வீட்டில் அந்த இயந்திரத்தில் வேகமாக நடந்துகொண்டுதானிருக்கிறாள்.
அவளுடன் பேசிவிட்டு கணினியை திறந்தால்,  மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து ஒரு நண்பர் இந்தக் காணோளியை அனுப்பியிருந்தார். அந்த இணைப்பு இது:
BLOOD SUGAR LIVE EXPERIMENT TO CURE DIABETES
 https://www.youtube.com/watch?v=ljzybvgjd7A
நாற்பத்தியாறு வருடங்களுக்கு (1972 இல்) முன்னர் எனக்கோ நண்பர் ரத்னசபாபதிக்கோ மல்லிகை ஜீவாவுக்கோ  எந்த நோயும் உபாதைகளும் இருக்கவில்லை.  ஜீவா சிறந்த நடைப்பயிற்சியாளர்.   அந்தப்பயிற்சியின்போதும்  மல்லிகையும் விநியோகித்து ஈழத்து இலக்கியத்திற்கு வளம் சேர்த்தார். இலக்கிய நண்பர்களைச் சம்பாதித்தார்.  எம்முடனும்  மல்லிகையால் அவர்களை இணைத்தார்.
தற்போது எமக்கெல்லாம்  நண்பர்களாக மருந்தும் மாத்திரைகளும் நிறைய இருக்கின்றன.
தற்கால வாழ்க்கை எப்படி இருக்கிறது பாருங்கள்!
-->
(தொடரும்)



















































No comments: