இலங்கைச் செய்திகள்


வலுவான பேரிடர் தயார் நிலை இலங்கைக்கு அவசியம்

சீரற்ற காலநிலையால் 13 பேர் பலி; 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மடு திருத்தலத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்

மூவருடன் வந்து இருவருடன் செல்கிறேன்; இளஞ்செழியன்

அச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி



வலுவான பேரிடர் தயார் நிலை இலங்கைக்கு அவசியம்

23/05/2018 இலங்கையின் இயற்கை அனர்த்த தயார் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவ அவுஸ்திரேலியாவும் ஐ.நா. அமைப்புகளும் முன்வந்துள்ளன.

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளும் விடயத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கமும் யுனிசெவ் மற்றும் உலகஉணவு திட்டமும்  ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
இதனடிப்படையில் அவுஸ்திரேலிய அரசாங்கமும் ஐ.நா. அமைப்புகளும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையின் திறனை  வலுப்படுத்துவதற்கான மூன்று வருட திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளன.
இந்த திட்டத்திற்கு  750,000 அவுஸ்திரேலிய டொலர்களை செலவிடுவதற்கு அவுஸ்திரேலியாவும் ஐ.நா. அமைப்புகளும் இணங்கியுள்ளன.
2004 ஆண்டு சுனாமி இலங்கையை தாக்கியதிலிருந்து அவுஸ்திரேலியா இலங்கையின் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் அவசரநிலை நடவடிக்கைகளிற்காக உதவி வருகின்றது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு பிரிவின் தலைவர் விக்டோரியா கோக்லே தெரிவித்துள்ளார்.
இலங்கை இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காகவும்,துரித நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்வதற்காகவும் ஐ.நா.வின் இரு அமைப்புகளுடன் இணைந்து திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, மட்டக்களப்பு, இரத்தினபுரி, காலி உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும்  மாவட்டங்களை இலக்குவைத்தே இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர நிலையை எதிர்கொள்வதற்கு தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்வதிலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூடிய திறனை வலுப்படுத்துவதிலும் முதலீடு செய்யவேண்டியது அவசியம் என உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான பிரதி இயக்குநர் நகுயென் டக் ஹோங் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களின் போது 25000 பேரிற்கு இந்த திட்டத்தின் கீழ்  யுனிசெவ்வும் உலக உணவு திட்டமும் உதவிகளை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் முதியவர்களே இந்த திட்டத்தின் முக்கிய இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் யுனிசெவ் ஆற்றும் பணிகளில் சிறுவர்களிற்கே மிக முக்கிய இடத்தை வழங்குகின்றோம் என அந்த அமைப்பின் பிரதிநிதி டிம் சட்டன் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி 









சீரற்ற காலநிலையால் 13 பேர் பலி; 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

23/05/2018 அடை மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களுள் 18542 குடும்பங்களைச் சேர்ந்த 84943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். 
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அம் மாவட்டங்களிலுள்ள மக்களின்  இயல்பு வாழ்க்கையும்  பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த  காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையும்  இன்று நண்பகல் வரை 13 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை அனர்த்தம் காரணமாக  18542 குடும்பங்களைச் சேர்ந்த 84943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் வெள்ளம், மண் சரிவு அபாயம் காரணமாக 7526 குடும்பங்களைச் சேர்ந்த 27621 பேரை 194 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கான  வைத்திய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந் நிலையில் அனர்த்தம் காரணமாக  இதுவரை 29 வீடுகள் முற்றாகவும் 2527 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.  
அத்துடன் நில்வளா, கிங், களு, களனி, மகாவலி, ஆகிய கங்கைகளும், அத்தனகல்ல ஓயா, மா ஓயா, கட்டுபிட்டி ஓயா, ரத்தஒலா ஓயா, கலா ஓயா, தெதுரு ஓயா ஆகியனவும் பெருக்கெடுத்துள்ளதனால் குறித்த ஆறுகளுக்கு அருகில் உள்ளோர் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
மேலும் பல நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் தொடர்ச்சியாக உயர்வடைந்து வரும் நிலையில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்துவரும் நாட்க்களுக்கும் மழை நீடிக்குமானால் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ச்சியாக திறக்கப்படலாம்.
எனவே அனர்த்த வலயங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மறு அறிவித்தல் வரும் வரை அப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றார்.  நன்றி வீரகேசரி 









மடு திருத்தலத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்

24/05/2018 இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மடு திருத்தலப் பகுதியில்  யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் இடம் பெற்றது.
.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குறித்த உயர் மட்ட கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன்போது மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளைகிறிஸ்தவ மத விவகார அமைச்சின் பணிப்பாளர் எம்.குணவர்தனசுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர்இந்திய துணைத்தூதரகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் டி.சி.மஞ்சுநாத்மடு பிரதேசச் செயலாளர் வி.ஜெயகரன்மன்னார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எல்.ஜே.றொசன் குரூஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர்   இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம் பெற்ற குறித்த உயர் மட்ட கலந்துரையாடலின் போது இந்திய அராசங்கம் வழங்கும் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மடு திருத்தளத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு யாத்திரிகர்களுக்கான 300 தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 300 வீடுகள் அமைக்கப்படவுள்ள இடத்தினை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையிலான குறித்த குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
இறுதியாக குறித்த வீட்டு திட்டம் அமைக்கும் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் அடுத்த மாதம் முதலாம் திகதி அடிக்கல் நாட்டி வீட்டுத்திட்டத்தை ஆம்பிப்பதாகவும்அதற்கான துரித நடவடிக்கைகளை உரிய திணைக்களங்கள் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 








மூவருடன் வந்து இருவருடன் செல்கிறேன்; இளஞ்செழியன்

24/05/2018 மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். ஆனால் தற்போது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லும் ஓர் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டு விட்டது என திருகோணமலை மேல்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார்.
முன்னாள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்,
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை மேல் நீதிமன்றிலிருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு வந்தேன். அந்த வகையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்  3 ஆண்டுகள் நான் சேவையாற்றுவதற்கு காரணமாகவிருந்த எமது முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபனுக்கு நன்றியைத் தெரிவித்தக் கொள்கின்றேன்.
அத்துடன் யாழில்  அநியாயங்கள் - அட்டூழியங்கள் அரங்கேறிய போது, தடுத்து நிறுத்தவேண்டிய கடப்பாடு நீதித்துறைக்கு இருந்தது. நீதிமன்றத் தீர்ப்புக்கள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய குற்றங்களையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நான் ஈடுபட்டேன். அதற்கு உதவி புரிந்த அனைவருக்கம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன் என்றார்.  நன்றி வீரகேசரி 








அச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி

25/05/2018 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை நோக்கி அச்சுறுத்தும் விதத்தில் சைகை செய்து சர்ச்சையில் சிக்கிய பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கர  பெர்ணான்டோ குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம்ஸ் குறிப்பிட்ட விவகாரம் குறித்து மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள பிரிட்டனின் ஆசிய விவகாரங்களிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் பொதுநலவாய மாநாட்டின் போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார்.
ஏப்பிரல் 15 ஆம் திகதியுடன் அந்த அதிகாரியின் பணியை இலங்கை அரசாங்கம் முடித்துக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் புதிதாக எவரையும் இலங்கை நியமிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 






No comments: