துரைராஜா ஸ்கந்தகுமார் நினைவுகள் எமது தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்திற்கும் தார்மீக ஆதரவு வழங்கிய சமூகப்பணியாளர் - முருகபூபதி


-->
ஒவ்வொரு வருடமும் முடிவடையும் டிசம்பர் மாதமும், புதிய வருடம் தொடங்கும் ஜனவரி மாதமும்  எனக்கு  சற்று மனக்கலக்கமாக இருக்கும்.
கடந்த சில வருடங்களாகவே இந்தக்கலக்கம் தொடருவதற்கு காரணம் சிலரது இழப்புகள்!!! அவர்களில் எனக்கு நன்கு தெரிந்தவர்கள், அல்லது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் இருப்பார்கள்.
கடந்த 2017 டிசம்பர் மாதத்திலும் புதிய ஆண்டின் (2018)  தொடக்கத்தில் ஜனவரி மாதத்திலும் எதிர்பார்த்தவாறே மனக்கலக்கம் வந்தது. இலங்கையில் தெய்வநாயகம் பிள்ளை ஈஸ்வரனும் சென்னையில்  பரீக்‌ஷா ஞாநியும் மெல்பனில் துரைராஜா ஸ்கந்தகுமாரும் அடுத்தடுத்து மறைந்துவிட்டார்கள். 
அண்மையில் மெல்பனில் மறைந்த துரைரராஜா ஸ்கந்தகுமார் அவர்களை நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த 1987 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே நன்கறிவேன். சுமார்  முப்பது ஆண்டுகளுக்கும் மேலான  பழக்கம். அவர் 1985 இல் இங்கு வந்திருக்கிறார்.
முதல் சந்திப்பிலேயே அவர் எனது அன்புக்குரியவராகவும் மரியாதைக்குரியவராகவும் திகழ்ந்தமைக்கு அவருடைய தந்தையார் யாழ்ப்பாணம் முன்னாள் மேயர் (அமரர்) துரைராஜாதான் காரணம்.
மல்லிகைஜீவா, டொமினிக்ஜீவா என அறியப்பட்ட காலத்தில் இலங்கையில் தமிழில் முதல் முதலில் சிறுகதை ( தண்ணீரும் கண்ணீரும் ) இலக்கியத்திற்காக தேசிய சாகித்திய விருதுபெற்று, அதனை கொழும்பில்  வாங்கிக்கொண்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில் ஊர்மக்களுடன் சேர்ந்து அவருக்கு சிறந்த வரவேற்பு மரியாதை  வழங்கியவர் மேயர் துரைராஜா.
டொமினிக்ஜீவா இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்தவர். அந்த இயக்கம் வடபகுதியில் நடத்திய பல போராட்டங்களில் முன்னின்றவர். மாற்றுக்கருத்துள்ள அரசியலைச் சார்ந்திருந்த துரைராஜா அவர்கள். தங்கள் ஊர் எழுத்தாளனுக்கு இலக்கிய விருது கிடைத்ததை பாராட்டி வரவேற்பு வழங்கியதை ஜீவா இன்றும் நினைவில் வைத்து அகம் மகிழ்கின்றார். தனது சில பதிவுகளிலும் இதனை அவர் குறிப்பிட்டு நான் வாசித்திருப்பதனால், அத்தகைய நல்லியல்புகள் கொண்டிருந்தவரின் புதல்வரான ஸ்கந்தகுமாரும் தமது நல்லியல்புகளினால் என்னை கவர்ந்திருந்தார்.
மாற்றுச்சிந்தனைகளை  வரவேற்பவர்கள் அரிதாகியிருந்த காலகட்டத்தில் (இன்றும் இந்த நிலைதான் நீடிக்கிறது)  நான் 1987 இல்  முதல் முதலில் மெல்பனில் சந்தித்த நாமெல்லோரும் "ஸ்கந்தா" என அழைக்கும் ஸ்கந்தகுமாரும் தமது தந்தையின் இயல்புகளுடனேயே எனக்கு அறிமுகமானவர்.
விக்ரோரியா  இலங்கைத்தமிழ்ச்சங்கம் என்றபெயருடன் அக்காலப்பகுதியில் இயங்கிய இன்றைய ஈழத்தமிழ்ச்சங்கத்தில் ஸ்கந்தா பொருளாளராகவும் "சோமா அண்ணர்" சோமசுந்தரம் தலைவராகவும் "டொன்காஸ்டர்" மகேஸ்ரன் செயலாளராகவும் பதவியிலிருந்த  1988 - 1989 காலப்பகுதியில் ஸ்கந்தா எம்முடன் நட்புறவோடு பழகியவர்.
அக்காலப்பகுதியில் இங்கிருந்த நண்பர்கள் சிலர் இணைந்து மக்கள் குரல் என்ற கையெழுத்து இதழைத் தொடங்கியிருந்தார்கள். மக்கள் குரல் மாற்று அரசியல் சிந்தனையை முன்வைத்த விமர்சன ஏடு.

அன்றைய இலங்கைத்தமிழ்ச்சங்கம் இலங்கையில் ஈழப்போராட்டம் குறித்து  பக்கச்சார்பான திசையில் சென்றமையால்,  அதற்குள் மாற்றுச்சிந்தனையை உருவாக்கவேண்டும் என்பதற்காக மக்கள் குரலில் இணைந்திருந்த சில நண்பர்கள் 1989 தொடக்கத்தில் நடந்த சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் தெரிவாகும் பதவிகளுக்காக போட்டியிட முன்வந்தனர்.
அவுஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்திருந்த பல தமிழ்க்குடும்பத்தலைவர்களுக்கும் தமிழ் இளைஞர்களுக்கும் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நேரம்.
தமிழ் அகதிகளின் குரலையும் இலங்கைத்தமிழ்ச்சங்கத்தில் ஒலிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் குரல் குழுவினர் அந்தத்தேர்தலில் போட்டியிட  முன்வந்தனர்.
இந்த  அமைப்பினர், வந்திருக்கும் தமிழ் அகதிகளைத்திரட்டிக்கொண்டு சங்கத்தை ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்ற கலக்கம் இந்தச்சங்கத்தின் ஸ்தாபகர்களுக்கும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த விடுதலைப்புலி ஆதரவாளர்களும் வந்தது.
அதனால் அவ்வேளையில் மாற்று அணியினரை  எவ்வாறாயினும் தோற்கடிக்கவேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டி இயங்கியபோது, ஜனநாயகத்தன்மையுடன், மாற்றுச்சிந்தனையாளர்களை வரவேற்றவர் ஸ்கந்தகுமார்.
எதிர்பாராதவகையில் தமிழ் அகதிகள் நூற்றுக்கணக்கில் சங்கத்தின் அங்கத்தவர்களானது பொருளாளராக இருந்த ஸ்கந்தாவை பெரிதும் கவர்ந்தது.  அதனால் சங்கத்தின் அங்கத்தவர் எண்ணிக்கையும் அவ்வேளையில் முன்பிலும் பார்க்க உயர்ந்தது.
" போட்டி என்று வந்தமையால்தான் இந்த மாற்றம்" என்று புளகாங்கிதம் அடைந்தவர் ஸ்கந்தா.
மெல்பன் வை.டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் ஆண்டுப்பொதுக்கூட்டம் நடந்தது. மண்டபம் நிறைந்து உறுப்பினர்கள். ஸ்கந்தா தமது மந்திரப்புன்னகையுடன் அனைவரையும் வரவேற்று பதிவேட்டில் கவனம் செலுத்தினார்.
 காரசாரமான விவாதங்களுடன் தேர்தலும் நடந்தது.  வதிவிடவுரிமை கிடைக்காமல் அகதியாக நான் இருந்தமையால்  சங்கத்தின் உறுப்பினராயிருந்தும் அந்தத்தேர்தலில் போட்டியிடவில்லை. எனது நண்பர்கள் ( வதிவிட உரிமை பெற்றிருந்தவர்கள்) போட்டியிட்டார்கள்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது ஸ்கந்தா என்னையும் அழைத்து தலைமைப்பீடத்திடம் சொல்லி, வாக்கு எண்ணிக்கை பணியில் இறங்கியவர்களுடன் சேர்த்துவிட்டார்.
அந்தத்தேர்தலில் எனது நண்பர்கள் தோற்றிருந்தாலும், சங்கத்தினுள் மாற்றுச்சிந்தனையின் அவசியத்தை அனைவரும் ஏற்கவேண்டும் என்ற கருத்தோடு இருந்தவர் ஸ்கந்தா.
அதனால் தோற்ற சிலரை சங்கத்தின் செயற்குழுவில் ஒரு உபகுழுவையும் அமைத்து தேர்தலில் தோற்றவர்களுக்கு அழைப்பு விடுப்பதில் முன்னின்றவர் ஸ்கந்தா.
அதன்பின்னர் நாம் அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம் அமைத்து கலைமகள் விழா, கதம்ப விழா, பாரதி விழா, முத்தமிழ் விழா, நாடக, நாட்டிய கருத்தரங்குகள், நாவன்மைப்போட்டிகள்  நடத்திய வேளைகளில் எமக்கு தமது தார்மீக ஆதரவை வழங்கியவர்கள்  ஸ்கந்தாவும் அவரது அன்புத்துணைவியார் நந்தினியும்.
எமது சில நிகழ்ச்சிகளில் நந்தினி ஸ்கந்தகுமாரும் உரையாற்றியிருக்கிறார். போட்டிகளில் நடுவராக பணியாற்றியிருக்கிறார்.
நண்பர்கள் நவரத்தினம் இளங்கோ, நந்தகுமார் ஆகியோருடன் இணைந்து ஸ்கந்தாவும் தொடங்கிய 3 ZZZ தமிழோசை வானொலி நிகழ்ச்சிகளுக்கு என்னையும் அழைத்து பேசவைத்திருக்கிறார்.
சில சிறுகதைகள், நினைவஞ்சலிக்கட்டுரைகளை அவர்களின் வானொலியில் நான் வாசித்திருக்கின்றேன். முப்பது ஆண்டுகளின் பின்னர் ஸ்கந்தாவுக்காக நினைவஞ்சலிக்கட்டுரையை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.
ஸ்கந்தா,  விக்ரோரியா இந்து சங்கத்திலும் கடுமையாக உழைத்தவர். அதன் வளர்ச்சிக்கு பக்கபலமாகத்திகழ்ந்தவர். அத்துடன் அவர் முன்னர் இலங்கையில் கல்வி கற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் விக்ரோரியா கிளையிலும் அர்ப்பணிப்புள்ள தொண்டனாக இயங்கியிருப்பவர்.
கொழும்பில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையிலும் அங்கம் வகித்து ஆக்கபூர்வான பணிகளை தான் கற்ற கல்லூரிக்காக முன்னெடுத்திருப்பவர்.
பாடசாலைக்காலத்திலேயே விளையாட்டு, மற்றும் கலைச்செயற்பாடுகளில் ஆர்வம் காண்பித்திருந்தமையாலும் கல்லூரியின் சபாபதி இல்லத்தின் தலைவராகவும் இயங்கிய அனுபவம் பெற்றிருந்தமையினாலும் ஸ்கந்தாவிடம் தலைமைத்துவ பண்புகளும் வளர்ந்திருக்கின்றன.
மாற்றுக்கருத்துக்களை விரும்புகின்ற தலைமைத்துவ பண்புகள்தான் இயக்கங்களினதும் அமைப்புகளினதும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.
ஸ்கந்தா சார்ந்திருந்த அமைப்புகளுடன் எனக்கு என்றைக்கும் நெருக்கம் இருக்கவில்லை. ஆனால், அவர் தமது இயல்புகளினால் எனது அன்புக்குரியவராகவும் மரியாதைக்குரியவராகவும் இருந்தார். அதனால் எனது நல்ல நண்பர்கள் வரிசையிலும்  இடம்பெற்றார். அவரது மந்திரப்புன்னகை மனதைவிட்டகலாது.
அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு ஜனவரியில் நான் இங்கிருக்கும் கலை, இலக்கியவாதிகளுடன் எழுத்தாளர் விழா இயக்கத்தை தொடங்கியபோது அதற்கும் அவர் தமது தார்மீக ஆதரவை வழங்கினார்.
அந்த இயக்கமும் ஏதோ பெரிய புரட்சியை,  மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று வழக்கமாக குருட்டுத்தனமாகச் சிந்திக்கும் சிலர் அதனையும் புறக்கணிக்குமாறும் பகிஷ்கரிக்குமாறும் பிரசாரங்களை அவிழ்த்துவிட்டனர்.
ஆனால், ஸ்கந்தா அந்தப்புறக்கணிப்புகளை செவிமடுக்காமல் எமது விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆதரவு வழங்கினார்.
எழுத்தாளர் விழா இயக்கம் சோர்ந்துவிடாமல் இயங்கும் என்ற நம்பிக்கை அவருக்கும் இருந்தமையால், 2003 ஆம் ஆண்டு மூன்றாவது எழுத்தாளர் விழா மெல்பனில் நடந்தபோது அவரும் வருகைதநந்து மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார்.
அவருடன் அன்றைய தினம் விழாவை தொடக்கிவைத்தவர் மற்றும் ஒரு சமூகப்பணியாளர் மருத்துவ கலாநிதி சந்திரநாத் அவர்கள்.
அன்றைய விழாவில், அவுஸ்திரேலியாவில் வதியும் கலை, இலக்கிய வாதிகள் பற்றிய சுருக்கமான அறிமுகத்துடனும் அவர்கள்  வெளியிட்ட நூல்கள் குறித்த பட்டியலுடனும் எம்மவர் என்ற நூலை வெளியிட்டேன். ஸ்கந்தாவும் அதன் முதல் பிரதியை பெற்று எம்மவர்க்கு ஆதரவு வழங்கினார்.
ஸ்கந்தா தமது தனிப்பட்ட குடும்ப உறவு  வாழ்வில் பேரிழப்புகளை சந்தித்திருப்பவர். அவரது அருமைச்சகோதரன் ஜெயக்குமார் என்ற பொலிஸ் அதிகாரியை  இயக்கம் இல்லாமல் செய்தது.  அவருடைய சகோதரி இராஜமனோகரியின் அருமைக்கணவர் புலேந்திரனையும் இயக்கம் இல்லாமல் செய்தது.
ஆனால், அந்த இழப்புகளையெல்லாம் மனதில் தாங்கிக்கொண்டு, அதனால் சமூகத்தில் அனுதாபம் தேடாமல் தொடர்ச்சியாக புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்காகவும் அவர்களின் சமய மற்றும் கலாசார, பண்பாட்டுத்தேவைகளுக்காகவும் தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பாடசாலை, தமிழ் வானொலி ஊடகம், கோயில், விளையாட்டு, இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் முதலான பல திசையிலும் அயர்ச்சியின்றி இயங்கியவர்.
அவரது இயக்கம் இறுதிக்காலத்தில் உடல்நலக்குறைவினால் முடங்கியிருந்திருக்கலாம், ஆனால், இயங்கிய காலத்தில் அல்லும் பகலும் அயராமல்  சேவையாற்றியவர் என்பதனாலும் அவர் எமது மரியாதைக்குரியவராக மனதில் உயர்ந்திருக்கிறார்.
பொதுவாழ்வில் ஈடுபடும் எவரும் விமர்சனங்களுக்கும் ஆளாகநேரிடும். ஸ்கந்தாவும் ஆளாகியதாக எனது செவிப்புலனுக்கு எட்டியிருக்கிறது. ஆனால், " போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். கடமையை தொடருவோம்" என்ற மனப்பக்குவத்துடன் வாழ்ந்து காண்பித்தவர் ஸ்கந்தா.
உலகில் பிறக்காதவர்களும் மறைந்துவிட்டவர்களும்தான்  அனைவருக்கும்  நல்லவராக இருக்கமுடியும்!!!  பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் நல்லவராக வாழமுடியாது. அவ்வாறு வாழ்ந்தால் அவர்கள் நல்லவர்கள் அல்ல!!! நல்ல நடிகர்கள்!!!
பொதுவாழ்வில் "ஸ்கந்த" மனிதநேயம் மிக்கவர்.
  அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது அன்புத்துணைவியார் நந்தினி, அருமைச்செல்வங்கள்,  உறவினர்கள்  மற்றும் நண்பர்களின் ஆழ்ந்த கவலையில் நாமும் இணைகின்றோம்.
புகலிட நாடுகளில் தமிழர் சார்ந்த சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்கந்தகுமாரின் வாழ்வும் பணிகளும் முன்னுதாரணமாகவே திகழும்.
அன்னாருக்கு எமது இதய அஞ்சலி.
---------------------------------
letchumananm@gmail.com     

No comments: