நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 17 கப்ரா வண்டும் அஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடும் - ரஸஞானி


இந்த அங்கத்தை சற்று தயக்கத்துடன்தான் எழுதுகின்றேன். அதற்கு முன்னர் ஒரு குட்டிக்கதையை சொல்கின்றேன். ஒரு நாட்டில்  தேங்காய் எண்ணை உடல் நலத்திற்கு கேடுதரும். அதில் கொழுப்பு அதிகம். கொலஸ்ட்ரோல் நாடிகளில் படிந்து மாரடைப்பு வரும் என்று யாரோ ஒரு அதிபுத்திசாலி ஒரு பத்திரிகையில் எழுதிவிட்டார்.
அதனைப்படித்த மக்கள் தேங்காய் எண்ணையை தவிர்க்கத்தொடங்கினார்கள். அதனால் தேங்காய் உற்பத்தியாளர்களான தென்னந்தோட்ட உரிமையாளர்களின் வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டது. அவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்திவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
சில மருத்துவர்களைக்கொண்டு  , " தேங்காய் எண்ணையால் எதுவித பாதிப்பும் இல்லை. அது மக்களுக்கு உகந்தது. அதில் இன்ன இன்ன உயிர்ச்சத்துக்கள் இருக்கின்றன " என்று ஊடகங்களில் கட்டுரைகளையும் நேர்காணல்களையும் வரச்செய்தார்கள்.
மக்கள் எப்பொழுதும் ஊடகங்கள் சொல்வதை நம்புபவர்கள்தானே!?
மீண்டும் மக்கள் மத்தியில் தேங்காய் எண்ணைக்கு வரவேற்பு வந்தது!
களனி கங்கை தீரத்தில் அமைந்திருக்கும் பல தொழிற்சாலைகள் பற்றி முன்னைய அங்கங்களில் விபரித்திருந்தோம்.
சமகாலத்தில் கிழக்கு மக்களை ஒரு விலங்கு அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது!  நாளாந்தம் யானை தாக்கி மக்கள் காயப்பட்ட அல்லது கொல்லப்பட்ட செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. யானைகளின் நடமாட்டம் காடுகளில் மட்டுமல்ல கிராமங்கள், நகரங்களுக்குள்ளும் வந்துவிட்டது. அவை மக்களை அச்சுறுத்துகின்றன. தோட்டங்கள் வயல்களை குடியிருப்புகளை சேதப்படுத்துகின்றன.
ரயிலில் அடிபட்டும் யானைகள் இறக்கின்றன. யானைகளின் பெருக்கம் எங்கள் தேசத்தில் அதிகரித்துவிட்டதா? அவற்றுக்கும் கருத்தடை செய்யவேண்டி வருமோ தெரியவில்லை.!
இந்தப்பின்னணிகளுடன் பதவியிலிருக்கும்  நல்லாட்சி அரசில் இணைந்திருக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் சின்னமும் யானைதான்.
கொழும்பு ஆமர்வீதியில் அமைந்துள்ள மஸ்கன்ஸ் அஸ்பெஸ்டஸ் உற்பத்திகளின் Trade Mark  உம் யானைதான்!  இதனாலும் இந்த அங்கத்தை யானைமுகன் பிள்ளையாரை  பிரார்த்தி அவர்  துணைகொண்டு சற்று அவதானமாக எழுதவேண்டியிருக்கிறது.
கட்டிடப்பொருட்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகள். எமது முன்னோர்கள்  களிமண்ணில் குடிசையும் தென்னோலையில் கூரையும் அமைத்து நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ்ந்தவர்கள்.
நவநாகரீகத்தின் விளைவினால் மக்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்பட்டு,  சூழல் சுற்றாடல்களிலும் மாசு படிந்து உடல்நலம் கெட்டுவிட்டது இக்கால மாந்தர்களுக்கு!
இலங்கையில் பிளாஸ்ரிக், பொலித்தீன் பொருட்களுக்கு தடைவிதிக்கப்படுவதற்கு ஆலோசிக்கப்பட்ட வேளையில்,  இறக்குமதியாகும் அஸ்பெஸ்டஸ் தகடுகளுக்கும் தடைவரும் என்று பேசிக்கொண்டார்கள்.
அதற்கு ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைக்குள் எப்படியே அத்துமீறி நுழைந்த ஒரு வண்டும் காரணம் எனச்சொல்லப்பட்டது. அந்த வண்டுக்கு ஒரு பெயரையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.
அதன் பெயர் கப்ரா!. இதுகுறித்து இலங்கை அரசாங்க அமைச்சர்கள் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமும் தந்தனர்.
இதுதொடர்பாக வெளியான செய்திகளின் சுருக்கத்தை இங்கு தருகின்றோம்.
"எவருடைய அழுத்தம் காரணமாகவும் அஸ்பெஸ்டஸ் சீட்டிற்கான தடையை அரசாங்கம் நீக்க வில்லை. தற்காலிகமாகவே இந்தத் தடை விலக்கப்பட்டுள்ளதோடு விரைவில் இதற்கு மாற்றீ டொன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோர் தெரிவித்தனர்.
'அஸ்பெஸ்டஸ் சீட்'  தடையின் காரணமாக இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் பட்டிருக்கலாம் என உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டாலும்,  இது ஊர்ஜிதப் படுத்தப்படவில்லை என்று தெரிவித்த அவர்கள், ரஷ்யாவுடன் முறுகல் ஏற்படாதவகையில் சுமுகமாக இந்த பிரச்சினையை தீர்க்க முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்கள்.
ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி  தடை தொடர்பாகவும்  அஸ்பெஸ்டஸ் சீட் தடை நீக்கம் குறித்தும் ஊடகவி யலாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளிக்கையிலே அமைச்சர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்கள். பெருந் தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டதாவது:
 தேயிலைக்குள் அன்றி பக்கெட்டுக்குள் தான் இந்த கப்ரா வண்டு இருந்துள்ளது. இலங்கையில் அரிதாக இருக்கும் ஒருவகை வண்டினமே இது. அதனால், வேறு துறைமுகத்தில் வைத்து இந்த வண்டு வந்திருக்கலாம் .
இந்த பிரச்சினை தொடர்பில் ரஷ்யாவுக்கான தூதுவர் சமன் வீரரத்ன இலங்கையில் உள்ள ரஷ்ய தூதுவருடன் பேசியுள்ளதோடு தீர்வு காண்பதற்காக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையால் ரஷ்ய சந்தையில் எமது தேயிலைக்கு நெருக்கடி ஏற்படலாம். ஜனவரி நடுப்பகுதிக்குள் இதற்கு தீர்வு காண முடியுமென்றால் பாதிப்பு குறைவடையும். இலங்கையில் மொத்த தேயிலை உற்பத்தியில் 11 வீதம் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உத்தியோக பற்றற்ற தகவல்களின் பிரகாரம் இந்த தடைக்கும் அஸ்பெஸ்டஸ் சீட் தடைக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. 2018 ஜனவரி மாதம் முதல் அஸ்பெஸ்டஸ் சீட்டிற்கு தடைவிதிக்க ஏற்கெனவே அரசாங்கம் முடிவு செய்திருந்தது. இந்த முடிவை தற்காலிகமாக இடை நிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் ரஷ்யாவுக்குச் சென்று ரஷ்ய வெள்ளை அஸ்பெஸ்டஸ் சீட்டினால் மனிதர்களுக்கு பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆராய இருக்கிறார். எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதை தடுப்பதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ரஷ்யா தரப்பில் முன்வைக்கப்படும் மேலதிக யோசனைகளையும் செயற்படுத்த தயாராக இருக்கிறோம்.
சூழல் பிரச்சினை காரணமாகத்தான் அஸ்பெஸ்டஸ் சீட்டிற்கு 2018 ஜனவரி முதல் தடைவிதிக்க முன்னர் முடிவு செய்யப்பட்டது. இதன் துகள்களினால் புற்றுநோய் ஆபத்துள்ளது. அஸ்பெஸ்டஸ் சீட்டிற்கு மாற்றீடாக எதுவும் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. 80 வீதமான வீட்டுக் கூரைகளுக்கு அஸ்பெஸ்டஸ் சீட் தான் இன்னும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நிரந்தரமாக அன்றி தற்காலிகமாகவே அஸ்பெஸ்டஸ் சீட் தடை நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியும் இது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார். அந்தச்செய்தி பின்வருமாறு:
 அஸ்பெஸ்டஸ்  பாவனையைத் தடைசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து அஸ்பெஸ்டஸ் பொருட்களுக்கான மாற்றீடுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியது.
 கட்டுப்படியான விலைகளில் தரமான மாற்றீடுகளை உருவாக்கி அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் அந்த மாற்றீடுகளைப் பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிப்பது  தொடர்பிலும் இக்கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய அரசாங்க கட்டிடங்களுக்கு அஸ்பெஸ்டஸ் அல்லாத கூரைத்தகடுகள் மற்றும் நிர்மாணத்துறை பொருட்களைப் பயன்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், வாகனங்களின் பிரேக், கிளச், கெஸ்கட் மற்றும் அஸ்பெஸ்டஸ் கயிறுகள் போன்ற அஸ்பெஸ்டஸ்  தொடர்புடைய சகல உற்பத்திகளையும் தடை செய்வது குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் 2018ஆம் ஆண்டு முதல் அஸ்பெஸ்டஸ் இறக்குமதியை முழுமையாகத் தடைசெய்யும் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின்படி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
 அஸ்பெஸ்டஸ் பாவனையின் அபாயங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அஸ்பெஸ்டஸ் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
 சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் ரோஹன கீர்த்தி திசாநாயக்க மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
மேதகு ஜனாதிபதியும் மாண்புமிகு அமைச்சர்களும் அதிகாரிகளும் தேயிலைக்குள் நுழைந்த அந்த வண்டுக்கும்  இறக்குமதியாகும் அஸ்பெஸ்டசுக்கும் ஊடகங்கள் போட்ட இறுக்கமான முடிச்சை  அவிழ்த்தனர்.
வெளிநாடுகள் பலவற்றில் பொலித்தீன் பைகளுக்கும் அஸ்பெஸ்டஸ் கூரைகளுக்கும் படிப்படியாக தடை வந்துவிட்டது. பொலித்தீன் மண்ணில் உக்கிப்போவதற்கு  இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாகலாம்.!
அஸ்பெஸ்டஸ் துகள்கள் மனித உடல்களுக்கு புற்றுநோயை விரைந்து தந்துவிடலாம் ! இவை விஞ்ஞானபூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்.
வெளிநாட்டில் புகலிடம் பெற்ற ஒரு தமிழர் இலங்கை சென்று, அங்கிருப்பவர்கள் தங்கள் வீடுகளின் கூரைகளுக்கு அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடு பாவிப்பது தொடர்பாக எச்சரித்து,  அதன் பக்கவிளைவுகளை எடுத்துச்சொன்னபோது,  அதனை நகைப்புக்கிடமான வாதமாக குறிப்பிட்டு வடபுலத்தில் ஒரு எழுத்தாளர் சிறுகதையொன்றும் எழுதியிருந்தார்.
இலங்கையில் யானை மார்க் அஸ்பெஸ்டஸ் பற்றிய விளக்கங்கள் மேலும் தொடரலாம்.
(தொடரும்)
(நன்றி: அரங்கம் - இலங்கை இதழ்)

-->

















No comments: