கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை: ஆறு இதழ்களில் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகை உலக ஜாம்பவான் அமரர் எஸ். டி. சிவநாயகம் - முருகபூபதி


இலங்கைத்  தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்பட்டவரும், பல புதிய தலைமுறை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவரும், பல தமிழ் ஊடகவியலாளர்களின் ஞானத்தந்தையாக (God Father)  கருதப்பட்டவருமான (அமரர்) எஸ். டி. சிவநாயகம் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தியினால் விதந்து  பாராட்டப்பட்டவராவார்.
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பைச்சேர்ந்த இவரது ஊடகப்பணியும் சமயம் சார்ந்த சமூகப்பணிகளும் தலைநகரில்தான் விரிவடைந்தன. இவரது துணைவியார் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர்.
சிவநாயகம் அவர்களை அவரது ஜிந்துப்பிட்டி இல்லத்திலும் தினபதி - சிந்தாமணி பணிமனையிலும் சந்தித்துப்பேசியிருக்கின்றேன்.
1948  இல் தினகரன் பத்திரிகையில் பணியாற்றத்தொடங்கிய ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான சிவநாயகம்,  கொழும்பில் தந்தை செல்வநாயகம் ஆரம்பித்த சுதந்திரன், மற்றும் தமிழகத்தைச்சேர்ந்த  பெரி. சுப்பிரமணியம் செட்டியார் தொடக்கிய  வீரகேசரி ஆகியவற்றிலும்   ஆசிரியராக பணியாற்றியவர்.   1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி முதல் வெளியாகத்தொடங்கிய தினபதி தினசரியிலும் பிரதம ஆசிரியரானார்.
தமிழ்ப்பத்திரிகைத்துறையில் பழுத்த அனுபவம் மிக்க இவர், வெளியுலகிற்கு தன்னை பிரபல்யப்படுத்தாமல் அமைதிபேணியவர்.
எனினும்,  அந்த ஆழ்ந்த அமைதிக்குள் எரிமலைக்குரிய குணாம்சம் ஒளிர்ந்தது. முற்காலத்தில் வெளியாகும் தமிழ்த்திரைப்படங்களின் இயக்குநர்களின் பெயர்களும்  தற்காலம்போன்று  வெள்ளித்திரைகளில் தோன்றும். ஆனால், அவர்கள் இக்காலத்து இயக்குநர்கள் போன்று ரசிகர்கள் மத்தியில் திரையில் வலம்வந்து அறிமுகமாகமாட்டார்கள். முன்பிருந்தவர்கள் பின்னாலிருந்து  இயக்கிய உந்துசக்திகளாகத்தான் வாழ்ந்து மறைந்துபோனார்கள்.
இன்றைய தமிழ்த்திரையுலகின் இயக்குநர்கள் திரைகளில் தோன்றுவதுபோன்று தற்கால பத்திரிகை ஆசிரியர்களும் பொதுமேடைகளில் தோன்றும் கலாசாரம் வந்துவிட்டது.
ஆனால்,  தினபதி அதன் ஞாயிறு பதிப்பு  சிந்தாமணி ஆகியனவற்றின் பிரதம ஆசிரியர் சிவநாயகம் அவர்களை -  இவை வெளியான காலகட்டத்தில் பொதுமேடைகளில் காண்பது அபூர்வம்.
கிழக்கிலங்கையில்  பெரியார் ஈ.வே.ரா.வின் பகுத்தறிவுக்கொள்கைகளை பரப்பிய முன்னோடியாகவும் இவர் அறியப்படுகிறார்.  தமிழகத்தின் முதல்வர் அறிஞர் அண்ணாவுடன் பழகியதன் அனுபவங்களை  தொடர்கட்டுரையாக  எழுதியவர். எனினும் இறுதிக்காலத்தில் சத்திய சாயி பக்தராகவும் வாழ்ந்து, 22 ஏப்ரில் 2000 ஆம் திகதி மறைந்தார்.
புட்டபர்த்தியில் 1975 ஆம் ஆண்டு நடந்த உலக சாயி நிறுவனங்களின் மகா நாட்டிலும் கலந்துகொண்டிருக்கும் இவர், கொழும்பில் சத்திய சாயி பாபா மத்திய நிலையத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் தலைவராகவும் இருந்து, சாயிபாபா அறக்கட்டளையையும் உருவாக்கியவர்.

தினபதி தினசரியில் தினமும் புதிய சிறுகதைகள் என்ற களத்தில்  பல புதிய இளம்தலைமுறை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, எதிர்காலத்தில் அவர்களை ஆக்க இலக்கியவாதிகளாக்கிய பெருமையும் அவரைச்சாரும். அக்காலப்பகுதியில் இளம் மாணவர்கள்  எழுத்தாளர்களாக  தினபதியில் வளர்க்கப்பட்டார்கள்.
தினபதி, சிந்தாமணி, ராதா, சுந்தரி, தந்தி  முதலான தமிழ் இதழ்களையும் தவஸ உட்பட சில சிங்கள இதழ்களையும் SUN  என்ற ஆங்கிலத்தினசரியையும் அதன் ஞாயிறு பதிப்பையும் வெளியிட்ட சுயாதீன பத்திரிகை சமாஜம் என்ற பெரிய நிறுவனம் 1970 இல் நடந்த பொதுத்தேர்தலில்  ஶ்ரீமா - என். எம், -  பீட்டர் ஆகியோரின் கூட்டணி வெற்றியடைந்து பதவிக்கு வந்த காலத்தில்,  அந்த அரசின் சில  நடவடிக்கைகளை  விமர்சித்த  காரணத்தால்  வெறுப்புக்கும் ஆளாகி  1974 ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி  சீல்வைத்து பூட்டப்பட்டது. எனினும்  தடை நீங்கி 1977 இற்குப்பின்னர்    திறக்கப்பட்டது.
சிந்தாமணியில்  இலக்கியபீடம் என்ற பத்தியை சிவநாயகம் தொடர்ந்து எழுதியதுடன்,  பாரதி நூற்றாண்டு காலத்தில் " நான் கண்ட பாரதி" என்ற நீண்ட தொடரையும் வாராந்தம் எழுதியிருக்கிறார்.
சுயாதீன பத்திரிகை சமாஜம் எதிர்பாராதவிதமாக அதன் நிருவாகத்தினால் 1990 இல் நிரந்தரமாக மூடப்பட்டதும்  சோகமான முடிவு.  கொழும்பு பாமன் கடையிலிருந்து வெளியான மாணிக்கம்  என்னும் கலை இலக்கிய மாத இதழுக்கும் சிவநாயகம் சிறிது காலம் ஆசிரியராக  இருந்துள்ளார்.
தினபதி - சிந்தாமணி ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர்களுக்கு சிவநாயகம் வழிகாட்டியாகவும் நல்லாசானாகவும் விளங்கியவர். அரசியல் சார்ந்த செய்திகளில் - முக்கியமாக அவற்றின் தலைப்புகளில் விவரணங்களும்  காணப்படும்.
உதாரணத்திற்கு ஒரே ஒரு தகவலை மாத்திரம் சொல்கின்றேன்.
தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், 1977 இல் நடந்த பொதுத்தேர்தலையடுத்து எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சித்தலைவரானார். அவ்வேளையில் தினபதியில் ஒரு செய்தியின்  தலைப்பு  இவ்வாறு இடம்பெற்றது.
"தமிழ் ஈழம் கேட்ட  'அமிர்' இலங்கை அரசின் காரும் வீடும் ஏற்பாரா..? "
அத்துடன் நில்லாமல் இந்தத்தலைப்புக்கு இருமருங்கும் ஒரு காரின் படத்தையும் ஒரு வீட்டின் படத்தையும் சிவநாயகமோ அல்லது அவரது தூண்டுதலினால் வேறு யாரோ  அதில்  பதிவுசெய்தனர்.
ஏற்கனவே 1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் அமிர்தலிங்கம், வட்டுக்கோட்டை தொகுதியில் ஆ. தியாகராசா என்ற முன்னாள் கல்லூரி அதிபர் ஒருவரிடம் தோற்றிருந்தவர். அதன் பின்னர் அவரும் அவர் மனைவி மங்கையற்கரசியும் தமிழ் உணர்ச்சியை தூண்டும் விதமாக  மேடைகளில்  முழங்கி  இளம்தலைமுறையினரை எழுச்சிகொள்ளவைத்தனர். 
அதன் விளைவே வட்டுக்கோட்டை மாநாட்டில்  தனித்தமிழ் ஈழத்தீர்மானம். ஆயினும் அமிர், எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சித்தலைவராகி,  அன்றைய ஜே.ஆர். அரசு வழங்கிய சௌகரியங்களை  ஏற்கநேர்ந்தது.
முன்னர் தனித்தமிழ் ஈழம் கேட்டவர், இன்று எவ்வாறு காரும் வீடும் ஏற்கிறார்...? என்ற தொனிப்பொருளில் கேலிச்சித்திரமாக அல்ல செய்தியாகவே தினபதியில் அந்த அரசியல் மாற்றம் வெளியானது.
எஸ்.டி. சிவநாயம் சிந்தாமணியில் தொடர்ந்து எழுதிய " நான் கண்ட பாரதி" இதுவரையில் நூல் வடிவம் பெறவில்லை. அவ்வாறு அதனை அவர் வெளியிட விரும்பி குறிப்பிட்ட பத்திரிகை நறுக்குகளை பாதுகாத்து  வைத்திருந்த தகவலும் அண்மையில் தெரியவந்துள்ளது. யாராவது அதனை வெளியிட  ஆவனசெய்யவேண்டும் என்று இந்த அங்கத்தின்  ஊடாக வேண்டுகோள்  விடுக்கின்றேன்.
---0---
-->




























No comments: