ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதன் உரிமையில் வெற்றி கொண்டாட பலர் முன்வருவார்கள். படத்தின் நாயகனால் தான் படம் வெற்றி பெற்றது என்பார்கள், கதாநாயகியாக நடித்த நடிகைதான் காரணம் என்பார்கள் , பாடல்களினால்தான் , கததையினால்தான் படம் வெற்றி பெற்றது என்று அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுவார்கள் . ஆனால் படம் தோல்வி அடைந்தாலோ எவரும் அதற்கான காரணத்தில் பழி ஏற்க முன்வர மாட்டார்கள். படத்தின் தோல்வியின் முழுப் பழியும் படத்தின் இயக்குனரையே அந்த நேரத்தில் போய்ச்சேரும்.
நடிகர் நடிக்கிறார், பாடகர் பாடுகிறார் இசை அமைப்பாளர் இசை அமைக்கிறார் , வசன கர்த்தா வசனம் எழுதி சொல்லித்தருகிறார் அப்படி என்றால் படத்தின் இயக்குனருக்கு என்ன தான் வேலை என்று எண்ணுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் ஒரு Head cook போல அதாவது தலைமைச் சமைல் காரர் போல.
எங்கே புளியைக் கலக்கவேண்டும் , எங்கே காரத்தைக் கூட்ட வேண்டும் , எவ்வளவு உப்பைச் சேர்க்கவேண்டும் என்பதெல்லாம் அவரின் கைப் பக்குவம். ஆனால் உணவு சுவையற்றுப் போனாலோ முழுப்பொறுப்பும் தலைமைச் சமைல் காரரின் தலையில் தான் விடியும்.
அதேபோல் யார் எந்த கதா பாத்திரத்தில் நடிப்பது என்ன வசனத்தை எந்த விதத்தில் பேசுவது, எங்கெல்லாம் பாடல்களை , நயனங்களை, சண்டைக் காட்சிகளை வைப்பது, எந்த அளவிற்கு நகைச்சுவைக் காட்சிகளை பயன்படுத்துவது, எங்கு சென்று படமாக்குவது, என்பதெல்லாம் இயக்குனரின் தீர்மானம். படம் வெற்றி பெற்றால் எல்லோருடனும் சேர்த்து இயக்குனருக்கும் பாராட்டு கிடைக்கும், ஆனால் படம் தோல்வி கண்டாலோ முளுத்தண்டனையும் இயக்குனரின் தலையில் தான் முடியும்.
நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெற்றிபெறும் போது வெற்றியின் பரிசு நடிகர்களுக்கே போகிறது . அதையும் மீறி அந்த வெற்றிக்குக் காரணம் தான்தான் என்று அழுத்தமாக சொல்லும் இயக்குனர்களை விரல் விட்டு என்னலாம் .
தமிழ்த் திரை உலகில் அவ்வாறு கோலோச்சியவர்களில் ஸ்ரீதர் , கே.பாலசந்தர், மணிரத்தினம் , பாரதிராஜா , சங்கர் என்று சிலரைக் குறிப்பிடலாம். இவர்களின் படங்களில் யார் நடித்திருந்தாலும் அது இயக்குனரின் படம் என்றே முத்திரை குத்தப்படும்.
அதேபோல் இலங்கையில் சிங்கள திரை உலகிலும் ஒரு இயக்குனர் தனது படம் தான் இது என்று முத்திரை பதித்தார். படத்திற்கு படம் அதனை உறுதியும் செய்தார்.
"வெனிங் கவுருத் நெமே லெனின் மொறாயஸ்" வேறு யாருமல்ல லெனின் மொறாயஸ் என்று வெளிப்படுத்தி தனது படங்களையெல்லாம் வெற்றிப் படங்களாக்கிய அவர் வேறு யாருமல்ல லெனின் மொறாயஸ்.
18 ம் திகதி ஆகஸ்ட் மாதம் 1937ம் ஆண்டு கொழும்பில் லெனின் மொறாயஸ் பிறந்தார். இவர்களது பெற்றோர்கள் தமிழகத்தின் தூத்துக் குடியை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் ஆவர்.
தமிழ் மகனாகப் பிறந்து சிங்கள திரையுலகில் நுழைந்து சகல கலா வல்லவனாக திகழ்ந்த லெனின் மொறாயஸ் பற்றி இன்றும் சிங்கள பத்திரிக்கைகள் எழுதுகின்றன. அவருடைய ஆளுமையைப் புகழ்கின்றன.
கொழும்பில் வர்த்தக பிரமுகராக திகழ்ந்தவர் சார்ல்ஸ் மொறாயஸ். அவருடைய மனைவி ரோசரி , இவர்களுக்கு மூத்த மகனாக பிறந்தார் லெனின். வர்த்தகத்தில் ஈடுபட்ட போதிலும் தீவிர இடதுசாரிக் கொள்கைகளில் நம்பிக்கையும் பற்றும் வைத்திருந்தவர் சார்ல்ஸ் மொறாயஸ். இதன் காரணமாக தமது மூத்த தமிழ் மகனுக்கு ரஸ்சிய புரட்ட்சித் தலைவரான லெனினின் பெயரையே சூட்டி பெருமைப் பட்டார்கள் சார்ல்ஸ் மொறாயஸ், ரோசரி தம்பதியினர்.
எந்த நோக்கத்தில் அவர்கள் லெனின் என்று பெயர் வைத்தார்களோ, ஒரு துணிச்சல் காரராக, தீவிரத் தன்மை கொண்டவராக, பிடிவாதக் காரராகவே பிற்காலத்தில் லெனின் மொறாயஸ் உருவெடுத்தார்.
லெனினுக்கு ஞானஸ்தானம் செய்வதற்கு மொறாயஸ் தம்பதிகள் தீர்மானித்தபோது கொட்டான்சேனை புனித லூசியஸ் தேவாலயத்தில் இதனை நிறைவேற்றுவதற்கு அவர்கள் விரும்பினார்கள் .
ஆனால் தேவாலயம் ஆரம்பத்திலேயே
அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
ரஷ்யாவில் புரட்சிகரமான போராட்டத்தில்
ஈடுபட்டு வந்த லெனினின் பெயரை சூட்டியதால் கிறிஸ்துவ
நம்பிக்கைகளுக்கு ஏற்றதாக இது
இருக்காது என்று ஞானஸ்தானத்திற்கு
மறுத்து விட்டது. மொறயஸ்
தம்பதிகளுக்கோ அதிர்ச்சி. பின்னர் அவருடைய
பெயருடன் ஆன்டனியையும் சேர்த்து
லெனின் ஆன்டனி மொறயஸ் என்ற பெயரில்
ஞானஸ்தானம் செய்யப்பட்டது.

இந்தக் காட்சியை இப்படி
எடுத்துள்ளார்கள், இதனை இப்படி
எடுத்திருக்கலாம் என்றெல்லாம் தன் எண்ணங்களை நண்பர்களுடன் பகுந்து கொள்வார்
லெனின். இவற்றிற்கு
மத்தியில் ஒரு வழியாக லெனினின் கல்லூரிப் படிப்பு
முடிவுக்கு வந்தது.
படிப்புக்கு ஒரு முடிவு
வந்ததும் நடிப்புத் தொடர்பான
கலையில் முழுமையாக ஈடுபட
வேண்டும் என்ற ஆர்வம் லெனினுக்கு தீவிரமாக ஏற்பட்டது.
எப்படியாவது சென்னைக்கு சென்று திரையுலக
அறிவை ஆற்றலை வளர்த்துக்கொள்ள
வேண்டும் என்று துடித்தார்
லெனின். அதற்கு வழிகாட்டுவதற்கென்றே
முன் வந்தார் லெனினின்
தாய் மாமான் அண்டனி பெர்ணாண்டோ. தாயாரின் தம்பியான
இவரின் துணையுடன் சென்னைக்கு
பயணமானார் லெனின்.
சென்னை அன்றைய திரையுலகின்
சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது. தமிழ் மட்டுமன்றி
தெலுங்கு மலையாளம் கன்னடம்
இந்தி ஏன் சில சிங்களப் படங்கள் கூட
அங்கு இடைவிடாமல் உருவாகிக்
கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கானவர்கள் வாய்ப்பு தேடி
தினசரி சென்னைக்கு வருவதும்
அதில் பெரும்பாலானோர் வெறும்
திண்ணை வாசிகளாக காலம்
தள்ளி விட்டு மீண்டும்
சொந்த ஊருக்குத் திரும்புவதும்
வேதனை கலந்த வாழ்க்கையாகவே
இருந்தது.
இத்தகைய சடுகுடு போட்டி
நிறைந்த உலகில் நுழைய லெனின் துணிந்தார்.
ஆனால் எங்கே எவர் மூலம்
நுழைவது. இதற்கும்
தாய் மாமானாரே துணையானார்.
மாமா அண்டனி பெர்ணாண்டோவின்
மனைவியின் தம்பி ஸ்டான்லி
அன்றைய பிரபல இயக்குனர்
ஏ. பீம்சிங்
அவர்களின் படக்குழுவில் இணைந்து
உதவி படத் தொகுப்பாளாராக
பணியாற்றிக் கொண்டிருந்தார்.
லேனினின் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் சமய
சஞ்சீவியாக வந்த வாய்த்தார்
ஸ்டான்லி. அவர் லெனினை சமய சஞ்சீவி
படப்பிடிப்பில் இணைத்துவிட்டார். பின் நாட்களில்
பிரபல ஒளிப் பதிவாளாராகத்
திகழ்ந்த பி. என். சுந்தரம் தான்
சமய சஞ்சீவி
படத்தின் ஒளிப்பதிவாளார். அவரிடம்
ஒளிப்பதிவு நுட்பங்களை தெரிந்து
கொள்ளத் தொடங்கினார் லெனின்.


1956ஆம் ஆண்டில் ரேவதி
ஸ்டுடியோவில் உருவான சமய
சஞ்சீவி படத்தில் நகைச்சுவை
பாத்திரத்தில் ஏற்றிருந்தவர் ஜே. பி. சந்திரபாபு. அவருக்கு அந்தப்
படத்தில் ஒரு பாடல். அந்தப் பாடலும்
ஒரு புதுமையான
பாடல். பேப்பர் இது பேப்பர் ஹிந்து
தினமணி எக்ஸ்பிரஸ் விடுதலை
என்று அந்தக் காலத்தில்
வெளிவந்த அனைத்து பத்திரிகைகளின்
பெயர்களையும் குறிக்கும் பாடலை சந்திரபாபு
பாடி நடிக்க சுந்தரத்துடன்
சேர்ந்து ஒளிப்பதிவு செய்தார்
லெனின். அத்துடன் மேக்கப்
கலையிலும் பயிற்சி பெற்றார். லெனின்
தொடர்ந்து சென்னiயில் தங்கி ஒளிப்பதிவு
துறையில் பயிற்சி பெறவே விரும்பினார். ஆனால் விசா வடிவில் விதி
விளையாடியது. விசாவை தொடர்ந்து
புதுப்பிக்க முடியாது என்று
இந்திய தூதரகம் கையை விரிக்கவே
மீண்டும் இலங்கைக்கு வந்து
சேர்ந்தார் லெனின்.
சென்னையில் கிடைத்த
பயிற்சியை இடைநிறுத்த லெனின்
தயாரில்லை. ஆகவே கொழும்பிலுள்ள
சிலோன் ஸ்டுடியோவில் சென்று
சேர அவர்
முயற்சி செய்தார். ஆனால்
அவரால் அதை செய்யமுடியவில்லை. எனவே
லெனினின் கவனம் மேடை நாடகங்களில் மீது திரும்பியது.
தொடரும்………
No comments:
Post a Comment