இலங்கைச் செய்திகள்


ஜெனிவா தீர்­மா­னத்தை இலங்கை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் : மார்க் பீல்ட்

“ஒகி” என்ற சூறாவளி இலங்கையை விட்டு விலகிச் செல்கிறதாம் ! இருப்பினும் மழை நீடிக்க வாய்ப்பு !

படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் சிலாபம் அருகே கைது

ஆவா தலைவர் உட்பட அறுவர் கைது

30 ஆண்டுகளின் பின் இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது மக்களின் நிலப்பபகுதி

“வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்று”வவுனியாவில் பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்




ஜெனிவா தீர்­மா­னத்தை இலங்கை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் : மார்க் பீல்ட்

01/12/2017 ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என்று பிரித்­தா­னியா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணத்தின் போது, இந்த விவ­கா­ரத்தை தாம் எழுப்­பி­ய­தாக, ஆசிய -பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரித்­தா­னி­யாவின் இரா­ஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரி­வித்­துள்ளார்.


“ஒக்டோபர் மாத தொடக்­கத்தில் யாழ்ப்­பாணம் மற்றும் கொழும்­புக்கு, மேற்­கொண்­டி­ருந்த பய­ணத்தின் போது, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 34/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்று இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­ன­விடம் எடுத்துக் கூறி­யி­ருந்தேன்.
இரா­ணு­வத்­தினர் வச­முள்ள அனைத்து தனியார் காணி­க­ளையும் விடு­வித்தல், காணாமல் போனோர் பணி­ய­கத்தை செயற்­ப­டுத்தல், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­குதல் உள்­ளிட்ட விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக அந்த வாக்­கு­று­திகள் அமைந்­துள்­ளன.
34/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கும், இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கும் பிரித்தானியா தொடர்ந்து உதவும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி













“ஒகி” என்ற சூறாவளி இலங்கையை விட்டு விலகிச் செல்கிறதாம் ! இருப்பினும் மழை நீடிக்க வாய்ப்பு !

01/12/2017 இலங்கையின் கொழும்புக்கு மேற்கு திசையில் இருந்து அரேபிய கடல் பகுதியில் 300 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த “ஒகி” என பெயரிடப்பட்ட சூறாவளி தற்போது கொழும்பிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்று சென்றுள்ளதாகவும்  இதனால் அது இலங்கையில் இருந்து விலகிச்சென்று கொண்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் அழடமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது. 
குறிப்பாக வடக்கு, வட மத்திய, ஊவா, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை பெய்யும் வேளையில் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை மேற்கு மற்றும் தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடற் பகுதியில் மணித்தியாலத்திற்கு 90 முதல் 100 இற்கு இடைப்பட்ட கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 
ஏனைய கடற் பிரதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதுடன், மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோ மீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் காற்று வீசுமெனவும் கடற் பகுதியில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
இதனால் கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கடல் பயணங்கள், நடவடிக்கையில் ஈடுபடுவோர்  மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.   நன்றி வீரகேசரி









 படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் சிலாபம் அருகே கைது

30/11/2017 அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த எட்டுப் பேரை கடற்படையினர் கைது செய்தனர்.

நீண்ட நாட்கள் கடலில் தங்கி மீன்பிடியில் ஈடுபடுத்தக்கூடிய குறித்த படகு சிலாபம், முத்துபந்த்திய கடற்பகுதியில் சென்றுகொண்டிருக்கையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
கடற்படையினர் தம்மை நோக்கி வருவதைக் கண்ட சிலர் படகில் இருந்து தப்பிச் சென்றனர். படகில் எஞ்சியிருந்த எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டனர்.
படகின் உரிமையாளர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.   நன்றி வீரகேசரி













 ஆவா தலைவர் உட்பட அறுவர் கைது

30/11/2017 யாழ். குடாநாட்டில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஆவா குழுத் தலைவர் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கோண்டாவில் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் அறுவரும் பியகமவிலும் பரந்தனிலும் வைத்து தலா மும்மூன்று பேராகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்த பொலிஸ் அதிகாரிகளே பியகமவில் வைத்து மூவரைக் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி











 30 ஆண்டுகளின் பின் இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது மக்களின் நிலப்பபகுதி

 30/11/2017 இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் வசாவிளான்  கிராமத்தின் 29 ஏக்கர் நிலப் பகுதி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

வசாவிளான்  உத்தரிய மாதா தேவாலயம், றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும்  J/245 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட  நிலப் பகுதிகள் இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ். ஆயர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாகக் கடந்த 30 ஆண்டுகளின் பின்னர் குறித்த பகுதியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணங்கியுள்ளனர்.

எனினும், வசாவிளானின் எஞ்சிய பகுதி விடுவிக்கப்படாமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந் நில விடுவிப்பு  நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி, யாழ் அரசதிபர், வலிவடக்கு பிரதேச  செயலர் உள்ளிட அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.






 நன்றி வீரகேசரி 













“வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்று”வவுனியாவில் பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்
02/12/2017 வடமாகாண வேலையற்றபட்டதாரிகள் சமூகத்தினால் வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று காலை மணியளவில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.


மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்றிணைந்த பட்டதாரிகள் “நல்லாட்சி அரசே நாடகமாடாதே” , “ கொடு கொடு வேலையைக்கொடு ” ,  “தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை ” ,  “இது வரை காலமும் நாம் ஏமாற்றப்பட்டதுபோதும் இனியும் ஏமாறத் தயாரில்லை ” , “ வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படவில்லை” என்று கோசமிட்டு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டதுடன் வியாபார நிலையங்களுக்குச் சென்று எமது போராட்டம் தொடர்ந்து இவ்வாறாக செல்வதை நாம் விரும்பவில்லை எமது போராட்டத்தை வடமாகாண மக்களோடு இணைந்து மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டமாக விரைவில் நடாத்தத் தீர்மானித்துள்ளோம்.

எனவே எமது போராட்டத்தில் தாங்களும் பங்குபற்றி எமது தொழில் உரிமைக்கு ஆதரவு வழங்குமாறு தெரிவித்து ஆதரவு வழங்குமாறு  துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.‌   நன்றி வீரகேசரி






No comments: