யாழில் பல இடங்களில் வீடு புகுந்து கொள்ளை கும்பல் அட்டகாசம்
அத்துமீறி குடியேறிய சிங்களவர்களுக்காக நீதி மன்ற உத்தரவை மீறிய மகாவலி அதிகாரசபை!!!
பல பாகங்களிலிருந்தும் திரண்ட மக்கள் உரிமைகளுக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
யாழில் பல இடங்களில் வீடு புகுந்து கொள்ளை கும்பல் அட்டகாசம்
22/08/2018 யாழ்ப்பாணம் கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் 3 வீடுகள், தேனீர் கடை, கராஜ் ஆகிய இடங்களில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் இன்று புதன்கிழமை மாலை 3.45 மணி தொடக்கம் 4.30 மணிக்குள் 45 நிமிடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“இலக்கத்தகடுகள் அற்ற 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இந்த அட்டூழியங்களில் ஈடுபட்டது. கும்பலிடம் இருந்த வாள்கள் பளிச் என்று தெரிந்தன. அவை மிகப் பெரியளவில் இருந்தன.
வந்தவர்களில் ஒருவர் தனது அலைபேசியின் ஊடாக வீடியோ அழைப்பை ஒருவருக்கு எடுத்து தமது அடாவடிகளை நேரலையாகக் காண்பித்தார்” என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
“யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி லேன் மற்றும் ரயில் நிலையத்தடியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.
உடமைகளைச் சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது. அந்த இரண்டு வீடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், இணுவில் சந்திக்கு அண்மையாகவுள்ள தேனீ்ர் கடை மற்றும் கராஜ் என்பன தாக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தாவடி பாடசாலை லேனில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் கும்பல் செயற்பட்டது.
இணுவில் மற்றும் தாவடிப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுடைய உடமைகள்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவங்கள் இடங்கள் சுன்னாகம், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளுக்குள் வருகின்றன. அதனால் மூன்று பொலிஸ் நிலையங்களும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. நன்றி வீரகேசரி
அத்துமீறி குடியேறிய சிங்களவர்களுக்காக நீதி மன்ற உத்தரவை மீறிய மகாவலி அதிகாரசபை!!!
22/08/2018 முல்லைத்தீவு - நாயாறிற்கு தெற்காக உள்ள கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களில் அத்துமீறி குடியேறிய சிங்கள மக்களிற்கு நீதிமன்ற உத்தரவை மீறி மகாவலி அதிகாரசபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள குடியேற்றவாசிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி மகாவலி அதிகார சபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
மகாவலி அதிகார சபையின் இந்த திட்டமிட்ட நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்
1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வெளியேறிய பகுதிகளில் சிங்கள மக்கள் அடாத்தாக குடியேறியதாகவும் இவ்வாறு குடியேறிய மக்கள் அந்த பகுதிகளில் வீடுகளை அமைத்து வாழ்ந்ததுடன் அவற்றிற்கு காணி உரிமை பத்திரங்களை கோரியதாகவும் இப்பகுதியின் தமிழ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் நீதிமன்றம் அவர்கள் வெளியேற வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது.
நீதிமன்ற உத்தரவை மீறி மகாவலி அதிகாரசபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளமையானது சட்டவிரோத செயல் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நன்றி வீரகேசரி
பல பாகங்களிலிருந்தும் திரண்ட மக்கள் உரிமைகளுக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
21/08/2018 நாட்டின் பல பாகங்களிலுமிருந்து திரண்ட மக்கள் தமது உரிமைகள் பறிபோவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வகையான முறைப்பாடுகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதன்போது குறிப்பாக பொதுமக்களின் காணி உரிமை, மீனவர்களின் பிச்சினைகள் மற்றும் பரிபோகும் மக்களின் நிலம் போன்ற உரிமைகள் பறிபோவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment