சிட்னி கலை - இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும்

.


சிட்னியில் நேற்று முன்தினம்  (02/12/2017) சனிக்கிழமை  நடந்த கலை - இலக்கியம் 2017 நிகழ்வில் தமிழகத்தின் மூத்த  படைப்பாளி கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் அவர்களும் இலங்கையின் மூத்த படைப்பாளி சமூகப்பணியாளர் 'செங்கதிரோன்' த. கோபாலகிருஸ்ணன் அவர்களும் பாராட்டி கௌரவிக்கபட்டார்கள்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிட்னியில் Black town இல் அமைந்துள்ள பல்தேசிய கலாசார மண்டபத்தில் சங்கத்தின் நடப்பாண்டு நிதிச்செயலாளர் எழுத்தாளர் லெ. முருகபூபதியின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மூத்த எழுத்தாளர் பாராட்டு கௌரவிப்புடன் நான்கு நூல்களின் அறிமுகமும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் இடம்பெற்றது.
கவிஞர் வைதீஸ்வரன் அவர்களின் பாராட்டு மடலில், இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:                                                               
தமிழகத்தில் 1960 ஆம் ஆண்டு  கவிதை, சிறுகதை முதலான இலக்கியத்துறைகளுடன் அறிமுகமான படைப்பாளி எஸ்.வைதீஸ்வரன் அவர்கள், தமிழில் புதுக்கவிதைத்துறையை வளம்படுத்திய  முன்னோடியாகவும் அறியப்படுபவர்.
வைதீஸ்வரன் அவர்கள் சி.சு. செல்லப்பா நடத்திய எழுத்து இதழிலிருந்து தொடர்ச்சியாக ஆக்க இலக்கியம் படைத்துவரும் மூத்த எழுத்தாளராவார். தமிழகத்தில் வெளியான பெரும்பாலான சிற்றிதழ்களில் எழுதிவந்திருப்பவர்.  கவிதை, சிறுகதை, ஆய்வு, மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் எழுதிவரும் வைதீஸ்வரன் ஓவியருமாவார்.


உதயநிழல், நகரச்சுவர்கள், விரல் மீட்டிய மழை, வைதீஸ்வரன் கவிதைகள், கால - மனிதன் அதற்கு மட்டும் ஒரு ஆகாயம், முதலான கவிதைத்தொகுப்புகள், கால் முளைத்த மனம், திசைகாட்டி, வைதீஸ்வரன் கதைகள், ஆகிய கதைத்தொகுப்புகளையும், தேவனின் எழுத்துலகம் என்ற ஆய்வு நூலையும் வரவாக்கியிருப்பவர்.
வைதீஸ்வரனின் அனைத்துக்கவிதைகளும் அடங்கிய செம்பதிப்பு மனக்குருவி அண்மையில் வெளியாகியிருக்கிறது.தமிழகத்தின் மூத்த கலைஞரும் திரைப்பட நடிகருமான சகஸ்ரநாமம் அவர்கள் நடத்திய சேவாஸ்டேஜ் நாடகக்குழுவில் இணைந்திருந்தவர், பி. எஸ். ராமையாவின் தேரோட்டி மகன், தி. ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் , கோமல் சுவாமிநாதனின் புதிய பாதை முதலானவற்றிலும் நடித்திருக்கும் வைதீஸ்வரன் நாலுவேலி நிலம் உட்பட சில திரைப்படங்களிலும் தோன்றியிருப்பவர்.படைப்பிலக்கியவாதியாகவும், கலைஞராகவும் அறியப்படும் கவிஞர் வைதீஸ்வரன், திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தேவமகள் விருது, சிற்பி அறக்கட்டளை விருது, அமெரிக்கத்தமிழர்கள் வழங்கும் புகழ்பெற்ற            ' புதுமைப்பித்தன் விளக்கு' விருது முதலானவற்றைப்பெற்றவர்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கம் சிட்னியில் 02-12-2017 ஆம் திகதி நடத்தும் கலை - இலக்கியம் 2017 நிகழ்வில்  கவிஞர் எஸ். வைதீஸ்வரன் பாராட்டி கௌரவிக்கப்படுகிறார்.

குறிப்பிட்ட பாராட்டு மடலை சங்கத்தின் உறுப்பினரும் அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழின் ஆசிரிய பீடத்தைச்சேர்ந்தவருமான கவிஞர் செ. பாஸ்கரன்  வாசித்து சமர்ப்பித்தார்.
இலங்கையிலிருந்து வருகைதந்திருந்த செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்களுக்கான பாராட்டு மடலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
இலங்கையில் 1969 ஆம் ஆண்டிலிருந்து அயர்ச்சியின்றி கலை, இலக்கியத்துறையில் ஈடுபட்டுவரும் 'செங்கதிரோன்' த. கோபாலகிருஸ்ணன்  அவர்கள், சிறுகதை, குறுங்கதை, உருவகம், விமர்சனம், ஆய்வு, காவியம் முதலான துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர்.

இலங்கையின் கிழக்குப்பிரதேசத்திலிருந்து சமூகச்செயற்பாட்டாளராகவும் இயங்கிவரும் செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன், மட்டுநகரிலிருந்து வெளியான வயல் இதழ், கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் ஏடான ஓலை, தேசிய  கலை இலக்கியப்பேரவையின் வெளியீடான தாயகம் முதலானவற்றின் ஆசிரியர் குழாமிலும்   இருப்பவர். 2008 முதல் செங்கதிர் என்னும் இலக்கிய இதழையும் மட்டுநகரிலிருந்து வெளியிட்டுவருகிறார். சிற்றிதழ்கள் வெளியிட்ட அனுபவத்தினால், உலகத்தமிழ் சிற்றிதழ் சங்கத்தின் இலங்கைக்கான பொருளாளராகவும் இயங்கும் இவர், தமிழ்நாடு குற்றாலத்தில் 2010 இல் நடைபெற்ற உலகத்தமிழ்ச்சிற்றிதழ் சங்கத்தின் 5 ஆவது தேசிய மாநாட்டிலும் கலந்துகொண்டவர்.

கொழும்பு தமிழ்ச்சங்கம், மட்டக்களப்பு   கண்ணகி கலை இலக்கிய கூடல், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம்,   நுண்கலைக்கழகம், கிழக்கிலங்கை சிற்றிதழ் சங்கம், சுவாமி விபுலானந்தர், தனிநாயகம் அடிகளார், அமரர் நல்லையா  ஆகியோர் நினைவாக அமையப்பெற்ற  நூற்றாண்டு விழாச்சபைகள், புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம், கருத்தாடல் களமான பொதுவெளி அமைப்பு,  முதலானவற்றிலும் இணைந்திருக்கும் இவரது வாழ்வு  எப்பொழுதும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கின்றமையால்  அயர்ச்சியின்றி செயல்பட்டு வருகின்றார். ' தமிழர் அரசியலில் மாற்றுச்சிந்தனைகள் '  ' விளைச்சல்' ஆகிய நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கம் சிட்னியில் 02-12-2017 ஆம் திகதி நடத்தும் கலை - இலக்கியம் 2017 நிகழ்வில் செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் பாராட்டி கௌரவிக்கப்படுகிறார்.
குறிப்பிட்ட பாராட்டு மடலை சங்கத்தின் உறுப்பினரும் அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினருமான திருநந்தகுமார் வாசித்து சமர்ப்பித்தார்.

கவிஞர் வைதீஸ்வரனுக்கு சங்கத்தின் உறுப்பினர் கலாநிதி திருமதி சந்திரிக்கா சுப்பிரமணியனும் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனுக்கு சங்கத்தின் உறுப்பினரும் இலங்கையின் மூத்த படைப்பாளி ( அமரர்) மருதூர்கொத்தன் அவர்களின் புதல்வன் அல்.ஹாஜ் ஆரீஃப் இஸ்மாயிலும்  வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் கவிஞர் வைதீஸ்வரன்  தமது அனைத்து கவிதைகளும் இடம்பெற்றுள்ள செம்பதிப்பு தொகுப்பான மனக்குருவியிலிருந்து சில கவிதைகளை வாசித்து தமது புதுக்கவிதை இலக்கிய முயற்சிகள் பற்றி உரையாற்றினார்.

செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன், தமது அவுஸ்திரேலியப் பயண அனுபவங்கள் தொடர்பாகவும் புகலிட நாட்டில் தமிழரின் அடையாளம் எதிர்காலச்சந்ததியிலும் தங்கியிருப்பதாகவும்  தெரிவித்து உரையாற்றினார்.வாசிப்பு அனுபவப்பகிர்வில், ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான நோர்வேயில் வதியும் சரவணன் எழுதிய கண்டிக்கலவரம் நூல் பற்றிய தமது கருத்துக்களை கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியம் பகிர்ந்துகொண்டார்.
டொக்டர் நடேசன் எழுதிய எகிப்திய பயணக்தை நூல் நைல்நதிக்கரையோரம் பற்றி கன்பராவிலிருந்து வருகை தந்திருந்த மருத்துவர் கார்த்திக் வேல்சாமி உரையாற்றினார்.

முருகபூபதியின் சொல்லவேண்டிய கதைகள் நூல் பற்றி யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும் அமரர் வித்துவான் வேந்தனாரின் புதல்வியுமான கலாநிதி  கலையரசி சின்னையா தமது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் எழுதிய விளைச்சல் காவியம் நூலைப்பற்றி சங்கத்தின் உறுப்பினரும் சிட்னி தாயகம் வானொலி ஊடகவியலாளரும் இலங்கையின் மூத்த கவிஞர் ( அமரர்) நீலவணனின் புதல்வர் எழில்வேந்தன் தமது வாசிப்பு அனுபங்களை பகிர்ந்துகொண்டார்.
சிட்னியில் வதியும் கலை இலக்கிய ஆர்வலர்கள் பலர்  இந்நிகழ்வில் பங்கு பற்றி சிறப்பித்தனர்.
---000---
No comments: