மரம் அழிக்கும் மானிடரே
மரம் வளர்க்க வாருங்கள்
மரத்ததுவா உங்கள் மனம்
நிலம் காக்கும் மரத்தையெலாம்
நிர்மூலம் ஆக்கி நின்றால்
நிச்சயமாய் இயற்கை அன்னை
நிம்மதியை இழந்து நிற்பாள் !
வயல் நிலங்கள் எல்லாமே
மாடி மனை ஆகிறது
வளம் விழுங்கும் அரக்கர்களாய்
மனிதர் பலர் மாறுகிறார்
தொழிற்சாலை எனும் உருவில்
தூசு மழை குவிகிறது
தூய நீரை தேடிநின்று
துவழ்கின்றார் மக்கள் எலாம் !
எடுத்து நிற்கும் செயலாலே
இயற்கை வளம் குலைகிறது
இயற்கை எனும் அமைப்புத்தான்
இவ் உலகின் அரணாகும்
இயற்கை எனும் கவசத்தை
எடுத்துப் பிய்த்து எறிவதனால்
இயற்கை அன்னை கோபமது
எமைத் தாக்கி நிற்கிறதே !
ஓயாமல் மழை பெய்து
ஒரு பக்கம் அழிகிறது
பேயாகக் காற்று வந்து
பேர் அழிவைச் செய்கிறது
எதிர்பாரா தீ வந்து
இடர் கொடுத்து நிற்கிறது
இவை பார்த்தும் மானிடரே
ஏன் இயற்கை அழிக்கின்றீர் !
No comments:
Post a Comment