அவுஸ்திரேலியத்
தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வு கடந்த ஞாயிறன்று மெல்பனில்
நடைபெற்றது.
காலத்துக்குக்காலம்
அவ்வப்போது நடந்துவரும் வாசிப்பு அனுபவப்பகிர்வில்
இம்முறை மூன்று சிறுகதை நூல்கள் பேசுபொருளாகின.
இலங்கையில்
கிழக்குமாகாணத்தில் வதியும் எஸ். எல். எம் ஹனீபா எழுதிய அவளும் ஒரு பாற்கடல், பிரான்ஸில் வதியும் சாத்திரியின் அவலங்கள், சுவிட்சர்லாந்தில் வதியும் பார்த்திபனின்
கதை ஆகிய சிறுகதைத்தொகுதிகள் தொடர்பாக
நடேசன், சுமதி அருண் குமாரசாமி, முருகபூபதி ஆகியோர் தத்தம் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
நடேசன் எஸ்.எல்.
எம். ஹனீபாவின் புகழ்பெற்ற சிறுகதையான மக்கத்துச்சால்வை
பற்றி குறிப்பிடும்போது இவ்வாறு தெரிவித்தார்:
"சிறுகதை வாழ்வின் ஒரு தருணத்தை காட்டுவது என்கிறார்கள். மேலும் ஒரு உதாரணம் சொல்வதானால் காட்டில் ஒரு மின்னல் ஒளியில் நாம் காணும் தரிசனம் போன்றது .
ஹனீபா எழுதிய மக்கத்துச்சால்வை அவரது முத்திரைக்கதை, மனித மனத்தின் அடிப்படை உணர்வு விசித்திரமானது. பொறாமை மற்றும் அகங்காரத்துடன் எதிரியைப் போட்டியில் வெல்லவேண்டுமென்ற ஆசை எவருக்கும் வரலாம்! அதற்குச்
சிலர் நேர்மையான வழியை மட்டும் தேடும்போது பலர் நேர்மையற்ற பாதையிலும் செல்வார்கள். அதேவேளையில் வெல்லும்போதோ அல்லது நினைத்ததை அடையும்போதோ எதிரியின் மீது நன்மதிப்பும் ஏற்படுகிறது. அப்படியான உயர்ந்த மனித உணர்வே இறுதியில் வெல்வதாக இந்தச் சிறுகதை படம் போட்டுக்காட்டுகிறது.
இந்தக்கதையின் களம் முஸ்லீம்கள் மத்தியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்
நிகழுகின்றது. ஆனால், எந்தச் சமூகத்திலும் எந்தக் கலாச்சாரத்திலும் இந்தக்கதை பொருந்தக்கூடியது."
பார்த்திபனின் கதை என்னும்
தொகுப்பிலிருக்கும் சிறுகதைகள் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை தெரிவித்த
முருகபூபதி பின்வருமாறு தெரிவித்தார்:
"உருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு,
காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை உள்ளடக்கியது சிறுகதை வடிவம். இலங்கையில்
இந்த இலக்கியம் தோன்றிய காலத்தில், மறுமலர்ச்சிக்காலம் பேசுபொருளானது.
மண்வாசனை - பிரதேச மொழிவழக்கு உட்பட்ட
தேசிய இலக்கியமும் அதன் பிறகு போர்க்கால இலக்கியம் பற்றியும் பேசப்பட்டது.
போரினால் மக்கள் புலம்பெயர்ந்ததும், அவர்கள் மத்தியிலிருந்த
இலக்கியவாதிகளினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் பின்னர் புகலிட இலக்கியமும் வரவாகியது.
வெளியுலக
சுதந்திரம் - புகலிட வாழ்வுக்கோலங்கள், தாயகத்தின் நெருக்கடியிலிருந்து தப்பி ஓடுவதற்கு
எத்தனிப்பவர்களின் கதைகள் யாவும் கருப்பொருளாகின.
பார்த்திபன்
முதலில் மேற்கு ஜெர்மனியில் புகலிடம் பெற்றவர். அங்கிருந்து வெளியான தூண்டில் முதலான சிற்றிதழ்களில் எழுதியிருப்பவர்.
சிலவற்றில் அவரது புகலிட வாழ்வு அனுபவங்களை சித்திரிக்கிறார்.
சிலவற்றில்
தாயகத்தின் போர்க்கால வாழ்வை பதிவுசெய்கின்றார்.
முதலாவது
கதை - ஒரே ஒரு ஊரிலே - 1986 இல் எழுதப்பட்டுள்ளது.
ஒன்பது காட்சிகள் தனித்தனியாக வந்து இறுதியில் சங்கமிக்கும் உத்திமுறையை இதில் காண்பிக்கின்றார்.
உள்ளடக்கம் பல பாத்திரங்களின் இயல்புகளை காண்பிக்கிறது. கிட்டத்தட்ட தொலைக்காட்சி எபிசொட் முறையில் கதை நகர்த்தப்படுகிறது. அந்த ஊரில் வசிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு விதமான பிரச்சினை. இறுதியில் அந்த அனைத்துப்பிரச்சிகளையும் ஆயுதப்படை தனது பாணியில் தீர்த்துவைக்கிறது.
இரண்டாவது
கதை - பாதியில் முடிந்த கதையில் வரும்
அம்மா பற்றிய சித்திரிப்பு, எம்மை நெகிழவைக்கிறது. ஊரில் எவருக்கும் அம்மா அருகில் இருந்தால் அனைத்துப்
பிரச்சினைகளுக்கெல்லாம் அம்மாவை நம்புவோம். அம்மாவும் ஓடாக உழைப்பார். ஆனால்
அம்மாவின் பிரச்சினைகளை அறியமாட்டோம். உழைப்புத்தான் அந்த அம்மா! அம்மாவென்றால் உழைப்பு!
இதில் வரும்
வசனம்: இயந்திரங்களுக்குக்கூட ஓய்வு கொடுக்கவேண்டும். இல்லையேல், சூடேறி ஆயுட் காலத்தை
முடித்துக்கொண்டுவிடும். ஆனால், அம்மாவுக்கு கிடைக்கும் ஓய்வை 365 நாட்களிலும் விரல்
விட்டு எண்ணிவிடலாம்."
சாத்திரியின்
அவலங்கள் கதைத்தொகுப்பினை பற்றிய தனது
வாசிப்பு அனுபவத்தை தெரிவித்த சுமதி அருண் குமாரசாமி பின்வருமாறு குறிப்பிட்டார்:
நான் இலங்கையில்
பிறந்த காலமும் வளர்ந்த காலமும் போர்க்காலம்தான். அந்த அவலமான வாழ்வை கடந்துவந்திருப்பதனால், இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள
கதைகள் யாவும் எனக்கு பரிச்சியமான உணர்வையே தருகின்றன.
போரின் வலியை
உணர்த்தும் இக்கதைகளில் மக்கள் அந்த நெருக்கடியான காலத்தில் எவ்வாறு தங்கள் இயல்புகளையும்
மாற்றிக்கொள்கிறார்கள் என்பதை எழுத்தாளர் சாத்திரி சித்திரித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட,
வலிசுமந்த மக்களின் உணர்வுகளை ஒவ்வொரு கதையிலும் சொல்லியிருக்கிறார். இந்தியப்படை வந்த
காலத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களை அவலங்கள் கதைகள் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன.
இந்தியா இராணுவம்
தேடுலுக்கு வரும்போது பெற்றோர்கள் சின்னப்பெண்பிள்ளைகளுக்கும் சாரி அணிவித்து பொட்டுவைத்து,
அவர்கள் திருமணமானவர்கள் எனக்காட்டுவதற்கு வேடங்கள் அணிவித்தனர்.
இந்தத்தொகுதியை
எழுதியிருக்கும் சாத்திரி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப்பொழுதுதான் இந்தத்தொகுப்பின்
ஊடாக அவரது கதைகளைப்படிக்கின்றேன்.
புகலிடத்தின்
வாழ்க்கைக்கோலங்களை சித்திரிக்கும் கதாசிரியர், போராளிகளின் வாழ்வையும் காண்பிக்கின்றார்.
இருவேறு உலகங்களை காண்பிப்பதன் ஊடாக நாம் கடந்துவந்துள்ள அனுபவங்களை இக்கதைகள் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன."
வாசிப்பு
அனுபவப்பகிர்வில் இடம்பெற்ற கலந்துரையாடலில்
தெய்வீகன், கிருஷ்ணமூர்த்தி, அருண். குமாரசாமி, ஶ்ரீகௌரி சங்கர், சண்முகம் சபேசன், ஜெயபிரசாத், 'சக்தி' கிருஷ்ணா ஆகியோரும் தத்தம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
---00---
No comments:
Post a Comment