உலகச் செய்திகள்


ஸ்ரீதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை

மீண்டும் துப்பாக்கி சூடு : இளம் இளைஞன் பலி : கலவர பூமியாகும் தூத்துக்குடி!!!

ஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள்

வடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி

ஈவிரக்கமற்ற அரசபயங்கரவாதம்

கிங்ஸ்டன் நகர மேயராக இலங்கை தமிழர்


ஸ்ரீதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

24/05/2018 மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

இந்திய சினிமாவில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி  டுபாயில் மரணமடைந்தார். இச் சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. 
ஸ்ரீதேவி மறைவுக்குப் பின்னர் அவரின் திறமைக்காக பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ‘மாம்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவர் மறைந்ததன் பின்னரே வழங்கப்பட்டது. 
இந்நிலையில், பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரியான ரீனா மார்வா விருதினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை

23/05/2018 ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது அலகு விரிவாக்க பணிகளுக்க அனுமதி பெற்றதை2 எதிர்த்தும், அனுமதி பெற்ற இடத்தில் தொடங்காமல் வேறு இடத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று கூறியும் பேராசிரியர் பாத்திமா பாபு  உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை இன்று உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறது. இதில்‘ ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணிகளை உடனடியாக நிறுத்தவேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நான்கு மாதங்களுக்குள் நடத்திட வேண்டும். மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவும் நீதவான் உத்தரவிட்டு வழக்கு ஜுன் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
இதனிடையே நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து பொலிஸார் அளித்த விளக்கத்தில்,
‘ போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் வேறு வழியின்றி துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. தகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. என்று தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன் பொது அமைதியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் பொலீஸார் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்." என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


மீண்டும் துப்பாக்கி சூடு : இளம் இளைஞன் பலி : கலவர பூமியாகும் தூத்துக்குடி!!!

23/05/2018 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் மீது பொலிஸார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
துப்பாக்கி சூட்டு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலிஸார் தடியடி நடத்தி கலைத்ததையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டததையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
இந் நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது.  போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் முயன்ற போது  வாக்குவாதம் முற்றிய நிலையில் பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். பொலிஸாரும் தடியடி நடத்தினர். 
ஒரு கட்டத்தில் பொலிஸார்  துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் 22 வயதான காளியப்பன் என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி 

ஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள்

23/05/2018 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள் அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலை அதிபரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின் போது வெடித்தகாரணமாக  பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 பொலிஸார் உட்பட 75க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. போராட்டங்களும் நடைபெறுகின்றன.
இந் நிலையில் லண்டனில் வசிக்கும் தமிழர்களும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குனர் அணில் அகர்வாலுக்கு லண்டனிலும் வீடு உள்ளது.
அந்த வீட்டை முற்றுகையிட்ட லண்டன் வாழ் தமிழர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோஷங்களை எழுப்பினர். துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். லண்டன் நகரில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  நன்றி வீரகேசரி 
வடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி

23/05/2018 வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுடன் தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை பரிசோதனை செய்து வந்தது.  இதற்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜேவும்  தென்கொரிய பகுதியில் அமைந்துள்ள பன்முஞ்சோமில் ஏப்ரல் மாதத்தில்  நடந்த உச்சிமாநாட்டில் சந்தித்துப்பேசினர்.
அதை தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிட்ட கிம் ஜாங் உன்னும், மூன் ஜேவும்  கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றவும், கொரியப்போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வருவதற்காக பணியாற்றவும் உறுதி கொண்டிருப்பதாக அறிவித்தனர்.
இந் நிலையில் வட கொரியாவின் புங்யே-ரி அணு ஆயுத பரிசோதனை தளம் பருவநிலைக்கு ஏற்ப வெள்ளி கிழமைக்குள் அழிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக  செய்தி சேகரிப்பதற்காக வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அவர்களுடன் தென்கொரிய பத்திரிகையாளர்கள் கலந்து கொள்வதற்கு முதலில் வடகொரியா அனுமதி வழங்கவில்லை.
அமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவ கூட்டு பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சியோல் உடனான உயர்மட்ட அளவிலான தொடர்பையும் வடகொரியா துண்டித்தது.
இந்நிலையில் தென்கொரியாவின் 8 பத்திரிகையாளர்கள் கொண்ட பட்டியலுக்கு வடகொரியா அனுமதி வழங்கி உள்ளது என சியோல் ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 
ஈவிரக்கமற்ற அரசபயங்கரவாதம்

23/05/2018 தமிழ்நாட்டின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதனை ஈவிரக்கமற்ற அரச பயங்கரவாதத்திற்கான உதாரணம்  என வர்ணித்துள்ளார்.
அநீதிக்கு எதிராக போராடிய மக்களே தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை ஈவிரக்கமற்ற அரச பயங்கரவாதத்திற்கான உதாரணமாகும், அந்த மக்கள் அநீதிக்கு எதிராக போராடியதற்காக சுட்டுக்கொல்லப்பட்டனர்  என ராகுல்காந்தி தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 

கிங்ஸ்டன் நகர மேயராக இலங்கை தமிழர்

25/05/2018 லண்டனின் கிங்ஸ்டன் நகரின் மேயராக இலங்கையைச் சேர்ந்த தமிழரான வைத்தீஸ்வரன் தயாளன் நேற்று பதவியேற்றார்.
ரொல்வத் வட்டாரத்தில் கடந்த 03 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்ட இவர் பெருமளவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியிள்ளார்.
இந் நிலையில் கிங்ஸ்ரன் நகரத்தின் 183 ஆவது மேயராக வைத்தீஸ்வரன் தயாளன் பதவியேற்றார். 
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை சேர்ந்த இவர், கடந்த 40 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வசித்து வருகின்றார். மேலும் இவர் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 
No comments: