அஞ்சலி குறிப்பு: - முருகபூபதி

.
   நவீன நாடகத்துறையிலும் இதழியலிலும்  சமூகப்பார்வையை  வேண்டி நின்ற கலைஞன்
"என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி"


                                                                           
சென்னை கே.கே. நகரில் இலக்கம் 39, அழகிரிசாமி தெருவில் ஒரு வீடு. எப்பொழுதும் கலகலப்பிற்கு குறைவிருக்காது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைப்படத்துறையினர், தொலைக்காட்சிகளைச்சேர்ந்தவர்கள், தொழிற்சங்க, அரசியல் செயற்பாட்டாளர்கள்.... இவ்வாறு யாராவது வந்துபோய்க்கொண்டேயிருப்பார்கள்.
அவ்வாறு வந்துபோய்க்கொண்டிருந்தவர்களும் இன்னும் பலரும் அதே வீட்டில் யாரை இதுவரைகாலமும் பார்க்க வந்தார்களோ, அவரை வழியனுப்ப வந்திருக்கும்போது நான் அவுஸ்திரேலியாவிலிருந்து இந்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதுகின்றேன்.
அந்த வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறிய கிணறு இருக்கிறது. அருகிலே சில மரங்கள், செடிகள். சிறிய முற்றம். அந்த இடத்திற்கு  கேணி என்றும் பெயர். அங்குதான் இங்கு குறிப்பிட்ட துறைகளைச்சேர்ந்தவர்கள் சந்தித்து  உரையாடுவார்கள். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் உட்பட பலரும் அங்கு வந்து உரையாற்றியிருக்கிறார்கள். ஜெயமோகன் தொலைவிலிருந்து வருவதால் அங்கு தங்கியிருந்தும் சென்றிருக்கிறார்.
இவ்வாறு பலர் வந்துசென்ற இடம்,  நேற்றிலிருந்து  ஞாநியின் மறைவால் நிறைந்திருக்கிறது.ஒரு காலத்தில் பரீக்‌ஷா ஞாநி எனஅழைக்கப்பட்ட  ஞாநி எனக்கு அறிமுகமானதே எதிர்பாராத நிகழ்வுதான். 1993 ஆம் ஆண்டென்று நினைக்கின்றேன். அவுஸ்திரேலியாவில் மெல்பனிலிருக்கும் எனக்கு ஒரு  தொலைபேசி அழைப்பு வந்தது.
மறுமுனையில் பேசியவர் தன்னை பரீக்‌ஷா ஞாநி என்றார். எழுத்துலகில் நான் நன்கு அறிந்தபெயர்.
சுபமங்களா ஆசிரியர் கோமல்  சாமிநாதன் தொலைபேசி இலக்கம் தந்ததாகச்சொல்லிவிட்டு, சந்திக்கவேண்டும் என்றார். எங்கிருந்து பேசுகிறீர்கள் எனக்கேட்டேன்.
குவின்ஸ்லாந்து மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக இந்திய அரசின் கலாசார தூதுக்குழுவில்  இடம்பெற்று வந்திருப்பதாகவும், மெல்பனுக்கும்  வரவிருப்பதாகவும்  சந்திக்கவேண்டும் எனவும் சொன்னார்.
மெல்பனுக்கு வந்ததும் மீண்டும் தொடர்புகொண்டார். இங்கு பிரசித்தி பெற்ற வின்ஸர் ஹோட்டலுக்குச்சென்று  இரண்டு முறை சந்தித்தேன். ஏற்கனவே அவரது எழுத்துக்களை சுபமங்களாவில் பார்த்திருப்பதனாலும்  எனக்குப்பிடித்தமான சிலரை அவரே பேட்டி கண்டு எழுதியிருப்பதனாலும் அவருடன் நெருக்கமாக பேசுவதற்கு தடையேதும் இருக்கவில்லை.
அன்று முதல் சில மாதங்களுக்கு முன்னர் அவருடன் மின்னஞ்சலில் தொடர்பாடியது வரையில் இலக்கிய - ஊடக நெருக்கம் நீடித்தது.  மேலும் நீடித்திருக்கச்செய்யவிடாமல் காலன் அவரை அழைத்துச்சென்றுவிட்டான்.
சிறுநீரக உபாதையினால் அவர் பல மாதங்கள் அவதிப்பட்டவர். இறுதியாக 2014 ஏப்ரிலில் அவரது குறிப்பிட்ட கேணிச்சந்திப்பு நடக்கும் வீட்டில் சந்திக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனிருந்தவர்.


நாமெல்லாம் எதிர்பாராதவகையில் 2014 ஆம் ஆண்டில்  ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக  ஆலந்தூர் சட்டமன்றத்தொகுதியில் நின்றவேளையிலும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். தேர்தல் அரசியலுக்குள் பிரவேசித்த  தமிழ் எழுத்தாளர்கள் - கலைஞர்கள் என்ற கட்டுரையை எழுதி பதிவேற்றிவிட்டு அதனையும் அவருக்கு அனுப்பியிருக்கின்றேன்.  பின்னர் எதிர்பாராதவகையில் அந்தக்கட்சியிலிருந்தும் வெளியேறிவிட்டார்.
நான் 1993 காலப்பகுதியில் சந்தித்தவேளையில் எழுதிய நேர்காணலை அவுஸ்திரேலியாவில் அக்காலப்பகுதியில் வெளியான மரபு இதழில் எழுதியிருக்கின்றேன். பின்னர் 1998 இல் வெளியான சந்திப்பு நூலிலும் அது இடம்பெற்றது.
அப்பொழுது அவருக்கு ஏற்கனவே சென்னையில் பரிச்சியமான அண்ணாவியார் இளைய பத்மநாதனுக்கும் தகவல் அனுப்பி, அந்த ஹோட்டலுக்கு அழைத்தேன். பின்னர் அவரும் ஞாநியை தமது இல்லத்திற்கு அழைத்து உபசரித்தார்.
ஞாநி, தமது பாடசாலைப்பருவத்திலேயே நாடகமேடைப்பரிச்சியமும் விஞ்ஞானத்திலும் ஆங்கில இலக்கியத்திலும் பட்டமும் பெற்றவர். இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூனியர் போஸ்ட், முதலான பத்திரிகைகளிலும் தீம்தரிகிட, ஏழுநாட்கள், அலைகள், முதலான சிற்றிதழ்களிலும் தனது எழுத்துவண்ணங்களை பதித்தும் பெற்ற அனுபவங்களின் ஊடாக நவீன நாடக மரபுக்கும் வலுச்சேர்த்தவர். இவரது தந்தையார் வேம்புசாமியும் பத்திரிகையாளர்தான் என்பதை காலம் கடந்து தெரிந்துகொள்கின்றேன்.
ஞாநி,  நாடகப்பேராசிரியர் எஸ். ராமனுஜம், டாக்டர் ஜீ சங்கரம்பிள்ளை முதலானோரிடம் நாடகம் பயின்றவர். " வீதி" திறந்த வெளி நாடக இயக்கத்தினை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். ' பரீக்ஷா" நாடகக்குழுவை பிரபல்யப்படுத்தியவர்.
அவரே அதன் அச்சாணி. நா. முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, அம்பை, பிரபஞ்சன், ஜெயந்தன் முதலான பல கலை இலக்கியவாதிகளின் படைப்புகளை நாடகமாக்கி அரங்கேற்றியவர்.
தந்தை பெரியார் பற்றிய திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அவர் பற்றிய ஆவணப்படம் எடுத்தவர்.
நாடக மேதைகள் பாதல் சர்க்கர், விஜய் டெண்டுல்கார் ஆகியோரின் நாடகங்களை தமிழில் அரங்கேற்றியவர். விண்ணிலிருந்து மண்ணுக்கு, கண்ணாடிக்கதைகள் முதலான சில தொலைக்காட்சித்தொடர்களையும் வழங்கியிருப்பவர். சுஜாதா எழுதியிருந்த பிக்னிக் என்ற கதையை  தொலைக்காட்சி நாடகமாக்கிய இயக்குநர். அதில் சௌகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவியும் எழுத்தாளர் அசோகமித்திரனும் நடித்திருந்தார்கள்.
ஒரு நடிகையின் மகளை (சிறுமி)அந்த வீட்டுக்கு அருகிலிருக்கும் ஒரு கார்திருத்தும் கராஜில் வேலைசெய்யும்  இரண்டு சிறுவர்கள் திருத்தவேலைக்கு வந்த காரில் அழைத்துக்கொண்டு பிக்னிக்செல்வார்கள். மகள் கடத்தப்பட்டுவிட்டதாக பதறியடிக்கும் நடிகை பற்றிய கதை. இறுதியில் அந்த அப்பாவிச்சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
ஞாநி,  சுஜாதாவின் கதைக்கு அருமையான திரைக்கதையும் வசனங்களும் எழுதியிருப்பார். பிக்னிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதன் வீடியோ கஸற்றையும் ஞாநி மெல்பன் சந்திப்பில் எனக்குத்தந்திருந்தமையால் பார்க்க முடிந்தது.
சில வருடங்களில் அதே கதையை ரோஜா - பிரபுதேவா நடிக்க திரைப்படமாக்கியிருந்தார்கள். எனினும் திரைப்படத்தை விட ஞாநியின் தொலைக்காட்சி நாடகமே சிறப்பானது என்பது எனது அபிப்பிராயம். இதனை இறுதியாக அவரைச்சந்தித்தவேளையிலும் சொன்னேன். அவரது பதில் சிறிய புன்முறுவல் மாத்திரமே.
மெல்பன் சந்திப்பில், " நாடகப்பிரதிகளில் உள்ள முழுமை நாடகம் மேடையேறும்பொழுது வெளிப்படுவதில்லை என்று ஒரு கருத்து உள்ளதே! இந்த முழுமை குறித்து என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டிருந்தேன்.
அதற்கு அவர்," எந்த நாடகக்கலைஞனுக்கும் எந்த நிகழ்வும் தான் விரும்பிய " முழுமை"யை எய்திவிட்ட உணர்வு கிட்டிவிடுவதில்லை. அதேசமயம், ஒவ்வொரு இயக்குநரின் கையிலும் ஒரு நாடக ஆசிரியனின் பிரதி வெவ்வேறு விதமான முழுமைதான் பெறும். Absolutely என்று வரையறுக்க எதுவும் கிடையாது. வசனங்களை மறந்துபோவது, தவறான நுழைவு, நடிப்பில் பற்றாக்குறை போன்ற அடிப்படைக் கோளாறுகள் இல்லாமல் நடக்கின்ற ஒவ்வொரு நாடக நிகழ்வும் அதனளவில் முழுமையானதுதான். நாடகப்பிரதிக்கு இயக்குநரும் குழுவும் கொடுத்துள்ள வியாக்கியானம் பற்றி எப்பொழுதுமே, எந்தக்குழுவின் நிகழ்விலும் சர்ச்சைக்கு இடமிருந்துகொண்டேதான்   இருக்கும். எனவே அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட Interpretation  ஐ சரியாக வெளிப்படுத்தினார்களா? என்பது மட்டுமே கவனிக்கத்தக்கது. "  என்று பதில் தந்தார்.
நாடக எழுத்தாளர்கள்,  இயக்குநர்களுக்கு மாத்திரமல்ல, படைப்பிலக்கியவாதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அவரது பதில் பயனுள்ளது.
முன்னர் திரைப்பட தணிக்கைச் சபை உறுப்பினராகவும் 'ரி.வி. உலகம்' என்ற இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
மெல்பன் சந்திப்பில் சபா நாடக மரபு எவ்வாறு வணிகமயமானது பற்றியும் வெறும் நகைச்சுவைப்பாங்காக மாறியது பற்றியும் நவீன நாடக மரபின் வளர்ச்சி, வீழ்ச்சி தொலைக்காட்சியின் வருகையால் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றியெல்லாம் உரையாற்றினார். பரீக்‌ஷா கூத்துப்பட்டறை, ஐக்கியா, யவனிகா, ஆடுகளம், பூமிகா, பல்கலை அரங்கம், சென்னை கலைக்குழு, முத்ரா முதலான அமைப்புகள் பற்றியெல்லாம் விரிவாகப்பேசினார்.
தமது இதழியல் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, சுபமங்களாவில் அசோகமித்திரன் உட்பட பலரதும் நேர்காணல்களை எழுதுவதற்கு அனுமதியளித்த கோமல் சாமிநாதன்,  ஜெயகாந்தனை மாத்திரம் சந்தித்து நேர்காணல் எழுதுவதற்கு இறுதிவரையில் அனுமதிக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.
அதற்கான காரணத்தை கேட்டபோழுது, Off the record  எனச்சொல்லிவிட்டு வெளியே பகிரவேண்டாம் என்று காரணங்களை அடுக்கினார்.
கோவி. மணிசேகரனுக்கு சாகித்திய அகதமி விருது கிடைத்தவேளையில் சுபமங்களாவில் கோமல், அதற்கு எதிரான கருத்துக்களை தொகுத்து வெளியிட்டபோது ஜெயகாந்தனிடம் வந்த சுபமங்களா நிருபரை ஜெயகாந்தன் அடிக்காத குறையாக வெளியேற்றியதிலிருந்து Off the record  இன் தாற்பரியத்தை தெரிந்துகொண்டு இறுதியாக 2014  சென்னை சந்திப்பின்போதும் நினைவூட்டினேன்.
ஞாநியின் இதழியல் எழுத்துக்கள் அவ்வப்போது அதிர்வலைகளையும் எழுப்பியிருக்கின்றன. சென்னையில் கலைஞரால் திறந்துவைக்கப்பட்ட  கண்ணகி சிலையை ஜெயலலிதா தனது பதவிக்காலத்தில் அப்புறப்படுத்தியதை கண்டித்து கலைஞர் எழுதியதும்,  அதற்கு எதிர்வினையாற்றி கலைஞரும் கண்ணகியும் கரடி பொம்மையும் என்ற தலைப்பில் ஞாநி எழுதி பரபரப்பூட்டியிருந்தார்.  குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது கரடி பொம்மை. கலைஞர் இந்த வயதிலும் என்றோ தான் கொண்டாடிய  கண்ணகியை  வைத்து விளையாடுகிறார் என்ற தொனி  அதில் தென்பட்டது.  அதனால் அவர் எழுதிய தொடரும் குறிப்பிட்ட இதழினால் நிறுத்தப்பட்டது.
இவ்வாறு வாழ்க்கையில் எழுதி எழுதியே  போராடியவர். சர்ச்சைகளும் பிரச்சினைகளும் அவருடனேயே தொடர்ந்தவை. அதனால் வரும் விளைவுகளைக்கண்டும் அயர்ந்துவிடமாட்டார். அண்மையில் ஆண்டாள்  தொடர்பான வைரமுத்துவின் கருத்துக்களுக்கு வெகுண்டெழுந்த எச்.ராஜா போன்ற இந்துத்துவா கடும்போக்காளர்களுக்கு,  ஏட்டிக்குப்போட்டியாக வன்முறையை தூண்டும் கருத்துக்கள் சொன்ன இயக்குநர் பாரதிராஜாவுக்கும் தமது கண்டனத்தை பதிவுசெய்துவிட்டே கண்ணயர்ந்தவர்தான் ஞாநி. மரணிக்கும் வரையில் தமது கருத்தியலை முன்வைத்தவாறே வாழ்ந்திருப்பவர்.
அவரைச்சுற்றி எப்பொழுதும் யாராவது இருப்பார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டே  தனது கணினியில் எழுதிக்கொண்டிருக்கும் இயல்பையும் கொண்டிருந்தவர். போருக்குப்பின்னர் இலங்கையில் நடந்த இந்தியத்திரைப்பட விழாவைப்பற்றி அவர் பேசியபோதும் யமுனா ராஜேந்திரன் தமது வழக்கமான எதிர்வினைப்பல்லவியை பாடியிருந்தார்.  எதிர்வினைகளுக்கு மத்தியிலேயே அயர்ச்சியின்றி  எழுதிக்கொண்டிருந்தவர்.
இலங்கைப்பிரச்சினை குறித்தும் அவரிடம் அவதானங்கள் இருந்தன. இலங்கைப்படைப்பாளிகள், மற்றும்  புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகள்,  சமூகச்செயற்பாட்டாளர்கள் சிலருடனும்  அவருக்கு தொடர்புகள் நீடித்தன.
இறுதியாகச்சந்தித்துவிட்டு விடைபெறும்பொழுது நான் தங்கியிருந்த மடிப்பாக்கம் என்ற இடத்திற்குச் செல்வதற்கு வழிகாட்டி,  ஒரு ஓட்டோவில்  அவர் ஏற்றிவிடும்போது,  எனது பார்சில் இந்திய ஆயிரம் ரூபா நாணயத்தாள்தான் இருந்தது. அதனை மாற்றவேண்டும் என்று அவரிடம் சொன்னதும், உடனே தனது பார்ஸிலிருந்து ஐம்பது ரூபாவை எடுத்துக்கொடுத்தார்.
"இதனை உங்களுக்கு நான் திருப்பித்தரவேண்டுமே!?"  என்றேன். விரைவில் மீண்டும் அவுஸ்திரேலியா வரவிருப்பதாகவும் அங்கே டொலரில் தாருங்கள்" என்று சொல்லி உரத்துச்சிரித்தார்.
அங்கிருந்தவர்களும் என்னோடு சேர்ந்து சிரித்தனர்.
அந்தச்சிரித்த முகம் இன்று நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டது.
என்னை கடனாளியாக்கிவிட்டு நண்பர் விடைபெற்றுவிட்டார்.
நாடக ஆசிரியனாக, இயக்குநராக, எழுத்தாளராக, விமர்சகராக, இதழாளராக, சமூகச்செயற்பாட்டாளராக, பன்முக ஆளுமையுடன் இயங்கிய ஞாநி, சமூகத்தின் மீதான அக்கறையையே தனது பணிகளின் ஊடாக முன்மொழிந்தவர்.
இனி அந்த கே.கே. நகர் கேணி இல்லம் வெறிச்சோடிப்போகலாம். அங்கு ஞாநியின் மூச்சுக்காற்று வீசிக்கொண்டே இருக்கும்.

letchumananm@gmail.com

No comments: