இலங்கைச் செய்திகள்


மோடியை சந்தித்த, மஹிந்த, நாமல்

 "அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும்"

வவுனியாவில் உலக தற்கொலை தினத்தில் பேரணியுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வு

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா

 விரும்பும் இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்க அனுமதி கொடுக்கும் தொல்லியல் திணைக்களம் ; சத்தியலிங்கம் 

சிவனடிபாதமலை பெயர் மாற்றம் ; மனோவின் அதிரடி நடவடிக்கை



மோடியை சந்தித்த, மஹிந்த, நாமல்

12/09/2018 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச் சந்திப்பு இன்று புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
நன்றி வீரகேசரி 










 "அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும்"

12/09/2018 கூட்டு எதிர்க்கட்சி கடந்த 5 ஆம் திகதி கொழும்பில் நடத்திய மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு அரசாங்க தரப்பினால் விஷம் கலந்த பால் வழங்கப்பட்டுள்ளது. 
இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்டு மக்களை கொன்றொழிப்பதற்கு முயற்சித்தமை தொடர்பில் அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும் என  கூட்டு எதிரணியின் உறுப்பினர்  டலஸ் அளகப் பெரும தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற ஆகாரம் வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தது. எனினும் கூட்டு எதிர்க்கட்சி கடந்த ஐந்தாம் திகதி கொழும்பில் நடத்திய மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு அரசாங்க தரப்பினரால்  விஷம் கலந்த பாலை வழங்கியுள்ளனர்.  
எனவே இலங்கை வரலாற்றில் அரசாங்கத்தினால் மக்களுக்கு விஷம் கலந்த ஆகாரம் வழங்கிய சம்பவம் கடந்த ஐந்தாம் திகதியே பதிவாகியுள்ளது. 
அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட பால் பெகட் சிலவற்றை எனது சாரதியும் பெற்று வந்தார். அதில் ஒன்றை நானும் அருந்தினேன். அதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன்.  ஆகவே இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்டு மக்களை கொன்றொழிப்பதற்கு முயற்சித்தமை தொடர்பில் அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்றார். நன்றி வீரகேசரி 








வவுனியாவில் உலக தற்கொலை தினத்தில் பேரணியுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வு

11/09/2018 அனைத்துலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி வவுனியா மனநல சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விழிப்புணரவு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வவுனியா மன்னார் வீதியில் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் ஆரம்பமாகி நகர வீதிகள் வழியாக நகரசபை கலாசார மண்டபத்தில் சென்று முடிவடைந்தது.
ஊர்வலத்தின் முடிவில் கலாசார மண்டபத்தில் விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற்றது.
ஊர்வலத்தில் வவுனியா அரசாங்க அதிபர் எம்.எம்.ஹனிபா, மேலதிக அரசாங்க அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், உளநல வைத்திய நிபுணர் டாக்டர்.எஸ்.சிவதாஸ், சிரேஸ்ட உளநல வைத்தியர் சுதாகரன், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்,
 வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுகாதாரத் துறைசார்ந்த பணியாளர்கள், தாதிய கல்லூரி, கல்வியல் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.
வருடமொன்றுக்கு 8 இலட்சம் பேர் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கின்றனர். இதன்படி 40 செக்கன்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் உலகில் தற்கொலை இடம்பெற்று வருகின்றது இதனைத் தடுக்கும் வகையில தற்கொலையைத் தடுக்க ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் நடப்பாண்டுக்கான தற்கொலையைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி 













இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா

11/09/2018 இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
பத்திற்கும் மேற்பட்ட இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் என கார்டியன் தெரிவித்துள்ளது.
விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட விமானமொன்று இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பேர்த்திலிருந்து இலங்கை சென்றுள்ளது.
கடந்த ஆறு வருடகாலத்திற்கு மேல் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என கார்டியன் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் இவர்களில் சிலரின் நீதிமன்ற விசாரணைகள் தொடர்கின்றன அந்த நிலையிலும் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என கார்டியன் தெரிவித்துள்து
 கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பலரே நாடு கடத்தப்பட்டுள்ளனர்
அவுஸ்திரேலிய பல தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் பேர்த்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பபட்டுள்ளனர்
நன்றி வீரகேசரி 











விரும்பும் இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்க அனுமதி கொடுக்கும் தொல்லியல் திணைக்களம் ; சத்தியலிங்கம்

10/09/2018 போரிற்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கில் காலூன்றிய வனவளத்திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் தமிழ் மக்களின் விடயங்களில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.  
நேற்று முன்தினம் வவுனியா வடக்கு மருதோடை கிராம அலுவலர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான காஞ்சூரமோட்டை மற்றும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் என்பவற்றிற்கு விஜயமொன்றை மேற்கொண்டபின்னர் அவரால் வெளியிடப்பட்ட ஊடக செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
கடந்த அரசாங்கம் வவுனியா வடக்கின் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையினக் குடியேற்றங்களை செய்துள்ளது. எங்கள் மாவட்டத்திற்கு தொடர்பே இல்லாத பிறமாட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் இந்தப்பிரதேசங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான குடியேற்றங்கள் செய்யப்பட்டபோது பின்பற்றாத வனவளச்சட்டங்கள் தற்போது தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறும்போது அவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படுகின்றது. 
இந்தியாவிலிருந்து மீளத்திரும்பிய 35 குடும்பங்கள் மருதோடையில் மீளக்குடியேற விருப்பங்கொண்டிருந்தார்கள். அவர்களை மீளக்குடியேற்ற மத்திய மீள்குடியேற்ற அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொடுத்திருந்தேன். 
.அத்துடன் மேலும் குடியேற பலகுடும்பங்கள் விரும்புகின்றன. அவர்களையும் மீளக்குடியேற்றுவதற்கு ஏற்ற ஒழுங்குகள் மத்திய மீள்குடியேற்ற அமைச்சினூடாக செய்யப்பட்டுவருகின்றது. இவர்களுக்கான வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில் வனவளத்திணைக்களம் மீள்குயேற்ற அபிவிருத்தி வேலைகளை தடுத்துள்ளது.
இதேபோன்றே வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாடுகளை தொல்லியல் திணைக்களம் தடுத்துள்ளது. தாங்கள் விரும்பும் இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகள் அமைக்க அனுமதி கொடுக்கும் தொல்லியல் திணைக்களம் இந்துக்களின் புராதன ஆலயமான வெடுக்குநாறி மலைக்கு தடை விதித்துள்ளமை இந்த இரண்டு திணைக்களங்களும் தமிழ் மக்களின் விடயத்தில் பாரபட்டசமாக நடந்தகொள்வதை உறுதிப்படுத்துகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கவே செய்யும் தவிர இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது   நன்றி வீரகேசரி 









சிவனடிபாதமலை பெயர் மாற்றம் ; மனோவின் அதிரடி நடவடிக்கை

16/09/2018 சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகை யாரால் எப்படி, எந்த அடிப்படையில் அகற்றப்பட்டது என்பது தொடர்பில் உடனடியாக ஆய்வு அறிக்கை அனுப்பும்படி நுவரெலியா மாவட்ட செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சர்  மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகையை மலையடிவாரத்தில் மீண்டும் பொருத்தும்படியும் நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி 




No comments: