அவலக்குரல் கேட்கலையா ! - ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )image1.JPG        பொருள்தேடும் நோக்கத்தில்  புதைகுழிகள் தோண்டுகிறார்
               வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார்
        இரைதேடும் விலங்குகள்போல் இரக்கமதை அழிக்கின்றார்
                   அளவின்றி ஆசைப்பட்டு அனைத்தையுமே அள்ளுகிறார் !

        ஆட்சியிலே அமர்ந்திருப்பார்  அறந்தொலைத்து நிற்கின்றார்
               அதிகாரம் இருப்பதனால் அலட்சியமாய் நடக்கின்றார்
        காவல்செய்யும் துறையினரும் கடமையினை மறக்கின்றார்
               காலந்தோறும்  மக்களெலாம் கவலையிலே உழலுகின்றார் !

        பொதுநோக்கம் எனும்நோக்கை பொசுக்கியே விடுகின்றார்
               பூமியின் வளமனைத்தும் காசாக்க விளைகின்றார்
        மேடையேறி வாய்கிழிய விதம்விதமாய் பேசுகிறார்
                பாதகத்தை மனம்முழுக்க பதுக்கியே வைக்கின்றார்  !

             சாதிகூறிச் சாதிகூறி தமக்குலாபம் தேடுகிறார்
                     சமயத்தை பலமாக்கி தன்பக்கம் ஆக்குகின்றார்
            நீதிகூட   நடக்காமல் கொடுக்கின்றார் பணத்தையெல்லாம்
                    நிம்மதியை அவர்பெற்று நிம்மதியை அழிக்கின்றார் !


           சாமியினை நம்பிநின்று சனங்களெல்லாம் அழுகின்றார் 
                 சாமிவரம் கொடுப்பதிலே தாமதமே ஆகிறது 
           ஆர்வந்து காத்திடுவார் என்றுமக்கள் நோக்குகிறார்
                  ஆண்டவனே மக்களது அவலக்குரல் கேட்கலையா ! 


    

   
 


 
No comments: