உலகச் செய்திகள்


வடகொரியா புதிய ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

101 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ; 85 பேர் காயம்

ஜப்பானில் ஒரே மாதத்தில் 300 பேர் பலி

எழுந்து  அமர்ந்தார் கருணாநிதி

இம்ரான்கானின் பதவியேற்பு நிகழ்வில் இந்திய பிரபலங்களுக்கு அழைப்பு

வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பில்லை; இம்ரான்கான்


வடகொரியா புதிய ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

31/07/2018 கடந்த காலத்தில் ஏவுகணைகளை தயாரித்த அதேபகுதியில் வடகொரியா ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக வாசிங்டன் போஸ்ட்டிற்கு அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகரிற்கு அருகில் உள்ள பகுதியில் இரு கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை தயாரிக்கும் நடவடிக்கையில் வடகொரியா ஈடுபட்டுள்ளது என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை இலக்கு வைக்கும் விதத்தில் வடகொரியா தயாரித்த முதல் ஏவுகணை குறிப்பிட்ட பகுதியிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியா புதிய ஏவுகணைகளை தயாரிக்கும் நடவடிக்கைகளில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் வாகனங்கள் நடமாடுவதை காண்பிக்கும் செய்மதி புகைப்படங்களை ரொய்ட்டர் செய்தி சேவை வெளியிட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 









101 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ; 85 பேர் காயம்

01/08/2018 மெக்சிக்கோவில் 97 பயணிகள் உட்பட 101 பேருடன் பயணித்த விமானமானது விபத்துக்குள்ளானதில் 85 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்திலிருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உட்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்ட வேளை சில நொடிகளிலேயே திடீர் என தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 85 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த விபத்து சம்பவம் குறித்து டுராங்கோ மாகாண ஆளுநர் ஜோஸ் ரோசாஸ் குறிப்பிடுகையில், விமானம் புறப்படும் போது நிலவிய மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது, புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்து ஏற்பட்டதால், விமான நிலையத்திற்கு அருகே உள்ள நிலத்தில் விமானம் அவசர தரையிறப்பட்டது என தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 









ஜப்பானில் ஒரே மாதத்தில் 300 பேர் பலி

31/07/2018 ஜப்பான் நாட்டை இந்த மாதத்தில் தொடர்ந்து தாக்கிய மழை, வெள்ளம், வெப்பம் மற்றும் புயலால் 300 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 
ஜப்பான் நாட்டின் பல பகுதிகளில் இந்த மாதத்தின் முற்பகுதியில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மணிசசரிவில் சிக்கி 220 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
இதனைதொடர்ந்து, கடந்த வாரத்தில் இருந்து ஜப்பானின் பல மாகாணங்களை வறுத்தெடுத்துவரும் 104 டிகிரி வெயிலின் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 116 பேர் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து சமீபத்தில் வீசிய புயலில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த மாதத்தில் மட்டும் ஜப்பானில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் கடந்த 1982 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்நாடு சந்தித்துள்ள மிகப்பெரிய பேரழிவாகும் என உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.  நன்றி வீரகேசரி 









எழுந்து  அமர்ந்தார் கருணாநிதி

02/08/2018 தமிகத்தின் காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் அவர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். 
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2 ஆம் திகதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் உடல் நிலை தேறிவருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் வைத்தியசாலைக்கு சென்று கருணாநிதி உடல் நிலை பற்றி விசாரித்து வருகிறார்கள்.
துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை சந்தித்தனர்.
இந்நிலையில் தற்போது கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு கருணாநிதி உடல் நிலையில் மேலும் முன்னேற்றமாக அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். முதலில் வைத்தியர்கள் அவரை படுக்கையில் சிறிது நேரம் அமரவைத்தனர். அதன் பிறகு அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்து சிறிது நேரம் பயிற்சிகள் அளித்தனர்.
இது குறித்து வைத்தியசாலை வட்டாரத்தில், கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவரை சிறிது நேரம் நாற்காலியில் அமர வைத்து பயிற்சி அளித்தனர். மருந்துகளை ஏற்றுக் கொண்டு உடல் நிலை ஒத்துழைப்பு அளிக்கிறது என்று தெரிவித்தனர்.
கருணாநிதி செயற்கை சுவாசம் இல்லாமல் தானாகவே சுவாசிக்கிறார். தேவைப்படும் போது மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. திரவ உணவு குழாய் வழியாக செலுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையே முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஏற்பாட்டின் பேரில் லண்டன் மற்றும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற தொற்று நோய் வைத்திய சிசிச்சை நிபுணர் நேற்று காவேரி வைத்தியசாலைக்கு சென்று கருணாநிதியின் உடலை பரிசோதித்தார். சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆவணங்களையும் பார்த்தார்.
தற்போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் இதுவே அவருக்கு போதுமானது என்றும் தெரிவித்தார். மேலும் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார். நன்றி வீரகேசரி 









இம்ரான்கானின் பதவியேற்பு நிகழ்வில் இந்திய பிரபலங்களுக்கு அழைப்பு

02/08/2018 புதிய பிரதமராக பதிவியேற்கவுள்ள இம்ரான்கானின் பதவியேற்பு விழாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைப்பது தொடர்பிலான ஆலோசனையில் பாகிஸ்தானின் வெளியுறவு துறை ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற இம்ரான்கானின் பிடிஐ கட்சி சிறிய கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைக்க உள்ளது. 
இந்நிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி இம்ரான்கான் பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்புக்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் தற்போது  சீனா மற்றும் துருக்கி நாட்டு ஜனாதிபதிகள் வருகை தருவது உறுதியாகிவிட்டது.
 மோடி பிரதமராக பதவியேற்கும் போது தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தமை போல, இம்ரான்கானும் இந்தியா உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். 
இதனால், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. அழைப்பை ஏற்றுக்கொண்டு விழாவுக்கு வந்தால் சிக்கல் இல்லை. ஆனால், புறக்கணித்துவிட்டால் அவமானம் என்பதால் மிகுந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவரான இம்ரான்கான் தனது விளையாட்டு காலத்தில் விளையாடிய இந்திய முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல, பாலிவுட் நடிகர் ஆமீர்கானுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர்கள் பங்கேற்பது உறுதியாக தெரியவில்லை. சமீபத்தில் இம்ரான்கானை தொடர்புகொண்டு பேசிய மோடி, தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார். இதனால், மோடியை நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்றே இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.
அழைப்பை ஏற்று அங்கே சென்றால் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்பதால், வெறும் வாழ்த்து மட்டும் மோடி கூறவும் வாய்ப்பு உள்ளது. திடீரென விமானத்தை எடுத்துக்கொண்டு இஸ்லாமாபாத் சென்று இம்ரான்கானை கட்டி தழுவி வாழ்த்து கூறவும் வாய்ப்பு உள்ளது. நன்றி வீரகேசரி 












வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பில்லை; இம்ரான்கான்

02/08/2018 இம்ரான்கானின் பதவியேற்பு நிகழ்விற்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்புவிடுக்க இம்ரான் கான் முன்பு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது குறித்த முடிவை கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பாகிஸ்தானில் தேர்தல் இடம்பெற்றது. இதில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 
இதனையடுத்து மற்ற கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ள நிலையில் இம் மாதம் 11 ஆம் திகதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அழைக்க இம்ரான் கான் முடிவு செய்திருந்தார்.
சார்க் நாடுகளின் தலைவர்களையும், பிரதமர் மோடியையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்க அவர் விரும்பினார். எனினும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி தேவை என்பதால் அதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வெளிநாட்டு தலைவர்கள் வருகைக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பதவியேற்பு விழாவை உள்ளூர் தலைவர்களை மற்றும் அழைத்து எளிமையாக நடத்த பிடிஐ கட்சி முடிவு செய்துள்ளது. 
இம்ரான் கான், இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து, இந்தி நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இம்ரான் கான் விடுத்த அழைப்பை, சித்து ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 






No comments: