( தமிழ் இலக்கிய உலகில் அறுபது ஆண்டுகாலமாக
எழுத்தூழியத்தில் ஈடுபட்டுவரும் கனடாவில் வதியும் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின்
எழுத்துலகத்தை கொண்டாடும் விழா எதிர்வரும் ஏப்ரில் மாதம் கனடாவில் நடக்கவிருக்கிறது.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் (2009 மார்ச் ) மல்லிகை இதழின் முகப்பை அலங்கரித்த முத்துலிங்கம்
பற்றி அதே இதழில் எழுதிய பதிவு, மீண்டும் வாசகர்களுக்கு - முருகபூபதி)
ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது. - இப்படிச்சொல்லியிருப்பவர் தன்னை ஒரு இலக்கிய விமர்சகராகவோ அல்லது இலக்கியப்பேராசிரியராகவோ அறிமுகப்படுத்திக்கொண்டவர் அல்ல.
ஒரு குடும்பத்தில் திடீரெனக் காணாமல் போனவர் திடுதிப்பென சுமார் இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப்பின்னர்
விந்தையான இயல்புகளுடனும் கருத்தையும்
கவனத்தையும் ஈர்க்கும் தோற்றத்துடனும் திரும்பிவந்து இதோ நான் இன்னமும் இருக்கின்றேன் எனச்சொல்லும்போது அந்தக்குடும்பத்தினரிடம் தோன்றும் வர்ணிக்க வார்த்தைகளைத்தேடும் பரவசம் இருக்கிறதே அது போன்றதுதான் நண்பர் அ.முத்துலிங்கம் அவர்களின் இலக்கிய மறுபிரவேசம் என்று நினைக்கின்றேன்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நான் இலக்கிய உலகிற்குள் பிரவேசித்த
1970 காலப்பகுதியில் ஒரு மாலைவேளையில் கொள்ளுப்பிட்டி தேயிலைப்பிரசார மண்டபத்தில்
நடந்த ஒரு இலக்கியநிகழ்வில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரைச்சுட்டிக்காட்டி அவர்தான் அக்கா கதைத்தொகுதி எழுதிய அ.முத்துலிங்கம் என்று ஒரு இலக்கிய நண்பர் சொன்னார்.
எனினும் அன்று அவருடன் பேசும் வாய்ப்புக்கிடைக்கவில்லை.
அக்கா தொகுதியும் படிக்கக் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் முத்துலிங்கம் பற்றிய எந்தத்தகவலும் கிடக்கவில்லை. அவரையும் அவரது அக்காவையும் தேடியும் கண்களுக்குத்தென்படாமல் மறைந்து விட்டார்கள்.
1987 இல் நானும் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டபின்னும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். எதிர்பாராமல் எனது வீட்டு முகவரிக்கு பாகிஸ்தானிலிருந்து ஒரு புத்தகப்பார்சல் வந்தது. அனுப்பியிருந்தவர். முத்துலிங்கம். புத்தகம் திகடசக்கரம் கதைத்தொகுதி.
உடனே பதில் எழுதினேன். அவரிடமிருந்து பதில் இல்லை. திகடசக்கரத்தை வைத்துக்கொண்டு, மீண்டும் தேடுதல் படலம். ஐ.நா. அதிகாரியாக அவர் உலகம் சுற்றிக்கொண்டிருப்பதாக நான் விசாரிப்பவர்களெல்லாம் சொன்னார்களே
தவிர, சரியான தகவலைத் தரவில்லை. என்னாலும் அவரது சரியான இருப்பிடத்தையோ முகவரியையோ
கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.
அவர் தமது உத்தியோகத்திலிருந்து நிரந்தரமாக
ஓய்வுபெறும் வரையில் காத்திருக்கவேண்டியிருந்தது. எனினும், என்னைப்போன்ற வாசகர்களை காத்திருக்கச்செய்யாமல் தமது கதைகள், கட்டுரைகள் மூலம் இலக்கிய மறுபிரவேசத்துடன் அறிமுகமாகிக்கொண்டிருந்தார்.
கனடாவிலிருக்கிறார் என்பதை அறிந்து தொடர்புகொள்வதற்கு 2007 ஆம் ஆண்டு வரையில் காத்திருந்தேன் எனச்சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள். கனடாவுக்குச்சென்றும் அவரைச்சந்திக்கமுடியாமல் போய்விட்டது. அமெரிக்காவிலிருந்து எனக்கு 2008 ஆம் ஆண்டு பிறந்ததும் முதல் வாழ்த்தும் நீண்ட உரையாடலையும் தந்தவர் முத்துலிங்கம். மின்னஞ்சலும் தொலைபேசியும் தொலைத்துவிட்ட நீண்ட பெரிய இடைவெளியை நிரப்பிவிட்டன.
தமிழகத்தில்
தீராநதி, ஆனந்தவிகடன்,உயிர்மை, வார்த்தை உட்பட பல இணைய இதழ்களிலெல்லாம் எழுதுகிறார்
ஆனால் ஈழத்து இதழ்களில் எழுதுகிறார் இல்லையே என்ற கவலையை சிலர் தெரிவிக்கத்தொடங்கியுள்ள சூழலில்,
மல்லிகை ஆசிரியர் கேட்டதன் பிரகாரம் இந்த ஆக்கம்.
1937 இல் இலங்கையில் வடமாகாணத்தில் கொக்குவில்
கிராமத்தில் ஏழு பிள்ளைகளைக்கொண்ட பெரிய குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாக பிறந்த முத்துலிங்கம், 1960 இல் இலக்கியப்பிரவேசம் செய்தார். நன்கு ஆண்டுகளில்
(1964) முதலாவது கதைத்தொகுதி அக்காவை தந்தவர், மீண்டும் 1995 இல்தான், அதாவது, இருபத்தியொரு வருடங்களின்
பின்னர் திகடசக்கரம் கதைத்தொகுதியை தருகிறார்.
மீண்டும் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்த காரணி என்ன? என்று கேட்டேன்.
“ ஒரு நாள் தற்செயலாக ஒரு சஞ்சிகையை புரட்டியபோது நான் எங்கே விட்டேனோ அங்கேயே தமிழ்ச் சிறுகதை நின்றது. ஆகவே திரும்பவும் நுழைவது சுலபமாக அமைந்தது” என்றார்.
அவரது நுழைவு பயன்மிக்கது. தமிழ் வாசகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியது.
தமிழ் இலக்கிய உலகிற்கு புதிய வரவுகளைத்தந்தது.
திகடசக்கரத்தைத் தொடர்ந்து, வம்சவிருத்தி (கதைகள்-1996)-
வடக்கு வீதி (கதைகள்-1998)-
மகாராஜாவின் ரயில் வண்டி (கதைகள்-2001)- அ.முத்துலிங்கம் கதைகள்(2001)- அங்கே இப்ப என்ன நேரம்? (கட்டுரைகள்)- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது (தொகுப்பாசிரியர்)
வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) பூமியின் பாதி வயது (கட்டுரைகள்) உண்மை கலந்த நாட்குறிப்புகள் (நாவல்) முதலானவற்றை தந்திருப்பதுடன் இல்லாமல் அயராமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் முத்துலிங்கம் பவளவிழாவை நெருங்கிக்கொண்டிருக்கின்றார்.
தமிழ் இலக்கியச்சூழலில் பல விந்தைகளை அண்மைக்காலத்தில் நிகழ்த்தியிருப்பவர் முத்துலிங்கம் என்பதனால் ஈழத்து தமிழக வாசகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்திற்குள்ளாகியிருக்கிறார்.
ஊடகங்கள் உருவாக்கிய எழுத்தாளர்களும் வாசகர்களும்
இருக்கிறார்கள். அதேபோன்று
புதிதாக வாசகர்கள் பலரை உருவாக்கிய பெருமையை கொண்டவர் முத்துலிங்கம்.
திரைகடலோடி திரவியம் தேடியவர்களுக்கு மத்தியில்,
தேசம் விட்டுத் தேசம் ஓடி இலக்கியப்படைப்புகளைத்தந்தவர்கள் வரிசையில் இன்று முன்னணியில் இருப்பவர் முத்துலிங்கம்.
சியாரா லியோன், சூடான், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், கென்யா, சோமாலியா, என்று பல நாடுகளில் உலக வங்கிக்காகவும் ஐக்கிய நாடுகள் சபைக்காகவும் வாழ்ந்தவர்,
தமது அலைந்துலைந்த வாழ்வை இலக்கியமாக சித்திரித்து தமிழுக்கு வளமும் புதிய பார்வையும்
தந்தவர்.
பழந்தமிழ் இலக்கியங்கள் உட்பட ஆங்கில இலக்கியங்களிலும் மிகுந்த பரிச்சியம் இவருக்கிருப்பது சிறந்த மூலதனம். அந்த மூலதனத்தை இலக்கிய வாசகர்களுக்கு சுவாரஸ்யத்துடன் பகிர்ந்தளிப்பதில் வெற்றி கண்டவர்.
அவர் ஒரு நைஜீரிய எழுத்தாளரின் கதையில் பிரதான பாத்திரமாகி
ஆபிரிக்க-பிரெஞ்சு இலக்கிய வாசகர்களிடமும் அறிமுகமாகியிருக்கும் விந்தையை தமிழுலகிற்கு தெரியப்படுத்தியவர் ஷோபா சக்தி.
முத்துலிங்கத்தை கதாபாத்திரமாக்கி திரு.முடுலிங்க என்ற சிறுகதையை நைஜீரிய எழுத்தாளர் மம்முடு ஸாதி என்பவர் ஆபிரிக்காவின் ஹெளஸ மொழியில் எழுதியிருந்தார். .இந்தக்கதையை ஹீரன் வில்பன் என்பவர் பிரெஞ்சு மொழிக்குப்பெயர்க்க, அதனை, ஒரு ஆபிரிக்க இலக்கிய சிறப்பிதழில் படித்த ஷோபாசக்தி,
தமிழுக்குத் தந்தார் பல இணைய இதழ்களில் இதனைப்படிக்க முடிந்தது.
முத்துலிங்கம் ஆபிரிக்க நாடொன்றில் ஐ.நா.வுக்கான அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய காலத்தில் அவரிடம் சிற்றூழியராகப்பணியாற்றியவர்தான் இந்த மம்முடு ஸாதி. இவர், இதுவரையில் மூன்று கதைத்தொகுப்புகளையும் வெளியிட்டிருப்பதாக ஷோபாசக்தி தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழக ஜனரஞ்சக சஞ்சிகையொன்றில் முத்துலிங்கம் குறித்து விதந்து எழுதப்பட்டதைப்பார்த்தவுடன், மல்லிகை ஆசிரியர் தமது தூண்டில் கேள்வி-பதில் பகுதியில், மிகுந்த உற்சாகமுடன் எம்மவர் ஒருவருக்கு
கிடைக்கப்பெற்ற சிறந்த அங்கீகாரம்
என்ற தொனியில் எழுதியிருந்தது இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு
வருகிறது.
பூமியின் பாதி வயது கட்டுரைத்தொகுப்பு தொடர்பாக உயிர்மை பதிப்பகம் தரும் பின்வரும் குறிப்பு முத்துலிங்கத்தின் எழுத்துலகம்
பற்றிய கணிப்பை விளக்குகிறது:-
நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் சேர்த்தவை அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள். வாழ்வின் வியப்பும் நெகழ்ச்சியும் கொண்ட தருணங்களை மிக நேர்த்தியான காட்சிகளாக்கும் இவரது கட்டுரைகள் வாசிப்பின் தீராத இன்பத்தை நெஞ்சில் பெருகச்செய்கின்றன. அன்றாட வாழ்வின் சின்னஞ்சிறிய அழகுகளும் அபத்தங்களும் முத்துலிங்கத்தின் துல்லியமான, அங்கதம் மிகுந்த மொழியின் வழியே வெகு நேர்த்தியாக காட்சிப்படுத்தப்படுகின்றன. தீவிர உலக இலக்கிய வாசிப்பிலிருந்தும் புலம் பெயர்ந்த வாழ்வின் பரந்துபட்ட அனுபவங்களிலிருந்தும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஒரு பிரம்மாண்டமான களத்தை உருவாக்குகின்றன. ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு வெகு அபூர்வமாகவே சாத்தியமாகும் களம் இது. உண்மைக்கும் புனைவுக்கும் இடையே உள்ள மங்கலான கோட்டை முற்றிலுமாகவே அழித்துவிடும் முத்துலிங்கம், தான் தொடுகின்ற ஒவ்வொன்றையும் ஒரு அனுபவமாகத்
திறந்து விடுகிறார்.
கனடாவிலிருந்துகொண்டு அவ்வப்போது அமெரிக்காவுக்கு பயணித்தவாறு அதிகாலை எழுந்து கணனியில் படித்தும் கணனியில் எழுதியும், தனது சிந்தனைகளுக்கோ எழுத்துக்கோ ஓய்வு கொடுக்காமல்
அயர்வின்றி இயங்கும், இவரது எழுத்துக்களைப்படிக்கும் தருணங்களில்
வாய்விட்டுச் சிரிக்கலாம். சிலிர்ப்புடன் சிந்திக்கலாம்.
வாசகனை கவர்ந்திழுக்கும் மந்திரசக்தி
இவரிடம் எப்படி வந்தது என்று அடிக்கடி நான் நினைப்பதுண்டு.
இலக்கியத்தில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாக சிறுபான்மை இனங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்- போராட்டங்கள் தொடர்பாகவும் விசாலமான பார்வையைக்கொண்டவர் என்பதை கடந்த 2008 டிசம்பரில் அவர் தீராநதிக்கு வழங்கிய நேர்காணலிலிருந்து புரிந்துகொள்ள முடியும். அவரது கருத்துக்கள் விமர்சனத்துக்கும் விவாதத்துக்குமுரியவை என்பதனால்தானோ தெரியவில்லை,
கொழும்பு தினக்குரல் ஞாயிறு இதழும் மறுபிரசுரம் செய்திருக்கிறது.
ஒரு முழுமையான இலக்கியவாதியிடம் இப்படியாக சர்வதேச அரசியல் கண்ணோட்டம்
இருப்பதும் அபூர்வம்தான்.
ஒரு ஆங்கில இலக்கிய வாதியையும்
படைப்பையும் அறிமுகப்படுத்தும்போதிலும் சரி- கிட்டுவிடமிருந்த குரங்கைப்பற்றிச்சொல்லும் போதும் சரி- பல எழுத்தாளர்களிடமிருந்து கட்டுரைகளைத் தருவித்து தொகுத்து தருகையிலும்
சரி- நாட்டியப்பேரொளி பத்மினியை தனது வீட்டு விருந்தாளியாக வைத்திருந்து உபசரித்து உரையாடியபொழுதும் சரி- தனது சகோதரி; சங்கீத வகுப்பில் பயின்ற கோலத்தை சித்திரிக்கும்போதும் சரி அவருக்கே உரித்தான நளினத்துடனும் அங்கதச்சுவையுடனும் வாசகர்களுடன் பேசுவார். அவரது எழுத்துக்களைப்படிக்கும் பொழுது நாம் அவர் அருகே இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்படும்.
முத்துலிங்கத்தை பற்றி எழுதுவதற்கு சில பக்கங்கள் போதாது. அவரது வாழ்வையும் இலக்கியப்பணியையும் விரிவாக பெரிய நூலாகவே எழுத முடியும்.
இந்த ஆக்கத்தின் ஆரம்பத்தில் முத்துலிங்கம் அவர்களின் கூற்றாக பதிவுசெய்யப்பட்டிருப்பது போன்று, அவரது ஒரு படைப்பை படித்த பின்பும் அந்தப்படைப்பு சில கணங்களுக்கு சில நாட்களுக்கு
சில வருடங்களுக்கு எங்களுடன் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்.
அப்படி எங்களுடன் வந்துகொண்டேயிருப்பவர்தான் முத்துலிங்கம்.
(நன்றி: மல்லிகை 2009 மார்ச்)
---00--
No comments:
Post a Comment