சொல்லத்தவறிய கதைகள் மறைந்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள்! துன்பியல் புன்னகையுடன் எனது மேசையில் வீற்றிருக்கும் அந்த கறுப்பு டயறி! - முருகபூபதி



இந்தப்பதிவுக்கு "கொல்லப்பட்டவர்களின் தொலைபேசி இலக்கங்கள்" என்றுதான் முதலில் தலைப்பிடுவதற்கு யோசித்தேன். எனினும் எம்மத்தியில்  கொல்லப்பட்டர்களதும்,  காணாமலாக்கப்பட்டவர்களதும்  இயற்கை மரணத்தை தழுவியவர்களினதும் தொலைபேசி இலக்கங்கள் இன்றளவும் என்னிடம் இருப்பதனால், பொதுத்தலைப்பினை வைப்பதற்கு தீர்மானித்தேன்.
அந்த இலக்கங்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல்  அமைதி காக்கின்றன!
டயறி எழுதுவது நல்ல பழக்கம்தான். ஆனால், அதில் எழுதப்படும் விடயங்களைப்பொறுத்து சமூகத்திலும் உலக அரங்கிலும் முக்கியத்துவம் பெற்றுவிடும். நடிகர், நடிகைகள், அரசியல்  தலைவர்கள், எழுத்தாளர்களின், பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களின் டயறிக்குறிப்புகள் அவர்கள் வாழும் காலத்திலும் - மறைவுக்குப்பின்னரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
நான் இலங்கையில் நன்கறிந்த ஒரு மூத்த எழுத்தாளரின் டயறியொன்று அவரது மறைவின் பின்னர் வெள்ளவத்தையில்  ஒரு பழையபேப்பர் கடையிலிருந்து, அப்பகுதியிலிருந்த சைவஹோட்டலுக்கு கைதுடைப்பதற்கும் சென்றிருக்கிறது!
நானும் நீண்டகாலம் டயறி எழுதிக்கொண்டிருந்தேன். அவுஸ்திரேலியாவுக்கு வந்ததும் அந்தப்பழக்கத்தை விட்டுவிட்டேன். தற்பொழுது எனது நாளாந்த டயறி,  வீட்டுச்சுவரில் மாட்டியிருக்கும் நாட்காட்டிதான். அதில் நான் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், மற்றும் மருத்துவரிடமும், மருத்துவ பரிசோதனைகளுக்கும் செல்லும் தினங்கள்தான் பதிவாகிவருகின்றன.
வீரகேசரியில் பணியாற்றியவேளையில் எமது பிரதம ஆசிரியர் ஆ.சிவநேசச்செல்வன் என்னிடம் தந்த கறுப்பு நிற அட்டையிலமைந்த  தொலைபேசி எண்களை பதிவுசெய்யும் சிறிய டயறிக்குள் இருக்கும் எண்கள் பல சொல்லத்தவறிய  திகில் கதைகளையும் உள்ளடக்கியிருக்கின்றன.
அதில் அமைச்சர்கள் , தொழிற்சங்கவாதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஆயர்கள், அரச அதிபர்கள், ரயில் நிலைய அதிபர்கள், தபாலதிபர்கள், கல்வி அதிகாரிகள், மரணவிசாரணை அதிகாரிகள், வர்த்தகப்பிரமுகர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பலரதும் தொலைபேசி இலக்கங்கள்  காலத்துக்கு காலம் பதிவாகியிருக்கின்றன. அந்த இலக்கங்கள் கறுப்பு, சிவப்பு, நீலம் ஆகிய நிறங்களிலும் காணப்படுகின்றமையால் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டிருக்கவேண்டும்.
அதற்கு 35 வயதாகிறது!
அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட தருணத்தில் அதுவும் எனது பொதிகளுடன் எப்படியோ  சேர்ந்து வந்துவிட்டது. இன்றும் எனது மேசையிலிருந்து என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறது.
எமது பத்திரிகை ஆசிரியர் எனக்கு கறுப்பு நிறத்தில் அட்டை அமைந்த அந்தச்சிறிய டயறியை தந்தது தற்செயல்தான். துக்கத்தின் அடையாளம்தான் கறுப்பு என்பதனால், மரணத்தின் மூலம் துயரத்தையும் நினைவுகளையும்  தந்துவிட்டு சென்றுவிட்டவர்களின் தொலைபேசி இலக்கங்கள் எனது பயன்பாட்டுக்கே அவசியமற்றவகையில்   நனவிடை தோயவைத்துக்கொண்டிருக்கிறது.
A  முதல் Z வரையில் அந்த எழுத்துக்களுக்குரிய பல முக்கியஸ்தர்களின் தொலைபேசி இலக்கங்கள்  இலங்கையில்  பத்திரிகைப்பணியில் எனக்கு மிகவும் அவசியமாகியிருந்தது.
காலையில் 8.30 மணிக்கே வீரகேசரி அலுவலகம் வரவேண்டிய தேவை இருந்தமைக்கு அங்கு முதலில் மித்திரனும் பின்னர் வீரகேசரியும் அச்சிடப்படுவதும் ஒரு முக்கிய காரணம்.
முன்னாள் பிரதம ஆசிரியர் (அமரர்) க. சிவப்பிரகாசம் அவர்களால் சூட்டப்பட்ட பெயர் மித்திரன்.  1960 களில் அதனை மாலைத்தினசரியாகத்தான் வெளியிட்டார்கள்.  அதன் உள்ளடக்கம் பரபரப்புத்தான்.  "ரஜனி "- கே.வி. எஸ். வாஸின் மர்மத் தொடர்கதைகளுக்கும்  ஜி.நேசனின் ஜமேலா, பட்லி, பூலான் தேவி பற்றிய கலகலப்பூட்டும் தொடர்களுக்காகவும் முன்னர் பிரசித்திபெற்று பரபரப்பாகப்பேசப்பட்ட கொலை வழக்குகள் பற்றிய செய்திக்கதைகளுக்காகவும் மித்திரன் வெளிவந்தாலும், காலப்போக்கில் அவைபோன்ற தொடர்களும் உள்ளடக்கிய செய்தி ஏடாகவும் சாதாரண வாசகர்களை கவரும் எளிய தமிழிலும் மித்திரன் காலைத்தினசரியாகியது.
அச்சு இயந்திரத்தின் தேவை கருதி நிருவாகம் முதலில் மதியம் மித்திரனையும் மாலை 5 மணிக்குப்பின்னர் வீரகேசரியையும் அச்சிட்டது.


முதலில் வடபகுதிக்கான பதிப்பும் அதன்பின்னர் மலையகம், கிழக்கு மாகாணப் பதிப்புகள் அச்சாகும். மலையகச்செய்திகளுக்கு ஒரு பக்கமும், கிழக்கிற்கு ஒரு பக்கமும் துரிதமாக மாற்றப்பட்டு அச்சாகி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தினமும் இரவு புறப்படும் காங்கேசன் துறை தபால் வண்டி மற்றும் கிழக்கிற்கும் மலையகத்திற்கும் புறப்படும் தபால் வண்டிகளை நாடி அந்தப்பதிப்புகள் வீரகேசரி வாகனங்களில் வேகமாகப்பறக்கும். மறுநாள் காலையில் வெளியூர்களில் இருக்கவேண்டிய  இந்தப்பதிப்புகளும்,  இரவில்  நகரப்பதிப்புக்காக மாறிவிடும். நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் முக்கிய பிந்திய செய்திகளுக்காக நகரப்பதிப்பு நள்ளிரவும் கடந்து அச்சாகும்.
பத்திரிகை பணி என்பது இன்றுபோன்று Download  Journalism அல்ல! ஒருவகையில் Team Work. அங்கிருந்த அனைவருக்கும் வேகமும் விவேகமும் தேவைப்பட்டது.
வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் இடம்பெறும் போர்க்காலச்செய்திகளை எழுதும், அவை தொடர்பாக பிரதேச நிருபர்கள்  தொலைபேசியில் தரும், தபாலில் அனுப்பும் செய்திகளை செம்மைப்படுத்தி உரிய பொருத்தமான தலைப்பிட்டு  அச்சுக்கோப்பாளர் பிரிவுக்கு அனுப்பவேண்டிய வேலை. மித்திரனில் அப்போது செய்தி ஆசிரியர் மயில் தவராஜா. முதலில் அந்தப்பதவியிலிருந்த கே. நித்தியானந்தன் வீரகேசரியில் இரவுக்கடமைக்கு மாற்றப்பட்டார்.
சூரியகுமாரன் என்பவர் வெளிநாட்டுச்செய்திகளை ரோய்டர், பி.ரி.ஐ. செய்திச்சேவையிலிருந்து பெற்று மொழிபெயர்த்துக்கொடுப்பார். ஜி. நேசன் தொடர் பத்திகளை கவனித்தார். பின்னாளில் மித்திரனின்  செய்தி ஆசிரியர்களாக எம்.பி. எம் அஸ்ஹர், சொலமன் ராஜ் ஆகியோரும் பணியாற்றினார்கள். இந்த இருவரும், சூரியகுமாரனும், மறைந்துவிட்டனர். நித்தியானந்தன் ஓய்வுபெற்றுவிட்டாலும் அவரது மகளும் மருமகனும் தற்போது அங்கு பணியாற்றுகிறார்கள். மயில்தவராஜா வெளிநாடொன்றில் வசிக்கிறார்.
வடக்கு - கிழக்கு போர் சம்பந்தப்பட்ட தாக்குதல் செய்திகளை முதலில் மித்திரனுக்கு எழுதிக்கொடுத்துவிடவேண்டும். அதன்பின்னர் மேலும் தகவல்களை பெற்று விரிவாக எழுதி வீரகேசரிக்குத்  தரவேண்டும். எமக்குப்பின்னர் கடமைக்கு வரும் செய்தி ஆசிரியர் நடராஜா, பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வன், வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால் ஆகியோருக்கு  முதலில் மித்திரனுக்கு எழுதிய செய்திகளின் சுருக்கமான குறிப்புகளை சொல்லவேண்டும்.
தொலைத்தொடர்பாடலுக்கு எனக்கு பெரிதும் உதவும் என்பதனால் என்னிடம் சிவநேசச்செல்வன் அன்று தந்த அந்த டயறி இன்று என்னை துயரத்தில்  ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.
அதில் இடம்பெற்ற பலர் இன்று உயிரோடு இல்லை. சிலர் என்னவானார்கள் என்பதும்  தெரியாமல் காணாமல் போய்விட்டனர். சிலரை  இயற்கை அழைத்துக்கொண்டது.
இன்று அவர்களின் தொலைபேசி இலக்கங்களும் அவர்களின் நினைவுகளைப்போன்று அழியாமல் இருக்கின்றன. மாவட்ட அபிவிருத்திச்சபை உறுப்பினர் வேல்முருகு, விஜயகுமராணதுங்க, சாம் தம்பிமுத்து, குமார் பொன்னம்பலம், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோனி முத்து, நீலன் திருச்செல்வம், யாழ். அரசாங்க அதிபர் பஞ்சலிங்கம், மாவட்ட  நீதிபதி அமிர்தலிங்கம், சர்வோதயம் கதிரமலை, கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிராந்திய செயலாளர் விஜயானந்தன்  உட்பட பலர் கொல்லப்பட்டுவிட்டனர்.
தனது திருகோணமலை இலக்கம் தந்திருந்த கவிஞர் புதுவை ரத்தினதுரையும் போர் முடிவுற்றவேளையில் சரணடைந்து காணாமலாக்கப்பட்டுள்ளார். வவுணதீவு , மட்டக்களப்பு நிருபர்கள் ரத்தினசிங்கம், நித்தியானந்தன் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
இந்த டயறியில் நான் தொலைபேசி இலக்கங்கள் பதிவுசெய்துவைத்திருக்காத வேறும் சிலருடனும் உரையாடல்கள் தொடர்ந்தன. அவர்களில் சிலர் வெளிநாடுகளிலும் தமிழகத்திலும் இருந்தனர். அவர்களுக்கு அன்றாடம் இலங்கையில் என்ன நடக்கிறது என்ற செய்திகள் தேவைப்பட்டதனால் தொடர்புகொண்டனர். சென்னையில் அக்காலப்பகுதியில் இயங்கிய தமிழர் தகவல் நிலையத்திலிருந்து ரேவதி என்ற பெண்ணும்,  தமிழக சட்டசபை உறுப்பினர்கள் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அமிர்தலிங்கமும், ஆசிரியராக பணியாற்றிய நெல்லை நடேஸ், மட்டக்களப்பிலிருந்த தராக்கி சிவராம் முதலானோரும் தொடர்புகொள்வார்கள். அவர்களிடமிருந்தே தொலைபேசி அழைப்புகள் வந்தமையால் நான் எனது டயறியில் அவர்களின் இலக்கங்களை பதிவுசெய்திருக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் Saturday Review  பத்திரிகையில் பணியாற்றிய கவிஞர் சேரன், காமினி நவரட்ணா ஆகியோரின் இலக்கங்களும் உள்ளன.  சேரன் தற்போது கனடாவில் வசிக்கிறார்.
சென்னையிலிருந்து தினமும் மதியம் உரையாடும் ரேவதி என்பவர் புனைபெயரில்தான் தொடர்புகொள்கிறார் என்று தொடக்கத்தில் தெரிந்துகொண்டாலும், அவர்தான் பின்னாளில் புலிகளினால் கொல்லப்பட்ட மகேஸ்வரி வேலாயுதம் என்ற ஊர்ஜிதமற்ற தகவல்களும் என்னை வந்தடைந்தன.
யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு நிருபர்கள் செய்திவேட்டைக்குச்சென்று  வீரகேசரி அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னரே, எனக்கிருந்த தொடர்புகளின் ஊடாக  முடிந்தளவு செய்திகளை சேகரித்துக்கொண்டு, அவர்கள் இணைப்புக்கு வந்தபின்னர் தரும் செய்திகளையும் ஒப்பிட்டு செம்மைப்படுத்தி எழுதிக்கொடுக்கும் பணி காலை 8.30 இலிருந்து மதியம் வரையில் தொடரும். யாழ்நிருபர் அரசரட்ணம், யாழ்.அலுவலக நிருபர் காசி. நவரத்தினம், வவுனியா நிருபர் மாணிக்கவாசகர் மட்டக்களப்பு நிருபர் நித்தியானந்தன், ஆகியோருடன் தினமும் பேசிக்கொண்டிருந்தேன். எரியும் பிரச்சினைக்கு மத்தியில் அவர்களின் அயராத உழைப்பு போற்றத்தக்கது.
இவர்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து சுடச்சுட செய்திகள் தந்த செல்லத்துரை, நான் ஆசிரியபீடத்தில் இணைந்த காலப்பகுதியில் நோயுற்று மறைந்துவிட்டார்.
மதியத்திற்கு மேல் அலுவலக நிருபர்கள் கனக. அரசரத்தினம், எஸ்.என். பிள்ளை, ஜோன் ரெஜீஸ், சனூன், பால விவேகானந்தா, ஏ.கே. முத்து, எம்.ஏ.எம். நிலாம், அன்டன் எட்வேர்ட் , வீ.ஆர். வரதராஜா ஆகியோர் எழுதித்தரும் செய்திகளையும் செம்மைப்படுத்தநேரிடும்.
வடக்கிலிருந்து வரும் செய்திகள் குறித்து அலுவலகத்திலிருக்கும் இதர ஊழியர்களும் எப்பொழுதும் பதட்டத்துடன்தான் இருப்பர். சிலர் அடிக்கடி இன்டர்காமில் கேட்டுத்தெரிந்துகொள்வதற்கு அவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் வடபகுதியில் இருந்ததும் முக்கிய காரணம். சில பெண் ஊழியர்கள் ஊருக்குச்செல்வதற்கு முன்னர் நிலைமையை கேட்டுத்தெரிந்துகொள்வார்கள். போக்குவரத்து நிலைமை சீராக இருக்கிறதா? என்பதையும் ஊர்ஜிதப்படுத்தவேண்டியிருக்கும்.

" உங்களை நம்பித்தான் புறப்படுகின்றோம்" எனச்சொல்லிவிட்டு முதல்நாள் மாலையே அவர்கள் அலுவலகத்திலிருந்து விடைபெறும்போது நான் நெகிழ்ந்துபோகும் சந்தர்ப்பங்களும் அதிகம்.

அதனால் எனக்குள்ளும் பதட்டம் அதிகரிக்கும். கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முதல், பொல்கஹாவெலை, குருநாகல், அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா வரையும் இருக்கும் ரயில் நிலையங்களின் தொலைபேசி இலக்கங்களையும் பேணிவைக்கவேண்டியிருந்தது. வவுனியாவுக்கு அப்பால் ரயில் நகரவில்லை. தண்டவாளங்களும் சிலிப்பர் கட்டைகளும்  பங்கர்கள் அமைப்பதற்கு நகர்ந்துவிட்டன!
கோட்டையிலிருந்து ரயில் புறப்பட்டது முதல் அதன் பின்னர் வரும் முக்கிய ரயில் நிலையங்களுக்கு அவை சென்றடையும் நேரம் கணித்து தொடர்புகொண்டு பாதுகாப்பு குறித்தும் அறிந்துவைத்திருக்கவேண்டிய பதட்டத்தில் அன்று வாழ்ந்திருக்கின்றோம்.
கொழும்பு செட்டியார் தெருவிலும் இதர பிரதேசங்களிலும் வர்த்தகம் தொடரும் பிரபல புள்ளிகளுக்காகவும் தொலைபேசி இலக்கங்களை பேணவேண்டியிருந்தது.
அவர்கள் பயணிப்பதற்கு முன்னர் நாட்டின் நிலையை கேட்டுத்தெரிந்துகொள்வார்கள். இந்தச்சேவைக்கும் அந்த டயறிதான் பெரிதும் உதவியது.
அதனால் தினமும் அந்த டயறியும் என்னுடன் பயணிக்கும்.
வடக்கிலும் கிழக்கிலும் இயக்கங்கள் கண்ணிவெடி தாக்குதலை நடத்தும். கொள்ளைகளிலும் ஈடுபடும். கோயில்களும் பாடசாலைகளும் இதுவிடயத்தில் தப்பவில்லை. அரச ஊழியரின் சம்பளப்பணமும் பறிபோகும். வங்கிகளிலும் நகை அடவுக்கடைகளிலும் மக்களின் நகைகள் பறிக்கப்படும். எல்லாம் நடந்தது தமிழ் ஈழத்திற்காகத்தான் என்ற நியாயங்களும் செய்தவர்களினால்   சொல்லப்படும்.     சில மின்கம்ப  கொலைகளுக்கு " துரோகிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை" என்ற பிரசுரமும் வெளியாகும்.
அரச தரப்பு பயங்கரவாதிகளை ஒடுக்குகிறோம் என்று தனது லங்கா புவத் மூலம் செய்தி பரப்பும்.
இந்தச்செய்திகளை எழுதும்பொழுது ஊர்ஜிதப்படுத்துவதற்காக பிரதேச நிருபர்களை மாத்திரம் நம்பியிராமல், அச்சம்பவங்கள் நடந்த பிரதேசத்திலும் சிலர் உத்தியோகப்பற்றில்லாமல் இனப்பற்றோடு  இயங்கினார்கள்.
அவர்கள் பாடசாலை அதிபர்கள், நீதிபதிகள், அரச ஊழியர்கள், மரண விசாரணை அதிகாரிகள், சட்டத்தரணிகள், குடும்பத்தலைவர், தலைவிகள். அவர்களின் பெயர் வெளியே தெரியாது. கொல்லப்பட்டவர்களின் பெயர், வயது, தொழில், குடும்பத்தினரின் எண்ணிக்கை ஆகியவற்றை துல்லியமாகத்தெரிந்தவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்.
இயக்கம் கண்ணிவெடி வைத்துவிட்டு மறைந்துவிடும், இராணுவமோ அதிரடிப்பொலிஸோ கொல்லப்படும். அவர்கள் வந்த ஜீப், ட்ரக் வாகனங்கள் கடும் சேதமடையும்.
அந்த இடத்தில் பெரிய பள்ளம் தோன்றும். கேள்விப்பட்டதும் அவ்விடத்திற்கு வரும் ஆயுதப்படை, யார்? எவர்? என்றும் பார்க்காமல் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளும். இலங்கையின் தகவல் திணைக்களத்தின் " லங்கா புவத்" வானொலியிலும்  அரச தொலைக்காட்சிலும் அவ்வாறு கொல்லப்பட்டவர்களுக்கு "பயங்கரவாதிகள்" (?) என்ற நற்பெயரைச்சூட்டும்.
என்னைப்போன்ற பத்திரிகையாளருக்கு பொறுப்புணவர் சற்று அதிகமாக இருப்பதனால்,  தாக்குதல் சம்பவத்தின் பின்னணியை துப்புத்துலக்குவோம்.
கைத்தொலைபேசி இல்லாத அந்தக்காலத்தில் எமக்கு பெரிதும் உதவிய உற்ற நண்பர் இந்தத்தொலைபேசிதான். அதுவும் சில சமயங்களில் ஒழுங்காக இயங்காது.
ஆயுதப்படையினர் மீதான தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட அப்பாவிகளின்  பெயர், வயது, தொழில், குடும்பத்தில் எத்தனைபேர் முதலான விபரங்களுடன் செய்தியை எழுதிவிட்டு,           இறுதிப்பந்தியில், " இதுஇவ்விதமிருக்க இத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்று தகவல் திணைக்களத்தின் செய்திப்பிரிவு (லங்காபுவத்) தெரிவித்துள்ளது என எழுதிவிடுவோம்.
வாசகருக்கு செய்தி புரிந்துவிடும்!
இவ்வாறு தினமும் எழுதி எழுதியே எனது வலதுகையின் நடுவிரல் வீங்கிவிட்டது.
நீடித்த அந்தப்போர் சாதித்தது என்ன? எழுதி எழுதி செய்தி வெளியிட்ட நாம் சாதித்தது என்ன? ஆயுதங்களை இரண்டு தரப்புக்கும் விநியோகித்த வெளிநாட்டு  ஆயுத உற்பத்தியாளர்களும் ஆயுதத் தரகர்களும்   ஈட்டிய சாதனைதான் என்ன? எங்கள் தேசத்தில் விதவைகளினதும் அனாதைகளினதும் எண்ணிக்கையை பெருக்கியது மாத்திரமே அவர்களின் சாதனை!
இன்று சிரியாவில் அவர்கள் ஆயுதம்  விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்றும் செய்தியாளர்கள் அங்கு கொல்லப்பட்டவர்களின்  எண்ணிக்கையை எழுதிக்கொண்டிருக்கின்றனர். ஒளிபரப்பிக்கொண்டு இணையங்களில் பதிவேற்றுகிறார்கள்.
அன்று கோழிக்கள்வர்களுக்கும், சிறு சிறு திருட்டுச்சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், ஆயுதப்படையினருடன் பேசியவர்களுக்கும், சமாதானப்பேச்சுவார்த்தைகளுக்கு முன்வந்தவர்களுக்கும் "துரோகிகள்" என்ற நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இன்றும் சிலருக்கு அந்தச் சான்றிதழ்களை சிலர் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும்  வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
நீடித்த போர் முடிவுற்று ஒன்பது ஆண்டுகள் முடிவுறுகிறது. ஜெனீவாவில்  மீண்டும்  இந்த ஆண்டுக்கான உற்சவத்திற்கு கொடியேறியிருக்கிறது. பத்தாவது ஆண்டிலும் கொடியேறும். யாத்திரீகர்கள் பயணிப்பார்கள்!!
என்னிடம் இருக்கும் அந்தக்கறுப்பு டயறியில் குறித்து வைத்துக்கொள்ள  தங்கள் தொலைபேசி இலக்கங்களைத்தந்தவர்கள் இனத்தின் பெயரால்  கொல்லப்பட்டவர்கள். அரசியல் பழிவாங்கலுக்காக அழிக்கப்பட்டவர்கள். செய்தி எழுதியமைக்காக கொல்லப்பட்டவர்கள். யாருக்காவது நீதி கிடைத்ததா?
இவ்வாறு அழிப்பு படலத்தில் ஈடுபட்டவர்களும் அழிந்தார்கள். அந்த டயறி மாத்திரம்  இன்றும்  அழியாமல்  எனது மேசையில் அமர்ந்து  துன்பியல் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருப்பதாக உணருகின்றேன்.
letchumananm@gmail.com
---0---
  
-->











No comments: