எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥 - கானா பிரபா

.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஈழத்தில் தீபாவளி என்றால் புதுச்சட்டை போட்டுக் கொண்டு கொண்டாடுவதைத் தாண்டி, வீடுகளில் தீபம் ஏற்றும் மரபு இருந்ததில்லை. ஆனால் கார்த்திகைத் தீபம் என்ற விளக்கீடு வருகுதென்றால் ஒரு சில வாரங்களுக்கு முன்பே உள்ளூர்க் கடைக்காரர் தம் வாசல் படியைத் தாண்டிக் கடகங்களில் மண் தீபச் சுட்டிகளைக் குவித்து விடுவர். விளக்கீடு வரப் போகுதென்று கட்டியம் கூறும் அது.

வீடுகளின் முகப்பு வீதியில் இருக்கும் கல், புல் பூண்டு எல்லாம் அகற்றப்படும் உழவாரப் பணியை ஒவ்வொரு வீட்டாரும் தொடங்கி விடுவர். அதுவரை குடிகொண்டிருந்த முள் பற்றைகள் எல்லாம் காலியாகிப் பளிச்சென்று மின்னும். பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டின் பின் வளவில் வாழைத் தோட்டமும் முற்றத்தில் பப்பாளி மரமும் இருக்கும். வாழைக் குலையை ஈன்ற பெரும் வாழை இந்த விளக்கீட்டுக்காகக் குறி வைக்கப்படும். ஒரு வாழை மரத்தைத் தறித்து அதன் தலைப் பகுதியை நறுக்கிக் கிடத்தி விட்டு இரண்டாக்கினால் இரண்டு வாழைக் குற்றிகள், இரண்டு வீட்டுக்கு உதவும். இரண்டாக்கிய வாழையின் மேலே கத்தியால் குவியமாகக் கோதி விட்டிருக்கும். 

பாதி வெட்டப்பட்ட வாழைக் குட்டியைக் கொண்டு போய் வீட்டுக்கு நேர் வெளியே  உள்ள வீதியில் பறித்த குழியில் நட்டு அதனுள் பப்பாளிக்காயை வைத்து எள் எண்ணெய் எரிப்பது போலவும் விளக்கேற்றுவார்கள். இன்னுஞ் சிலர் கொப்பரைத் தேங்காயை வாழைக் குற்றிக்கு மேல் நட்டும் எரிப்பர்.  அந்த வீதியின் இரு மருங்கும் வாழைக் குற்றிகளின் தலையில் தீச் சட்டி பவனி போலக் காட்சி தரும். வாழைக் குற்றியைச் சூழவும் சோடனை போல மரத் துண்டுகளைச் செருகி அதன் மேல் சுட்டி விளக்கையும் வைப்பர்.


கிளுவந்தடிகளை அளவாக வெட்டி, தோய்த்துலர்ந்த 
பழைய வேட்டியைக் கிழித்து தேங்காய் எண்ணெய் தோய்த்து ஒவ்வொரு தடிகளிலும் பந்தம் கட்டி வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வீட்டின் பின் வளவின் ஒவ்வொரு திக்கிலும், தோட்டத்திலும் இந்தத் தீப்பந்தங்களை நடுவதும் மரபு. 
வீட்டில் இருக்கும் ஆம்பிளைகள் வாழைக் குட்டித் தீபத்துக்குப் பொறுப்பு என்றால், பெண்கள் இந்தக் கிழுவந்தடிப் பந்த வேலையைப் பங்கிட்டுச் செய்வர். என்னுடைய அம்மாவுக்குப் பின் வளவில் இவற்றை நட்டு வைக்காவிட்டால் பொச்சம் தீராது. கடுமையான போர்க்காலங்களில் கூட வெளிச்சத்தைக் கண்டு ஹெலியில் வந்து குண்டு போடுவார்கள் என்ற பயமில்லாது சனம் தம் சடங்கைச் செய்தது.

பழைய சைக்கிள் ரயர், கார், லொறி ரயர் எல்லாவற்றையும் சந்திக்கிச் சந்தி கட்டி வைத்துக் கொளுத்துவார்கள்.

தாவடிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை விளக்குப் பூசை எங்கள் அப்பாவின் பரம்பரைப் பூசை. அப்பாவின் தங்கையின் கணவர் பூபாலசிங்கம் மாமா இணுவில் சிவகாமி அம்மன் கோயிலடியில் இருந்து வெள்ளணவே மாட்டு வண்டி கட்டி வீட்டுக்கு வந்து பொருள், பண்டங்கள், பொங்கல் பானை, இளநீர்க் குலைகள் எல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டு, சின்னப் பெடியள் எங்களையும் வண்டியின் ஒரு கரையில் இருத்தி “ஏ இந்தா இந்தா” என்று மாட்டை வழி நடத்திப் பிள்ளையார் கோயிலுக்குக் கொண்டு போவார். 



கோயிலின் முன் பக்கம் பாழ் பட்ட பனைக் குற்றி ஒன்று நிமிர்த்தி வைக்கப்பட்டு அதன் மேல் தென்னோலை,
பனையோலை எல்லாம் செருகி ஒரு சூரனைப் போல நிற்கும். நவராத்திரிக்கு வாழையை நட்டு மகிடாசுரன் என்று அதை உருவகப்படுத்தி வாழை வெட்டு நடத்துவது போல இந்தக் கார்த்திகை விளக்கீடு அன்று சுவாமி வெளி வீதி வருகையில் ஓலை கட்டிய பனையைக் கொளுத்தியதும் சொக்கப்பனை கொழுந்து விட்டெரியும். சுவாமி பின் வீதிப் பக்கம் போனதும். எரிந்து தணிந்த அந்த மரத் துண்டையும், ஓலைத் துண்டையும் இழுத்துக் கொண்டு போய்க் குப்பை மேட்டில் போடுவது சிறுவருக்கு ஒரு கொண்டாட்டம் போல.

சாமம் தொட வீடு திரும்பும் போது கொண்டு போன பொருட்கள் எல்லாம் சர்க்கரைப் பொங்கலாகவும், வடை, மோதகங்களாகவும், மாமி படையலிட்ட மாவிளக்காகவும்  மாறி மாட்டு வண்டியில் திரும்ப வீடு வரும். வீட்டுக்கு வந்து எல்லோரும் பரிமாறி உண்டு மகிழ்வோம்.

விளக்கீட்டுக்கு வீடு வீடாக எரிந்து கொண்டிருக்கும் வாழைக் குற்றிகளைப் பார்க்கிறேன் பேர்வழி என்று படலைப் பக்கம் நிற்கும் தன்னுடைய ஆளைப் பார்ப்பதற்கும் சைக்கிள் எடுத்துக் கொண்டு வாலிபக் குருத்துகள் கிளம்பி விடுவர். சாமத்தில் சைக்கிளில் வரும் விடலைப் பெடியள் கூட்டம் வாழைக் குற்றியைக் காலால் தள்ளி விழுத்தி விட்டுப் போகும் சேட்டையும் நடக்கும். கார்த்திகைத் தீபம் கோயிலில் ஒரு நாள், வீட்டில் ஒரு நாள் என்று பங்கிட்டுக் கொண்டாடி முடிந்ததும் விற்பனை ஆகாத தீபச் சுட்டிக் கடகங்களைக் களஞ்சிய அறைக்குள் கொண்டு போய் வைத்து விடுவர் கடைக்காரர், அடுத்த விளக்கீடு வரும் வரைக்கும்.

படங்கள் நன்றி : கடகம் & தமிழ் வின் இணையத் தளங்கள்

No comments: