வேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 9 – ச சுந்தரதாஸ்



காமினியைப் போலவே சிங்களத் திரை வானில் நட்சத்திரமாக ஜொலித்தவர் விஜயகுமாரணதுங்க. இவருடைய வெற்றிக்கும் லெனினின் பங்களிப்பு கணிசமாக வழங்கப்பட்டுள்ளது. அபிரஹச படத்தில் வில்லன் பாத்திரத்திலான கதாநாயகனாக நடித்த விஜய்க்கு ஹித்துவொத் ஹித்துவமய் படத்தில் இரட்டை வேடம் வழங்கினார். அதே போல உனெத்தஹாய் மலத்தஹாய் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். லெனினின் கடைசிப் படமாக அமைந்த படம் யுகென் யுகெயட்ட (யுகம் யுகமாய்). இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராகவும் டைரக்டராகவும் மட்டுமன்றி  இணைத்தயாரிப்பாளராகவும் லெனின் பொறுப்பேற்றிருந்தார். இந்தப் படம் 1987ம் ஆண்டு வெளிவந்தது. இந்த காலகட்டத்தில் இலங்கையின் அரசியல் நிலவரம் கலவரங்களைச் சந்தித்து சகதியாக காட்சியளித்துக் கொண்டு இருந்தது. விஜய்யும் தீவிர அரசியலில் குதித்து பல சங்கடங்களையும் பிரச்சனைகளையும் சந்திந்துக் கொண்டிருந்தார். ஆனாலும் லெனினுக்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் யுகென் யுகயட்ட படத்தில் இலவசமாக நடித்திருந்தார் விஜய் குமாரதுங்க. 

யுகென் யுகயட்ட படம் வெளிவந்து சில காலத்தினுள் நான் கடும் நோயுற்றேன். அந்த நேரத்தில் விஜேய் எனக்கு பல விதத்திலும் உதவினார். அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி எனக்கு கால் முறிவு ஏற்பட்ட போதும் நேரில் வந்து ஆறுதல் சொன்னார். அப்போது வேடிக்கையாக நாங்கள் படங்களிலும் நடிக்கிறோம் எங்களுக்கு ஒன்றும் நடப்பதில்லை நீங்கள் மட்டும் விபத்தில் எப்படி சிக்கினீர்கள் என்று விஜேய் என்னிடம் கேட்டார். ஆனால் அதற்கு அடுத்த சில தினங்களிலேயே அவர் சுடப்பட்டு இறந்தார் என்று கேள்விப்பட்டவுடன் நான் இடிந்து போய்விட்டேன். 


விஜேய் நல்லதொரு மக்கள் ஆதரவு பெற்ற நடிகர். மேலும் உச்சத்தை தொட்டிருக்கவேண்டியவர். அவரைப் போல் மற்றொருவரை உருவாக்கவே முடியாது என்று லெனின்  குறிப்பிட்டுள்ளார். அதே காலகட்டத்தில் லெனினின் நெருங்கிய நண்பரான பிரபல பாடகர் எச். ஆர். ஜோதிபால மறைந்ததும் அவரை மிகவும் பாதித்தது.

சிங்களப் படங்களையே தொடர்ந்து டைரக்ட் செய்து கொண்டிருந்த லெனினுக்கு தமிழ்ப் படம் ஒன்றை டைரக்ட் செய்யும் வாய்ப்பு தேடிவந்தது. நல்லூர் மனோகரன் தயாரித்து கதாநாயகனாக நடிப்பதற்கு முன்வந்தார். படத்திற்கு லெனின் திரைக் கதை எழுதி டைரக்ட் செய்ய ஒப்பந்தமானார். நெஞ்சுக்கு தெரியும் என்று படத்திற்கு பெயரிடப்பட்டது. கதாநாயகியாக ஹெலன்குமாரி நடித்தார். அதன் அனுபவங்களை அவரே சொல்லுகிறார். 

லெனினுக்கு இது முதலாவது தமிழ்ப் படம். மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றினார். காட்சிகளை வித்தியாசமாக எடுத்தார். நான் நடித்த ஒரு சோகக் காட்சியில் கதாநாயகனாக நடித்தவர் என் கன்னத்தில் வடிந்த கண்ணீரை தனது உதட்டினால் துடைத்து விடுவதைப் போல ஒரு காட்சி. இதனை சற்றும் அருவருப்பு ஆபாசம் இல்லாமல் படமாக்கினார். படம் நன்றாகவே உருவானது. வெளிவந்திருந்தால் தமிழ்ப் படவுலகில் சாதனை புரிந்திருக்கும். ஆனால் 83ம் ஆண்டு கலவரத்தில் விஜயா ஸ்டுடியோ தீப்பற்றி எரிய நெஞசுக்குத் தெரியும் படச்சுருளும் எரிந்து கரிகியது. 

நெஞ்சுக்குத் தெரியும் படத்தைப் பற்றி கதாசிரியர் அழகேசனும் தன் நினைவுகளை மீட்டினார். 

பைலட் பிரேம்நாத் படப்பிடிப்பிற்கு வந்திருந்த போது சிவாஜிக்கும் சில கலைஞர்களுக்கும் விஜயா ஸ்டுடியோவில் நெஞ்சுக்குத் தெரியும் படத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை லெனின் போட்டுக் காட்டினார். காட்சிகளை பார்த்த சிவாஜி யார் இந்தப் பொண்ணு நம்ம சாவித்திரி மாதிரி இருக்கே என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவ்வாறு அவர் கேட்டது படத்தில் கதாநாயகியாக நடித்த ஹெலன்குமாரியைப் பார்த்துத்தான். படத்தின் காட்சிகளையும் அவர் பார்த்து பாராட்டினார். ஆனால் படம் ரசிகர்களை சென்று அடையாமல் தீக்கு இரையாகிவிட்டது.
தமிழரான லெனின் பல சிங்களப் படங்களை வெற்றிகரமாக டைரக்ட் செய்த போதும் அவரால் ஒரு தமிழ்ப் படத்தைக் கூட திரைக்கு கொண்டு வரமுடியாது போனது துரதிர்ஷ்டம்தான்.  ஆனாலும் யார் அவள் படத்தில் மூலம் அந்த இலக்கை ஒரளவு அடைந்தார் என்று எண்ணி சந்தோஷப்படவேண்டியதுதான்!

சிங்களத் திரையுலகில் தமிழர்களின் ஆதிக்கம் விபாத்திருந்தது என்பது வரலாற்று உண்மை. ஆனால் 1983ம் ஆண்டு ஏற்பட்ட ஆடிக் கலவரம் எல்லாவற்றையும் புரட்டிப்  போட்டது. பல தமிழ் கலைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். இன்னும் சிலர் சிங்களத் திரையுலகில் இருந்து ஒதுங்கினார்கள் அல்லது ஒதுக்கப்பட்டார்கள். கே. வெங்கட் என்ற பிரபல சிங்களப் பட இயக்குனர் ஆடிக் கலவரத்தின் போது கொல்லப்பட்டார். ஹெந்தளை விஜயா ஸ்டுடியோ எரித்து நாசம் செய்யப்பட்டது. அதனுடன் சேர்ந்து பல சிங்களப் படங்களின் பிரதிகளும் தீக்கிரையாகின. 

1983ம் ஆண்டு கலவரத்தை தொடர்ந்து  லெனினின் மனைவி தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் புகுந்தார். ஆனால் லெனின் அவ்வாறு அவர்களுடன் செல்ல விரும்பவில்லை. திரையுலகை அவ்வளவு சுலபமாக அவர் விடுவதாக இல்லை.

83ஆம் ஆண்டு கலவரத்திற்கு பிறகு இலங்கையில் நிம்மதியாகvaala முடியும் என்ற நம்பிக்கை போய்விட்டது. குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிட்டு இந்தியாவுக்கு வந்து விட்டோம். இந்தியாவிலும் வாழ்க்கை சுலபமாக இல்லை. ஆனாலும் பல சிரமங்களுக்கு மத்தியில் பிள்ளைகளை படிப்பித்து பட்டதாரி ஆக்கி விட்டேன். இன்று அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்கிறார் லெனினின் மனைவி பிரிஜேட் மொறாயஸ். சென்னையில் வாழ்ந்து வரும் அவர் மூன்று பிள்ளைகளின் நல்வாழ்வைப்[ பார்த்து மகிழ்ச்சியடைகிறார்.

80ஆம் ஆண்டுகளின் நடுப் பகுதிகளில் லெனினின் உடல்நிலை பாதிப்படையத் தொடங்கியது இதனால் தொழிலில் அவரால் முன்போல கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும் விஜய்யின் நடிப்பில் யூகேஜிஎன் யுகயட்ட படத்தை உருவாக்கி வெளியிட்டார். வேறு சில படங்களை டைரக்ட் செய்யவும் வாய்ப்புக்கள் வந்த போதிலும் அவை நடைமுறைக்கு வரவில்லை.

உடல் நிலை பாதிப்படைந்து தனித்து விடப்பட்ட லெனினுக்கு பாடகர் எச். ஆர். ஜோதிபால கைகொடுத்தார். அவருடைய அனுசரணையில் பேரில் கொட்டாஞ்சேனை ஸ்ரீ தீபத்துத்தூராமவிகாரையில் பிரதம தேரர் பி ஜினரத்ன தேரரின் அறிமுகம் கிட்டியது.
லெனின் நிலைமையை உணர்ந்த தேரர் அவருக்குvikaaraiyil ஓர் அறையை ஒதுக்கி தந்தார். லெனினின் வாசஸ்தலமாக வணக்கஸ்தலம் மாறியது. இதே கால கட்டத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் சிக்கி லெனினின் காலில் காயம் ஏற்பட்டு ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று.

அதே சமயம் அடிக்கு மேல் அடியாக லெனினின் மிக நெருங்கிய நண்பர்களான எச் ஆர் ஜோதி பாலாவும், விஜயகுமாரணதுங்காவும் அடுத்தடுத்து காலமானார். இவை எல்லாமே லெனினுக்கு பாதகமாக அமைந்தன.

லெனினுடைய எல்லாப் படங்களிலும் நான் பாடியிருக்கிறேன். அவை ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. காமினி விஜய் போன்றவர்களின் திரைப்படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றி பெற என் பாடல்கள் உறுதுணையாக இருக்கும் என்று லெனின் நம்பினார். அவர் படங்களில் பாடியதால் நானும் புகழ் பெற்றேன் என்று எச் ஆர் ஜோதிபால ஒரு தடவை குறிப்பிட்டார். லெனின் ஜோதிபால உறவு கடைசிவரை நீடித்தது.
பிரபல நகைச்சுவை நடிகர் ஜே பி சந்திரபாபு தமிழகத்தின் தூத்துக்குடியை பூர்விகமாக கொண்டவர். நடிப்பு, நடனம், இசை, பாடுவது, டைரெக்ஷன் என்று பன்முகத்திறமைகளை தன்னிடத்தே கொண்டவர். சிறு வயதில் கொழும்பில் வாழ்ந்து கல்வி கற்று பின்னர் தமிழகம் சென்று பலத்த முயற்சிகளுக்கு பிறகு திரையுலகில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்தவர். எவ்வளவு திறமை இருந்தும் அவரின் வாழ்வு சோகத்திலும் வீழ்ச்சியிலுமேயே முடிந்தது. காரணம் அவருடைய அத்தனை திறமைகளையும் மழுங்காக் கூடிய மதுவின் பிடியில் அவர் கடுமையாக சிக்கியிருந்ததேயாகும். இதனால் இறுதியில் மாடி வீட்டு வாழ்க்கையாகவே இறந்தார்.

லெனினும் தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்டவர். பன்முகத் திறமை கொண்ட கலைஞன். சிங்களத்த திரையின் எல்லாக் கலைஞர்களையும் இயக்கியவர். ஆனாலும் அவருடைய வாழ்வு சோகத்திலும் வீழ்ச்சியிலும்தான் முடிந்தது. காரணம் அவருடைய அத்தனை திறமைகளையும் மழுங்கடிக்கக் கூடிய மதுவின் பிடியில் அவர் கடுமையாக சிக்கியிருந்ததேயாகும்.

1994ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி இலங்கைத் திரையுலகம் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளரை, ஒப்பனையாளரை, திரைக்கதையாசிரியரை, இயக்குனரை இழந்தது. சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லெனின் தனது இறுதி மூச்சை அங்கு விட்டார். கொழும்பு கனத்தை மயான இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. திரையுலகச் சேர்ந்த பலர் தமது இறுதி அஞ்சலியை நேரில் வந்து செலுத்தினார்கள். அவருடைய திறமைகளைpatri சாதனைகள் பற்றி வெளிப்படையாகப் பாராட்டினார்கள்.

லெனினுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் பாரத் மொறாயஸ். அவருக்கு அடுத்தவர் கீதிகா மொறாயஸ், மூன்றாமவர் ஜோன் லெனின் மொறாயஸ். இவர்கள் எல்லோரும் திருமணமாகி சென்னையில் வாழ்கிறார்கள்.

தன் தந்தையைப் பற்றி பாரத் மொறாயஸ் இவ்வாறு பெருமிதத்துடன் கூறுகிறார். "எங்கள் தந்தை சினிமாவுக்கென்றே தன் வாழ்நாளை அர்பணித்துக் கொண்டார். நாளுக்கு பதினெட்டு மணி நேரம் வரை உழைப்பார். நள்ளிரவில் கூட எங்கள் வீட்டு மாடியில் ஒத்திகை பாடல் ரிகர்சல் என்பன நடக்கும். ரொக்ஸ்சாமி போன்றவர்கள் எல்லாம் வருவார்கள், சினிமா சினிமா என்றே வாழ்ந்ததால் குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் வந்ததுண்டு. ஆனாலும் தான் தேர்ந்தெடுத்த தோளிலே அவருக்கு பிரதானமாக இருந்தது.

அவரை வைத்து படம் எடுத்த எவரையும் அவர் நட்டமடையச் செய்யவில்லை. இந்தக் கலைஞரையும் அவர் கஷ்டத்தில் விடவில்லை. அவரை பயன்படுத்தியவர்கள் எல்லோரும் இலாபமடைந்தார்கள். அது மட்டுமன்றி எல்லா இன மக்களும் அவருடன் இணைந்து பணியாற்றினார்கள். இலங்கைத் திரையுலகை பொறுத்தவரை இன்றும் அவர் வேறு யாருமல்ல லெனின் மொறாயஸ்.

முற்றும் 







No comments: