அமெரிக்காவுக்கு எதிராக கிளர்ந்தெழுங்கள் ; அல் – கொய்தா தலைவர்
மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வந்தார் நவாஷ்
படகு கவிழ்ந்ததில் 100 பேர் பலி : லிபிய கடல் பகுதியில் துயரம்
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு
புளோரன்ஸ் புயலில் கைக்குழந்தை தாய் உட்பட ஐவர் பலி!
அமெரிக்காவுக்கு எதிராக கிளர்ந்தெழுங்கள் ; அல் – கொய்தா தலைவர்
14/09/2018 அமெரிக்காவுக்கு எதிராக மேலும் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு அல் –கொய்தா தீவிரவாத குழுவின் தலைவர் அய்மான் அல் ஸவாஹ்ரி அந்தத் தீவிரவாத குழுவின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்லாத்தின் மத ரீதியான எதிரியாக அமெரிக்கா உள்ளதாக குறிப்பிட்ட அவர், உலகமெங்குமுள்ள முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிராக போரை பிரகடனம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.
அவர் அந்த 30 நிமிட காணொளிக் காட்சியில் நேரடியாக காணொளிப்படக் கருவியை நோக்கியவாறு உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேம் நகருக்கு இடமாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள தீர்மானம் அமெரிக்கா மீது மேலும் தாக்குதல்களை நடத்துவதை நியாயஸ்தம் செய்வதாகவுள்ளதாக ஸவாஹ்ரி கூறினார்.
அல் – கொய்தா தீவிரவாத குழுவின் தலைவர் ஒஸாமா பின்லேடன் 2011 ஆம் ஆண்டு அமெரிக்க விசேட படையினரால் கொல்லப்பட்டதையடுத்து அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பை அல் ஸவாஹ்ரி ஏற்றார்.
இந்நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள காணொளிக்காட்சியில் அல் ஸவாஹ்ரி, முஸ்லிம்களின் முதலாவது எதிரியாக அமெரிக்கா உள்ளது என வலியுறுத்தியுள்ளார். நன்றி வீரகேசரி
மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வந்தார் நவாஷ்
12/09/2018 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் மனைவி குல்சும் நவாஷ் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்த நீதிமன்ற அனுமதியுடன் அவரது கணவர் நவாஷ் ஷெரீப் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் தற்போது அவென்பீல்ட் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். அவருடன் அவரது மகள் மரியம் நவாஷ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது மனைவி குல்சும் நவாஷ் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். 68 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார் நவாஷ் ஷெரீப்
அவரது பரோல் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு 12 மணி நேர பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, ராவல்பிண்டி சிறையில் வைகக்கப்பட்டுள்ள நவாஷ் ஷெரீப் மற்றும் மரியம் நவாஷ் மற்றும் சப்தார் ஆகியோர் லாகூரை சென்றடைந்தனர். நன்றி வீரகேசரி
படகு கவிழ்ந்ததில் 100 பேர் பலி : லிபிய கடல் பகுதியில் துயரம்
12/09/2018 லிபிய கடல் பகுதியில் படனொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 100 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு இரு இரப்பர் படகுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்துள்ளன.
குறித்த இரு படகுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியதில் அதில் பயணித்த 100 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் லிபிய கடலோரக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதன் போது 276 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு
11/04/2018 ஜப்பானில் ஹொக்கைடோ தீவை கடந்த வாரம் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
ஜப்பான் நாட்டை கடந்த 4ஆம் திகதி தாக்கிய ‘ஜெபி’ புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் கடந்த 6ஆம் திகதி அதிகாலை 3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.
மலைப்பகுதிகள் சூழ்ந்த கிராமப்பகுதியான அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. வீதிகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.
தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 இலட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்பதற்காக தன்னார்வலர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் பேர் இரவு-பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக புல்டோஸர் வாகனங்கள், மோப்ப நாய்கள் மற்றும் 75 ஹெலிகொப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மின்சார வினியோகம் இன்னும் சீரடையாததால் அந்நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டோயோட்டா தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நன்றி வீரகேசரி
புளோரன்ஸ் புயலில் கைக்குழந்தை தாய் உட்பட ஐவர் பலி!
15/09/2018 அமெரிக்காவின் கரோலினாவை தாக்கிய புளோரன்ஸ் புயல் காரணமாக கைக்குழந்தை தாய் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.
வில்மிங்டனில் உள்ள அவர்களது வீட்டின் கடும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் தமது டுவிட்டர் செய்தி மூலம் இதனை உறுதி செய்துள்ளதுடன் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இது தவிர மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹம்ப்ஸ்டெட் நகரில் பெண்ணொருவர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்ததும் அவசரசேவை பிரிவினர் அப்பகுதிக்கு செல்ல முயன்றுள்ளனர்.
எனினும் வீதிகளின் குறுக்கே மரங்கள் முறிந்து வீழ்ந்து கிடந்ததால் அவர்களால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை .
பின்னர் அவர்கள் அங்கு சென்றவேளை அந்த பெண்மணி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment