மண்டு மரங்கள் பார்த்திருக்கிறீர்களா? அத்தகைய
மரங்கள் செழித்த பிரதேசத்திற்கு காலப்போக்கில் மண்டூர் என்ற காரணப்பெயர் தோன்றியிருப்பதாக கிழக்கிலங்கை முன்னோர்கள் சொல்கிறார்கள்.
கிழக்கிலங்கையில் மட்டுநகரிலிருந்து தென்திசையில்
சுமார் ஐம்பது கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இந்தக்கிராமத்தின் பெயரையும் இணைத்துக்கொண்டு
ஈழத்து இலக்கிய உலகில் பிரபல்யம் பெற்றிருப்பவர்தான் அசோகாம்பிகை.
நால்வகைத்திணைகளையும்
கொண்ட இந்த அழகிய கிராமத்தில் இளையதம்பி - கனகம்மா தம்பதியரின் புதல்வியாகப்பிறந்திருக்கும்
அசோகாம்பிகை தனது ஆரம்பக்கல்வியை மண்டூர் அரசினர் தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்து, அதன்பின்னர்
மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலிருந்து பயிற்றப்பட்ட
ஆசிரியையாக கிழக்கிலங்கையில் பல
பாடசாலைகளில் பணியாற்றினார்.
இவரும் ஈழத்தில் பல எழுத்தாளர்கள் இலக்கியப்பிரவேசம் செய்த 1970
காலப்பகுதியிலேயே இலக்கியப்பிரதிகளை எழுதத்தொடங்கினார்.
அதற்கு தூண்டுகோலாகவிருந்தது இளைமைக்காலத்தில் இவரிடமிருந்து வாசிப்பு ஆர்வம்.
பொதுவாக தமிழ்ச்சமூகத்தில் மாணவப்பராயத்திலிருக்கும் பிள்ளைகள் கதைப்புத்தகம்
படித்தால் கெட்டுப்போவார்கள் என்ற மூடநம்பிக்கை ஆழமாக வேரூண்றியிருந்தது. ஆனால்,
தமது பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் வளரவேண்டும் என விரும்பும் பெற்றோர்கள், தமது
மாணவர்கள் சுயவிருத்தி ஆற்றலுடன் முன்னேறவேண்டும் என விரும்பும் ஆசிரியர்களைப்பெற்றவர்கள்
உண்மையிலேயே பாக்கியசாலிகள்தான்.
மண்டூர் அசோக்கா அத்தகைய பாக்கியம் செய்தவர். அவருடைய முதல் கதைத்தொகுதி கொன்றைப்பூக்கள் கொழும்பில்
அச்சிடப்பட்டவேளையில் அதன் முதல் பிரதியை எனக்கும் இலக்கிய நண்பர் மல்லிகை
ஆசிரியர் டொமினிக்ஜீவாவுக்கும் காண்பித்தவர் கலை, இலக்கிய ஆர்வலர் வேலணை வீரசிங்கம். இவர் பிரவுண்சன்
கோப்பி என்ற வர்த்தக ஸ்தாபனத்தை நடத்திக்கொண்டிருந்த காலம். பல கலை இலக்கிய
நிகழ்வுகளுக்கும் இலக்கிய நூல்களின் வெளியீடுகளுக்கும் அனுசரணையாக திகழ்ந்த
பிரமுகர்.
இவர்தான் வரணியூரான் எஸ்.எஸ். கணேசபிள்ளையின் புளுகர் பொன்னையா என்ற புகழ்பெற்ற நாடகத்தை இலங்கை எங்கும்
அரங்காற்றுகை செய்வதற்கும் ஊக்கியாக இயங்கியவர்.
ஒருநாள் அவரை அவரது கொழும்பு அலுவலகத்தில் நாம் சந்தித்தவேளையில் அவர் மண்டூர்
அசோக்காவின் கொன்றைப்பூக்கள் தொகுதியை
காண்பித்தார். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவரும் சக
எழுத்தாளர்களை தனது உற்சாகமூட்டும் வார்த்தைகளினால் வாழ்த்துபவருமான டொமினிக்ஜீவா
அந்த நூலை கையில் எடுத்து, " பாரும் நண்பரே, கிழக்கிலங்கையில் வாழும் ஒரு
பெண் எழுத்தாளரின் நூலை வட இலங்கையைச்சேர்ந்த இலக்கிய ஆர்வலர் கொழும்பில் வெளியிட்டு
வைக்கிறார். இலக்கியம் பிரதேசங்களை இவ்வாறும் இணைக்கும் பண்பினைக்கொண்டது" என்று
நூலாசிரியருக்கும் வெளியீட்டாளருக்கும் புகழாரம் சூட்டினார். 1976 ஆம் ஆண்டில் இச்சம்பவம் நடந்தது.
எனினும் மண்டூர் அசோக்காவின் கதைகளை பத்திரிகை , இதழ்களில் படித்திருந்தாலும்
அவர் எழுதிய மெல்லிசைப்பாடல்களை
வானொலியில் கேட்டிருந்தாலும், சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இலங்கையில் நான் இருந்த காலப்பகுதியில் அதற்கான சந்திப்பு கிட்டவேயில்லை.
காலம் கடந்து 2010 ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்தவேளையில் மட்டக்களப்பில் நடைபெற்ற
ஒரு இலக்கியச் சந்திப்பில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்கள், மண்டூர்
அசோக்காவை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நான் பார்த்த கொன்றைப்பூக்கள் நூலை
எழுதியிருந்த படைப்பாளியை அன்று முதல் முதலில் சந்தித்தவுடன், " கொன்றைப்பூக்கள்
மண்டூர் அசோக்காதானே!" எனச்சொல்லியவாறு
பரவசத்துடன் அவரைப்பார்த்தேன்.
பெண்கள், கலை - இலக்கியத்துறையில் ஈடுபடும்போது பல்வேறு சவால்களையும்
சந்திக்கநேர்வது எமது தமிழ்சமூகத்தின் விதியாகியிருக்கிறது.
ஒரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று முன்னோர் சமுதாயம்
அவர்களை சமையலறையில் தள்ளிவைத்திருந்தது. ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு
தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் சில நாடுகளில் பறிக்கப்பட்டிருந்தது.
காலம் மாறியிருந்தாலும், கலை, இலக்கியம், அரசியல், சமூகப்பணிகளில் பெண்கள்
ஈடுபடும்போது ஆணாதிக்க சக்திகள் அவர்கள் மீது விமர்சனங்களை முன்வைத்துவருவதையும்
அவதானிக்கின்றோம்.
மண்டூர் அசோக்கா எழுதிக்கொண்டிருந்த காலத்தில், அதனால் அவர்
புகழ்பெற்றுவிடுவார் என்பதனால் " எழுதி என்னத்தை கிழிக்கப்போகிறாய்?"
என்றும் எள்ளிநகையாடியிருப்பதாக அறியக்கிடைக்கிறது.
எழுத்து ஒரு தவம். அது புகழுக்கானது அல்ல! சமூகத்திற்காக எழுதுவதும் சமூகத்தை
பேசவைப்பதுமே எழுத்துத்துறையில் ஈடுபடும் படைப்பாளிகளின் பணி. அதனையே எமது
இலங்கையில் பல பெண் படைப்பாளிகள் மேற்கொண்டு வந்தனர்.
அந்த வரிசையில் மண்டூர் அசோக்காவும் இலங்கையில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய
பத்திரிகைகள் மற்றும் இலக்கிய இதழ்களில் எழுதியவர். இலங்கை வானொலிக்கும் தனது
படைப்புகளை அனுப்பியவர். அதனால், இவரது எழுத்துக்களை படிப்பதற்கும் கேட்பதற்கும்
வாசகர்களும் நேயர்களும் இருந்தனர்.
இதுவரையில், கொன்றைப்பூக்கள் , சிறகொடிந்த பறவைகள், உறவைத்தேடி, ஆகிய சிறுகதைத்தொகுதிகளையும் பாதை மாறிய பயணங்கள் என்ற நாவலையும் வெளியிட்டிருக்கும் மண்டூர் அசோக்கா, தான் பிறந்து
வாழ்ந்த மண்டூர் பிரதேசத்தின் வெகுஜன அமைப்புகளின் பாராட்டுதல்களைப் பெற்றவர். அந்த
அமைப்புகள் அவரை அழைத்து கௌரவம் வழங்கி பெருமை பெற்றுள்ளதாகவும் அறிகின்றோம்.
2001 ஆம் ஆண்டு தமிழகத்தில் தஞ்சாவூரில் நடந்த உதயகீதம் இலக்கிய விழாவில் 'தமிழருவி' பட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்டவர்.
இலங்கை மத்திய மாகாணத்தில் கண்டியிலிருந்து இலக்கியப்பணியாற்றிக்கொண்டிருந்து
மறைந்துவிட்ட மற்றும் ஒரு பெண் எழுத்தாளரான ரூபராணி ஜோசப் அவர்களின் நினைவாக கண்டி
மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் சார்பாகவும் மண்டூர் அசோக்கா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இச்செய்தி எனக்கு கிடைத்தவேளையில், 1976 ஆம் ஆண்டில் அவருடைய முதல் வெளியீடு
கொன்றைப்பூக்கள் நூல் நினைவுக்கு வந்தது.
கிழக்கில் மண்டூர் கிராமத்திலிருந்து ஊருக்கும் பெருமை சேர்த்துக்கொண்டு
எழுதிவந்த இவருக்கு அன்று தலைநகரில் பெருமை கிடைத்தது. பல வருடங்களின் பின்னர்
மீண்டும் இலங்கையின் மத்திய பிரதேசத்தில் இவருடைய நீண்டகால கலை, இலக்கியப்பணியை
பாராட்டி விருது வழங்கப்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இவரது எழுத்துப்பணிகள் குறித்து, " எழுதி என்னத்தை
கிழிக்கப்போகிறாய்" எனச்சொன்னவர்களை இவர் கவனத்தில் எடுத்திருந்தால், ஈழத்து இலக்கிய உலகில் மண்டூர் அசோக்கா
காணாமல்தான் போயிருப்பார்.
இவருடைய பெற்றோர், ஆசான்கள், வாழ்க்கைத்துணைவர் யோகராஜா மற்றும்
அருமைச்செல்வங்களின் ஆதரவும் பக்கத்துணையும் இருந்தமையால், இன்று இவரைப்பற்றி
நாமும் எழுதுகின்றோம்.
அசோகாம்பிகை யோகராஜா என்ற மண்டூர் அசோக்கா அவர்கள் தொடர்ந்தும் கலை,
இலக்கியத்தில் செழுமை சேர்க்கவேண்டும் என வாழ்த்துகின்றோம்.
--0--
No comments:
Post a Comment