இலங்கைச் செய்திகள்


ஆண்டொன்று கடந்த நிலையில் விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்.!

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்னர் கைது!!!

பிரிகேடியர் பிரியங்கவின் நிலை என்ன ? மீண்டும் லண்டனுக்கு அனுப்பப்படமாட்டாராம் 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த ஜப்பான் பௌத்த துறவிகள்

ஜனாதிபதி, பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

முல்லைத்தீவில் முன்னாள் போராளி உட்பட 10 பேர் கைது..!




ஆண்டொன்று கடந்த நிலையில் விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்.!

01/03/2018




கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகபடுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவித்து தாம் அதில் வாழ அனுமதிக்க வேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஒருவருடம் நிறைவுற்ற நிலையில் முடிவின்றி தொடர்கின்றது.
கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த இவர்களின் போராட்டம் இன்றுடன் ஒருவருடம் நிறைவை எட்டியுள்ளது.


போராட்டத்தின் பலனாக மீள்குடியேற்ற அமைச்சால் இராணுவத்துக்கு 152 மில்லியன் ரூபா பணம் வழங்கபட்டு ஒரு தொகுதி மக்களின் காணிகள் விடுவிக்கபட்ட நிலையில் மிகுதி மக்களின் 181 ஏக்கர் வாழ்விட நிலங்கள் விடுவிக்காமல் உள்ளது. இதனால் மீதி தமது நிலங்களையும் இராணுவம் விடுவிக்க வேண்டும் என கோரி கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக வாயில் முன்பாக ஒரு வருடமாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு வருட நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு அழைத்த  கேப்பாபுலவு மக்கள் தமக்குரிய நிலங்களை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வடக்கு மாகாண அமைச்சர் சிவநேசன் மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன்,புவனேஸ்வரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் வருகை தந்து மக்களோடு கலந்துரையாடியிருந்தனர்.
இதனை தொடர்ந்து மக்களால் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்க பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பொலிஸார் அதிகளவில் குவிக்க ஸ்ரீபட்டு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 







வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்னர் கைது!!!
28/02/2018 வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்  சற்றுமுன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுவாகல் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மக்களின் காணிகளை கடற்படை முகாம் அமைப்பதற்காக அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்க பட்ட நிலையில் ரவிகரன்  இன்றையத்தினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் அஜராகியிருந்தார் .
இதன் போது  ரவிகரனிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார்  கைது செய்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
அத்தோடு ஆர்பாட்டம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அமரர் ஆன்டனி ஜெகநாதனின்  மகன் பீற்றர் இலஞ்செழியனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யபட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 







பிரிகேடியர் பிரியங்கவின் நிலை என்ன ? மீண்டும் லண்டனுக்கு அனுப்பப்படமாட்டாராம் 

27/03/2018 பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயரிஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்டு வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீள லண்டனுக்கு அனுப்படாது சீனாவில் கட்டளை தளபதிகள் (brigade commander) தொடர்பில் நடாத்தப்படும் இராணுவ பாடநெறி ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவ தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
நேற்று மாலை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால்  மகேஷ் சேனநாயக்கவுக்கும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கும் இடையில் விஷேட சந்திப்பு இடம்பெற்ற நிலையில், இதன்போது இது குறித்த தீர்மானத்தை இராணுவ தளபதி பிரிகேடியரிடம் கூறியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
பிரித்தானியாவின் லண்டன் நகரில், இலங்கை உயரிஸ்தானிகராலயம் முன்பாக கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் செய்த புலம் பெயர் தமிழர்களை நோக்கி  ' கழுத்தறுத்து' கொலை செய்வேன் எனும் அர்த்தத்தை கொடுக்கும் வகையில் சைகளை வெளிப்படுத்தியமை தொடர்பில், உயரிஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் பலத்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
 எனினும்  தான் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தவில்லை எனவும் இலங்கை பிரபாகரனை கொன்றுவிட்டது என்றே செய்கை ஊடாக கூறியதாகவும் பிரிகேடியர் பிரியங்க விளக்கமளித்திருந்தார்.
 இந் நிலையில் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி பிரிகேடியர் பிரியங்க நாட்டுக்கு மீள அழைக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார்.
 இந் நிலையில் 26 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சுக்கு அவர் சென்ற போதும், அங்கு வெளிவிவகார செயலாளரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாது இராணுவத் தளபதியை சந்திப்பது போதுமானது என அவருக்கு கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பிரிகேடியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அவரை நாட்டுக்கு அழைத்ததாக  ஏற்கனவே அறிவித்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஷ் சேனநாயக்க, நேற்று பிரியங்க பெர்னாண்டோவுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்.
இதன்போது பிரிகேடியர் பிரியங்கவை மீள லண்டனுக்கு அனுப்பாமல் இருப்பது குறித்து இராணுவ தளபதி விளக்கியதாகவும், அதற்கு பதிலாக அவரை சீனாவின் உயர் பாடநெறிக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 








காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த ஜப்பான் பௌத்த துறவிகள்
26/02/2018 இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீண்டும் உறவினர்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டுமென தாம் பிரார்த்திப்பதாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பௌத்த துறவிகள் தெரிவித்துள்ளனர்.
போனினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வமத வழிபாட்டு ஊர்வலம் மேற்கொள்ளும் குழு இன்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 372 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறுகோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை குறித்த குழுவினர் இன்று பகல் சந்தித்து வழிபாட்டினையும் முன்னெடுத்தனர்.
ஜப்பான், ஐரோப்பா, இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பௌத்த துறவிகள் குறித்த மக்களை சந்தித்தனர். 
உலக அமைதி பணியில் “நிப்பொன்சன் மியொஹொஜி” ஜப்பான் புத்த துறவிகளே இன்று குறித்த மக்களை சந்தித்து பேசியதுடன், விசேட வழிபாட்டினையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 







ஜனாதிபதி, பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
26/02/2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணையொன்றை அனுப்பியுள்ளது. 
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாரே ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 






முல்லைத்தீவில் முன்னாள் போராளி உட்பட 10 பேர் கைது..!

04/03/2018 முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 10 பேரை முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 11.50 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து உயரதிகாரிகளின் ஆலோசனைக்கமைய முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெடிமருந்துகள் மின்பிறப்பாக்கி மற்றும் பல உபகரணங்களையும் கைப்பற்றியதோடு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் கண்டி, நுவரெலிய, முல்லைத்தீவு, விஸ்வமடு, நிட்டம்புவ, வத்தேகம உள்ளிட்ட பகுதிகளை சேந்தவர்கள் எனவும் முன்னாள் போராளிகளும் இதில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 

No comments: