"சாட்சிகள் சொர்க்கத்தில்" திரைப்பட இசை வெளியீட்டு விழா விமர்சனம்


விதையாக விழுந்து மரமாக முளைப்பான் தமிழன்!  உண்மைதான்!,  கடந்த ஞாயிற்றுக்கிழமை,  25 ஆம் திகதி,  மாசி மாதம்,  அவுஸ்திரேலியாவில், சிட்னியில், யாழ்   மண்டபத்தில், ஈழன் இளங்கோவின்,  "சாட்சிகள் சொர்க்கத்தில் "  திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அன்று  சிட்னியில், காலையில் இருந்தே அடைமழை, இருந்தும், மண்டபம் நிறைந்த மக்கள், ஒவ்வொருவர் முகத்திலும் ஏதோவொரு எதிர்பார்ப்பு, ஏக்கம், அதோடு, ஆனந்தம். அந்த மழையிலும் அதுகவும் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரவருக்கு இருந்த வேலையை ஒதுக்கிவைத்துவிட்டு திரைப்பட இசை விழாவிற்கு  வந்திருந்தனர் என்றால்  அது  திரைப்படத்தின் தலைப்பிற்காகவா?, கதைக்காகவா?, விளம்பரத்தில் வந்திருந்த புகைப்படத்திற்காகவா?  அல்லது இயக்குனர்  ஈழன் இளங்கோவிற்காகவா? எதுவாக இருந்தாலும் வந்தவர்கள் நிறைந்த மனதோடு, வாழ்த்தியதோடு அவர்கள் ஆதரவையும் தெரிவித்தார்கள். படத்தைப்பற்றியும்,  ஈழன் இளங்கோவை பற்றியும் பலர் கூறிய கருத்துக்கள், பலருக்கு இப்படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்க வைத்திருக்கிறது என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
இருதய சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மனமோஹன் அவர்கள் பேசுகையில், இந்தப்படத்தைப்பற்றி முதலில் கேள்விப்பட்ட போது, இந்தப்படத்தையோ அல்லது இந்தப்படம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளையோ எதிர்நோக்கும் மனநிலை தனக்கு இருக்குமோ இல்லையோ என்று குழப்பத்தில் இருந்ததாகவும் பின்னர் ஈழன் இளங்கோ தொடர்புகொண்டு, ஈழத்தில் நடந்த எந்தக்கட்சிகளும் இப்படத்தில் சித்தரிக்கப்படவில்லை என்று கூறியதில் இருந்தும், அப்படி நாம் பயந்து இருந்துவிட முடியாது, இதுபோன்ற படங்கள் எதிர்காலத்தில் ஆவணங்களாக சரித்திரத்தில்  இருக்கப்போகின்றன ஆகையால் நாம் நமது பங்களிப்பையும் ஆதரவையும் தருவது எமது கடமை என்று கூறினார்.


"அன்னைமொழி அன்புவழி"  நிறுவனர்  தமிழ் முனைவர் பச்சைவதி அவர்கள் பேசுகையில், ஒருசிலருக்கும்  அவரவர்  படைப்புகளுக்கும்  சம்மந்தம் இருக்காது , உண்மையில் ஒரு விதமாகவும் அவர்கள் படைப்புகளில் வேறொருவிதமாகவும் வாழ்வார்கள், ஆனால்  ஈழன் இளங்கோவையும் அவர் படைப்புகளையும் பார்த்தால் ஒரேமாதிரியாக இருக்கும் என்று கூறினார்.   சிலர் வாழ்க்கையில் தங்களால் செய்யமுடியாததை படத்தில் போலியாக செய்து தமது தாகத்தை  தீர்த்துக்கொள்வார்கள் அதுபோன்று இல்லாது  தனது மனதை பிரதிபலிக்கும் ஒரு பிம்பமாகவே ஈழன் இளங்கோவின் படைப்புகள் இருக்கும் என்பதுதான் அதன் அர்த்தம் என்று நாம் புரிந்துகொண்டோம்.
சிட்னியில் திரையுலகில் இயக்குனராக  காலடி வைத்திருக்கும் திரு சுரேஷ் அவர்கள்  பேசுகையில், ஈழன் இளங்கோ ஒரு சிறந்த உணர்ச்சிகரமான, பரபரப்பான படைப்பாளி என்றும், இந்தப்படம் ஒரு நிறைவான படமாகத்தான் தனக்கு தெரிகிறதென்றும், வணிகவியல் கலப்பின்றி, மனிதர்களின் உணர்வுகளை, நடந்த நிகழ்வுகளை வாய்மொழியில்,  திரையில் சொல்லமுடியும் என்றால் அதற்கு  இந்தப்படம் ஒரு உதாரணமாக  இருக்கும் என்றார், மற்றும், எப்படி மணிரத்னம் மற்றும் பாலுமகேந்த்ரா அவர்களின் படங்களில் ஒருசில கதாபாத்திரங்களை மட்டுமே  வைத்துக்கொண்டு ஒரு கதையை கூறமுடியுமோ அந்த திறமையை  நிச்சயம் ஈழன் இளங்கோவிடமும்  காணமுடிகிறது  என்று கூறினார்.

இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன் பேசுகையில், அவர் முதல் முதலில் படத்தை பார்த்துவிட்டு அழுததாக  கூறும்போதே மேடையில் அழுத காட்சி அனைவரையும் உருக்கியது. மனமுருகி  "என்ன ஒரு படம் செய்திருக்கிறார் இளங்கோ சார்", இது ஒரு சிறந்த படம், எல்லாரும் பாருங்க என்று உருகி, உருக்கமாக கண்ணீருடன் கூறினார் வர்ஷன்.
"TACA"  தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக்கழகம்  நிறுவனர்  திரு அனகன்பாபு அவர்கள்  பேசுகையில் உதவி என்றால் ஓடிவந்து செய்பவர் ஈழன் இளங்கோ என்றும், அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்றும் கூறினார். மற்றும் இன்பத்தமிழொலி  திரு. பாலசிங்கம் பிரபாகரன், திரு. நடராஜா, திரு. கருணாகரன் நடராஜா, திரு. பென்ஜமின் சூசை, திரு. இளந்திரையன் ஆறுமுகம்,  திரு. வசந்தராஜா, கலாநிதி கௌரிபாலன், திருமதி. காந்திமதி தினகரன், வைத்திய கலாநிதி கேதீஸ் ஆகியோர் ஈழன் இளங்கோவை வாழ்த்தியும் திரைப்படத்திற்கு  வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்கள்.
ஈழன் இளங்கோ பேசுகையில், கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு மேலாக திரைப்பட துறையில்  ஈழத்தமிழர் என்னென்ன இன்னல்களை எல்லாம் சந்தித்தார்களோ, நீண்ட இடைவேளையின் பின்னர் இன்றும் அதே இன்னல்களைத்தான் அனுபவிக்கிறோம், அதற்கு காரணம் தெளிவின்மை மற்றும் வரலாறு அறியாமை என்று கூறினார். நமது துறையை வளர்க்கவேண்டுமானால் படைப்பாளிகள்தான் முதலில் திருந்தவேண்டும், ரசிகர்களோ, தயாரிப்பாளர்களோ, விநியோகஸ்தரர்களோ அல்ல. குறைந்த செலவில் நிறைந்த படம் எடுக்குமளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது, சிந்தையில் வருவதை திரையில் காட்ட மட்டும் தான் தொழில்நுட்பம், மிகைப்படுத்திக்காட்டவேண்டும் என்ற தவறான எண்ணத்தில் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தாது படைப்பாளிகள்  உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். தரமான படைப்புகளை படைப்பாளிகள் தயாரித்தார்களே ஆனால் தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் தேடிவருவதோடு பார்வையாளர்களும் ஆதரவு தருவார்கள், அதைவிட்டுவிட்டு தரத்தின் அர்த்தம் புரியாமல்  தரம் இல்லாத படைப்புகளை படைத்துக்கொண்டு  மற்றவர்களை குற்றம் சொல்வது நியாயமில்லை. நேர்மையான செயல்பாட்டிற்கு  மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள் என்பதை எனது முதல்படமான "இனியவளே காத்திருப்பேன்" படத்திற்கு மக்கள் தந்த ஆதரவே சாட்சி  என்று கூறினார்.
படத்தில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன, ஈழன் இளங்கோவின் ஒளிப்பதிவு கவனிக்கத்தக்க வகையில் இருந்தது என்பது எல்லோரினதும் கருத்து, பாலச்சந்திரன் திரையில் காட்சியளித்தபோது கூட்டத்தில் சலசலப்பு காதுகளில் கேட்டது, ஈழன் இளங்கோவின் மகன் சத்யன் பாலச்சந்திரன் வேடத்தில் நடித்திருந்தார், அவர் அந்த பாத்திரத்தில் அப்படியே பாலச்சந்திரன் போலவே இருந்தார்.  சொற்கோவினதும்  மோகன் ராஜுவின் வரிகளிலும் வர்ஷன் மற்றும் சுர்முகி குரலிலும் வர்ஷன் இசையமைப்பில்  இரண்டு பாடல்களுடன் இசை  சிறப்பாக இருந்தது.  மொத்தத்தில் அனைவரும் பேசியதில் இருந்து "சாட்சிகள் சொர்க்கத்தில்" மக்களுக்கு ஏமாற்றத்தை தராது, ஒரு நிறைவான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு மட்டும் அல்ல, அங்கு வந்திருந்த அனைவரின் மனதிலும் இருந்தது.

பாரி
-->
சிட்னி, அவுஸ்திரேலியா














































































No comments: