உலகச் செய்திகள்


ரஷ்ய போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாம் சிரிய இராணுவம்

3ஆவது முறையாகவும் சந்திக்கும் இரு துருவங்கள்

மாங்குட் சூறவளியால் 64 பேர் உயிரிழப்பு


ரஷ்ய போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாம் சிரிய இராணுவம்

19/09/2018 காணாமல்போனதாக தெரிவிக்கப்பட்ட ரஷ்ய போர் விமானத்தை சிரிய இராணுவம் தவறுதலாக சுட்டுவீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அந்நாட்டு அரச படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. 
இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் அவ்வப்போது ரஷ்ய விமானங்கள் தாக்குதலையும் நடத்தி வருகின்றன. 

இதேவேளை, இஸ்ரேலும் ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரிய அரச படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன.
 இந்த பதற்றமான சூழ்நிலையில், சிரியா எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய போர் விமானம் ஒன்று கடந்த திங்கட்கிழமை இரவு சிரியாவின் ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பியது. சிரிய கடற்கரையில் இருந்து சுமார் 35 கிலோ மீற்றர் தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியால் சென்றபோது திடீரென குறித்த விமானத்தின் தொடர்பு ராடாருடன் துண்டிக்கப்பட்டது. 
சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் உள்ள இராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நாட்டின் 4 போர் விமானங்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த வேளையில் ரஷ்ய போர் விமானம் காணாமல்போனது. எனவே, இஸ்ரேல் இராணுவத்தால் குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில், ரஷ்ய விமானத்தை தவறுதலாக சிரிய இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவிக்கையில்,
‘தாக்குதல் நடப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னரே இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததால் ரஷ்ய விமானத்தை வெளியேற்றுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. இஸ்ரேலிய விமானங்களின் பொறுப்பற்ற செயல்களால் வேண்டுமென்றே அந்தப் பகுதியில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்’ என தெரிவித்துள்ளது. 
இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகு தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 15 வீரர்களின் உடல்களை  தேடும் பணி இடம்பெற்று வருகின்றது. நன்றி வீரகேசரி 











3ஆவது முறையாகவும் சந்திக்கும் இரு துருவங்கள்

18/09/2018 வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றாவது முறையாகவும் சந்தித்து பேசுவதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் பியாங்யாங் சென்றடைந்துள்ளார்.
பியாங்யாங் சர்வதேச சிமான நிலையத்தை சென்றடைந்த மூன் ஜே இன்னை வட கொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் நேரில் சென்று வரவேற்றுள்ளார்.
உலகமே உற்றுநோக்கிய வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றம் கிம் ஜோங் உன் சந்தித்துக் கொண்டனர்.
அச் சந்திப்பின் போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்சங்களை கொண்ட உடன்படிக்கைளில் இரு  தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
எனினும் உடன்படிக்கை அம்சங்களை நிறைவேற்றவதில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக்காவும் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்தன.
இந் நிலையிலேயே தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தனது மனைவி மற்றும் முக்கிய தொழிலதிபர்கள் உள்ளிட்ட 110 உயர் மட்ட குழுவினருடன் வட கொரியா சென்றடைந்துள்ளனர்.
இரு நாட்டு தலைவர்களின் 3 நாட்கள் சந்திப்பின் போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்கும் விவகாரத்தில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தும் எனவும் கொரிய நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி 






மாங்குட் சூறவளியால் 64 பேர் உயிரிழப்பு
17/09/2018 பிலிப்பைன்ஸை தாக்கிய மாங்குட் சூறாவளியின் காரணமாக இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
‘மங்குட்’ புயலானது பிலிப்பைன்ஸ் நாட்டின் ககாயன் மாகாணத்திலுள்ள லூஷான் என்ற தீவை கடுமையாக தாக்கியதுடன், பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது.
இந்த புயலின் காரணமாக மணிக்கு 305 கிலோமீற்றர் வேகத்திலான பலத்த காற்று, வெள்ளப் பெருக்கு என்பவற்றில் சிக்குண்டு மீட்பு படையினர் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் தொடர்ந்து ஹொங்கோங் கடற்பரப்பை கடந்த மங்குட் சூறாவளியினால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 48 முகாம்களில் 1200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஹெங்கோங் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 
மேலும் மங்குட் சூறாவளி  மணித்தியாலயத்துக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் சீனாவின் குவாங்டாங் மாநிலத்தை கடந்தைமையினால் 2.4 மில்லியன் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டதுடன், 50 ஆயிரம் மீன்பிடி படகுகளை துறைமுகத்திற்கு திரும்பி வர சீன அரசாங்கம் அறிவித்தது.
அத்துடன் இப் பகுதிகளில் மீட்பு படையினர் தொடர்ந்தும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி 







No comments: