அழுகிறதே அறிவுலகு ! - எம் . ஜெயராமசர்மா



          ஊனநிலை வந்தாலும் ஊக்கமதை இழந்திடாமல்
               தானெடுத்த முயற்சிதனில் சாதனையைப் படைத்துநின்ற
          இங்கிலாந்தின் விஞ்ஞானி இணையில்லா ஸ்டீபன்தனை
                எல்லோரும் வியந்துநின்று இதயத்தால் வாழ்த்துகிறார் !

image1.JPG        பேசாத நிலையினிலும் பெருங்கருத்தை வெளியிட்டார்
              பேராசிரியாய் இருந்து பெரும்பொறுப்பை நிருவகித்தார்
        பெருங்குறைகள் தனக்கிருந்தும் பேதலிக்கா மனமுடனே
                பேரண்டம் தனையாய்ந்து பெருமைதனைப் பெற்றுநின்றார் !


        வைத்தியர்கள் கைவிட்டும் மனமுடைந்து போகாமல்
              வாழுவேன் எனும்துணிவில் மற்றவரை வியக்கவைத்தார்
        வாழ்ந்துநின்ற வாழ்க்கைதனை வையகத்துக் குதவவைத்தார் 
              மறைந்தாலும் ஸ்டீபன்ஹாக் மக்கள்மனம் உறைகின்றார் !

       புறவழகை அவரிழந்தார் அகவழகில் அவர்நிறைந்தார்
            புத்தூக்கம் புத்துணர்ச்சி மொத்தமாய் அவர்மிளிர்ந்தார் 
       வருங்கால இளைஞருக்கு அவருழைத்த நல்லுழைப்பு
             வாழ்வுக்கு வழிகாட்டும் மாமருந்தாய் இருக்குதன்றோ !

      கணனிதனை வசமாக்கி கருத்தனைத்தும் கொடுத்துநின்று
            உலகிலினிலே விஞ்ஞான சாதனையால் உயர்ந்துநின்றார் 
      நிலவுலகில் ஸ்டீபனைப்போல் இருப்பாரை யாம்காணோம் 
            அவர்பிரிவை நினைத்தேங்கி அழுகிறதே அறிவுலகு ! 





                








No comments: