யோகம் தரும் யோகா ! - ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா )


image1.JPG    மண்ணிலே நல்லவண்ணம் வாழ்ந்திடவே எண்ணுகின்றோம்
    மனத்தினிலே மகிழ்ச்சியது நிலைத்திடவே நினைக்கின்றோம்
    உள்ளமெலாம் உத்வேகம் ஊற்றெடுக்க விரும்புகின்றோம்
    உயர்யோகம் கடைப்பிடித்தால் உய்ந்திடலாம் வாழ்வினிலே !

    உடலற்றோர்கு உலகில்லை  திடனற்றோர்குச் சுகமில்லை
    உடலினை ஓம்பாதார்க்கு உயிரிருந்தும் ஏதுபயன் 

    திடமுடனே உடல்பெறவும் தீமையிலா மனம்பெறவும்
    உலகிடையே வாழ்வதற்கு உற்றதுணை யோகமன்றோ !

    அலைபாயும் மனமடங்கின் ஆனந்தம் தேடிவரும்
    அதையெமக்கு அளிக்கின்ற அருமருந்து யோகாவே
    யோகமெனும் கலையெமக்கு மூப்புப்பிணி போக்கிவிடும்
    ஆதலால் யோகமது அமிர்தமென விளங்குதன்றோ !

     உடல்நலத்தின் பேறாக உளத்தெளிவு அமைந்துவிடின்
     அறிவுவளம் பெறுவதற்கு அதுதுணையாய் அமைந்துவிடும்
     இதைநல்கும் யோகாமதை எல்லோரும் கடைப்பிடித்தால்
     எல்லோர்க்கும் பெருவரமாய் இருந்துவிடும் யோகமது !


      நீண்டாநாள் வாழ்வதற்கும் நிம்மதியைத் தருவதற்கும்
      ஆண்டவனாய் இருப்பதுதான்  அகிலமதில் யோகாவே
      வரமாக உரமாக வாய்த்த இந்தயோகாவை
      வாழ்வாக மாற்றிவிட்டால் வாய்த்துவிடும் யோகவாழ்வு !

      நோயின்றி வாழ்வதற்கும் நோயுற்றோர் மீள்வதற்கும்
      தோழ்கொடுக்கும் யோகாவை வாழ்வாக அமைத்துவிடின்
       நாளெல்லாம் எங்களுக்கு நலம்வந்து குவிந்துவிடும்
       யோகநிறை வாழ்கையது யோகாவில் கிடைத்துவிடும் !

No comments: