இலங்கைச் செய்திகள்


தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரசகரும மொழிகள் அமைச்சின் புதிய நிலையம் திறப்பு

இலங்கைக்கு போர்க்கப்பலை வழங்குகிறது அமெரிக்கா

திருப்பதியில் ரணில் ; கருணாநிதியின் குசலமும் விசாரிப்பு

கத்திமுனையில் இரு சிறுமிகள் கடத்தல் ; சித்திரவதை, அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்பு

யாழில் தொடரும் குள்ளர்களின் அட்டகாசம் ; வேலிக்கு  தீ வைப்பு ; மக்கள்மத்தியில் பெரும் அச்சம் !

யாழில் வாள்வெட்டு  ; இருவர் காயம்

சீனாவின் முதலீடுகள் இலங்கையில் அதிகரிப்பு- இந்தியா கவலைதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரசகரும மொழிகள் அமைச்சின் புதிய நிலையம் திறப்பு

30/07/2018 தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வட மாகாண நிலையம் இன்று  கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி  ஏ 9 பிரதான வீதியில் 155 ஆம் கட்டை பகுதியில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன், பொது நிர்வாகம், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நீதி மற்றும் சிறைச்சாலைக்ள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல  தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள்  பிரதி அமைச்சர் ஷெய்யித் அலி ஸாஹீர் மௌலானா, பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சிறிரதன் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருடன்  அமைச்சின் செயலாளர்கள்  வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் அரச  உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நன்றி வீரகேசரி 

இலங்கைக்கு போர்க்கப்பலை வழங்குகிறது அமெரிக்கா

30/07/2018 அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யு.எஸ்.சி.ஜி ஷேர்மன்’, இலங்கை கடற்படைக்கு அடுத்தமாதம் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது.
1967 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், 50 ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில், கடந்த மார்ச் மாதம், அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது.
378 அடி ( 115 மீற்றர்) நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பல் தற்போது. ஹவாய் தீவிலுள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் தரித்து நிற்கிறது.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய இந்தப் போர்க்கப்பல் கொடையாக வழங்கப்படுகின்ற போதிலும், இதனைப் பழுதுபார்க்கும், உதிரிப்பாக செலவுகளுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டும்.
ஹவாயில் தரித்திருக்கும், ‘யு.எஸ்.சி.ஜி ஷேர்மன்’, போர்க்கப்பலின் உலங்குவானூர்தி இறங்கு தளத்தில் வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில், இந்தப் போர்க்கப்பலை அதிகாரபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
எனினும், 2019 பெப்ரவரி வரையில் இந்தக் கப்பல் ஹவாயிலேயே தரித்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 
திருப்பதியில் ரணில் ; கருணாநிதியின் குசலமும் விசாரிப்பு

03/08/2018 திருப்­பதி வெங்­க­டா­ச­ல­ப­தியை வழி­ப­டு­வ­தற்­காக  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்தார். இவ­ரது வரு­கை­யை­யொட்டி பாது­காப்பு ஏற்­பா­டுகள் பலப்­ப­டுத்­தப்­பட்டுள்­ளன.
இந்த விஜயத்தின்போது வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நலன் தொடர்பில் அவரது புதல் வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு விசாரித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று தடவைகளுக்கும் அதிகமாக திருப்பதி வெங்கடாசலபதியை வழிப்படுவதற்கு இந்தியாவுக்கு சென்றுள்ளமை விசேட அம்சமாகும்.  நன்றி வீரகேசரி 

கத்திமுனையில் இரு சிறுமிகள் கடத்தல் ; சித்திரவதை, அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்பு

03/08/2018 வவுனியாவில் கடத்தப்பட்ட  இரு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15, 16 வயது சிறுமிகள் இருவர் நேற்று பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது காணாமல் போயிருந்தனர்.
காணாமல்போன சிறுமிகள் இருவரும் வவுனியா, சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் கொண்டு சென்று தடுத்து வைத்திருந்த நிலையில் இரு சிறுமிகளும் அங்கிருந்து வெளியேறி அயலவர்களின் உதவியுடன் தப்பித்துள்ளனர்.
அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அவ் வீட்டை இரவு பூந்தோட்டம் இளைஞர்கள் முற்றுகையிட்டதுடன், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
குறித்த இரு சிறுமிகளும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கைவிடப்பட்ட வீட்டில் இருந்து உணவுப்பொதி, தண்ணீர் போத்தல், ஆண் ஒருவரின் பாதணி என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பின்னர், பாடப்புத்தகம் வாங்குவதற்காக சைக்கிளில் சென்றனர். அப்பொழுது ஆட்டோவில் வந்தவர்கள் குறித்த சிமிகளை கட்டாயப்படுத்தி சாந்தபுரம் பகுதிக்கு அழைத்து சென்று கத்திமுனையில் துன்புறுத்தியதுடன்,  பலவந்தமாக அலரிவிதை உட்கொள்ள வைக்கப்பட்டுள்ளது. 
சிறுமிகளை காணவில்லையென உறவினர்கள் தேடிய நிலையில், சம்பவ இடத்திலிருந்து தப்பிவந்த சிறுமிகள் நடந்தவற்றை கூறியுள்ளனர். இதையடுத்து இரவு 9 மணியளவில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனத் தெரிவித்தனர்.
இதேவேளை, அலரி விதை உட்கொள்ளப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியதால், உடனடியாக அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், மேலதிக வைத்திய பரிசோதனைகளின் பின்னர் இன்று காலை அளவிலேயே மேலதிக விபரங்களை கூற முடியுமென்று வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டன.  நன்றி வீரகேசரி 


யாழில் தொடரும் குள்ளர்களின் அட்டகாசம் ; வேலிக்கு  தீ வைப்பு ; மக்கள்மத்தியில் பெரும் அச்சம் !

03/08/2018 யாழ்ப்பாணம், அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தீ மூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அராலிப் பிரதேசங்களில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும், அவர்கள்  இரவு வேளைகளில் வீடுகளுக்குக் கற்களால் எறிவதாகவும் வீட்டு யன்னல்கள் மற்றும் கதவுகளைத் தட்டுவதாகவும் அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். 
இந்நிலையில், நேற்று நள்ளிரவு பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்குத் தீ மூட்டப்பட்டுள்ளதுடன், அயலிலுள்ள அவரது தம்பியின் வீட்டு யன்னல்களைத் தட்டியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 
அண்மைக்காலமாக அராலிப் பிரதேசத்தைக் கலக்கமடையச் செய்துவரும் குள்ள மனிதர்களின்  அட்டகாசம்தான் இது என்று அயலவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
இச்சம்பவத்தால் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இருப்பினும் இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணப் பகுதியில் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்ற நிலையில் உரிய தரப்பினரோ அல்லது பொலிஸார்,அரசியல்வாதிகளோ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையெனவும் இது கடந்த காலங்களில் இடம்பெற்ற கிறீஸ் பூதங்கள் போன்ற திட்டமிட்ட செயல்களாக இருக்கலாமோ எனவும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். நன்றி வீரகேசரி 


யாழில் வாள்வெட்டு  ; இருவர் காயம்

03/08/2018 யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 
மிருசுவில் வடக்கில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த தம்பு ஜெயானந்தன் (வயது 57) மற்றும் நமசிவாயம் மகேந்திரன் (வயது 58) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.
கார் ஒன்றில் வந்த கும்பலே இவர்கள் மீது வாள் வெட்டினை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி 


சீனாவின் முதலீடுகள் இலங்கையில் அதிகரிப்பு- இந்தியா கவலை

03/08/2018 இலங்கையில் சீனாவின் முதலீடு அதிகரிப்பது குறித்து இந்தியா கவலையடைந்துள்ளது என இந்து நாளிதழின்  பிசினஸ் லைன் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிசினஸ்லைன் மேலும் தெரிவித்துள்ளதாவது
சீனா இலங்கையின் துறைமுகங்களில் முதலீடு செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ள அதேவேளை இந்தோ பசுவிக்கில் கால்பதிப்பதற்கு தனது அயல்நாடு மேற்கொள்ளும் முயற்சிகளை  இந்தியா கரிசனையுடன் பார்க்கின்றது.
சீனா சமீபத்தில் கடற்படை கலமொன்றை வழங்கியிருந்தது.
ஆசியாவின் இரு வல்லரசுகளான இந்தியாவும் சீனாவும் மோதிக்கொள்ளும் களமாக இலங்கை  உருவெடுத்துள்ளது என இந்திய அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் சீனாவும் இலங்கையின் துறைமுக அதிகார சபையும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சீனா இலங்கைக்கு சமீபத்தில் வழங்கிய கடற்படை கப்பல் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகாத போதிலும் சீனா 053 வகை கடற்படை கப்பலை அல்லது சீ 28 பி அல்லது சீ13 வகை கப்பலை வழங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனா இந்த வகை யுத்த கப்பல்களையே உலக நாடுகளிற்கு ஏற்றுமதி செய்கின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்து சமுத்திரத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் சீனாவின் நடவடிக்கைகளை கவனமாக கண்காணிக்கவேண்டும் என தெரிவிக்கும் அதிகாரிகள் அதேவேளை இராணுவரீதியிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் இவ்வாறான கப்பல்கள் வழங்கப்படுவது வழமை  இந்தியாவும் இவ்வாறான கப்பல்களை வழங்கியுள்ளது எனவும் குறிப்பிடுகின்றனர்.
இலங்கையின் துறைமுகங்களிற்கான நிதியை வழங்குவதன் மூலம் சீனா அதிவேக இலாபத்தை பெறலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் பல திட்டங்களிற்கு இலங்கையில் கண்டனம் எழுந்துள்ளது, இலங்கையை இராணுவ நோக்கங்களிற்கான தளமாக பயன்படுத்தலாம் என அமெரிக்கா இந்தியா உட்பட பல நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன.
அடுத்த மூன்று வருடங்களில் சீனா இந்தியாவிடமிருந்து இலங்கை புதிய முதலீடுகளை பெறவுள்ளது.
இந்தியா இலங்கையின் வடக்கில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு 400 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.
இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக சீனா மேலதிகமாக 974 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.  நன்றி வீரகேசரி 

No comments: