பனி விழும் இரவு (சிறுகதை) யோகன்- கன்பெரா


Image result for american mission tamil schools in jaffna

.


                             
ரூபன் என்ற தேவரூபன் இறந்த செய்தியை பிரான்சிலிருந்து போனில் சொன்னவன் என்னோடு படித்த அருமை. ரூபனும், அருமையும், நானும் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தது சேச்சடிப் பள்ளிக்கூடத்தில். அந்த பள்ளிக்கூடம் அமெரிக்கன் மிஷன் தேவாலய வளவுக்குள் இருந்ததால் அந்தப் பெயரில் அழைக்கப் பட்டது. அதன் உண்மையான பெயர் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை. தேவாலயம் கட்டப்பட்ட அதே காலத்திலேயே அது கட்டப் பட்டிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் படித்த காலத்திலேயே அது அரசாங்க பள்ளிக்கூடம் ஆகிவிட்டது. பெயர் மட்டும் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை என்று பதிவுகளிலும் பலகைகளிலும் எழுதப்பட்டு இருந்தது..

தேவாலயத்தில் அப்போது ஆலய பாதுகாவலனாக இருந்த செல்லையா ரூபனின் தகப்பன். தினமும் காலை ஐந்தரை மணி, மாலை ஆறு மணிக்கு கோயில் மணி அடிப்பது ஆராதனைகளுக்கு மற்றும் செத்த வீடு என்றால் மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஏறியிருந்தது அடிக்கொரு தரம் சா மணி அடிப்பது அதை விட தேவாலயத்துக்கு உள்ளும் வெளியும் கூட்டி சுத்தமாக வைத்திருப்பது இதெல்லாம் செல்லையாதான். ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் ஆராதனைக்குப் பூக்கள் வைத்து அலங்கரிப்பது, குத்து விளக்குகளைத் துடைத்து மெழுகு திரி கொளுத்துவது போன்ற வேலைகளில் ரூபனும் தகப்பனுக்கு உதவி செய்து வந்தான். ரூபனோடு ஓரிருமுறை அந்த ஆலயத்துக்குள் போய்ப் பார்த்திருக்கிறேன். அதன் அமைதி ஒரு வித பயத்தைத் தந்தது. சுவர்களில் அடித்த வெள்ளைப் பூச்சு பல இடங்களில் உதிர்ந்திருந்தது. சுவர் எங்கும் சாம்பல், வெள்ளை நிறத்தில் இறந்தவர்களுக்கு நினைவுக்கு கற்கள் மாபிளில் பதிக்கப்பட்டிருந்தன.  எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வேத வசனம் இருந்தது. 




சேச்சடிப் பள்ளிக்கூடத்தில் அப்போது இரண்டு கட்டடங்கள் மட்டுமே இருந்தன. கிடுகு வேய்ந்த கூரை கொண்ட சிறிய கட்டடத்தில் அரிவரி, முதலாம் வகுப்புகள் நடந்தன. பெரிய கட்டடத்தில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான நாலு வகுப்புகளும், கட்டடத்தின் முடிவில் ஒரு திரைச்சீலை இல்லாத மேடையும் இருந்தது. அந்த மேடையில்தான் நாகமுத்து மாஸ்டருக்கு பிரியாவிடை நடந்தது. பாடசாலை மண்டபத்தையும், மேடையையும் அவ்வப் போது தேவாலயத்தின் வைபவங்களுக்காகவும் பாவிப்பார்கள். பிறகு திங்கட் கிழமைகளில் அது குப்பையும் கூளமுமாக விடப்பட்டிருக்கும். அதிபர் செல்லத்துரை தடி எடுத்து விரட்டி, விரட்டி எங்களை கூ ட் டிக் குப்பை அள்ளச் செய்வார்.

'உன்ரை கொப்பன் செய்ய வேண்டிய வேலை இது. வீட்டை போய் சொல்லு ' என்று ரூபனுக்கு அடி அதிகமாக விழும்.
ரூபன் மூத்தவன் கீழே மூன்று பெண்களும் ஒரு பையனுமாக ஐந்து பேர் கொண்ட குடும்பம். ரூபன் காலையில் எதுவும் சாப்பிடாமல்தான் வருவான். அப்போது பள்ளிக்கூடத்தில் மதியம்தான் பிஸ்கட் கொடுப்பது வழக்கம். அதை தண்ணீரில் நனைத்துச் சாப்பிடுவதற்காக நாங்கள் சிவநேசர் வீட்டுப் பைப்படிக்கு ஓடுவோம். அவரின் கார் நிற்கும் போட்டிக்கோவிற்குப் பக்கத்திலிருந்த அந்தப் பைப்பில் நல்ல தண்ணீரும் வந்தது.
மதியம் பிஸ்கட்டை வாங்கிக் கொண்டு நேரே சிவநேசர் வீட்டுக்குப் போய் அதை நனைத்துத் தின்று விட்டு நாவல் பழ சீசன் என்றால் ஓடலி நல்லையா வீட்டடி ஒழுங்கையால் போய் மரத்தில் ஏறி உலுப்பி விட்டு மண் படாமல் இலைகளின் மேல் விழுந்த பழங்களை வாயில் போட்டுக் கொண்டு வருவோம். வெளியே போனது தெரிந்தால் மூவரையும் முழங்காலில் விட்டு அடி மட்டத்தினால் கை மொளியில் விலாசித் தள்ளுவார் செல்லத்துரை. அடி விழ முன்னமே பெருங்குரலில் ரூபன் அழத் தொடங்கி விடுவான்.

ரூபன் காலையில் எழே முக்கால் மணிக்கு பள்ளி தொடங்கும் முதல் மணி அடிக்க முன்னரே வந்துவிடுவான். வந்ததும் நேராக ஆலயக் குருமனைக்கும் பள்ளிக்கூட்டத்துக்கும் இடையில் நின்ற இலுப்பை மரத்தை நோக்கி ஓடுவான். 

மரத்திலிருந்து வௌவால்கள் இரவில் விழுத்தியிருக்கும் இலுப்பம் பழங்களை எடுத்து ஒளித்து வைத்து  விட்டு காலை இடைவேளையில் எங்கள் மூவருக்கும் பங்கிடுவது அவன்தான். பட்டாணிக் கடலையை  பரப்பி விட்டது போல நிலமெங்கும் இலுப்பைப் பூ கிடந்து மிதிபடும் காலத்தில் ரூபன் வீரசிங்கத்தாரின்   வேலி பாய்ந்து உள்ளே நிற்கும் நாய் கண்ணில் படாமல் விழுந்து கிடக்கும் விளாம் பழங்களை பொறுக்கிக் கொண்டு வருவான். 
ஆறாம் வகுப்புக்கு வர வெவ்வேறு  பள்ளிக்கூடங்களுக்குப் போனோம். நானும் அருமையும் மத்திய மகா வித்தியாலயத்துக்குப்  போக ரூபன் தேவாலயக் குருவின் சிபார்சில்  ஆண்  பிள்ளைகளுக்கான சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து படிக்க கிறிஸ்தவக் கல்லுரிக்குப் போனான். அனாதை பிள்ளைகளுக்கென அந்தச் சிறுவர் இல்லம் கட்டப் பட்டிருந்தாலும் சிபார்சில் தெரிந்தெடுக்கப்பட்ட  பிள்ளைகளும் அங்கே தங்கியிருந்து படித்தனர்.

சிறுவர் இல்லத்துக்குப் போன பிறகு ரூபனை காண்பது குறைந்து விட்டது. தவணை விடுமுறைகளில் வீட்டில் நிற்கும் போது ஆலடிக்கடைக்கு செல்லையாவின் சைக்கிளில் வரும்போது எப்போதாவது காண்பேன் ..
நாடு யுத்தப் படுகுழியை நோக்கி சறுக்கிச் சென்று கொண்டிருந்த வேளை அது.    மெல்ல  மெல்ல வரும் ஓடி ஆறு அதல பாதாளத்தின் அருகில் வேகங் கொண்டு வந்து விழுவது போலத்தான் அது.  பாறைகள் மரக் கொப்புகளை பற்றிக்கொண்ட சிலர்  தப்பிவிடுவதை  போல  நான் பெரியம்மா வைப் பிடித்து இந்தியாவுக்கு ஓடித் தப்பினேன்.  மதுரையில்  எனது பெரியம்மா குடும்பத்தினர் இருந்ததால் மட்டுமே  இது சாத்தியப்பட்டது.  அங்கு பிளஸ் டூ படிக்க அட்மிஷன் கிடைத்தது.
அருமை ஜெர்மனிக்குத் தப்பியோடினான். பிறகு அங்கிருந்து பிரான்சுக்குப் போனான்.

எனக்கு திருச்சியில் கல்லுரிப் படிப்பு. புதி சூழல். புதிய நண்பர்கள். அடிக்கடி ஈழ யுத்தம் தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருந்த வேளை. மாணவர் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் அடிக்கடி கல்லூரியில் நடந்தன. ப்ளஸ் டூ முடித்து பிறகு முகாமைத்துவப் பட்டப் படிப்பு என்று இந்தியாவில் தொடர்ந்தது வாழ்வு.
பிறகு நான் ரூபனை எதிர்பாராத விதமாக சந்தித்தது இந்தியாவில். திருச்சியிலிருந்து மதுரைக்குப் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தபோது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மதுரையிலிருக்கும் பெரியம்மா வீட்டுக்கு போக பஸ்ஸில் ஏறியபோது ரூபன் ஏற்கனவே பஸ்சுக்குள் இருந்தான். அன்று கண்டது இன்னொரு ரூபனை. கழுத்து வரை மூடிய கருப்பு வெஸ்ட்டுக்கு மேலே வெள்ளை முழு அங்கி கால் வரை தொட்டது.

" என்னடா இது எப்ப நீ பாதிரியாராய் மாறினனீ "?
" இப்ப இஞ்சை மதுரையில இறையியல் கல்லூரியில படிக்கிறன்".
" நம்ப முடியேல்லையடா"
"உனக்குத் தெரியும் தானே. சிறுவர் இல்லத்திலை இருந்து கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு மட்டும் கிறிஸ்தவக் கல்லூரியில படிச்சன். அங்கை படிக்கேக்கையே காலை பள்ளிக்கூட அசெம்பிளி மற்றது ஹோஸ்டவிலை இரவு ஜெபக் கூட்டம் எல்லாத்தையும் நடத்தி கொண்டிருந்தன். என்ரை ஆர்வத்தை பார்த்திவிட்டு பேராயர் கிறிஸ்டி தங்கராஜாதான் ஸ்கொலசிப்பிலை இஞ்சை படிக்க அனுப்பியவர்."
" எட முதலே தெரிஞ்சிருந்தால் உன்னை மதுரையில வந்து சந்திச்சிருப்பனே"
" பரவாயில்லை அருள். எனக்கு இந்த மாதத்தோடே படிப்பு முடியுது.அடுத்த மாதம் இலங்கையிலை பேராயர் எனக்கு குருத்துவ அபிஷேக ஆராதனை செய்கிறார்.பெரிசா நடக்கும். முப்பது சபைகளிலிருந்தும் குருமார் வருவினம். பிறகு அங்குதான் ஊழியம்."
"பிறகு தேவ ஊழியன் தேவரூபன் "
சிரித்துக் கொண்டே " எப்ப கலியாணம்"? என்று திடீரென்று பேச்சை மாற்றினான்.

"படிப்பு இன்னும் முடியேல்லை. உனக்கென மாதிரி.?   கலியாணம் கட்டலாம்தானே?"
" எங்களுக்கு பிரச்சினையில்லை. கத்தோலிக்க சபையிலைதான் கட்டக் கூடாது. "   சொல்லிக் கொண்டே பேர்ஸிலிருந்து ஒரு பெண்ணின் படத்தை எடுத்துக் காட்டினான்.
இவளை விரும்பியிருக்கிறன். பெயர் கிறேஸ். ஆனால் கிறேஸ் சாதி குறைவு எண்டு.எங்கடை வீட்டிலை பிரச்சினை. பேராயருக்கும் இன்னும் தெரியாது."

மதுரை பஸ்  நிலையத்தில் இறங்கி வெவ்வேறு திசைகளில் பிரிந்தோம். இதற்கு பிறகு ரூபனைக் கண்டது அவனது கல்யாணத்தில்தான்.  இருந்தாலும் கலியாணத்துக்கு முன்னர் நடந்தவற்றை எனக்கு ஊரிலிருந்த அம்மா போனில் சொல்லியதை வைத்து தெரிந்து கொண்டேன்.
குருத்துவப் படிப்புக்கு இந்தியா அனுப்புமுன் தற்காலிகமாக தூர இடத்திலுள்ள ஒரு சபையில் ஊழியம் செய்ய விடுவது வழக்கம். அப்போதுதான் கிறேஸ் அஞ்சலாவை ரூபன் சந்தித்தான். சபையில் வாலிபர் சங்கத் தலைவியாக இருந்த கிறேஸ் பல்கலை கழகத்திலும் முதலாம் ஆண்டில் இருந்தாள். அவள் அழகி. எந்த ஆணையும் இரண்டாம் முறை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. ஆனாலும் செல்லையாவும், தங்கம்மாவும் கிறேஸை மருமகளாக ஏற்கவில்லை.

பேராயரிடம் ரூபன் சொல்லிப் பார்த்தான்.. பேராயரும் பெற்றோரிடம் பேசித் தோற்று விட்டார். மூத்தவன் குறைஞ்ச சாதியில் போனால் தங்கச்சிமாருக்கு நான் எங்கை மாப்பிளை பிடிக்கிறது என்று ஒரேயடியாகச் சொல்லி விட்டார் செல்லையா. பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் ரூபனின் திருமணத்தை நடத்த முடியாது என்று கையை விரித்து விட்டார் கிறிஸ்டி தங்கராஜா. மூன்று நான்கு வருடங்கள் எப்படியோ ஓடி விட்டன. கிறேஸும் இதற்கிடையில் பட்டப் படிப்பை முடித்து விட் டாள்.

அவளுக்கு வீட்டில் திருமணப் பேச்சு நடப்பதாயும் வெளிநாட்டு மாப்பிள்ளை பார்ப்பதாயும் ரூபன் செல்லையாவிடமும் தங்கமாவிடமும் ஒரு நாள் கண் கலங்கியபடி வந்து சொன்னான். இது கிறேஸுடன் பேசி முடிவெடுத்தபின் வந்து சொன்னானா என்பது கூட எவருக்கும் தெரியாது. எப்படியிருந்தாலும் செல்லையாவுக்கும் தங்கமாவுக்கும் இது பெரும் புழுகம்தான். ரூபன் மூத்த பிள்ளை. திருமணத்தை சிறப்பாகவே செய்ய எண்ணியிருந்த அவர்கள் உடனேயே தங்கம்மாவின் தூரத்துச் சொந்தக்காரன் சின்னப்பாவின் மகள் ஐரீனை நிச்சயம் செய்தனர்.
பேராயார்,  மூன்று துணைக்  குருக்கள் தலைமையில் ரூபனின் திருமணம் ஏற்பாடாயிருந்தது. அப்போது நான் இந்தியாவில் படிப்பை முடித்து விட்டு இலங்கை வந்து வீடமைப்புத் திணைக்களத்தில் மாவட்ட அதிகாரியாக வேலையில் சேர்ந்து ஒரு மாதம் தான். அதே அமெரிக்கன் மிஷன் தேவாலயத்திலேயே ரூபனின் திருமணம். அம்மா கூறைச் சீலை கட்டிக் கொண்டு மல்லிகை பூவும் வைத்தபடி என்னுடன் மோட்டர்  சைக்கிளில்  வந்தாள். வரும் வழியெல்லாம் என் காதில் ஓதிக் கொண்டிருந்தாள்
"பார் உன்ரை கூட்டாளியள் எல்லாம் கலியாணம் கட்டுறாங்கள். நீதான் இன்னும் ஒண்டுமில்லாமல் இருக்கிறாய்."
காலை பத்து மணிக்கு விவாக ஆராதனை என்று கல்யாண காட்டில் இருந்தது. தேவாலயத்து வளவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன்.  சைக்கிள்களும் மோட்டார் சைக்கிள்களும் வளவெங்கும் நிறைந்திருந்தன. அப்போது பெட்ரொல் தட்டுப்பாடான காலம். பெட்ரொலில் ஸ்ராட் பண்ணி மண்ணெண்ணையில் ஓடுவதற்கு வாகனங்களை பழக்கப் படுத்தியிருந்த காலம். 

ஆலயத்துக்கு வெளியெ சோடனைப் பேப்பரும் பூக்களும் கட்டிய ஒரு கார் நின்றது. உள்ளே வயதான ஒரு பெண் ஒர்கன் இசைத்துக்கொண்டிருந்தா. மூன்று வரிசைகளாகப் போடப்பட்டிருந்த மர வாங்குகளில் நடுவரிசை முதல் வாங்கில் ரூபனும் பெற்றொரும் அமர்ந்திருந்தனர். நான் இடப்பக்க வரிசையில் நடுவிலிருந்த வாங்கொன்றில் அமர்ந்தேன். அம்மா வலப்பக்கமாக இருந்த பெண்கள் வரிசையில் எனக்கு நேராக இருந்தாள்.  .

சுவர்களெல்லாம் சுரண்டிப் புதுப்பித்திருந்தார்கள். அந்தக் கட்டிடமே ஒரு சிலுவை வடிவில் கட்டப்  பட்டிருக்கிறது என்பதை  அப்போதுதான்  நான் அவதானித்தேன். பலிபீடத்திலிருந்து முகப்பு வாசல் வரைக்குமான பகுதி சிலுவையின் நெடுத்த மரம்.  பாடகர் குழு இருக்குமிடத்திலிருந்து இடப்பக்க வாசல் வரையான பகுதி சிலுவையின் சிறிய குறுக்கு மரம்.  உயரத்திலிருந்து பார்த்தால் சிலுவை நன்கு துலக்கமாக தெரியும் போல.
ஒரு உதவிக் குருவானவர் கையில் பைபிளுடன் பலிபீடத்தின் நடுவில் நின்று வாசலை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்க பேராயர்   பின்னே பெரிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மரக் கதிரையில் அசையாது அமர்ந்திருந்தார்.    அவருக்கு வலப்புறமாகவும் , இடப்புறமாகவும் இரு துணைக் குருமார் சிறிய மரக்கதிரைகளில் அமர்ந்திருந்தனர்.

மணப்பெண் இன்னும் வரவில்லை.   இந்த இடை வெளியில் பலிபீடத்துக்கு வலப்புறமாக அமர்ந்திருந்த பாடகர் பாடலொன்றை இசைத்துக் கொண்டிருந்தனர். பாடல் நின்றது. அப்போது பலிபீடத்தின் இடப்புறமாக இருந்த கதவு வழியாக இரு இளைஞர்கள் வந்ததை கண்டேன். அவர்கள் உடையைப்  பார்த்தால் திருமணத்துக்கு வந்தவர்கள் போலத் தெரியவில்லை. சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. சபையின் மூப்பர்களில் ஒருவர் வந்த இருவரையும்  கூட்டிக்கொண்டு இடப்பக்க வாசலால் வெளியெறினர்.

சில வினாடிகளின் பின்னர் மூப்பர்  உதவிக்குருவிடமும், பின்னர் வந்து ரூபனிடமும்  எதோ காதில் சொன்னதை கண்டேன். எதோ விபரீதம் நிகழ்கிறதென்று உள்மனம் சொல்லியது. அடுத்த நிமிடத்திலேயே ரூபனும், பெற்றோரும், உதவிக் குருவானவரும் வெளியேற நானும் வெளியே வந்து விட்டேன்.
வந்தவர்கள் ஒரு விடுதலை இயக்க உறுப்பினர்கள். அவர்கள் வந்தது கிறேஸ் அஞ்சலாவின் சார்பாகவும் இந்தத் திருமணத்தை நிறுத்துவதற்காகவும் என்று தெரிந்தது.

செல்லையாவும், தங்கம்மாவும் உரத்த குரலில் அவர்களுடன் பேசினார்கள். பிறகு தங்கம்மா அழத் தொங்கினா.    
பேராயர் வந்தவர்கள் இருவரையும் ஒரு பக்கம் கூட்டிச்சென்று அவர்களுடன் பேசிப் பார்த்தார். 

திருமணத்தை நடத்த முடியாது என்பதை அவர்கள் உறுதியாக சொல்லிவிட்டார்கள். செல்லையாவும் தங்கம்மாவும் திகைத்து நிற்க ரூபனை தமது வாகனத்தில் ஏற சொன்னார்கள்.
இதே நேரம் அம்மாவும், தேவாலயத்திலிருந்த பலரும் வெளியே வந்து விட்டனர். வாகனம் புறப்பட தொடங்கியது. ரூபன் என்னையும் பின்னால் வரும் படி சைகை காட்டினான். பாவமாக இருந்தது. அம்மா என்னுடன் வர மறுத்து விட்டாள்.
நீ என்னவாவது செய் நான் நடந்தே வீட்டுக்குப் போகிறேன்என்றாள் . 

நான் மோட்டார் சைக்கிளில் அந்த வாகனத்தைப் பின் தொடர்ந்தேன். எங்கு போகிறார்களென்று தெரியவில்லை. மோட்டார் சைக்கிள் ராங்கில் பெற்றோலும் அதிகம் இருக்கவில்லை. அவர்களைப் பின் தொடர்வதால் இடையில் நிறுத்தவும் முடியாது. வழியெல்லாம் ஐரீன் இந்த அதிர்ச்சியை எப்படி எதிர் கொள்ளப் போகிறாள் என்று சிந்தித்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

வாகனத்தைப் பின் தொடர்ந்து அந்த இடத்துக்கு வந்து சேர இரண்டு மணித்தியலத்துக்கு கிட்ட எடுத்தது. அவர்கள் வாகனம் நிறுத்திய வீட்டுக்கு வெளியே வேறு சில வாகனங்கள் நின்றன. 
உள்ளே ரூபனைக் கூட்டிகொண்டு அவர்கள் உள்ளே செல்ல நான் வெறு வழியின்றிப் பின் தொடர்ந்தேன். உள்ளே போனதும் தான் அது கிறேஸின் வீடு என்று தெரிந்தது.

ரூபனைக் கண்டதும் கிறேஸ் விம்மி விம்மியழுது தாயை கட்டிக் கொண்டாள்.  உள்ளே ஒரு மேசை போடப்பட்டு ஒரு பெண்மணி ஒரு பதிவேடு ஒன்றுடன் கதிரையில் அம்ர்ந்திருந்தார். அவர் ஒரு விவாகப் பதிவாளர் என்பதை புரிந்து கொள்ள அதிக நேரமெடுக்கவில்லை. நன்கு ஒத்திகை செய்யபட்ட நாடகம் போல எல்லா ஒழுங்குகளையும் கச்சிதமாக நடத்தியிருந்தனர்.
மாப்பிள்ளை வீட்டிலிருந்து எவருமே வராத சூழ்நிலையில் அன்று நான் மாப்பிள்ளை வீட்டுக்காரர் சார்பாக சாட்சிக் கையெழுத்திட்டேன்.

இது நிகழ்ந்து இப்போ முப்பது வருடம் கடந்து விட்டது.
ரூபன் கிறேஸ் உடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடாத்தி அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்திருந்ததாக பிறகு அறிந்திருந்தேன். நீண்ட காலம் சபைக் குருவாக இருந்து பிறகு பதவி உயர்வு பெற்று சபையின் பல பொறுப்புகளுக்கு அதிகாரியாகவிருந்தான் என்பதையும் அறிந்தேன். 

நானும் கொழும்புக்கு வேலை மாறி வந்து அங்கு பத்து வருஷம் வேலை செய்து பிறகு நாட்டை விட்டு வந்து கனடாவில் குடியேறி  இருபது வருடமாகி விட்டது.

இரவு ஒன்பது மணி. கண்ணாடி யன்னலினூடு வெளியே பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் விழுந்திருந்த வெண்பனி இருட்டை வெளிச்சமாக்கி விட்டிருந்தது. வெண்மையின் ஜொலிப்பில் இருள் அங்கில்லை. எல்லாக் குறைகளையும் மூடி மறைத்துவிடும் தூய அன்பின் அல்லது எல்லாப் பாவங்களையும் பொறுத்துக் கொள்ளும் மன்னிப்பின்,அடையாளம்தானா இந்த வெண்பனி.?    
சமையலறையிலிருந்து 

" அப்பா யார் போன் எடுத்தது" என்று மனைவியின் குரல்.
" பிரான்சிலிருந்து அருமை" என்று சொல்லிக்கொண்டே நான் ஸ்கொட்ச் போத்தலை எடுக்கப் போனேன்.



No comments: