அமெரிக்க கண்டத்தையே அழிக்கவல்லதாம் ; மிரட்டுகிறது வடகொரியா
அரண்மனையில் ட்ரம்பின் வாரிசுக்கு விருந்தளிக்கும் மோடி
குமுறும் அகுங் எரிமலை : விமானப் போக்குவரத்துகள் பாதிப்பு.!
“பிரித்தானிய பிரதமர் என்னைக் கவனிப்பதை விடுத்து தீவிரவாதம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்”
வட கொரியாவுடனான இராஜதந்திர உறவுகளை அனைத்து உலக நாடுகளும் துண்டிக்க வேண்டும்
அமெரிக்க கண்டத்தையே அழிக்கவல்லதாம் ; மிரட்டுகிறது வடகொரியா
29/11/2017 தாம் ஏவிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது முழு அமெரிக்க கண்டத்தையும் அழிக்கக்கூடியதென வடகொரியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கூறப்பட்ட ஹவாசாங்-15 ஏவுகணையானது இன்று புதன்கிழமை அதிகாலை ஏவப்பட்டுள்ளது.
குறித்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ள நிலையில், ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஜப்பான் கடலில் விழுந்த இந்த ஏவுகணை, வட கொரியா முன்பு சோதித்த ஏவுகணைகளை விட அதிக உயரம் சென்றுள்ளதாகவும் 4,475 கிலோ மீற்றர் உயரத்தில், 960 கிலோ மீற்றருக்கு 53 நிமிடங்கள் இந்த ஏவுகணை பறந்ததாகவும் அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அரண்மனையில் ட்ரம்பின் வாரிசுக்கு விருந்தளிக்கும் மோடி
27/11/2017 தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு எதிர் வரும் 28 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இம் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இம் மாநாட்டில்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டு
உரையாற்ற உள்ளார்.
அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து
வருகிறார். இம் மாநாட்டில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்பட 350ற்கும்
மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு
நடைபெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா டிரம்புக்கு 5
அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையில் அரசு சார்பில் அளிக்கப்படும் விருந்தில் இவாங்கா பங்கேற்கவுள்ளார்.
இந்த விருந்தில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். இங்கு சுமார்
2,000 பேர் கூடும் வசதி கொண்ட பிரமாண்ட விருந்து மண்டபத்தில் அமெரிக்க
அதிபர் டிரம்ப் மகள் இவாங்காவுக்கு பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை பலாக்னுமா அரண்மனை நிர்வாகம் செய்துள்ளது.
ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா சார்மினார், லாட்பஜார் உற்பட முக்கிய இடங்களுக்கு செல்கிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
குமுறும் அகுங் எரிமலை : விமானப் போக்குவரத்துகள் பாதிப்பு.!
27/11/2017 இந்தோனேசிய பாலித் தீவிலுள்ள அகுங் எரிமலை குமுறி 13,100 அடி உயரத்துக்கு புகையையும் சாம்பலையும் வெளித் தள்ளியதையடுத்து அந்தப் பிராந்தியத்தில் நேற்று கடும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது இந்தோனேசிய தீவில் ஒரு வார காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது பிரதான எரிமலைக் குமுறலாகும்.
இந்நிலையில் எரிமலைச் சாம்பல் விழும் பிராந்தியங்களிலுள்ள மக்களுக்கு முகமூடி உறைகளை வழங்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த எரிமலைக் குமுறலையடுத்து பாலித் தீவின் பிரதான விமான நிலையத்திற்கான விமான சேவைகளில் சில இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் பாலியின் கிழக்கே லொம்பொக் தீவிலுள்ள பிரதான சர்வதேச விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த எரிமலையை சூழ்ந்து 7.5 கிலோமீற்றர் தூரத்துக்குள் வாழும் மக் களை உடனடியாக இடம்யெர்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
“பிரித்தானிய பிரதமர் என்னைக் கவனிப்பதை விடுத்து தீவிரவாதம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்”
01/12/2017 பிரித்தானிய பிரதமர் தெரேஸா மே என்னில் கவனம்
செலுத்துவதை விடுத்து தனது நாட்டிலான தீவிரவாதம் தொடர்பில் கவனம்
செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தீவிர வலது சாரிக் குழுவால் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்ட பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய 3 காணொளிக்
காட்சிகளை டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணையத்தளத்தின் மூலம் மீளப்
பரிமாறிக் கொண்டதையடுத்து, இவ்வாறு ஜனாதிபதியொருவர்
செயற்பட்டுள்ளமை தவறானது என தெரேஸா மேயின் பேச்சாளர்
குற்றஞ்சாட்டியிருந்தார்.
பிரித்தானிய தீவிர வலதுசாரி பிரிட் டிஷ் தேசிய கட்சியின் முன்னாள்
உறுப்பினர் களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிறிட்டன் பெர்ஸட் அமைப்பின் பிரதித்
தலைவர் ஜேடா பிரான்ஸனால் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகளையே ட்ரம்ப் மீள
வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் தன்னால் வெளியிடப்பட்ட புதிய
செய்தியில், தெரேஸா மே தன்னைக் கவனிப்பதை விடுத்து தீவிரவாதிகள் தொடர்பில்
கவனம் செலுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். நன்றி வீரகேசரி
வட கொரியாவுடனான இராஜதந்திர உறவுகளை அனைத்து உலக நாடுகளும் துண்டிக்க வேண்டும்
01/12/2017 வட கொரியா புதிதாக ஏவுகணையை ஏவிப்
பரிசோதித்ததையடுத்து அந்நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை
அனைத்து நாடுகளும் துண்டிக்க வேண்டும் என அமெரிக்கா அழைப்பு
விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரியாவுக்கான எண்ணெய்
விநியோகங்களை நிறுத்த சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிடம்
கேட்டுக்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர்
நிக்கி ஹேலி கூறினார்.
வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனையையடுத்து ஐக்கிய நாடுகள்
பாதுகாப்பு சபையில் கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்தில்
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அமெரிக்கா மோதல் ஒன்றை நாடவில்லை எனவும் ஆனால் போர் ஒன்று
இடம்பெறும் பட்சத்தில் வட கொரியா முற்று முழுதாக அழிக்கப்படும் எனவும்
அவர் தெரிவித்தார்.
வட கொரியா கடந்த இரு மாத காலப் பகுதியிலான தனது முதலாவது
ஏவுகணைப் பரிசோதனையை நேற்று முன்தினம் புதன்கிழமை
மேற்கொண்டதையடுத்தே இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த ஏவுகணையானது 4,475 கிலோமீற்றர் உயரத்துக்குச் சென்று
சுமார் 13,000 கிலோமீற்றர் தூரத்திற்கு பயணிக்கக் கூடியது என வட கொரியா
உரிமை கோரியுள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து
பூமியின் வளிமண்டலத்துக்குள் போராயுதமொன்றை பிரயோகித்து
தாக்குதலை நடத்துவதுடன் ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிக உயரம் என
அந்நாடு கூறுகிறது.
இதன் பிரகாரம் மேற்படி ஏவுகணையானது பிரித்தானிய லண்டன் நகர்,
அமெரிக்க நியூயோர்க் நகர் உள்ளடங்கலாக உலகின் அநேக நகர்களை சென்று
தாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஏவுகணையின் தாக்குதலிலிருந்து தென்
அமெரிக்காவும் ஆபிரிக்காவின் சிறு பகுதியும் மட்டுமே
விடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் வட கொரியா அத்தகைய உச்ச நிலைத் தொழில்நுட்ப ஆற்றலைப்
பெற்றிருப்பது சாத்தியமில்லை என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.
எனினும் இந்த ஏவுகணைப் பரிசோதனையானது எதுவிதத்திலும் குறைகூற
முடியாத சாதனையொன்றாகவுள்ளதாக வட கொரிய தலைவர் கிம் யொங் – உன்
குறிப்பிட்டுள்ளார்.
வட கொரியா இந்த வருடத்தில் இதையொத்த அநேக ஏவுகணைப் பரிசோதனைகளை
மேற்கொண்டுள்ள போதும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள
பரிசோதனையானது முழு அமெரிக்காவையும் இலக்குவைக்கக்கூடிய
ஆற்றலைக் கொண்டுள்ளது என வட கொரிய அரசாங்கம் தெரிவிக்கிறது.
இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் அது வட
கொரியாவின் ஸ்திரத்தன்மையை மேலும் சீர்குலைக்க மட்டுமே வழிவகை
செய்யும் என நிக்கி ஹேலி எச்சரித்துள்ளார்.
வட கொரியா தனது ஏவுகணை மற்றும் அணுசக்திப் பரிசோதனைகளை நிறுத்த
வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா, அமெரிக்கா இந்த மாதம் தென்
கொரியாவுடன் இணைந்து நடத்தத் திட்டமிட்டுள்ள இராணுவப் பயிற்சிகளை
நிறுத்த வேண்டும் எனவும் அந்தப் பயிற்சிகள் நிலைமையை மேலும்
பாரதூரமாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தனது இராணுவ பயிற்சிகளை நிறுத்துவதற்கு பதிலாக வட
கொரியா தனது ஆயுதப் பரிசோதனைகளை நிறுத்தக்கூடும் என சீனா யோசனையை
முன்வைத்துள்ளது. இதையொத்த யோசனை கடந்த காலத்தில் அமெரிக்காவால்
முன்வைக்கப்பட்ட போது வட கொரியா அதனை நிராகரித்திருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவால்
மேற்கொள்ளப்பட்ட அணுசக்திப் பரிசோதனை குறித்து நேற்று முன்தினம்
புதன்கிழமை குறிப்பிடுகையில், அந்நாட்டுத் தலைவர் கிம் யொங் – உன்னை
' நோயுற்ற நாய்க்குட்டி' என விமர்சித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment