நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 11 கிராண்ட்பாஸ் கலைஞர்களும் மஞ்சள் குங்குமம் திரைப்படமும் - ரஸஞானிகளனி கங்கைக்கு சமீபமாக இருக்கும் கிராண்ட்பாஸ் பிரதேசம் மூவின மக்களும் செறிந்துவாழும் இடம் என்று முன்னைய அங்கத்தில் தெரிவித்திருந்தோம்.
அயல்நாடான இந்தியாவிலிருந்து விஸா கெடுபிடிகள் இன்றி எவரும் வந்துசெல்லக்கூடிய ஒரு பொற்காலம் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர்  இருந்தது.
பிரிட்டிஷாரால் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட தமிழ் மக்கள், மலையகத்தை செப்பனிட்டு தேயிலை, இரப்பர், கொக்கோ பயிரிடுவதற்கு பயன்படுத்தப்பட்டனர். இந்தியாவின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர், மலையாளிகள் வேலைவாய்ப்புத்தேடி கடல் மார்க்கமாக இலங்கை வந்து தலைமன்னாரிலிருந்து தலைநகரத்தில் வந்து குவிந்தனர். அதேபோன்று வட இந்தியாவிலிருந்து  இஸ்லாமியரும், அவர்களது மதத்தை பின்பற்றும் பாய் சமூகத்தினரும் வரத்தொடங்கினர்.
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முதலில் புகலிடம் வழங்கிய பிரதேசம் களனி கங்கை தீரம்தான். கிராண்ட்பாஸில் தொடங்கப்பட்ட வீரகேசரி நிறுவனத்தில் பல இந்தியத்  தமிழர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

அங்கு ஆசிரிய பீடம், நிருவாக பீடம், விநியோக - விளம்பரப்பிரிவு, அச்சுக்கோப்பாளர் பகுதி முதலானவற்றில் பெரும்பாலும் இந்தியத்தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பரும், மகாத்மா காந்தி சென்னை வந்த சமயத்தில் வாயில் காப்போனாக நின்றவரும் எழுத்தாளருமான வ.ரா.  ( வ.ராமசாமி அய்யங்கார்) அவர்களும் வீரகேசரி பத்திரிகையில் ஆரம்பகாலத்தில் ஆசிரியராக விளங்கியவர்தான்.  அவரைத்தொடர்ந்து அங்கு ஆசிரியர்களாக பணியாற்றிய கே.பி. ஹரன், கே.வி. எஸ். வாஸ் ஆகியோரும் பின்னாட்களில் வீரகேசரி நிறுவனத்தின் இயக்குநர் சபைகளில் அமர்ந்தவர்களும் இந்தியத்தமிழர்கள்தான்.
இது இவ்விதமிருக்க, இந்தியாவிலிருந்து வருகை தந்த செட்டிமார், மற்றும் திருவிளங்க நகரத்தார் சமூகத்தினர், கொழும்பில் வர்த்தகம் செய்யத்தொடங்கினர்.
அவர்கள் நகைத்தொழில், வட்டிக்கு பணம் கொடுத்தல், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், சைவஹோட்டல் உட்பட பல தொழில்களில் மூலதனமிட்டு பலருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கினர்.
இவர்களில் திருவிளங்க நகரத்தார் சமூகத்தினர் நல்லெண்ணை வர்த்தகத்தில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்ததுடன், ஆலயங்களை அமைப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட ஆலயங்கள், பேலியாகொடை, கிராண்ட்பாஸ் பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை கப்பித்தாவத்தை ஆகிய பிரதேசங்களில் எழுந்தருளத்தொடங்கின.
பேலியாகொடையில் பூபால விநாயகர் ஆலயம், பண்டாரநாயக்கா மாவத்தையில் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், கப்பித்தாவத்தையில் பாலசெல்வவிநாயகர் ஆலயம் , கைலாசநாதர் ஆலயம் என்பன அவர்களால் உருவாக்கப்பட்டன.
இதுஇவ்விதமிருக்க,  நாட்டுக்கோட்டை செட்டிமாரால் மேலும் சில கோயில்கள், ஜிந்துப்பிட்டி, செட்டியார் தெரு, பம்பலப்பிட்டி ஆகிய பிரதேசங்களிலும் தோன்றின. அவை அனைத்திற்கும் தனித்தனிவரலாறு எழுதப்பட்டுள்ளது.
இஸ்லாமியர் தவிர்ந்த ஏனைய சமூகத்தவர்களின் நம்பிக்கைக்குரிய தெய்வங்களாக இந்த ஆலயங்களில் குடியிருந்வர்கள் விளங்கினார்கள். இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாச கப்பித்தாவத்தை பால செல்வவிநாயகர் ஆலயத்திற்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்பவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பல தமிழ் முஸ்லிம் கலைஞர்களும் வாழ்ந்திருக்கின்றனர். குறிப்பாக கிங்ஸ்லி செல்லையா என்ற ஒளிப்படக்கலைஞர், இசைக்கலைஞர் சவாஹிர் ஆகியோர் திரைப்படத்துறையிலும் கால் பதித்திருந்தவர்கள்.
அக்காலத்தில் கிங்ஸ்லி செல்லையாவை கொழும்பில் தெரியாத தமிழ் - முஸ்லிம் சமூகத்தவர்கள் இல்லை என்றுகூடச்சொல்லமுடியும். அவர் ஒரு சிறிய கெமராவுடன் பொது நிகழ்ச்சிகளில் படம் எடுத்து அதனையே முழுநேரத்தொழிலாகவும் மேற்கொண்டவர்.
எனினும் அவரிடம் மற்றும் ஒரு ஆற்றலும் இருந்தது. அதாவது திரையரங்குகளில் திரைப்படம் காண்பிக்கும் ஒப்பரேட்டர் தொழில். கிங்ஸ்லி படமாளிகையில் இந்தத்தொழிலை மேற்கொண்டவாறு, வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளுக்கும் படங்கள் எடுத்துக்கொடுத்தார்.
 தமிழக சினிமாத்துறையினருடனும் அவருக்கு நெருக்கமான உறவு நீடித்தது. மக்கள் திலகம் எம். ஜீ.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உட்பட பல தமிழ்த்திரையுலக கலைஞர்கள் இலங்கை வருகை தந்த சந்தர்ப்பங்களில் கிங்ஸ்லி செல்லையா மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கி, உடனுக்குடன் படங்கள் எடுத்து தாமதிக்காமல் தமிழ்ப்பத்திரிகைகளுக்கு வழங்குவார்.
அத்துடன் அவருக்கு தலைநகரில் வாழ்ந்த நாடகக்கலைஞர்களுடனும் நட்புறவு நீடித்தது. அதனால் ஆனந்தா புரடக்‌ஷன் என்ற நாடகக் குழுவையும் அமைத்து,  பல நாடகங்களை தயாரித்தார். இந்த அனுபவங்களின் ஊடாக மஞ்சள் குங்குமம் என்ற திரைப்படத்தையும் தயாரிக்க முன்வந்தார்.  மஞ்சள் குங்குமம் முதலில் நாடகமாக தலைநகரில் பல தடவை  மேடையேறியிருக்கிறது.  அவருடைய முயற்சிக்கு நிதியுதவி (Financier)  வழங்கியவர் நாராயண சாமி என்ற வர்த்தகப்பிரமுகர். மஞ்சள் குங்குமம் 1970 இல் வெளியானது. இத்திரைப்படத்தில்  எம். உதயகுமார்,  ஶ்ரீசங்கர், மைக் செபஸ்தியன்,     ஹெலன் குமாரி, சிலோன் சின்னையா,  ஏ. நெயினார், ஏ. எஸ். ராஜா, எம்.வி. பாலன், மஞ்சுளா, ருத்ராணி, மணிமேகலை, நீர்கொழும்பூர் முத்துலிங்கம் உட்பட மற்றும் பலர் நடித்தனர்.
வர்த்தகர் நாராயண சாமி அவர்களுக்குச் சொந்தமான   அம்பாள் கபே என்ற பெயரில் பல சைவ ஹோட்டல்கள் தலைநகரில் இயங்கின. இன்றும் அந்தப்பெயரில் கிராண்ட்பாஸ் வீதியும் ஆமர் வீதியும் சந்திக்கும் நாற்சந்தியில் ஒரு ஹோட்டல் பிரசித்தமாக இயங்கிவருவதை பார்த்திருப்பீர்கள். நாராயண சாமி அவர்களுக்கு கிருலப்பனையில் கல்பனா என்ற திரையரங்கும் இருந்தது.
அதனையும் 1983 கலவர காலத்தில் இனவாத தீய சக்திகள் எரித்து சாம்பராக்கிவிட்டன.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் வாழ்ந்த சவாஹிர் என்ற  இசைக்கலைஞர் தமிழ் - சிங்களப்படங்களுக்கு பின்னணி இசை வழங்கியிருக்கிறார். அவரது பின்னணி இசையில் இலங்கையில் வெளியான இரண்டாவது திரைப்படம்தான் தோட்டக்காரி.  அதன்பின்னர் அவரது இசையமைப்பில் மீனவப்பெண் வெளியானது.  அவர் கொழும்பில் மேடையேறிய பல தமிழ்நாடகங்களுக்கும் பின்னணி இசை வழங்கியிருக்கிறார்.
இவரது மகனும் இசைக்கலைஞராவார். தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் நடந்த பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய திரையரங்கு ஜெஸீமா. தமிழ், சிங்கள, ஆங்கில, ஹிந்தி திரைப்படங்களை இங்கு பார்த்து ரசித்த மூத்த தலைமுறை சினிமா ரசிகர்களின் நினைவில் குறிப்பிட்ட ஜெஸீமா திரையரங்கு  இன்றும் தங்கியிருக்கும்.
அங்கு காண்பிக்கப்பட்ட பகல் காட்சிகளில் ( முக்கியமாக காலை 10 மணிக்காட்சியில்) பெல்கனியில் சந்தித்து சல்லாபித்த இளம் காதலர்களாலும் அந்த ஜெஸீமா திரையரங்கினை இலகுவில் மறந்துவிட முடியாது.
அந்தக்காதலர்களின் மகிழ்ச்சி அந்த மெட்னி ஷோவுடன் கலைந்ததா? அல்லது திருமண பந்தம் வரையில் தொடர்ந்து, இல்லற வாழ்விற்கும் ஆதார சுருதியாக விளங்கியதா என்பது சம்பந்தப்பட்ட காதலர்களுக்கே வெளிச்சம்...!!
அவ்வாறு தலைநகர் வாழ் அந்தக்கால காதலர்களுக்கும் ரசிகப்பெருமக்களுக்கும் பல ஜனரஞ்சகப்படங்களை காண்பித்த ஜெஸீமா திரையரங்கும் இன்று இல்லை.
அந்த திரையரங்கின் பங்குதாரர்களில் ஒருவரான திருமதி ஜெஸீமா என்பவரும் ஒரு சம்பவத்தில் குத்திக்கொலை செய்யப்பட்டார். இத்தகைய துன்பியல் நிகழ்வையும் அந்த ஜெஸீமா திரையரங்கு தனது வரலாற்றில் பதிவுசெய்துள்ளது.
( தொடரும்)
-->
(நன்றி: "அரங்கம்"  இலங்கை இதழ்)


No comments: