வாழ்வை எழுதுதல் - அங்கம் -02 அரசியல் தலைவர்களுக்கும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நடத்துவோம்! மெல்பன் வாசகர் வட்டத்தின் ஓராண்டு நிறைவில் தோன்றிய சிந்தனை! - முருகபூபதி


" நாடாளுமன்ற உறுப்பினர்களும்   மாகாண சபைகளின் உறுப்பினர்களும், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் மாதம் ஒரு புத்தகம் படித்து, அது பற்றிய தங்களது வாசிப்பு அனுபவத்தைப்பற்றி பேசவேண்டும், அல்லது எழுதவேண்டும் "
இப்படி ஒரு தீர்மானத்தை யாராவது முன்மொழிந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஆவனசெய்யவேண்டும் என்ற யோசனை கடந்த சிலநாட்களாக வந்துகொண்டிருக்கிறது.
அவ்வாறு வருவதற்கு சில செய்திகளும்  காரணம்தான்.
இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்து, தேசத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் ஆபத்து எதிர்நோக்கப்படுவதனால், தற்போதைய நல்லாட்சி அரசு, போதைவஸ்து கடத்தல் முதலான சட்டவிரோத செயல்களில் கைதுசெய்யப்படுபவர்களுக்கு அதியுயர் தண்டனையாக மரணதண்டனை விதிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது முதலாவது செய்தி!
" எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இதுவிடயத்தில் மரணதண்டனை வழங்கும் தீர்மானத்தில் பின்வாங்கமாட்டேன்"  என்று மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது ஒரு முக்கிய செய்தி!
அவ்வாறு மரணதண்டனையை எதிர்நோக்கவிருப்பவர்களில் ஒரு சிலர் பெண்கள் என்று வருந்தியிருப்பவர் நீதியமைச்சர் திருமதி தலதா அத்துகோரளை என்பது மற்றும் ஒரு செய்தி!
இது இவ்விதமிருக்க, சிறைச்சாலைகளில் "தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை
நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யும்போது, அவர்கள் சிறையிலிருந்த காலத்தில் எத்தனை புத்தகங்கள் படித்தார்கள்? படித்தவற்றைப்பற்றிய அவர்களின் அவதானம் எத்தகையது ? என்பது பற்றி குறிப்புகளும் எழுதவேண்டும்"  என்றும் ஒரு ஆச்சரியமான செய்தியும் வெளியாகியிருக்கிறது.
இந்தச்செய்திகளை அண்மைக்காலங்களில் ஊடகங்களில் பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்கு மற்றும் ஒரு தகவல் குறிப்பு கிடைத்தது. அதாவது, புத்தகங்கள் வாசிப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்த உலகத்தலைவர்களும் அறிஞர்களும் சொன்ன கருத்துக்கள்.
அவற்றை இங்கு தருகின்றேன்.
ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,

*ஒரு நூலகம் கட்டுவேன்* என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி.

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று ேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு.
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பேட்ரண்ட் ரஸ்ஸல்.
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா.
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிவிடவும் குவிந்த புத்தகங்கள் பல இலட்சம்.
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டொலருக்கு புத்தகங்கள்  வாங்குவாராம் சார்லிசாப்லின்.
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்.
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்.
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து

என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்றாராம்

ஆபிரகாம் லிங்கன்.
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்.  அவனே எனது வழிகாட்டி என்றாராம்

ஜூலியஸ் சீசர்.

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா? அங்கே  ஒரு நூலகத்துக்குச் செல் என்றார்

டெஸ்கார்டஸ்.

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள் என்றார்

இங்கர்சால்.

சில புத்தகங்களை சுவைப்போம் ! சிலவற்றை அப்படியே

விழுங்குவோம் !! சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!!!

பிரான்சிஸ் பேக்கன்.
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட

பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!

லெனின்.
உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!

ஒஸ்கார் வைல்ட்.

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!

சிக்மண்ட் ஃப்ராய்ட்.

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? அதற்காக  நூலகத்துக்குப் போ.

மாசேதுங்.

எங்கள் நாட்டின் அரசியல் தலைவர்கள்  புத்தகங்கள் பற்றி இவ்வாறு ஏதும் உருப்படியாக சொல்லியிருக்கிறார்களா? என்ற கேள்வியுடன் இந்த வாழ்வை எழுதுதல் அங்கத்திற்குள் பிரவேசிக்கின்றேன்.

அரசமரத்தை சுற்றிவந்து போதிமாதவனை வணங்கிவிட்டு, அங்கு கூடும் மக்களிடம் அரசியல் பேசுவதுபோன்று (போதி மாதவன் அரசும் வேண்டாம் அதிகாரமும் வேண்டாம் எனச்சொல்லித்தான் துறவறம் பூண்டார்!) , அந்த வாரம்  தான் படித்த ஒரு நல்ல புத்தகம் பற்றி யாராவது ஒரு பௌத்த சிங்கள அரசியல் தலைவர் பேசமாட்டாரா?
வாராந்தம் வாசகர்களுக்கு கேள்வி - பதில் பாணியில் அரசியல் பேசும் தலைவர்களும் - அறிக்கை விடும் தலைவர்களும் தாம் அண்மையில் படித்த சிறந்த புத்தகம் பற்றி பேசமாட்டார்களா?
                                   அனைத்து மதங்களின் வருடாந்த பண்டிகை காலங்களில்  ( தைப்பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ், புதுவருடப்பிறப்பு, ஈஸ்டர் பெரியவெள்ளி, ரம்ஸான், வெசாக், பொஸன்)  தத்தம் திருமுகங்களுடன் பத்திரிகை ஊடகங்களில் நாட்டுமக்களுக்கு  நற்செய்தி தெரிவிக்கும் தலைவர்கள், வருடம் ஒரு தடவை தாம் படித்த புத்தகங்கள் பற்றிய நற்செய்தியை அவ்வாறு பத்திரிகைகள் ,  ஊடகங்களுக்குத்தெரிவிக்க மாட்டார்களா?
சிறையிலிருக்கும் கைதிகள் புத்தகங்கள் படித்தால் நல்லது எனக்கருதும் அரசு, நாடாளுமன்றத்திலிருப்பவர்களும் புத்தகங்கள் படிக்கவேண்டும் என்று  ஆலோசிக்கலாம்தானே!?
சிறையிலிருப்பவர்கள் சீர்திருந்தி நல்ல பிரஜைகளாக வெளியே வரவேண்டும் என்பதற்குத்தானே புத்தகங்களை வாசிக்குமாறு அரசு தூண்டுகிறது.
நாடாளுமன்றங்களிலும் மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் உதிர்க்கும் வார்த்தைப்பிரயோகங்களை ஊடகங்களிலும் தொலைக்காட்சி ஊடாக பதிவேற்றப்பட்டு, இணையங்களிலும் பார்க்கின்றோம்.
நற்பிரஜைகள் என நம்பித்தான் மக்கள் இவர்களை தெரிவுசெய்து இங்கு அனுப்பிவைக்கிறார்கள்.
குற்றம் இழைக்கப்பட்ட பிரஜைகள் என்று நிரூபிக்கப்பட்டவர்கள்தான் சிறைச்சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். சிறைக்குள் சென்றவர்கள் திருந்தவேண்டும் என்று அரசும் மக்களும் எதிர்பார்ப்பதுபோன்று, மேற்சொன்ன நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் ஆகியனவற்றுக்கு நற்பிரஜைகளாகச்சென்று, தவறான வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தி துர்ப்பிரஜைகளாக மாறலாமா?
செங்கோலைத்தூக்கிக்கொண்டு ஓடுதல், வசைமாறி பொழிதல், கைகலப்புகளில் ஈடுபடுதல் முதலான செயல்கள் அரங்கேறிவருகின்றன.
அதனால் அங்கு செல்பவர்களும் நல்ல புத்தகங்களை படிக்கவேண்டும், அதன் பிரகாரம் நடக்கவேண்டும் , அதன் மூலம் தாமும் நற்பிரஜைகள்தான் என்பதையும் அவர்கள் நிரூபிக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பதில் எந்தத்தவறும் இல்லை அல்லவா?
இந்தப்பதிவை நான் இங்கு எழுதுவதற்கு , கடந்த ஞாயிறன்று மெல்பன் வாசகர் வட்டத்தின் மாதாந்த சந்திப்பு ஒன்றுகூடல்தான் மற்றும் ஒரு முக்கிய காரணம்.
நான் வதியும் மெல்பனில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாசகர் வட்டம் என்ற தன்னார்வ அமைப்பை தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர், சுற்றுச்சூழல், தொல்லியல் ஆய்வாளர் திரு. முத்துக்கிருஷ்ணன் தொடக்கிவைத்தார்.
இந்த வாசகர் வட்டத்தின் சந்திப்பு பிரதி மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை ஒரு இலக்கிய வாசகரின் இல்லத்தில் நடைபெறும். இதனை ஒருங்கிணைப்பவர்கள் சிவகுமார் - சாந்தி தம்பதியர்.  ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு புத்தகம் பற்றி வாசகர்கள் தத்தம் வாசிப்பு அனுபவத்தை பேசுவார்கள். சிலர் குறிப்புகளை எழுதிவந்து வாசித்து சமர்ப்பிப்பார்கள். கலந்துரையாடலில் பல வாசல்கள் திறக்கும். விவாதங்கள் கூட நயமாகவும் அங்கதமாகவும் சுவாரஸ்யமாகவும் தொடரும்.  வருகை தந்து உரையாற்றுபவர்களின் தேடலுடன் இணைந்த  செறிவான கருத்துக்கள் பயன்தருபவை.
இந்த வாசகர் வட்டத்தில்,  சிறுகதை, கவிதை, நாவல், பயண இலக்கியம், வரலாறு முதலான துறைகளில் பேசப்படும். ஒரு மாத இறுதியில் வாசகர்வட்டத்தின் சந்திப்பு நிறைவுறும் வேளையில் அடுத்த மாதம் பேசுவதற்கும் கலந்துரையாடுவதற்கும் தெரிவுசெய்யப்பட்ட மற்றும் ஒரு புதிய புத்தகத்தின் ஒவ்வொரு பிரதியும் வாசகருக்கு வழங்கப்படும். அவர்கள் தங்கள் நன்கொடையையும் வழங்குகிறார்கள்.
அதனால், புத்தகத்தின் பிரதிகளும் விற்பனையாகிறது. வாசகர்களும் புதிய அனுபவங்களை பெறுகிறார்கள்.
நான் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்  வருடாந்த எழுத்தாளர் விழாக்கள், மற்றும் கலை - இலக்கிய சந்திப்புகளில் வாசிப்பு அனுபவ அரங்கு நடத்தி,  பல புத்தகங்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்துள்ளோம். இந்தப்பணி 2001 ஆம் ஆண்டு முதல் தங்கு தடையின்றி நடந்துவருகிறது. கடந்த 17 வருடகாலத்தில் இந்நிகழ்வுகளில் பல புத்தகங்கள் வாசகரை வந்தடைந்துள்ளன.
மெல்பன் வாசகர் வட்டத்தில் எனக்குத்தரப்பட்ட புத்தகங்கள் பற்றி அவ்வப்போது எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருப்பதுடன்,  அவற்றை "படித்தோம் சொல்கின்றோம்"  என்ற தலைப்பில் ஊடகங்களிலும் பதிவுசெய்து வருகின்றேன்.
கடந்த ஞாயிறன்று மெல்பன் வாசகர் வட்டத்தின் ஓராண்டு நிறைவு மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது. இதனை ஓராண்டிற்கு முன்னர் ஆரம்பித்துவைத்த தமிழகத்தின் இலக்கிய நண்பர் திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்களும் தொலைபேசி ஊடாக அனைவருக்கும் வாழ்த்துத்  தெரிவித்து, புத்தகங்களின் பயன்பாடு - வீட்டுக்கொரு நூலகத்தின் அவசியம் - சமூகமாற்றத்திற்கும் விழிப்புணர்வுக்கும் ஆரோக்கியமான நட்புறவுக்கும் புத்தகங்கள் ஏற்படுத்தும்  ஆக்கபூர்வமான தாக்கம் பற்றியெல்லாம் உரையாற்றினார்.
இந்தப்பின்னணிகளிலிருந்துதான் எமது சமகால அரசியல் தலைவர்களும் புத்தக வாசிப்பு பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் என்ற யோசனை எனக்குள் மலர்ந்தது.
சங்கங்கள், அமைப்புகள், பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மாதம் ஒரு தடவையாதல் வாசகர் வட்டச்சந்திப்புகளை நடத்தவேண்டும்.
இன்றைய கணினி யுகத்தில் ஒவ்வொரு மாதமும் புத்தகங்கள் வெளியாகின்றன. நாட்டுக்கு நாடு புத்தக திருவிழாக்கள், நூல் வெளியீட்டு அரங்குகள் நடக்கின்றன.
பிரமுகர்களையும் அரசியல்  தலைவர்களையும் அழைத்து பொன்னாடை போர்த்தி  மாலை அணிவித்து கௌரவித்து புத்தகத்தையும் கொடுத்து அனுப்பும்பொழுது, " அய்யா, தயவுசெய்து இந்தப்புத்தகம் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவத்தை எழுதித்தாருங்கள்" எனச்சொல்லிவிடுங்கள்.
பாடசாலை , கல்லூரி அதிபர்கள் அங்கிருக்கும் நூலகங்களிலிருந்து சிறந்த நூல்களை தெரிவுசெய்து மாணவர்களிடம் வழங்கி, வாசிக்கச்செய்து, அதுபற்றிய நயப்புரைகளை எழுதுமாறு மாணவர்களைத் தூண்டுங்கள்.
பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகளிலும் இதனை நடைமுறைப்படுத்தலாம்.
உள்ளுராட்சி சபைகளினதும் மாகாண சபைகளினதும் தவிசாளர்கள் மாதம் ஒரு தடவை  உறுப்பினர்களை ஒரு தேநீர்விருந்துக்கு அழைத்து அண்மையில் படித்த ஒரு புத்தகம் பற்றி பேசச்சொன்னால் உறுப்பினர்களின் முறுகல் தணிந்து உறவு இறுக்கமடையும்!
ஜனாதிபதி - பிரதமருக்கும், நாடாளுமன்றத்தின் சபாநாயகருக்கும் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம்.
ஏன் இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறோம் எனக்கேட்டால், அதற்கான எமது பதில்:  இந்தப்பதிவின் தொடக்கத்தில், "உலகத்தலைவர்களும் அறிஞர்களும் சொன்ன கருத்துக்களை தயவுசெய்து படிக்கவும்."
letchumananm@gmail.com


-->








No comments: