இலங்கைச் செய்திகள்


வாள்வெட்டு குழுவை ஊக்குவிப்பவர் யார்?; பல கோணங்களில் விசாரணை

நாட்டை விட்டு வெளியேறியோருக்கு பிரதமரின் அழைப்பு

இரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த இளஞ்செழியன்

ஊடகவியலாளர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

யாழ் ரமணனின் மறைவுக்கு வடமாகாண ஆளூநர் இரங்கல்


வாள்வெட்டு குழுவை ஊக்குவிப்பவர் யார்?; பல கோணங்களில் விசாரணை


06/08/2018 வாள் வெட்டுக்குழுக்களுக்கும், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா எனும் கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தென்மராட்சி பகுதியை சேர்ந்த 07 இளைஞர்களை மானிப்பாய் பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து கைக்கோடரி, வாள்கள், கை கிளிப் போன்ற ஆயுதங்களையும் கைபற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு எதிராக வாள் வெட்டு தொடர்பிலான வழக்குகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும்  மேலும் ஒன்பது பேரை தாம் தேடி வருவதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன்,  கைது செய்யப்படவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சில பொலிஸாருக்கும், கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனடிப்டையில் இளைஞர்களின் கையடக்க தொலைபேசி அழைப்புகள் குறித்து விசரானைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 
அதேவேளை கைது செய்யப்பட்ட ஏழு இளைஞர்களையும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் மானிப்பாய் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது, சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் "கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது பொய் குற்றசாட்டு சுமத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்களை பிணையில் விடுவிக்குமாறும் பிணை விண்ணப்பம் செய்தார். 
குறித்த பிணை விண்ணப்பத்தினை நிராகரித்த நீதிவான் ஏழு இளைஞர்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.  நன்றி வீரகேசரி 










நாட்டை விட்டு வெளியேறியோருக்கு பிரதமரின் அழைப்பு


08/08/2018 யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களையும் மீண்டும் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்கு திரும்பி வரும் மக்களுக்கு சகல உதவிகளையும் செய்து கொடுக்க தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார். 
பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், யுத்தத்தின் போது நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள் குறித்து பிரதமரிடத்தில் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
 
நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கை மக்கள் இலங்கையில் சுதந்தரமாக வாழ வேண்டும். ஆகவே யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களும் மீண்டும் இலங்கைக்கு வரவேண்டும். இதற்காக அரசாங்கமாக நாம் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். 
நாட்டுக்கு திரும்பி வரும் மக்களுக்கு சகல உதவிகளையும் வாழ்வாதார நடவடிக்கைகளையும் செய்துகொடுக்க நாம் தயாராக உள்ளோம். அதேபோல் அகதிகளாக வெளியேறி இப்போது நாடு திரும்பியுள்ள மக்களின் நிலைமைகள் குறித்தும் நாம் ஆராய்ந்து அவர்களுக்கான அடுத்த கட்ட உதவிகளை செய்து கொடுப்பது குறித்தும் நாம் துரித நடவடிக்கைகளை முன்னெடுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.   நன்றி வீரகேசரி 










இரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த இளஞ்செழியன்


08/08/2018 யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை சட்டவிரோதமாக கைதுசெய்து அவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இரணுவ சிப்பாய் ஆகிய இருவருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் (09.09.1998) யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த அன்ரன் குணசேகரம் என்ற இளைஞர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் இரண்டு நாட்களில் சடலமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார்.
இது தொடர்பில் 51 ஆவது முகாம் தளபதி முதலாம் எதிரியாகவும், யாழ்.512 ஆம் படைப்பிரிவின் கட்டளை தளபதி இரண்டாம் எதிரியாகவும், திருநெல்வேலி இராணுவ முகாம் இராணுவ அதிகாரி மூன்றாம் எதிரியாகவும் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
இவ் வழக்கில் பல சாட்சியங்களது சாட்சியங்களையும், எதிரிதரப்பு சட்டத்தரணியினது வாதங்களை பரிசீலித்த மன்றானது இன்றைய தினம் இவ் வழக்கின் தீர்ப்புக்காக திகதியிட்டிருந்தது. 
இதன்படி இன்றைய தினம் காலை பதினொரு மணியளவில் நீதிபதி தனது தீர்ப்பினை திறந்த மன்றில் அறிவித்திருந்தார். அத்துடன் நீதிபதி தனது தீர்பில் இலங்கை உயர் நீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாகவும், சித்திரவதை தொடர்பான வழக்குகளிலும் வழங்கிய தீர்ப்புக்களையும், ஜ.நா.யுத்த குற்ற நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களையும் மேற்கோள்காட்டி தனது தண்டனை தீர்ப்பை வழங்கியிருந்தார்.
இவ் வழக்கின் முதலாம் எதிரியான 51 ஆவது படைத் தளபதி அச்சுவேலி முகாமை சேர்ந்தவர். அவர் குறித்த இளைஞனை கைது செய்தமை, தடுத்து வைத்தமை என்பனவற்றுடன் மாத்திரமே தொடர்புபட்டுள்ளதுடன் அவர் சித்திரவதை புரிந்தமை, கொலை செய்தமை என்பனவற்றுடன் தொடர்புபட்டார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லாமையினால் அவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் ஆதாரங்களூடாக பார்க்கின்ற போது இரண்டாம் எதிரியான இராணுவ கட்டளை தளபதி, மற்றும் திருநெல்வேலி இராணுவ முகாம் அதிகாரி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படுகின்றது.
எனவே குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நிருபிக்ப்ப்பட்ட 512 ஆம் படை பிரிவின் கட்டளை தளபதி மற்றும் திருநெல்வேலி இராணுவ அதிகாரி ஆகிய இருவருக்கும் ஜனாதிபதி விரும்பும் நேரத்தில் விரும்பும் இடத்தில் கழுத்தில் சுருக்கிட்டு உடலில் இருந்து உயிர் பிரியும் வரை துக்கிலிட்டு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு ஆணை பிறப்பித்தார்.
குறித்த மரண தண்டனை தீர்ப்பானது வாசிக்கப்படும் போது நீதிமன்றின் அனைத்து விளக்குகளும், அணைக்கப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்ட பேனா முறித்து எறியப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் சில நிமிடம் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 













ஊடகவியலாளர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு


12/08/2018 ஊடகவியலாளர் உதயராசா சாளின் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளருடன் மேலும் ஐவர் தனித்தனியாக விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழா கடந்த யூன் மாதம் நடைபெற்றிருந்தது. இந்த திருவிழாவின் இறுதி நாளான பூங்காவான உற்சவத்தின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றினைத்து தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்தில் அம்மன் வலம் வந்திருந்தார்.
இது தொடர்பிலேயே விசாரணைக்காக ஊடகவியலாளர் உட்பட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பூசகர் ஆகியோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் காலை அனைவரது வீட்டுக்கும் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு இரண்டாம் மாடிக்கு வருமாறு அழைப்பு துண்டுகளை அனைவரிடமும் கையளித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர், மானிப்பாய், யாழ்ப்பாண பொலிசார், மற்றும் கோப்பாய் இராணுவத்தினர் ஆகியோர் பல கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த மக்களையும்
பல தடவைகள் பொலிஸ் நிலையங்களுக்கும் அழைத்தும் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இறுதியாக யாழ்ப்பாண பொலிசாரால் இந்து இளைஞர் மன்றம் மற்றும் நிர்வாக சபையின் தலைவர் செயலார் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு,
இவ்வாறன சம்பவம் இனிவரும் காலங்களில் நடைபெற கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டு விசாரணைகளை முடிவுறுத்துவதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீளவும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளமை மத வழிபாட்டுக்கு இடையூறு செலுத்தும் நடவடிக்கையாகும் என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் விசாரணைக்காக ஆலய உறுப்பினர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள அதேவேளை இறுதியாக 22 ஆம் திகதி ஊடகவியலாளர் உ.சாளின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த வரைபடம் தமிழீழத்தை நோக்கமாக கொண்டு அலங்கரிக்கப்பட்டதல்ல எனவும், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது சாதரணமாக இலங்கை பாடப்புத்தகங்களிலும் உள்ளது. அதனை தவிர இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என ஆலயத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த ஆலய நிர்வாகத்தில் குறித்த ஊடகவியலாளர் இல்லாத போதிலும், இவ்வாறன சம்பங்களை பயன்படுத்தி ஊடகங்களை மிரட்டும் நடவடிக்கைகளை மீளவும் அரசு திட்டமிட்ட வகையில் களமிறங்கியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 












யாழ் ரமணனின் மறைவுக்கு வடமாகாண ஆளூநர் இரங்கல்


11/08/2018 விடுதலைப்புலிகளின் பல புரட்சி பாடல்களுக்கு இசையமைத்தவரும்,  ஈழத்து இசை கலைஞருமான யாழ்.ரமணன் என அழைக்கப்படும் இராஜேந்திரன் இராஜேஸ்வரனின் மறைவுக்கு வடமாகாண ஆளூநர்   றெஜினோல்ட் குரே இரங்கல் தெரிவித்து ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார். 
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , 
நீதித்துறையில் மட்டுமல்ல இசைத்துறையிலும் ஊடகத்துறையும் சாதனை படைத்த அமரர் இராஜேந்திரன் இராஜேஸ்வரன் (ரமணன்) மரணமடைந்த செய்தி யாழ் குடாநாட்டினை மட்டுமல்ல உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் இசை ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு மனிதன் ஒரு துறையினையே சரிவர கையாள்வதற்கு முடியாது உள்ள தற்போதய காலத்தில் கலைஞனாக, சட்டத்தரணியாக, ஊடகவியலாளராக மூன்று துறைகளிலும் செயலாற்றி “யாழ் ரமணன்” என்றால் உலகம் அறியும் வகையில் திகழ்ந்த ஒரு நல்ல மனிதனை தமிழ் சமூகம் இழந்து இருக்கின்றது.
ஏராளமான பாடல்களுக்கு இசை அமைத்த ரமணன் ராஜன்ஸ் இசைக்குழுவின் இயக்குனராக இருந்து வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடாத்திய பெருமைக்கு உரியவர் இலங்கை இந்திய பிரபல்யமான கலைஞர்களுக்கு இசை அமைத்த பெருமையையும் அவரையே சாரும். சிறந்த கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்கு உரிய ரமணனின் இழப்பு கலைத்துறைக்கு பேரிழப்பாகும்.
வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் மட்டுமல்ல நானும் ஒரு கலைஞன் என்ற வகையில் சக கலைஞனின் இழப்பினால் துயர் உற்று இருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், நண்பர்கள் இசைப்பிரியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன். என குறிப்பிடப்பட்டு உள்ளது.  நன்றி வீரகேசரி 


No comments: