கலைஞரும் தமிழ் சினிமாவும் முதல் குழந்தை முரசொலியின் பிரதியுடன் இறுதிப்பயணம் சென்றவர்! சினிமாவிலும் அரசியலிலும் சாதித்திருக்கும் முழுநேர எழுத்தாளரின் வாழ்க்கைப்பயணம் - முருகபூபதி" கருத்து முரண்பாடு வந்தபின்னரும் நண்பர் எம்.ஜீ.ஆர். என்னை கலைஞர் என்றுதான் விளித்தார்.  ஆனால்,  நான் எழுதிக்கொடுத்த வசனங்களுக்கு திரைப்படத்தில் பேசி நடித்த ஜெயலலிதா தன்னைப்பற்றி மேடைகளில் விமர்சிக்கும்போது, "ஏய் கருணாநிதி" என்றுதான் திட்டுகிறார்" இவ்வாறு தனது ஆதங்கத்தை பலவருடங்களுக்கு முன்னரே தெரிவித்திருப்பவர் அண்மையில் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி.
அவருடைய இந்த ஆதங்கத்தை ஒரு வார இதழ் "சொன்னார்கள்" என்ற தலைப்பில் வெளியிட்ட கருத்துக்களில் படிக்கநேர்ந்தது.
கருணாநிதிக்கு, கலைஞர் என்ற பட்டத்தை அவர் எழுதிய தூக்குமேடை நாடகத்தின் அரங்காற்றுகையின்போது நடிகவேள் எம்.ஆர். ராதா வழங்கினார் என்பது தகவல்.
நடிகவேள் ராதா  மாத்திரமின்றி பின்னாளில் அவரது வாரிசுகளான எம்.ஆர்.ஆர். வாசு, ராதா ரவி, ராதிகா, வாசுவிக்ரம் ஆகியோருக்கும் மாத்திரமின்றி, சிவாஜி, எம்.ஜீ.ஆர், சகஸ்ரநாமம், கே.ஆர். ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, ரி.எஸ். பாலையா, பி. எஸ்.வீரப்பா,  எஸ்.வி. சுப்பையா, ரங்கராவ், நாகையா, ஆர். எஸ். மனோகர், என். எம். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், சிவகுமார், பிரசாந்த், நெப்போலியன், விஜயகுமார், சத்திய ராஜ், பிரபு, மற்றும் கண்ணாம்பா, ராஜம்மா, டி.ஆர். ராஜகுமாரி, ஶ்ரீரஞ்சனி,  பானுமதி, பத்மினி, மனோரமா, பண்டரிபாய், விஜயகுமாரி,  ராஜம், ஜெயலலிதா, ராஜ்ஶ்ரீ, சரோஜாதேவி, லட்சுமி,  ஶ்ரீபிரியா,  அம்பிகா உட்பட எண்ணிறந்த நடிகர்கள்,  கலைஞர் எழுதிய வசனங்களைப்பேசி நடித்தவர்களே!
இவர்கள் அனைவரும் கருணாநிதியை கலைஞர் என்றே அழைத்திருக்கும்போது, ஒருகாலத்தில் அவரது வசனத்தில் பேசி நடித்திருக்கும் ஜெயலலிதா மாத்திரம் அரசியலுக்கு வந்து, தனது எதிரியாக மாறி " ஏய், கருணாநிதி" என்று ஏகவசனத்தில் விளித்தமை அவருக்கு மாத்திரமல்ல ஏனையவர்களுக்கும் ஆதங்கமான விடயம்தான்.
கலைஞர் அரசியலுக்குள் பிரவேசிக்காது விட்டிருப்பின் அவரும் மற்றும் பல படைப்பாளிகளைப்போன்று முழுநேர எழுத்தாளராக அல்லது முரசொலி பத்திரிகையின் முழுநேர ஆசிரியராகவே வலம் வந்திருப்பார். தான் எழுதும் நூல்களுக்கு ரோயல்டி பெற்றிருப்பார். தனது இளம்மாணவப்பருவத்திலேயே சக மாணவர்களை இணைத்துக்கொண்டு கையெழுத்து பத்திரிகை நடத்தியவர். தான் பிறந்த திருவாரூரில் மாணவ நேசன் என்ற கையெழுத்து இதழை நடத்தியபின்னர் அங்கிருந்து மாணவர் இயக்கத்தையும் ஆரம்பித்தவர். அதனையடுத்து முரசொலி என்ற பெயரில் மற்றும் ஒரு கையெழுத்து பத்திரிகையை தொடக்கி அதனையே அவர் இணைந்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் உத்தியோகபூர்வ அச்சு ஊடகமாக மாற்றி தமிழகம் எங்கும்  அதன் புகழை பரப்பியவர். இன்று  தரணியெங்கும் அதன் இணையப்பதிப்பும் பரவிவிட்டது.
அவர் எழுதிய முதல் மேடை நாடகம் பழனியப்பன்,  அவரது 20 வயதில் அரங்கேறுகிறது. அவர் வசனம் எழுதிய முதல் திரைப்படம் ராஜகுமாரி அவரது 23 வயதில் திரைக்கு வருகிறது. அவரது முதல் மூன்று படங்கள் எம்.ஜீ.ஆர். நடித்த படங்கள்தான். அதன்பிறகு கலைஞர் கதை வசனம் எழுதி வெளிவந்த சிவாஜிகணேசனின்  முதல் படம் பராசக்தி  1952 ஆம் ஆண்டு கலைஞரின்  28 வயதில் வெளியாகிறது.
நாடகம், சினிமாவுக்கு வசனம் எழுதிக்கொண்டும், அரசியல் பத்திகள் வரைந்துகொண்டும் தனது கழகக்கண்மணிகளுக்காக உடன்பிறப்புகளே என விளித்து தினமும் முரசொலியில் மடல் எழுதியவர்.
படுக்கையில் விழும் வரையில் ஓயாமல் எழுதி எழுதி குவித்தவர். அவரது தொழில் எழுத்துத்தான். அரசியல் அவரை முதல்வராக்கியது. முதலவரானதன்பின்னரும் எழுதியவர். சந்தித்த சவால்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் அவதூறுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் எழுதிக்கொண்டே இருந்தவர்.

பல ஆண்டுகளுக்குப்பின்னர் புதிய பராசக்தி என்ற படத்திற்கும் வசனம் எழுதினார். கலைஞர் இறுதியாக வசனம் எழுதிய தொலைக்காட்சித்தொடர் ஶ்ரீராமானுஜர். மதச்சிந்தனைகளில் ஶ்ரீராமானுஜர் ஏற்படுத்திய புரட்சியை சித்திரித்த தொடர். அதனை கலைஞர்  எழுதும்போது வயது 92.
அவர் இணைந்த கட்சி தி.மு.க.வின் தேர்தல் சின்னம் உதயசூரியன்  பெயரிலும் நாடகம் எழுதி பட்டிதொட்டி எங்கும் மேடையேற்றி கட்சிக்கு வலிமை சேர்த்தவர்.
கவிதை, நாடகம், நாவல், சிறுகதை, கட்டுரை, பயண இலக்கியம், விமர்சனம், திரைப்படம், தொலைக்காட்சித்தொடர் முதலான அனைத்துத் துறைகளிலும் ஈடுபட்டு, தொல்காப்பியப்பூங்கா, திருக்குறள் உரை, குறளோவியம் , சங்க இலக்கியம் முதலானவற்றையும் எழுதிக்கொண்டு, தனது சுயசரிதையை நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் தினமணிக்கதிரில் தொடங்கி குங்குமம் இதழ்வரையில் நான்குபாகங்களாக எழுதியவர். சக எழுத்தாளர்கள் நூல் வெளியிட்டு பேச அழைத்தால் தட்டிக்கழிக்காமல் சென்று சுவாரஸ்யமாகப்பேசியவர்.
1947 இல் ராஜகுமாரியில் தொடங்கி அடுத்தடுத்து அவரது கதை வசனத்தில் படங்கள் வந்துகொண்டே இருந்தன. 2011 இல் வெளியான பொன்னர் சங்கர் வரையிலும்  அதன்பின்பும்  அவர் திரைப்படங்களுடனும் திரையுலக கலைஞர்களுடனும்  நெருக்கமாகவே இருந்தார். அவரது வசனத்தில் வெளியான திரைப்படங்கள்:
ராஜகுமாரி (1947) அபிமன்யு  (1948) மந்திரி குமாரி (1950) , மருதநாட்டு இளவரசி (1950),  பராசக்தி (1952),  பணம் (1952), மணமகள் (1952), திரும்பிப்பார் (1953) , மனோகரா (1954)  அம்மையப்பன் , (1954) ராஜா ராணி (1956),ரங்கோன் ராதா (1956),புதுமைப்பித்தன் (1957) , புதையல் (1947), தாயில்லா பிள்ளை (1961), காஞ்சித்தலைவன் (1963), இருவர் உள்ளம் (1963) , பூம்புகார் (1964), பூமாலை (1965), அவன் பித்தனா? (1966), கண்ணம்மா (1972), பிள்ளையோ பிள்ளை (1972), காலம் பதில் சொல்லும் (1980),  நீதிக்கு தண்டனை , பாலைவன ரோஜாக்கள் (1986),  பாசப் பறவைகள் (1988), பாடாத தேனீக்கள் (1988),  நியாயத் தாராசு (1989)  காவலுக்கு கெட்டிக்காரன் (1990) ,மதுரை மீனாட்சி (1993) , புதிய பராசக்தி (1996), மண்ணின் மைந்தன் (2005), உளியின் ஓசை( 2008) பெண் சிங்கம் (2011),   இளைஞன் (2011), பாசக் கிளிகள் (2016),   பொன்னர் சங்கர் (2011).
 இவற்றில் ஒரு சிலபடங்களுக்கு கதையை மாத்திரம் எழுதியவர். அறிஞர் அண்ணா எழுதிய கதைகளுக்கும் , எழுத்தாளர் லக்‌ஷ்மியின் (இருவர் உள்ளம்)  கதைக்கும் திரைக்கதை வசனம் எழுதியவர்.
87 வயதில் அவர் தமிழக முதல்வராக பதவியிலிருந்தபோது, அவரது வசனத்தில் வெளியானது பெண்சிங்கம் என்ற திரைப்படம். இதுகுறித்து அவ்வேளையில் வெளியான விமர்சனத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
" வயது ஏற ஏற  பொதுவாக மனிதர்கள்  முடங்கிப் போவார்கள் என்பது  நடைமுறையில்  நாம்  பார்ப்பது. ஆனால்,  தமிழக முதல்வர் கருணாநிதி விஷயத்தில் இயற்கையின் நியதி எதிர்மறையாக உள்ளது. வயது கூடக் கூட அவர் மனதுக்கு வாலிபம் திரும்பிவிட்டது போலிருக்கிறது. பெண் சிங்கத்தின் வசனங்கள் அதற்கு சாட்சி !. இந்த 87வது வயதில், இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றபடி ஒரு படத்தை உருவாக்குவது சாதாரண விஷயமல்ல."
மாணவப்பராயத்திலிருந்தே சமூகச் சீர்திருத்தக்கருத்துகளில் தீவிரம் காண்பித்து வந்திருக்கும் கருணாநிதிக்கு நடிகவேள் எம்.ஆர். ராதா வழங்கிய கலைஞர் என்ற பட்டம் இறுதிவரையில் அவரது  நிரந்தர அடையாளமாகியது.
வி.சி.கணேசனாக  மேடை நாடகங்களிலும் , திரைப்படங்களிலும் தோன்றிய நடிகரை - அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் வீரசிவாஜியாக தோன்றி அசத்தியவரை -பெரியார் ஈ.வே.ரா. சிவாஜி என்ற பட்டம் வழங்கி, அதுவே நடிகர்திலகத்திற்கு நிரந்தர அடையாளமானதுபோன்று கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் நிரந்தர அடையாளமானது.
அவ்வாறிருக்கையில்  எழுத்துலகிற்கும் கலையுலகத்திற்கும் கருணாநிதி பிரவேசித்த காலத்திலும்  பிறந்திருக்காத ஜெயலலிதா, பின்னாளில் விதிவசத்தால் அவரது வசனத்தை மனனஞ்செய்து திரையில் பேசியவர் - ( ஒரு முன்னாள் நடிகை) தன்னை " ஏய் கருணாநிதி" என விளித்தது குறித்து கலைஞரின் ஆதங்கம் நியாயமானதுதான்.
எம். ஜீ.ஆரும், ஜெயலலிதாவும் ஆட்சிக்கட்டில் ஏறியதும் சினிமாவை விட்டு ஒதுங்கியவர்கள். ஆனால், சினிமாவுக்கு வசனம் எழுதுவதற்காகவே மாதச் சம்பளம் பெற்று சேலத்திலிருந்த மொடர்ன் தியேட்டர்ஸ் ஸ்ரூடியோவுக்குச்சென்று அறையில் தங்கியிருந்து வேலை செய்த  கருணாநிதி இறுதிவரை சினிமாவுடன் நெருக்கமாகவே இருந்தவர்.
சினிமாத்துறையினருடன் மட்டுமல்ல, கலை, இலக்கிய, ஊடகத்துறையினருடனும் அவர் மிகவும் நெருக்கமான உறவுகொண்டிருந்தார்.
கவிஞர்கள் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சுரதா, கண்ணதாசன், வாலி, கா.மு. ஷரீப்,  மருதகாசி, வைரமுத்து, அப்துல் ரஹ்மான், மு. மேத்தா, பா. விஜய் உட்பட பலருடனும் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சுஜாதா, தமிழச்சி சுமதி தங்கபாண்டியன், சல்மா, மானுஷ்ய புத்திரன், சுபவீரபாண்டியன் முதலான பலருடனும் அவருக்கு நல்லுறவு நீடித்திருந்தது.
கவியரசு கண்ணதாசன் தனது வனவாசம், மனவாசம் ஆகிய சுயசரிதை நூல்களில் கலைஞர் குறித்து கடும் விமர்சனங்களை எழுதியிருந்தபோதிலும், கண்ணதாசனை அவர் வெறுக்கவே இல்லை. கவியரசு மறைந்தவேளையில், " நீ யார் அழைத்தாலும் ஓடிச்செல்லும் செல்லப்பிள்ளை" என்று நயமாகவும் இங்கிதமாகவும் கவியரசரின் பேச்சையும் எழுத்தையும் வாழ்வையும் வர்ணித்தவர்.
ஜெயலலிதா தவிர அனைவரும் அவரை கலைஞர் என்றும் தலைவர் என்றும் விளித்தாலும் அவரை இறுதிவரையில் அவ்வாறு அழைக்காமல், பெயர் சொல்லியே அழைத்தவர்தான் ஜெயகாந்தன்.
அவ்வாறு ஜே.கே. அழைத்தமைக்கு அவர்களிடமிருந்த அந்நியோன்யமான உறவுதான் காரணம். ஒருதடவை தொலைபேசியில், " கலைஞர் பேசுகின்றேன்" எனச்சொன்னதும், குசும்புத்தனம் மிக்க ஜே.கே, " என்ன கலைஞர்!? சும்மா கருணாநிதி என்றே சொல்லுங்க"  என்றாராம்.
எப்பொழுதும் செல்லமாக "கருணா" என்று அழைத்துவந்திருக்கும் ஜே.கே.யின் விழாக்களில் தோன்றியிருக்கும் கலைஞர்,  ஜே.கே.யின் நூல்களின் முன்னுரைகளை வாசித்து அதில் அவருக்குப்பிடித்தமான குசும்புத்தனம் பொதிந்த வரிகளை உரத்து வாசித்து சிரிப்பார்.
கலைஞரின் வாழ்வு எழுத்தாளர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். எழுத்து அவரை ஆட்சியிலும் அமர்த்தியது. அரசாட்சியில் அமர்ந்தாலும் அவர் எழுத்தை கைவிடவில்லை! வாசிப்பதை நிறுத்தவில்லை.! தனக்கு எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நேரம் இல்லை என்று என்றைக்குமே சொன்னதில்லை!
தான் எழுதியதை மாத்திரம் படிக்காமல்,  மற்றவர்களின் எழுத்துக்களையும் படித்து கருத்துச்சொன்னவர்.
வளர்ச்சிப்படியில் நின்ற ஒரு சாதாரண படைப்பாளி எழுதிய கவிதையில், கணவனை இழந்த பெண்ணின் பெயருக்குரிய  விதவை என்ற எழுத்துக்களிலும் திலகம் இல்லை என்று ஆதங்கப்பட்டு பதிவுசெய்ததும், அதனைப்படித்துவிட்டு, " விதவை வடசொல், அழகான தமிழ்ப்பதம் கைம்பெண்!  தமிழ் அன்னை அவளுக்கு இரண்டு திலகம் வழங்கியிருக்கிறாள். " என்று தமிழின் சிறப்பைச் சொன்னவர்தான் கலைஞர்.
அவருடைய வாழ்வை எழுதினால் இதுபோன்று ஆயிரக்கணக்கான தகவல் குறிப்புகளை காண்பிக்கலாம்.
சினிமாவில் தோன்றிவிட்டு "நாளைய முதல்வர்" கனவில் இன்றும்  கேரளம் தவிர்ந்த  தென்னகத்திரையுலக  நடிகர்கள் சிலர் கனவு காண்கின்றனர்!  ஆனால், எழுத்துலகில் மிகவும் சிறிய வயதில் பிரவேசித்து எழுத்தினாலும் பேச்சினாலும் அயராத உழைப்பினாலும் கழகத்தில் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும் முதல்வராகவும், எதிர்க்கட்சித்தலைவராகவும் வாழ்ந்திருக்கும் கலைஞர், எழுத்தை மாத்திரம் கைவிடவேயில்லை. அதுதான் இறுதிவரையில் அவரது பலமாக இருந்தது.
தமிழ் சினிமா,  கூத்தும்  மேடை நாடகமும் ஈன்ற குழந்தை. அந்தக்குழந்தை இன்று நவீன டிஜிட்டலுக்கு மாறியிருக்கிறது. முதலில் பாடல்களுக்காகவும்  பின்னர் வசனங்களுக்காகவுமே  அந்தக்காலத் தமிழ்த்திரைப்படங்கள் ஓடியிருக்கின்றன. அதனால் கலைஞரின் அடுக்குத் தொடரான கனல் கக்கும் வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு நீடித்தது.
அவர் தான் பிறந்து தவழ்ந்த நாடக உலகத்தை மறக்காதிருப்பதற்காக தனது வசனத்தில் வெளியான சில படங்களில் நாடகங்களையும் புகுத்தினார். அத்தகைய நாடகங்கள்: அனார்க்கலி, சேரன் செங்குட்டுவன், சோக்ரட்டீஸ்.
தனது வசனம் எழுதப்பட்ட படங்கள் தொடங்கும் முன்னர் அவரும் திரையில் தோன்றி சில நிமிடங்கள் உரையாற்றுவார்.
தனது வசனங்களை யார் பேசி நடிக்கப்போகிறார்கள் என்பதை இயக்குநர் - தயாரிப்பாளரிடம் முற்கூட்டியே தெரிந்துகொண்டு அவரவருக்கு ஏற்றவாறும் வசனங்களை எழுதிக்கொடுத்தவர்தான் கலைஞர். சினிமா இன்று வேறு ஒரு உச்சத்திற்கு சென்றுள்ளது.
 கலைஞர் சினிமாவுக்குள் பிரவேசித்த காலத்தில் திரைப்படக்கல்லூரிகள் இல்லை. திரையுலகம் தொடர்பான பிரக்ஞை ஊட்டக்கூடிய இதழ்கள், நூல்களும் வெளியாகியிருக்கவில்லை.  மாற்றுச்சிந்தனைக்குப்பதிலாக மறுமலர்ச்சி சிந்தனையே அன்று ஓங்கியிருந்தது.  அன்று ஒரு புதிய தமிழ்த்திரைப்படம் வெளியானதும் அதன் வசனங்கள் , பாடல்கள் இடம்பெற்ற சிறிய பிரசுரங்கள்தான் வெளியாகியிருக்கும். மேற்குலகில் இந்நிலை இருக்கவில்லை.
அவ்வாறு அக்காலத்தில் தமிழகத்தில் வெளியான ரத்தக்கண்ணீர், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனப்பிரசுரங்களை வைத்துக்கொண்டு மனனம் செய்து,  இலங்கையிலும் தமிழகத்திலும் பலர் மேடைகளில் நடிகர்களாக தோன்றினர். கலைஞர் எழுதிய நாடகங்களை படித்து நடித்தனர். அவர்களுக்கு நடிப்புத்துறையில் அதுவே ஆரம்ப வகுப்பு.
இன்றைய திரைப்படங்களின் வசனப்பிரசுரங்கள்  அன்றுபோல் வருவதுமில்லை. மேடைக்குத்தக்கதாக அந்தக்கதைகளும் இல்லை.
எனவே, கலைஞரின்  ஆரம்பகால திரையுலக வாழ்க்கையை குறிப்பிட்ட கால கட்டத்தின் பின்புலத்திலிருந்தே அவதானிக்கவேண்டும்.
தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா முதலானோர் நடித்த படங்களில் பேசப்பட்ட வசனங்களுக்கும் பின்னாளில்  கலைஞர் படங்களின் வசனங்களுக்குமிடையே  இருந்த பாரிய வேறுபாட்டை நாம் காணமுடியும். அவர் தமிழ் சினிமாவில் தமிழுக்கு அரியாசனம் எழுப்புவதற்கு தனது கருத்துச்செறிவான வசனங்களினால் அத்திவாரம் அமைத்தவர். காலத்திற்கு ஏற்ப வசனங்களை மாற்றிக்கொண்டவர்.
அவருடை பல படங்களில் நீதிமன்றக்காட்சி வரும். பராசக்தி முதல்  பாசப்பறவைகள் வரையில் பல படங்களில் அக்காட்சியை காணமுடியும். பராசக்தியில் அவர் எழுதிய வசனம்  " ஏய் பூசாரி, எப்போதடா அம்பாள் பேசியிருக்கிறாள்?" என்ற கேள்வியை இன்றும் நாம் கேட்கமுடியும்!
முரசொலி பத்திரிகையை  முதலில் கையெழுத்து இதழாகவும் பின்னர் அச்சடித்தும் அதன் பிரதிகளை சுமந்துகொண்டு தெருத்தெருவாக விநியோகித்தவர், காலப்போக்கில் அதனை புகழ்பெற்ற நாளேடாக மலரச்செய்து அதற்கென தனியான கட்டிடமும் அமைத்து வெளிவரச்செய்தவர்.
முரசொலி கையெழுத்து இதழாக தொடங்கிய நாள் முதல் அவர் உடல் நலிவுற்ற கடந்த சிலவருடங்கள் வரையில் தொடர்ந்து அதில் எழுதிவந்திருப்பவர். தனது முதல் குழந்தை முரசொலிதான்  என்ற பெருமிதத்தில் வாழ்ந்தவர்.
"வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ? " என்று அவருடைய நண்பர் கவியரசு கண்ணதாசன் எழுதியிருந்தாலும்,  அந்த விதியையும் எழுத்தாளர் கலைஞர்  மாற்றிவிட்டார்!  கலைஞர் வாழ்வில் கடைசிவரை சென்று அவருடன் அடக்கமாகியிருக்கிறது அவரது முதல் குழந்தை முரசொலியின்  பிரதி! அவரது இறுதிப்பயணத்தில் முரசொலியின் ஒரு பிரதியும் அவருடனேயே அருகில் அமர்ந்திருந்தது.
  கலைஞர் தமிழ் எழுத்துலகிலும் நாடகம் , சினிமாவிலும் பலருக்கும் ஆதர்சம். அவரது  அரசியல் பற்றி அக்கப்போர் நடத்தும் கற்றுக்குட்டிகள் அவரிடம் கற்கவேண்டிய பாடங்கள் அநேகம்!
எழுத்துலகின் சார்பில்,  அயராத அந்த எழுத்தூழியக்கலைஞனுக்கு எமது அஞ்சலி.
letchumananm@gmail.com
---0---


-->

1 comment:

agni said...

விஷ புல்லுருவி போல ஆந்திராவிலுருந்து ட்ரெயின் டிக்கெட்டுக்கு வழியில்லாமல் தமிழ் நாட்டுக்கு வந்து தன கேவலமான குடும்பத்தால் தமிழ் நாட்டை சூறையாடிய கட்டுமரம் செத்தாலும் தன குடும்பத்தால் இன்னமும் தமிழ் நாட்டை நாசம் செய்து கொண்டிருக்கிறது