நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 02 அரசமரத்தின் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் சதி - ரஸஞானிமக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த சந்திரோதயம் படத்தில்  

"புத்தன், யேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?
தோழா ஏழை நமக்காக!
கங்கை, யமுனை, காவிரி , வைகை ஓடுவதெதற்காக?
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக! "

 என்ற பாடல் வருகிறது.

இந்தப்பாடலை கவிஞர் வாலி இயற்றியிருப்பார். டி.எம். சௌந்தரராஜன் பின்னணிக்குரல் கொடுத்திருப்பார்.


இலங்கைக்கு முதலில் புத்தரும் பின்னர் காந்தியும் வந்திருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். இலங்கையில் கண்டியில் பிறந்தவர்.
இலங்கையில் ஓடும் கங்கைகளும் நாளும் உழைத்து தாகம் எடுத்த மக்களுக்காகத்தான்.

கங்கைக்கரைகளில் விவசாயம் நடக்கிறது. வர்த்தக பொருளாதாரத்திற்கும் இந்த கங்கைகள் உதவுகின்றன. மக்களின் குடிநீரும் கங்கைகளிலிருந்தே பெறப்படுகிறது.
தமிழகத்திலும் கர்நாடகாவிலும் காவிரி நதி அரசியலாகியிருக்கிறது. இலங்கையில் நதிகளினால் இதுவரையில் பிரச்சினை இல்லை. அவை வற்றாத ஜீவநதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

தலைநகரத்தை ஊடறுத்துச்செல்லும் களனி கங்கையின் பின்னணியில்  அரசியல் மாற்றங்கள், அதிர்வுகள் நிகழ்ந்துள்ளன.

கௌதம புத்தர் இலங்கை வந்த சமயத்தில் அவர் நீராடிய களனிகங்கையின் அருகில்தான் களனி ரஜமகா விஹாரை அமைக்கப்பட்டது. இங்கும் அரசமரம் இருக்கிறது. இவ்விடத்தில்தான்  இந்தியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் அஸ்தி 18-02-1948 ஆம் திகதி கலசங்களில் எடுத்துவரப்பட்டு களனி கங்கையில் கரைக்கப்பட்டது.

இவ்வாறு புனிதம் பெற்றிருந்த களனி கங்கையில்தான் 1971 ஆம் ஆண்டும் அதன்பின்னர் 1989 ஆம் ஆண்டும் சிங்கள இளைஞர்கள், யுவதிகளின் பிரதேங்களும் மிதந்தன.

அன்பையும் அஹிம்சையையும் போதித்த இரண்டு புனிதர்கள் சம்பந்தப்பட்டுள்ள இந்த களனியிலிருந்துதான் அரசியல் சதிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. இங்கிருந்துதான், இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக உருவாக்கப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து, ஜே.ஆர். ஜெயவர்தனா கண்டி தலதா மாளிகை நோக்கி பாத யாத்திரையை ஆரம்பித்தார்.

இந்தக்களனி ரஜமகா விஹாரையின் பிரதம குரு மாபிட்டி கம
புத்தரகித்த தேரோ ( 1921-1967) தலைமையில் தல்துவே சோமராம தேரோ (1915-1962) திருமதி விமலா விஜயவர்தனா என்ற  சுகாதர நலத்துறை அமைச்சர் உள்ளிட்ட எட்டுப்பேர் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவை கொலைசெய்ய சதித்திட்டம் உருவாக்கி செயல்படுத்தினர்.


களனி ரஜமஹாவிகாரையின் நலன்கள் முன்னேற்றங்களில் பெரும் பங்களிப்புச்செய்தவர்கள்தான் விமலா விஜயவர்தனாவின் தாயாரும் சகோதரர்களும். அதனால் விமலாவுக்கும் விஹாரையின் பிரதம குருவுடன் அந்நியோன்னிய நெருக்கமும் நீடித்தது.

அவர்களின் திட்டத்தின் பிரகாரம் பண்டாரநாயக்கா, 1959 செப்டெம்பர் 25 ஆம் திகதியன்று அவரது ரோஸ்மீட் பிளேஸ் வாசஸ்தலத்தில் சுடப்பட்டு மறுநாள் இறந்தார்.
 25 ஆம் திகதி அவர் ஐ.நா. சபைக்கூட்டத்தொடருக்கு பயணமாகவிருந்த தருணத்தில்தான் இந்த துன்பியல் சம்பவம் நடந்தது.

உலகநாடுகளில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்காகவும் அமைக்கப்பட்டதுதான் ஐக்கியநாடுகள் சபை.

அதற்குப்புறப்படவிருந்த வேளையில்-  அமைதியையும் சமாதானத்தையும் அன்பு மார்க்கத்தையும் போதிக்க அவதரித்த புத்தரின்  புனித பாதம் பதிந்த, அவர் நீராடிய களனி கங்கைக்கரையிலிருந்து, அண்ணல் காந்தியின் புனித அஸ்தி கரைக்கப்பட்ட இடத்திலிருந்து தொடங்கிய அரசியல் சதி இன்றும் வேறு வேறு ரூபங்களில் தொடருகின்றது.

வரலாற்றில்தான் எத்தனை முரண் நகைகள் நிரம்பியிருக்கின்றன!

விமலா விஜயவர்தனா அன்றைய தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு, யூ. என்.பி. சார்பில் போட்டியிட்ட ஜே.ஆர். ஜெயவர்தனாவை ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  தோற்கடித்து வென்று நாடாளுமன்றம் சென்றதும் இந்த களனி தொகுதியில்தான்.

பண்டாரநாயக்கா கொலைச்சம்பவத்துடன் அரசியல் அரங்கிலிருந்து விமலா விஜயவர்தனா ஒதுங்கியமையால், அதன் பின்னர் நடந்த தேர்தலில் இதே  களனி தொகுதியிலிருந்துதான் ஜே.ஆர். வெற்றி பெற்றார்.

இதே களனி தொகுதியில் இருந்துதான் பின்னாட்களில் சிறில்மத்தியூ என்ற சிங்கள கடும்போக்காளரும் வெற்றிபெற்றார்.
இவர் 1977இலும் அதன் பின்னர் நடந்த தேர்தலிலும் யூ.என். பி. சார்பில் வெற்றிபெற்று ஜே.ஆரின் அமைச்சரவையிலும் அங்கம் வகித்தார். இவரால் ஜே.ஆர். பல அரசியல் தொல்லைகளுக்கு ஆளாகியிருந்தார். இந்தியாவின் நெருக்குதலினால், சிறில் மத்தியூவின் அமைச்சர் பதவியையும் ஜே.ஆர். பறித்தார்.

1981 யாழ். பொது நூலக எரிப்பு, 1983 இனக்கலவரம் ஆகியவற்றின் சூத்திரதாரிகளில் ஒருவர்தான் இந்த சிறில் மத்தியூ!
களனியும் களனி கங்கையும் இலங்கை அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை வரலாற்று ஏடுகள் பதிவுசெய்துள்ளன.

எனினும், இந்த அமளிகள் எதனையும் கண்டுகொள்ளாமல் முகத்துவாரத்தை நோக்கி களனி கங்கை அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

களனியிலிருந்து கண்டி நோக்கிச்செல்லும் பதையில் நிட்டம்புவ என்னுமிடத்திற்கு அருகில் ஹொரகொல்லையில் அமரர் பண்டாரநாயக்காவின் நினைவுத்தூபி அமைந்துள்ளது.  அவரது ஞாபகார்த்தமாக தலைநகரின் கறுவாக்காடு என்னும் பிரதேசத்தில் சீன அரசினால் அமைத்துத்தரப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டு மண்டபமும், அவரது வாழ்வையும் பணிகளையும் மறைவையும் காட்சிப்படுத்தும் ஆவணக்காப்பகமும் அமைந்துள்ளன.

காலிமுகத்தில் அமைந்திருக்கும் பழைய நாடாளுமன்ற முன்றலில் ஒரு சிலையும், காலி முகத்திடலில் ருஷ்யாவின் சிற்பி லெவ் கேர்பில் என்றவர் வடிவமைத்த மற்றும் ஒரு வெண்கலச்சிலையும் பண்டாரநாயக்காவை நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன.

பண்டாரநாயக்கா மீது  இனரீதியாக கடும்போக்காளர் என்ற விமர்சனம் இருந்தபோதிலும், அவர் உண்மையிலேயே அவ்வாறில்லை. அவர் இங்கிலாந்தில் படித்து பரீஸ்டர் பட்டம் பெற்றவர். அவருக்கு சிங்கள மொழி அதிகம் பரிச்சியம் இல்லை. இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கா, அதன்பின்னர் பிரதமர்களாக வந்த சேர் ஜோன். கொத்தலாவல, டட்லி சேனா நாயக்கா ஆகியோர் அந்நிய பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நலன்விரும்பிகளாகவே இருந்தவர்கள்.

ஆனால், பண்டாரநாயக்கா தேசிய உணர்வுடன் தேசிய பொருளாதாரக் கொள்கைச்சிந்தனையுடன் வாழ்ந்தவர்.  வெள்ளைத் தேசிய உடை அணிந்தவர். தந்தை செல்வநாயகத்துடன் அவர் செய்துகொண்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால் இலங்கையில் இத்தனை அழிவுகள் தோன்றியிருக்காது.

பண்டாரநாயக்காவை சுற்றியிருந்தவர்களினால் சூழ்நிலையின் கைதியாகி இறுதியில் உயிரையும் விட்டார்.
அவரது சிந்தனையின் வழியில் வந்த அவரது துணைவியார் ஶ்ரீமாவோ, அவரைப்போன்று அதிகம் படித்து பட்டங்கள் பெற்றவர் அல்ல. ரோஸ்மீட் பிளேஸ் வாசஸ்தலத்தின் சமையலறையிலிருந்து கணவருக்குப்பின்னர் நேரடியாக அரசியலுக்கு வந்து உலகின் முதல் பெண்பிரதமர் என்ற பெருமையும் பெற்றதுடன் சிறிது காலம் அணிசேரா நாடுகளின் தலைவியாகவும் விளங்கினார். இவரது காலத்தில்தான், 1972 இல் இலங்கை பிரித்தானியாவின் ஆளுகையிலிருந்து முற்றாக விடுபட்டு, ஜனநாயக சோசலிஸ குடியரசாக மாறியது.

அவர் முதல் முதலில் நாடாளுமன்றம் செல்லும் வேளையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்தறிச்சேலையையே அணிந்து செல்ல விரும்பினார். அதன் வடிவத்தை வரைந்துகொடுத்தவர் ஒரு யாழ்ப்பாணத் தமிழர்தான் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்!
அவர்தான் ஓவியர் கே.ரீ. செல்வத்துரை. யாழ்ப்பாணம் உரும்பராயைச்சேர்ந்த அவர் அவுஸ்திரேலியா மெல்பனில் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்தார்.

( நன்றி: இலங்கை "அரங்கம்')


-->

No comments: