சவரக்கத்தி – திரை விமர்சனம்


பார்பர் ஷாப் வைத்திருக்கிறார் ராம். அவரது மனைவி பூர்ணா, கர்ப்பிணி பெண்ணான அவருக்கு காது கேட்காது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராமின் கடைக்கு அவசரமாக வரும் பூர்ணா, தனது தம்பியும், அவன் காதலித்த பெண்ணும், பெண்ணின் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்னப் போவதாக கூறுகிறாள். அந்த திருமணத்தை ராம் நடத்திவைக்க வேண்டும் என்று பூர்ணாவின் தம்பி விருப்பப்படுவதாக கூறி அவரை அழைத்துச் செல்கிறார்.

அதேநேரத்தில் ஜெயிலில் இருக்கும் மிஷ்கின் ஒருநாள் பரோலில் வெளியே வருக்கிறார். இருவருக்கும் சாலையில் வைத்து மோதல் ஏற்படுகிறது. அப்போது மிஷ்கின் மீது கோபப்பட்டு பேசுகிறார் ராம். அதேநேரத்தில் பின்னால் வரும் கார் ஒன்று மிஷ்கின் கார் மீது மோதுகிறது.
இந்நிலையில், மிஷ்கின் வாயிலிருந்து ரத்தம் வர, அந்த காரில் இருந்தவர்களில் அனைவரும் கையை ஓங்கிய ராம் தான், மிஷ்கினை அடித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் மிஷ்கினின் மாமா மட்டும் ராம் அடிக்கவில்லை, பின்னால் வந்த கார் மோதியதால் தான் இடித்துக் கொண்டதாக கூறுகிறார்.
ஒருகட்டத்தில் ராம் தான் அடித்துவிட்டார் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறார் மிஷ்கின். இதையடுத்து ராமை தேடிக் கண்டுபிடித்து, ராமின் கையை வெட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக தனது ஆட்களை ஏவிவிடுகிறார். ஒருகட்டத்தில் மிஷ்கினிடம் சிக்கும் ராம் தான் அடிக்கவில்லை என்று கூறுகிறார்.
ராமின் பேச்சை மிஷ்கின் கேட்காததால், மிஷ்கினை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்துவிடுகிறார் ராம். இந்நிலையில், தன்னை தேடி வரும் தனது மனைவி பூர்ணாவை அழைத்துக் கொண்டு அந்த திருமணத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்.
இறுதியில் மிஷ்கின், ராமை வெட்டினாரா? ராம் மிஷ்கினிடம் இருந்து தப்பித்தாரா? அந்த திருமணம் நடந்ததா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ராம், மிஷ்கின், பூர்ணா என அனைவருமே கடுமையாக நடித்திருக்கிறார்கள். ராம் ஒரு சாதாரண மனிதனாக எந்தவித அலட்டலும் இன்றி சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் மிஷ்கின் அவரது வழக்கமான நடிப்புடன், வில்லத்தனத்தை கலந்து கவர்கிறார்.
படத்தில் பூர்ணாவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக பூர்த்தி செய்திருக்கிறார். பல நடிகைகள் வேண்டாம் என்று ஒதுக்கிய கதையில், ஒப்புக்கொண்டு நடித்ததற்காகவே அவருக்கு பாராட்டுக்கள். காது கேட்காத, கர்ப்பிணி பெண்ணாக வித்தியாசமான கதாபாத்திரத்தில், எந்த நடிகையும் ஒப்புக் கொள்ள தயங்கும் கதையில் மனதில் பதியும்படியாக நடித்து அசத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.
சாதாரண மனிதனின் வாழ்க்கையில் திடீரென நடக்கும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாக்கியிருக்கிறார் ஜி.ஆர்.ஆதித்யா. இந்த கதையை ராம், மிஷ்கின், பூர்ணா என அனைவரும் அவர்களது மாறுபட்ட நடிப்பில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். வழக்கமான காமெடி படமாக இல்லாமல், வித்தியாசமான, புதுமையான காமெடி படமாக உருவாக்கி இருக்கும் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவுக்கு பாராட்டுக்கள்.
படத்தில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் எதுவும் இல்லாமல் உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி காமெடி கலந்து விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாவது பாதியில் ஒரு சில இடங்களில் சிறிய சறுக்கல்கள் இருப்பது போல தோன்றுகிறது. இரண்டு பாடல்களையும் சரியான இடத்தில் காட்சிக்கு பங்கம் விளைவிக்காமல் வைத்திருப்பது சிறப்பு. மாறுபட்ட முயற்சி. ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
அரோல் கோரெலியின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.
மொத்தத்தில் `சவரக்கத்தி’ கூர்மை.   நன்றி tamilcinema.newsNo comments: