இலங்கைச் செய்திகள்


"எங்களால் தெரிவுசெய்யப்பட்ட நீங்கள் நீதியை நிலைநாட்டுங்கள்"

 சரத் வீரசேகர குழுவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்குமிடையில் ஜெனிவாவில் வாதப்பிரதிவாதம்

 களேபரமான ஜெனிவா உபகுழுக்கூட்டம் : சரத் வீரசேகர குழுவினரும் புலம்பெயர் அமைப்பினரும்   வாக்குவாதம்

கோத்தாவின் கீழ் இயங்கியோரே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தினர் ; ஜெனிவாவில் தெரிவித்த பெண்

 "10 வரு­டங்­க­ளாக எனது மகனை தேடி அலை­கின்றேன்"

செய்நன்றி மறக்கமாட்டேன் : யாழில் ஜனாதிபதி 

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழில் ஆர்ப்பாட்டம்

ஜெனிவா உபகுழுக்கூட்டத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய சரத் வீரசேகர


"எங்களால் தெரிவுசெய்யப்பட்ட நீங்கள் நீதியை நிலைநாட்டுங்கள்"

21/03/2018 தொண்டர் ஆசிரியர்களாக நீண்ட காலமாக சம்பவத் திரட்டுப் பதிவேடுகள் முறையாக பதிவு செய்யப்பட்டும் எமக்கு நியமனம் கிடைக்கவில்லை. ஆனால் பதிவேடுகள் இல்லாதவர்களுக்கு நியனமங்கள் வழங்கப்படுகிறது. இது யாருடைய அரசியல் தலையீடு. வடமாகாண முதலமைச்சராகிய நீங்கள் இதனை கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர் அலுவலக முன்பாக தொண்டராசிரியர்கள் போராட்டம் மேற்கொண்ட நிலையில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தார்கள். 
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 
எங்களால் தெரிவு செய்யப்பட்ட நீங்கள் எங்களுடைய கோரிக்கைகளை கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகின்றோம். குறிப்பாக வங்கியில் வேலை செய்யும் ஒருவருக்கு எவ்வாறு தெண்டராசிரியர் நியமனம் வழங்க முடியும். 
சிவில் பாதுகாப்பு பிரிவின் முன்பள்ளி ஆசிரியராக கடமையாற்றுபவர்களுக்கு எவ்வாறு நியமனம் வழங்க முடியும். 1992 ஆம் ஆண்டு பிறந்தவருக்கு எவ்வாறு தெண்டராசிரியர் நியமனம் வழங்க முடியும். பாடசாலை அதிபர்  சம்பவத் திரட்டுப் பதிவேடு போலியாக பதிவு செய்ய முடியும் அவ்வாறும் நடைபெற்றுள்ளது. 
மேலும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் எவ்வாறு ஒருவர் நன்றாகப் படிப்பிக்கின்றார் என்பதை எழுத்தில் கொடுக்க முடியும். இவ்வாறு பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. 
மேலும் நேர்முகத் தேர்வு நடைபெற்றபோது முறையான பல ஆவணங்கள் வழங்கியுள்ள போதும் எமக்கான நியனமங்கள் கிடைக்கவில்லை. எனவே இவ்வாறான முறைகேடுகளை விசாரித்து நீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.   நன்றி வீரகேசரி 










சரத் வீரசேகர குழுவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்குமிடையில் ஜெனிவாவில் வாதப்பிரதிவாதம்

21/03/2018 ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற  இலங்கை தொடர்பான  ஒரு உபகுழுக்கூட்டத்தில் புலம்பெயர் அமைப்பினருக்கும்  தென்னிலங்கையிலிருந்து கலந்துகொண்ட   எளிய  அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் மீண்டும்  வாதப்பிரதிவாதங்கள்   ஏற்பட்டன. 
இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐக்கிய நாடுகள் விசாரணை அலுவலகத்தை அமைக்க முடியுமா என  புலம்பெயர் அமைப்பினர் கேள்வி எழுப்பினர்.  இதன்போதே சர்ச்சை ஏற்பட்டது.  
எளிய அமைப்பின்  பிரதிநிதிகள்  ஏற்பாடு செய்திருந்த  இந்த   உபகுழுக்கூட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும்  கலந்து கொண்டிருந்தனர்.  

அத்துடன்   இந்த  உபகுழுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த புலம்பெயர் அமைப்புக்களின்  பிரதிநிதிகள் எளிய அமைப்பினரிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.  
முதலில் கருத்து வெளியிட்ட எளிய அமைப்பின்  பிரதிநிதிகள் யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள்   தொடர்பாக உங்களுக்கு என்ன தெரியும் என  புலம்பெயர் அமைப்பினரைப் பார்த்து  கேட்டார்.  
அப்போது குறுக்கிட்ட புலம்பெயர் அமைப்பின்   பிரதிநிதி மணிவண்ணன்  எங்களுக்கு எல்லாம் தெரியும் என்றார். 
தொடர்ந்து உரையாற்றிய எளிய அமைப்பின் பிரதிநிதிகள் தயவு செய்து எங்களைப் பேசவிடுகள் என்று கூறி தமது கருத்துக்களை முன்வைக்க  ஆரம்பித்தனர். 
இந்த நிகழ்விற்கு  ரியர் எட்மிரல்  சரத் வீரசேகர தலைமைதாங்கினார். அப்போது எளிய அமைப்பின் பிரதிநிதியொருவர் குறிப்பிடுகையில்  நீங்கள் உங்கள் கேள்விகளை எங்களிடம் கேட்கலாம் என குறிப்பிட்டார். 
இதன்போது புலம்பெயர் அமைப்புக்கள் கேள்விகளை தொடுத்தனர். அதனையடுத்து  எளிய அமைப்பின் பிரதிநிதி சரத் வீரசேகர குறிப்பிடுகையில்;
இலங்கையில் இருந்த ஐ.நா. அதிகாரிகூட யுத்தத்தில்  7ஆயிரம் பேர் அளவிலேயே உயிரிழந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். 
அதாவது  புலி உறுப்பினர்களையும் சேர்த்தே   இந்த  எண்ணிக்கையிலேயே உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்திருந்தார்.  அது ஒரு உத்தியோகப்பூர்வ ஆவணம். அது அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களுடன்  ஒத்துப்போகின்றது.  
மே 13 ஆம் திகதிவரை  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  7 ஆயிரம் அளவிலேயே  இருந்தது.  இவ்வாறு சரத் வீரசேகர உரையாற்றிக்கொண்டிருந்த போது புலம்பெயர் அமைப்பினர் அவரை இடைமறித்து குறுக்கு கேள்விகளை எழுப்பினர்.  அப்போது யுத்தம்  தொடர்பான சில விடயங்களை   நாடுகடந்த தமிழீழ  அரசாங்கத்தின் பிரதிநிதியான  மணிவண்ணன்  வெளியிட்டுக்கொண்டிருந்தார்.  அந்த சந்தர்ப்பத்தில் அது உங்கள் கருத்து என சரத் வீரசேகர குறிப்பிட்டார். 
அந்த கட்டத்தில் கருத்து வெளியிட்ட மணிவண்ணன் குறிப்பிடுகையில்,
 இந்த புள்ளிவிபரங்களில்  பிரச்சினை இருப்பதனாலேயே   சுயாதீன விசாரணையை கோருகின்றோம். பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. அதனால் விசாரணையை நடத்துவோம் என்றார்.  அத்துடன் இதன்போது இரண்டு தரப்புக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் மேசையில் தட்டிய  எளிய அமைப்பின் பிரதிநிதிகள்   உங்கள்  கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுவிட்டது.  
 நாங்கள் மிகவும் புனிதமான மனித உரிமை பேரவை என்ற  இடத்தில் இருக்கின்றோம்.  எங்களிடம் ஒரு கதை  இருக்கிறது. உங்களிடம்  ஒரு கதை இருக்கிறது.   நாங்கள்   ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அதற்கென சில கொள்கைகள் உள்ளன.   நாம் எமது பக்கத்தை கூறுகின்றோம். இன்னொரு  வடிவம்   வேறுவகையாக   இருக்கலாம் என்றார். 
இந்நிலையில்    நாடுகடந்த அரசாங்கத்தின் சார்பில் மணிவண்ணன் உரையாற்றுகையில்,
 நீங்கள் ஒரு பக்கத்தையே  எடுக்கின்றீர்கள்.  இலங்கையில்  அனைத்து மக்களுக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது. அதனை கேள்விக்குட்படுத்த முடியாது.   2008 ஆம்ஆண்டுக்கு முதலே ஐ.நா. காண்காணிப்பாளர்களை வெளியேற்றிவிட்டீர்கள். 
நீங்கள்  ஒரு இனப்படுகொலை யுத்தத்தை நடத்தினீர்கள். நீங்கள் ஏன் யுத்த சூனியவலயத்தில்  தாக்குதல்  நடத்தினீர்கள்.  நீங்கள் ஏன் அங்கு   ஆயுதப்பிரயோகங்களை நடத்தினீர்கள். ஏன் மருத்துவ மனைகள் மீது ஷெல்தாக்குதல்களை நடத்தினீர்கள்.  நீங்கள் மூன்று இலட்சம் மக்களை விடுதலை செய்ததாக கூறுகின்றீர்கள்.  தமிழ் மக்கள் உங்களை அழைத்து தம்மை விடுவிக்குமாறு கோரினார்களா?  உணவு அங்கு அனுப்பப்படவில்லை.  நீங்கள் அந்த மக்களை   செங்கம்பளத்திலா வரவேற்றீர்கள்.  
ஆனால்  அவர்களை முகாம்களுக்குள் போட்டீர்கள்.  இப்படியான  நல்ல பணிகளை   முன்னெடுத்திருந்தால் ஏன் சர்வதேச  பொறிமுறைக்கு  அஞ்சுகின்றீர்கள். குற்றமொன்றும் செய்திருக்காவிடின் ஏன்  சர்வதேச விசாரணைக்கு அஞ்சுகின்றீர்கள்.   ஐ.நா. அதிகாரிகளை ஏன் இலங்கையில் அனுமதிக்காமல் இருக்கின்றீர்கள்.  வடக்கு, கிழக்கில்  உங்களால்  விசாரணை அலுவலகத்தை   ஸ்தாபிக்க  முடியுமா என நான் சவால் விடுக்கின்றேன்.  ஏன் தமிழ்  மக்களின் காணிகளை அபகரித்தீர்கள்? இவ்வாறு மணிவண்ணன் கேள்வி எழுப்பும் போதும்  எளிய அமைப்பினர் குறுக்கீடு செய்தனர். 
என்னை  கேள்வி எழுப்புவதற்கு  இடமளியுங்கள் என்று கோரிய  மணிவண்ணன்  எனக்கு கேள்வி  எழுப்ப   இடமளியுங்கள்  என்று கேட்டுவிட்டு   கேள்வி எழுப்புகையில் உங்களிடம்  பெண்கள்  தமது பிள்ளைகளையும் கணவன் மாரையும் ஒப்படைத்தார்கள். ஆனால் அவ்வாறு  பொறுப்பேற்கப்பட்ட   பட்டியலைக்கூட  நீங்கள் இதுவரை வெளியிடவில்லை. ஏன்  அந்த  ஆவணத்தை வெளியிடாமல் இருக்கின்றீர்கள்.  ஏன் இந்தக்கேள்விக்கு பதிலளிக்காமல்  இருக்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.     நன்றி வீரகேசரி 









 களேபரமான ஜெனிவா உபகுழுக்கூட்டம் : சரத் வீரசேகர குழுவினரும் புலம்பெயர் அமைப்பினரும்   வாக்குவாதம்

21/03/2018 ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில்  உபகுழுக்கூட்டம் நடைபெற்றது.   இதன்போது இலங்கை மனித   உரிமை நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த உபகுழுக்கூட்டத்தில்  தென்னிலங்கையிலிருந்து ஜெனிவா வந்துள்ள   எளிய அமைப்பின் பிரதிநிதிகள்  மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.  
இந்த  உபகுழுக்கூட்டத்தில்  எளிய அமைப்பின் பிரதிநிதியான நாலக்ககொடஹேவா உரையாற்றுகையில்,
இலங்கையில்  முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து 1991 ஆம் ஆண்டு 48 மணிநேரத்தில்  வெளியேற்றப்பட்டனர் என்று கூறிக்கொண்டிருக்கும்போது அவருக்கு  பேசுவதற்கு  இடையூறு விளைவிக்கப்பட்டது.   இருந்தும் தன்னை முதலில் பேச விடுமாறு  நாலக்ககொடஹோ  கூறி   பேச முயற்சித்தார். பின்னர் அவருக்கு  பேசுவதற்கு  சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. 
 அவர் உரையாற்றுகையில்;
பயங்கரவாத அமைப்பான புலிகள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை  48 மணிநேரத்தில் வெளியேறுமாறு கோரினர்.   அவ்வாறு  வெளியேற முடியாத 600 முஸ்லிம்கள்  கொல்லப்பட்டனர்.   இவ்வாறு தான் புலிகள் செயற்பட்டனர்.  
தமிழ், முஸ்லிம் மக்கள் எமது சகோதரர்கள்,    இலங்கையில் பிறந்தவர்களுக்கு  இலங்கை சொந்தமான நாடாகும்.  அங்கு எந்த பிரச்சினையும் இல்லை.   அந்த  உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.  இலங்கை பிரச்சினை குறித்து பேசுபவர்கள்  எனது நாடு  புலிகளின் பயங்கரவாதத்தில் சிக்கியிருந்ததை  மறந்துவிட்டீர்கள். 
எத்தனை சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று    நாலக்ககொடஹேவா உரையாற்றிக்கொண்டிருக்கும்போது   உபகுழுக்கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தவர்கள்  அவரின் பேச்சை முடிக்குமாறு கோரினர். இதனையடுத்து   எளிய அமைப்பின் பிரதிநிதிகளுக்கும்  உபகுழுக்கூட்டத்தை    நடத்திக்கொண்டிருந்தவர்களுக்குமிடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதன்போது   புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏன் உண்மையை மறைக்கின்றீர்கள் என எளிய அமைப்பினரைப்பார்த்து கேள்வி எழுப்பினர். அந்த சந்தர்ப்பத்தில்  உபகுழுக்கூட்டத்தில்  களேபர நிலைமை ஏற்பட்டதுடன்   கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அனைவரும் கூச்சலிட ஆரம்பித்தனர்.  
இந்த சூழலில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உபகுழுக்கூட்டத்தை  நடத்தியவர்கள் முயற்சித்தபோதும்  முடியாமல் போனது.   அமைதியாக இருங்கள், அமைதியாக இருங்கள்  என  கூட்டத்தை நடத்தியவர்கள் கோரிக்கை விடுத்தபோதும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. புலம்பெயர் அமைப்பினரும்    எளிய அமைப்பின் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 
அதாவது எளிய அமைப்பின் பிரதிநிதிகள் உபகுழுக்கூட்டத்தின் நடைமுறைகளை மீறுவதாக  புலம்பெயர் அமைப்பினர் குற்றம்சாட்டினர்.  இதன்போது  மற்றுமொரு எளிய அமைப்பின் பிரதிநிதி  உரையாற்றுகையில்,
தமிழ் மக்களின்  கொலை தொடர்பில் பேசுகிறீர்கள். எவ்வளவு சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர் என்று உங்களுக்குத்  தெரியுமா? எங்களிடம்  சாட்சியங்கள் உள்ளன. கர்ப்பிணித்தாய்மார்கள் கொல்லப்பட்டனர்.  குழந்தைகளை கொன்றனர்.  இவ்வாறு  அந்த பிரதிநிதி உரையாற்றிக்கொண்டிருக்கையில் மீண்டும்  கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.  அப்போத எளிய அமைப்பின் பிரதிநிதி  பல ஆவணங்களை எடுத்து சபையினருக்கு காண்பித்தார்.   
இதன்போது  கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட ஆரம்பித்தனர். இரண்டு தரப்பினரும்  மாறிமாறி குற்றச்சாட்டுக்களை  முன்வைத்தனர். எளிய அமைப்பினரும்    புலம்பெயர் அமைப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். இரண்டு தரப்பினரும்  எழுந்து நின்று கடும் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.  
இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த   உபகுழுக்கூட்டத்தை தலைமைதாங்கி நடத்திக்கொண்டிருந்தவர்கள் முயற்சித்த போதும் அது  கைகூடவில்லை. தொடர்ந்து  புலம்பெயர் அமைப்பினரும் எளிய அமைப்பினரும் வாக்குவாதப்பட்டுக்கொண்டே  இருந்தனர்.   தொடர்ந்து இரண்டு தரப்பினருக்கிடையில் வாய்த்தர்க்கம் முற்றியநிலையில் அருகருகே சென்று  சத்தமிட ஆரம்பித்தனர்.  
இந்நிலையில்  உபகுழுக்கூட்டத்தை தலைமைதாங்கி நடத்தியவர்கள் செய்வதறியாது  திகைத்திருந்தனர்.  அப்போது இரண்டு தரப்பினரும் பயங்கரவாதிகள், பயங்கரவாதிகள் என கூச்சலிட்டுக்கொண்டனர்.  வந்து உங்கள் இடங்களில் அமர்ந்து உபகுழுக்கூட்டங்களை  நடத்த உதவுங்கள் என்று கூறியபோதும் அவர்களினால்  நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.   இதனையடுத்து கூட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதுடன் உபகுழு கூட்டம் முடிவுறுத்தப்பட்டது.  நன்றி வீரகேசரி 









கோத்தாவின் கீழ் இயங்கியோரே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தினர் ; ஜெனிவாவில் தெரிவித்த பெண்

20/03/2018 முன்னாள் பாதுகாப்பு செயலளர்  கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய ஒரு குழுவே  எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியது.  
கப்பம் பெறும் நோக்கத்திலேயே இவ்வாறு எனது சகோதரர் கடத்தப்பட்டார்   என்று  ஜெனிவா வந்துள்ள பாதிக்கப்பட்ட  ஜயனி தியாகராஜா  என்ற பெண்  ஜெனிவா மனித உரிமை பேரவையில்  தெரிவித்தார். 
ஜெனிவாவில் நடைபெற்ற  அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான  நேரத்தின் போது  இலங்கை தொடர்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் மேலும் உரையாற்றுகையில்,

 இலங்கை விவகாரத்தில் சர்வதேச நியாயாதிக்கத்தை வலியுறுத்தியுள்ள   ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் அறிக்கையை வரவேற்கின்றோம்.   
நான் எனது சகோதரன் ஜெகன் தியாகராஜாவுக்காக   நீதி கேட்டு இந்த சபைக்கு வந்திருக்கின்றேன். 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம்திகதி   இலங்கை கடற்படையின் அதிகாரி  சம்பத் முனசிங்கவினால் எனது சகோதரர் கடத்தப்பட்டார்.   
எனது சகோதரரை மீளப்பெறுவதற்காக   அனைத்து விதமான இராஜதந்திர பொறிமுறைகளையும்    எனது  குடும்பம்  பயன்படுத்தியது.  ஆனால் இராணுவ ரீதியான சித்திரவதைகளையே  எதிர்கொண்டோம்.  
எங்களது தனிப்பட்ட  நிதி நிலைமை காரணமாக   சகோதரரை மீளப்பெறுவதற்காக ஒருமில்லியன் கப்பம் கொடுத்தோம்.  ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.   துப்பாக்கிமுனையில்  பணத்தை பெற்றுக்கொண்டு  எனது  தாயை  தள்ளிவிட்டு சென்றனர். 
2012 ஆம் ஆண்டு விசேட   குற்றவிசாரணை அதிகாரி    நிஷாந்த டி சில்வாவும் அவரது குழுவும்   எனது வீட்டுக்கு வந்து  எனது சகோதரன் காணாமல் போகவில்லை என்றும்  அவர் கடத்தப்பட்டார் என்றும் தெரிவித்தனர்.  
அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலளர்  கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய வசந்த கருணாகொட, சம்பந் முனசிங்க, ஹெட்டிராய்ச்சி, தசநாயக்க உள்ளிட்டவர்கள்  எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியதாக  குறிப்பிட்டனர். கப்பம் பெறுவதற்காகவே இவ்வாறு செய்ததாகவும் கூறினர். 
 இவ்வாறு கடத்தப்பட்ட 11 பேரும் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு  பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்டு மகாவலி ஆற்றில் வீசப்பட்டதாக  நீதிமன்றத்தில் சந்தேக நபர் ஒருவர் தெரிவித்தார்.   அண்மையில்  நான்கு சந்தேகநபர்களும் நீதிமன்றத்தினால்  பிணையில் விடுவிக்கப்பட்டனர். 
கடந்த பத்து வருடங்களாக   எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமது பிரஜைகளையே இவ்வாறு சித்திரவதை செய்து கொன்றுள்ளனர்.   இலங்கை அரசாங்கத்திற்கு  அழுத்தங்களை பிரயோகித்து  எமது அன்புக்குரியவர்கள்  மீள்வருவதற்கு   நடவடிக்கை எடுக்குமாறு   இந்த பேரவையின் தலைவரிடம் கோருகின்றோம் என்றார்.  நன்றி வீரகேசரி 













 "10 வரு­டங்­க­ளாக எனது மகனை தேடி அலை­கின்றேன்"


20/03/2018 எனது மகனை 10 வரு­டங்­க­ளாக தேடி அலை­கின்றேன் என்று  2008 ஆம் ஆண்டில்  காணாமல்போன  மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழக மாண­வனின்   தந்­தையார்  நேற்று ஜெனி­வாவில் தெரி­வித்தார். 
மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழக மாணவன் கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில் அவ­ரது தந்­தையார் தர்­ம­கு­ல­சிங்கம் தற்­போது ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் நீதி கேட்டு ஜெனிவா வந்­துள்ளார். 
அவர்  கேச­ரிக்கு தொடர்ந்தும்  கருத்துக் கூறு­கையில்,
எனது மகன் கடந்த  2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி லங்கா பெல் நிறு­வ­னத்­திற்கு பயிற்ச்­சி­களை பெற்­றுக்­கொள்ள சென்­றி­ருந்தார். அதன் பின்னர் அவர் வீடு திரும்­ப­வில்லை. இப்­போது பத்து ஆண்­டுகள் ஆகின்­றன, இந்த காலத்தில் கொழும்பில் வெள்­ள­வத்தை, கொள்­ளுப்­பிட்டி பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் பொலிஸ் தலைமை அலு­வ­ல­கத்­திலும், குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு உள்­ளிட்ட அனைத்து காவல் நிலை­யங்­க­ளிலும் முறைப்­பா­டுகள் செய்­துள்ளோம். அதேபோல் அமைச்­சர்கள் பல­ரிடம் தமிழ் அமைச்­சர்கள் பல­ரி­டமும் இறுதி­யாக பிர­தமர் மற்றும் ஜனா­தி­பதி என அனை­வ­ரி­டமும் முறைப்­பாடு செய்­துள்ளோம். காணாமல் போனோர் குறித்து கண்­ட­றிய அமைக்­கப்­பட்ட பர­ண­கம ஆணைக்­கு­ழு­விலும் நான் சாட்­சியம் வழங்­கி­யுள்ளேன். முழு­மை­யான விப­ரங்­களை இதில் கொடுத்­துள்ளேன். 
எனது மகன் காணாமல் போனமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மான தக­வல்­களை நான் சேக­ரித்­து­ கொண்­டுள்ளேன். இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு இயங்­காத பொம்­மை­யாக செயற்­பட்டு வரு­கின்­றது. அதன் செயற்­பாட்டால் எமக்கு எந்த நன்­மையும்  இல்லை. பொலிஸும் தக­வல்­களை பதிவு செய்­து­கொண்­டுள்­ளதே தவிர உண்­மை­களை கூறவோ கண்­ட­றி­யவோ முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. இது­வரை எந்த முன்­னேற்­றங்­களும் இல்லை.
பூசா முகாமில் எனது மகன் உள்ளார் என்ற தகவல் கிடைத்து எனது மனைவி அங்கு சென்­றி­ருந்தார். எனது மகன் குறித்து முழு­மை­யான தக­வல்­களை கொடுத்து அவரை அடை­யா­ள­ப்ப­டுத்­திய பின்னர் பார்­வை­யிட அனு­மதி வழங்­கப்­ப­டு­வது வழக்கம். அதே நடை­மு­றையில் எனது மகன் இருக்­கின்றார் என கூறி அனு­மதி வழங்­கப்­பட்­டது. அதன் பின்னர்  எனது மனைவி அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். 
எனினும் சிறிது நேரத்தின் பின்னர் யாரு­டைய தலை­யீடு என தெரி­ய­வில்லை எங்­களை தடுத்­து­விட்­டனர். பின்னர் அவர் பிரத்­தி­யே­க­மாக ஒரு சிறையில் இருப்ப­தா­கவும் அங்கு எவ­ருக்­குமே பார்­வை­யிட அனு­மதி இல்லை எனவும் நாம் அறிந்­துகொண்டோம். மீண்டும் நாம் சில முயற்­சி­களை மேற்­கொண்டோம். அங்கு உள்ள சில பொலிஸ் உறுப்­பி­னர்­க­ளுக்கு எனது மகன் குறித்து தக­வல்கள் தெரியும் என உறு­தி­யாக கூற முடியும். எனது மகனின் தொலைபேசியை பாவித்தது ஒரு பொலிஸ் அதிகாரி என்பது நீதிமன்றத்தில் உறுதியாக்கப்பட்டுள்ளது. அவரது பெயர் சரத் சந் திர என தெரிவித்துள்ளனர். எனக்கு மேலும் தகவல்கள் கிடைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றேன்.  நன்றி வீரகேசரி 









செய்நன்றி மறக்கமாட்டேன் : யாழில் ஜனாதிபதி 

19/03/2018 செய்நன்றி மறவாமை காரணமாகத்தான் வடக்கிற்கு வருகை தந்துள்ளேன். சிலர் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலினை தயாரித்து எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று செயற்படுகிறார்கள். நான் இலங்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றியே சிந்திக்கின்றேன் என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். 
காணாமற்போனோர் சம்பந்தமாக அதற்கான சட்டம் ஒன்றை உருவாக்கி அதற்கு ஒரு குழு ஒன்றை நியமித்துள்ளோம். காணாமற் போனோர் தொடர்பான குடும்பங்களின் நலன் தொடர்பில் அந்தக் குழு செயற்பட்டு வருகின்றது. எங்களுடைய வேலைத்திட்டம் தொடர்பில் சரியாக தெளிவுபடுத்தி உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 
புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டட திறப்பு விழாவில்  பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் 
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல் நிலை எல்லோருக்கும் தெரியும். நாட்டுக்கு அன்பு செலுத்துகின்ற அரசியல்வாதிகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பது பிரச்சினையாகவே உள்ளது. 
அரசியல் ஆதாயம் பெறுவதற்காக சிலர் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை தயாரித்து வைத்துள்ளார்கள். அவர்களுக்கு நாட்டின் பிரச்சினையை  தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை.  
அடுத்த ஜனாதிபதி பிரதமர் யார் என்பதுதான் அவர்களுக்குப் பிரச்சினையாகவுள்ளது. மக்களுக்கு அதுவல்ல பிரச்சினை. சிலர் நீண்டகாலமாக இப்படி செயற்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் ஒரு சிலர் மாத்திரமே நாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்பட்டு வருகின்றார்கள்.
எனவே நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் ஒரு தகவலை சொல்லுகிறேன். நாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்படுவோம். தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் எங்களுக்குத் தேவையில்லை. நாளைய தினத்தில் நாடு எங்கு போக வேண்டும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை. அதனைத்தான் நாங்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும். 
எனது பலவிதமான பிரச்சினைகளுக்கு மத்தியிலும்  இங்குள்ள பாடசாலை மாணவர்களுக்கும், பாசடாலைக்கும் இங்குள்ள வடக்கு மக்களுக்கும் ஒரு கெளரவத்தை வழங்குவதற்காக இங்கு நான் வந்தேன். 
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது உரையின்போது, தேர்தலின் போது வடக்கு மக்கள் எனக்கு ஆதரளிவத்தமை தொடர்பில் குறிப்பிட்டார். அந்த செய்நன்றி மறவாமை காரணமாகத்தான் வடக்கில் இருக்கக்கூடிய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தவறாது கலந்து கொள்கின்றேன். எங்களுக்கு பலவிதமான அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தப் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அப்பால் போக வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அதுதான் மனிதாபிமானம். மனிதர்கள் மீது அன்பு காட்டுபவர்களும், சேவை செய்வதும் அவர்கள் கடமையும், பொறுப்பும் ஆகும். அந்தக் கொள்கையுடன் நான் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். 
நான் இங்கு வரும்போது காணாமற்போனனோர் தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாங்கள் காணாமற் போனோர் சம்பந்தமாக அதற்கான சட்டம் ஒன்றை உருவாக்கி அதற்கு ஒரு குழு ஒன்றை நியமித்துள்ளோம். காணாமற் போனோர் தொடர்பான குடும்பங்களின் நலன் தொடர்பில் அந்தக் குழு செயற்பட்டு வருகின்றது. எங்களுடைய வேலைத்திட்டம் தொடர்பில் சரியாக தெளிவுபடுத்தி உள்ளோம். நீங்களும் நாங்களும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டுக்காக எங்களுடைய கடமைகளை செய்வோம். இனங்கள் மத்தியில் ஒற்றுமைய ஏற்படுத்துவோம். எங்களிடம் இருக்கின்ற முறுகல் நிலையை இல்லாது செய்வோம். அதற்காக எல்லோரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம் என்றார். 
இதேவேளை ஜனாதிபதி தனது உரையின்முடிவில் வணக்கம், நன்றி எனத் தமிழில் கூறியமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 








ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழில் ஆர்ப்பாட்டம்

19/03/2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்தைக் கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் கல்லூரி பழையமாணவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூட திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இன்று யாழ். சென்ற  நிலையிலேயே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியின் யாழ் விஜயத்தை எதிர்த்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தலைமையில் பத்திரிசியார் கல்லூரி சந்தியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 
இறுதி யுத்தத்தின் போது அருட்தந்தை பிரான்ஸிஸ் தலைமையில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என கோஷங்களை எழுப்பியவாறு அவர்களது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் பத்திரிசியார் சந்தியிலிருந்து புனித பத்திரிசியார்  கல்லூரி நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போதிலும் அவர்களை காவற்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

இந்தத் திறப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
புனித பத்திரிசிரியார் கல்லூரி முன்னாள் அதிபர் அருட்தந்தை பிரான்ஸிஸ் தலைமையில் இராணுவத்தினர் இடம் சரணடைந்தோர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், அருட்தந்தை அதிபராக இருந்த கால பகுதியில் புனித பத்திரிசிரியார் கல்லூரியில் கல்விகற்ற மாணவர்களும் அருட்தந்தை தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் போது பொலிஸார் போராட்டகார்கள் மூவரை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து அருட்தந்தை சக்திவேல் தலைமையில் மூவரை அழைத்து சென்றிருந்தனர்.
அது தொடர்பில் அருட்தந்தை தெரிவிக்கையில்,
ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்துதருவதாக வாக்குறுதி அளித்து பொலிஸார் எங்களில் மூவரை அழைத்து சென்றனர். 
ஜனாதிபதிக்கு நாங்கள் சந்திக்க வந்துள்ளதாக பொலிஸார் எழுத்து மூலமாக ஜனாதிபதிக்கு அறிவித்து இருந்தனர். 
ஆனால் நிகழ்வின் இறுதி வரையில் எங்களை சந்திக்கவில்லை. இங்கே நாங்கள் காணாமல் போனோர் விடயமாக போராடிக்கொண்டு இருக்கின்றோம். 
அருட்தந்தை ஜிம்ரோன், அருட்தந்தை பிரான்சீஸ் இவர் இந்த கல்லூரியின் அதிபராக இருந்துள்ளார். 
ஆனால் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரோ, எதிர்க்கட்சித் தலைவரோ, கல்லூரி நிர்வாகமோ ஜனாதிபதி முன்னிலையில் அது தொடர்பில் பேசவில்லை. 
ஜனாதிபதியிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என அரசியல் தலைவர்கள் கல்லூரி நிர்வாகம் கேட்டு இருக்க வேண்டும்.
ஆனால் அது தொடர்பில் எவரும் பேசவில்லை. இந்த கூட்டத்தின் இறுதிவரையில் நாங்கள் காத்திருந்தோம் ஜனாதிபதி எங்களை சந்திப்பார் என, ஆனால் இறுதிவரை எங்களை அவர் அழைத்து சந்திக்கவில்லை. 
ஜனாதிபதியின் இந்த செயற்பாடு எங்களை அவமானப்படுத்தியதாகவே கருதுகின்றோம். எங்கள் மூவரை அழைத்து அவமானப்படுத்தியதாக நினைக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமானப்படுத்தியதகவே கருதுகின்றோம் என தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 









ஜெனிவா உபகுழுக்கூட்டத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய சரத் வீரசேகர

19/03/2018 ஜெனிவாவில் இன்று நடைபெற்ற   இலங்கை மனித  உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற   உபகுழுக்கூட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து  சென்றுள்ள எலிய அமைப்பின் பிரதிநிதியான சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர்   சர்ச்சையை  ஏற்படுத்தும் வகையில் கேள்விகளை ஏற்படுத்தியமையினால் உபகுழுக்கூட்டத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டதுடன்   குறிப்பிட நேரத்திற்கு முன்தாகவே கூட்டம் நிறைவடைந்தது. 
குறிப்பாக சரத் வீரசேகர தலைமையிலான  எலிய அமைப்பின் பிரதிநிதிகள்    உபகுழுக்கூட்டத்தை வழிநடத்திய சர்வதேச பிரதிநிதியான போல் நியூமனுடன்   முரண்பட்ட நிலையிலேயே  கூட்டம் சர்ச்சைகளுடன்  நிறைவுக்கு வந்தது. 
சர்வதேச மனித உரிமை அமைப்பொன்றின் முக்கியஸ்தரான  போல் நியூமன் தலைமையில்   இலங்கை மனித  உரிமை நிலைமையில்  ஐ.நா.வின் மீளாய்வு    என்ற விசேட  உபகுழுக்கூட்டம்    ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில்  நடைபெற்றது.  

 இந்த   உபகுழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ்ப்பாணத்தில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தென்னிலங்கையின் எலிய அமைப்பின் பிரதிநிதிகள்  என பலரும் கலந்து கொண்டனர். 
இதில் முதலில் உரையாற்றிய  யாழ்.  மனித உரிமை செயற்பாட்டாளர் மணிவண்ணன் குறிப்பிடுகையில்;
காணாமல்போனோர் குறித்து ஆராய   காணாமல்போனோர் அலுவலகம்  நியமிக்கப்பட்டுள்ளது. அதில் மக்களுக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள்  ஜனாதிபதியையும் பொலிஸ்மா அதிபரையும் சந்தித்தும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. 
எனவே காணாமல்போனோர் அலுவலகம்   இந்தப் பிரச்சினைக்கு தீர்வைத் தரும் என்று நாங்கள் நம்பவில்லை. அரசியல் தீர்வும் கிடைக்காத நிலைமையே காணப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டமும்  இன்னமும் நீக்கப்படவில்லை.   
காணிகளும்  விடுவிக்கப்படவில்லை.  காணாமல்போனோர் தொடர்பில்  பரணகம குழுவிடம் 24 ஆயிரம் முறைப்பாடுகள் உள்ளன.  சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் 16 ஆயிரம் முறைப்பாடுகள் உள்ளன.  மனித  உரிமை ஆணைக்குழுவிடமும் முறைப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நாம் நம்பவில்லை என்றார். 
இதனையடுத்து   பாதிரியார் ஜெயபாலன் குரூஸ் உரையாற்றுகையில்,
இன்று ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருக்கின்றார்.  அவர் அங்கு சென்றபோது காணாமல்போனோரின்  உறவுகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தின் போது  ஒருசிலர் ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டும் அவர் மறுத்துவிட்டார். எனவே இங்கு நீதியை எதிர்பார்க்க முடியாது என்றார். 
இதனையடுத்து உரையாற்றிய  எலிய அமைப்பின் பிரதிநிதியான  சரத் வீரசேகர  இங்கு காணாமல்போனோர் தொடர்பில் அனைவரும் இராணுவத்தையே குற்றம் சுமத்துகின்றனர். ஆனால்   புலிகள்  எந்தளவான மனித உரிமை மீறல்களை  செய்தனர். சிறுவர்கள்  கடத்தப்பட்டு  ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.  
 புலிகள் கொலைகளை செய்தனர். ஆனால் இராணுவம்  மனித உயிர்களை காப்பாற்றியது.     புலிகள் சிறுவர்களை கடத்தியமை தொடர்பில் நீங்கள்  அறிவீர்களா என்று உபகுழுக்கூட்டத்தை   தலைமை தாங்கிய போல் நியூமனைப்பார்த்துக் கேள்வி எழுப்பினார்.  அதற்கு   பதிலளித்த போல் நியூமன்  இது தொடர்பில்   கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதிலளிப்பார் என்றார். 
இதனையடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  புலிகள் சிறுவர்களை ஆட்சேர்ந்தமை தொடர்பில் ஐ.நா.வுடன் இணைந்து நடவடிக்கை எடுத்ததாகவும் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் குறிப்பிட்டதுடன் அது தொடர்பில் விளக்கமொன்றை அளித்தார். இதன்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய சரத் வீரசேகர தான் இந்தக்கேள்வியை  உபகுழுக்கூட்டத்தை நடத்திய போல் நியூமனிடமே  கேட்டதாகவும்    அதற்கு கஜேந்திரகுமார் எவ்வாறு விளக்கமளிக்க முடியும் எனவும்  கேள்வி எழுப்பினார். 
அத்துடன்  இவ்வாறு பக்கச்சார்பான முறையில் போல் நியூமன்  உபகுழுக்கூட்டத்தை நடத்த முடியுமா என்றும்  கூறினார்.  இதனையடுத்து கருத்து வெளியிட்ட  போல் நியூமன்  நான் எனது கடமையை செய்கின்றேன். நீங்கள் அதில் தலையிட வேண்டாம்.   இதனையடுத்து போல் நியூமனுக்கும் சரத் வீரசேகர தரப்பிற்கும் முரண்பாடு ஏற்பட்டது.
 மேலும்   சிறிதரன் எம்.பி.யும்  பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை தொடர்பில் விளக்கமளிக்க முயன்றார். எனினும் சரத் வீரசேகர  போல் நியூமனுடன் முரண்பட்டதால் உபகுழுக்கூட்டம்  முரண்பாடுகளுடன் நிறைவடைந்தது.  நன்றி வீரகேசரி 







No comments: