ஜெயகாந்தன் மறுவாசிப்பு மெல்பனில் நடந்த வாசகர் வட்டத்தின் சந்திப்பில் படைப்பும் படைப்பாளியும் - காலமும் கருத்தும் முருகபூபதி


-->
ஐந்தாம் தரம் வரையே பள்ளிப்படிப்பைக் கண்டிருந்த தண்டபாணி முருகேசன் என்ற சிறுவன் தமிழகத்தின் கடலூர் வீட்டை விட்டு வெளியேறி,  சென்னைவந்து, கம்யூனிஸ்ட் தோழர்களின் அரவணைப்பில் வளர்ந்து,  கட்சிப்பிரசுரங்கள் விநியோகிப்பது முதலான தொண்டூழியம் முதல் பல்வேறு சிறு சிறு தொழில்களும் பார்த்து,  அச்சுக்கூடத் தொழிலாளியாகி, செய்திப்பத்திரிகை,  படைப்பு இலக்கியம் படித்துக்கொண்டே, ஒப்புநோக்காளனாகவும் (Proof Reader) தன்னை வளர்த்துக்கொண்டு,  ஜெயகாந்தன்  என்ற  எழுத்தாளனாக அறிமுகமாகி,    இலக்கிய உலகில்  அங்கீகாரத்தையும் பெற்று  பேராளுமையாக உருவாகியவரின் படைப்புகள் தோன்றிய காலத்தையும், அந்தப்படைப்புகளில் இன்றைய வாசகரின் அவதானிப்பையும் கணிக்கும் மறுவாசிப்பு அரங்கு  கடந்த ஞாயிறன்று, மெல்பனில்,  இலக்கிய நண்பர் பல் மருத்துவர் மதியழகன் இல்லத்தில் நடந்தது.
அதே தினத்தில் மெல்பனில் வேறு ஒரு திசையில் நடந்த வேறு ஒரு நிகழ்ச்சிக்கு செல்லவேண்டிய அவசியத்தையும் புறம் ஒதுக்கிவிட்டு, ரயிலேறிச்சென்றேன்.
ஜெயகாந்தன் வாழும்போதே ( அவர் நீண்ட காலம் எழுதாமலிருந்தமையால்) எழுத்துலகிலிருந்து  மறைந்துவிட்டதாகவும் பத்திகளில் பறைசாற்றி,  வித்துவம் காட்டிக்கொண்டிருந்தவர்களை,  அவ்வாறு எழுதவைத்ததன் மூலம் தன்னை  அவர்கள் மீண்டும் மீண்டும் நினைக்கவைத்துக்கொண்டிருந்தவரைப்பற்றி, அவர் வாழும்போதும்  மறைந்த பின்னரும் பல பதிவுகளை எழுதியிருக்கின்றேன்.
எனவே எனது தரப்பில் அவர் குறித்து புதிதாக எழுதுவதற்கு எதுவும் இல்லை என்ற நினைப்புடன்தான் மெல்பனில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வதியும் இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவக்குமார் அவர்களின் அழைப்பை ஏற்றுச்சென்றிருந்தேன்.
அங்கு சென்ற பின்னர்தான், ஜெயகாந்தனை இன்னமும் மறக்காமல் நினைத்துக்கொண்டிருக்கும் சிலரையும் முதல் முதலில் சந்திக்கவும் நேர்ந்தது.

அவர்கள் உருவாக்கியிருக்கும் வாசகர் வட்டத்தின் அன்றைய சந்திப்பில் முதல்தடவையாக கலந்துகொண்டபோது, ஜெயகாந்தன் 1958 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதிய டிரெடில், பிணக்கு, நந்தவனத்தில் ஓர் ஆண்டி ஆகிய  மூன்று  சிறுகதைகளையே வாசிப்பு அனுபவப்பகிர்வுக்காக எடுத்துக்கொண்டிருந்தமையும் தெரியவந்தது.
ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்னர் நான் படித்த கதைகள் அவை. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயகாந்தன் எழுதிய கதைகள். ஆறுதசாப்தங்களையும் கடந்து ஜெயகாந்தன் பார்த்தறியாத ஒரு ஊரில் பேசப்படுகிறது என்றால், அந்த ஆளுமையின் மேதாவிலாசம் எத்தகையது...?
இந்தக்கொடுப்பினை எத்தனை நவீன இலக்கியப்படைப்பாளிகளுக்கு கிட்டும்?
ஜெயகாந்தனை மறுவாசிப்புச்செய்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாசகர் வட்ட நிகழ்ச்சியில் எதுவுமே பேசாமல் ஜெயகாந்தனின் மொழியில் மெளனமே பாஷையாக இருந்துவிட்டு எழுந்துவருவதற்காகத்தான் சென்றேன்.
என்னையே நிகழ்ச்சியை தொடக்கிவைக்கும்படி சாந்தி சிவக்குமாரும் ஒரு சிலரும் சொன்னதனால் ஜெயகாந்தன் என்னைப்போன்று 1970 களில் எழுதப்புகுந்தவர்களை எவ்வாறு ஆகர்சித்தார்? என்பதிலிருந்து, இறுதியாக 2008 இல் அப்பல்லோ மருத்துவமனையில் பார்த்தது, கொழும்பு மாநாட்டிற்கு அவரை அழைக்க முடியாமல்,  நண்பர் கனடா மூர்த்தி  இயக்கித் தயாரித்த உலகப்பொதுமனிதன் ஜெயகாந்தன் ஆவணப்படத்தை திரையிட்டது வரையில் எனக்கும் ஜெயகாந்தனின் படைப்புகளுக்கும் இடையே நீடித்த உறவுகளையும் சொல்லநேர்ந்தது.
குறிப்பிட்ட மூன்று கதைகளையும் பற்றிய நேரடி வாசிப்பு அனுபவங்களை வெளியிடுவதற்கும் அப்பால், ஜெயகாந்தனின் இதர படைப்புகள், நாவல்கள், சிறுகதைகள், அவரின் பாத்திரங்கள், பெண்கள் குறித்து அவருக்கிருந்த ஆழ்ந்த பரிவு, காலத்துக்குக்காலம் அவரிடமிருந்து மாறிக்கொண்டிருந்த அரசியல், சமூக, ஆன்மீகப் பார்வைகள், திரையில்  அவரது கதைகள், மற்றவர்களிடத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கம் உட்பட பல்வேறு திசைகள் நோக்கியும் ஜெயகாந்தன்  எமது சிந்தனைக்குள்  அழைத்துவரப்பட்டார்.
அவர் காலத்தையும் மீறிச்சிந்தித்தமையால்,  அவரது எழுத்துக்கள் தொடர்ந்தும் பல காலம் பேசப்பட்டன. அவர் எழுதத்தொடங்கிய காலம் 1950. அப்பொழுது அவரது வயது 26. எட்டு ஆண்டுகளில் அவரால் எழுதப்பட்ட கதைகள்தான் இச்சந்திப்பின் கலந்துரையாடலுக்கு  எடுக்கப்பட்ட டிரெடில், பிணக்கு, நந்தவனத்தில் ஓர் ஆண்டி ஆகியன.
தொடக்கத்தில்  சிதம்பர ரகுநாதனின்  சாந்தி, விஜயபாஸ்கரனின் சரஸ்வதி, கிராம ஊழியன், தாமரை முதலான சிற்றிதழ்களில்தான் அவர் எழுதினார்.
ஆனந்தவிகடனில்  1960 இல் அவர் எழுதிய அக்கினிப்பிரவேசம் கதைதான் அன்றைய வாசகர்களை  அவரை நோக்கித்திரும்பிப்பார்க்க  வைத்தது. அக்கதை வெளியானதும் அதனைப்பிடிக்காத சில எழுத்தாளர்களும் அதற்கு எதிரான  மாற்றுக்கதைகளை எழுதினார்கள்.
ஆனால், ஜெயகாந்தன், அதன் தொடர்ச்சியாக சிலநேரங்களில் சில மனிதர்கள்,  கங்கை எங்கே  போகிறாள் முதலான நாவல்களையும் வரவாக்கினார். இதில் சிலநேரங்களில் சில மனிதர்கள் படத்தில் கங்கா பாத்திரம் ஏற்று நடித்த லட்சுமிக்கு தேசிய விருதும் கிடைத்தது.
ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் வெளிவந்து சமூகத்தில் பலத்த அதிர்வலைகளை, எதிர்வினைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த 60களின் பிற்பகுதி. மதுரை என். சி. பி எச். மாடியில் ஒரு காரசாரமான கூட்டம்.  ஜே. கே. முன்னிலையிலேயே அந்தப்படைப்பைக் கடுமையாகத் தாக்கி வசைமாரி பொழிந்தபடி, கெட்டுப்போன பெண்ணை அவர் நியாயப்படுத்துவதாக பலத்த விவாதங்கள்
ஜெயகாந்தன் எழுந்தார்.
" நீங்கள் எல்லோரும் அந்தப் பெண்ணின் இடத்தில் உங்கள் மனைவியை வைத்துப்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அதனால்தான் ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு பெண்ணை நம் தலையிலும் கட்டியிருப்பார்களோ என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுகிறது, சினமும் வருகிறது. அதே இடத்தில் உங்கள் மகளை வைத்துப்பாருங்கள், நியாயம் புரியும் என்றார்"
அதுதான் ஜே கே.
இந்தத்தகவலை இணையத்தில் இப்பொழுதும் பார்க்கலாம்.
பின்னாளில்,  1980 களில் அதே என்.சி. பி.எச். நடத்திய கல்பனா என்னும் இதழுக்கு ஜெயகாந்தன்தான் ஆசிரியராகவும் இருந்தார்.
அக்கினிப்பிரவேசம்தான் ஜெயகாந்தனை வாசகரிடத்தில் தீவிரமாக பிரவேசிக்கவைத்தது. முத்திரைக்கதை என பொறித்து ஆனந்தவிகடன் அதனைப்பிரகடனப்படுத்தியது. அன்று முதல் அவர்மீது இலட்சக்கணக்கான வாசர்களின் பார்வை பதிந்தது. அந்த வாசகர்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சோவியத் நாடு, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எங்கும் வாழ்ந்தார்கள்.
ஜெயகாந்தனின் பல படைப்புகள் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் வந்துள்ளன.
இலங்கையில் அவரது கதைகள் சில சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு நூலாகியிருக்கிறது. அக்கினிப்பிரவேசமும் அதில் ஒரு கதை. ஜெயகாந்தனும் இலங்கை சிங்கள எழுத்தாளர் குணசேன விதான எழுதிய பாலம கதையை ஆங்கில மூலத்திலிருந்து படித்துவிட்டு, அதனை தாம் ஆசிரியராக இருந்த கல்பனா இதழில் அவரே மொழிபெயர்த்து வெளியிட்டார்.
சோவியத் நாட்டிலிருந்து தனது படைப்புகளின் ருஷ்ய மொழிபெயர்ப்புகளுக்காக ரோயல்டி பெற்ற ஒரே ஒரு தமிழக எழுத்தாளரும் அவர்தான்.
ஜெயகாந்தனின் மேதாவிலாசம் இவ்வாறு விகசித்தமைக்கு ஆனந்தவிகடனின் பங்களிப்பு முக்கியமானது. ஆனந்தவிகடனையடுத்து அவரது எழுத்துக்கள், தினமணிக்கதிர், குமுதம் முதலானவற்றிலும் வெளியாகியிருக்கின்றன. தொடர்ந்தும் அவர் சாந்தி, சரஸ்வதி, கிராம ஊழியன்,  தாமரை முதலான சிற்றிதழ்களில் எழுதியிருப்பாரேயானால், அவருக்கு  இத்தகைய நட்சத்திர அந்தஸ்த்து கிடைத்திருக்குமா? என்பதையும் யோசிக்கவேண்டியிருக்கிறது.  அச்சிற்றிதழ்களினால் ஜெயகாந்தனுக்கு சன்மானம் வழங்குவதற்கு மட்டுமல்ல எவருக்குமே தொடர்ந்து சன்மானம் வழங்க முடியாது. சன்மானத்தை ஆனந்தவிகடன் வாரி வழங்கியதனால் அவர் முழுநேர எழுத்தாளரானார். அவரது படைப்புகளை நூலாக்கி வெளியிட்ட மதுரை மீனாட்சி புத்தக நிலையமும் அவரை வஞ்சிக்காமல் ஒழுங்காக  ரோயல்டியும் வழங்கியது. காலப்போக்கில் செம்பகா பதிப்பகம் அனைத்துதொகுப்புகளையும் செம்பதிப்பாக்கியது.
அவரை தமிழ் வாசகர் சமூகம்  விழியுயர்த்திப்பார்க்க வைத்த ஆனந்தவிகடன் பொன்விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது. பொன்விழா மலரிலும் அக்கினிப்பிரவேசம் முக்கியத்துவம் கருதி மறுபிரசுரம் செய்யப்பட்டது.
அழைப்பு வந்தும்,  அவர் விழாவுக்குச்செல்லவில்லை. ஏன்...? எனக்கேட்டதற்கு அவரது பதில்: "திவசச்சாப்பாடு"
அதுதான் ஜே.கே. என்ற ஜெயகாந்தன்.
திமிரும் குசும்பும் நிறைந்த அவர் பற்றி தொடர்ந்தும்  பேசலாம் எழுதலாம், அவரது படைப்புகளை மறுவாசிப்புக்குட்படுத்தலாம். விவாதிக்கலாம். அவரது பாத்திரங்களும் கருத்துக்களும் விவாதத்திற்குரியவைதான்.
அதனைத்தான் மெல்பன் வாசகர் வட்டத்தினர் அழகாக நடத்தியிருந்தார்கள்.  இரா. கோவிந்த சாமி, சாந்தி சிவக்குமார், இரகமத்துல்லா, ஜரீனா, மதி மதியழகன், இரவிச்சந்திரன், ராஜா கருப்பையா, சுதன், மெல்பன்  ஜே.கே. ஜெயக்குமாரன், ஆவூரான் சந்திரன் ஆகியோர்  சோர்வு தட்டாமல் உரையாடி நிகழ்ச்சியை செறிவாக்கினார்கள்.
அந்த இனிய மாலைப்பொழுதில்  ஜெயகாந்தனின் தடத்தை தத்தமது பார்வையில் பகிர்ந்துகொண்டார்கள்.
சுமார்  அறுபது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட கதைகளாயினும், இன்றைய காலத்தில் அதன் தேவை, பாதிப்பு எத்தகைய வடிவங்களைப்பெறுகின்றன? அவற்றை விட வேறு சிறந்த கதைகளை அவர் எழுதவில்லையா? அவரை விடவும் சிறந்த கதைகளை எழுதியவர்கள், எழுதிக்கொண்டிருப்பவர்கள் பற்றி ஏன் பேசாதிருக்கின்றோம் முதலான எண்ணங்கள் மனதில் அலைமோதும்.
முதல் கதை: டிரெடில். ஒரு சாதாரண அச்சுக்கூடத்தில் கம்போஸிட்டர், பைண்டர், மெஷின் மேன், புரூப் ரீடர் எல்லாம் அந்த வினாயகமூர்த்தி மாத்திரம்தான். அந்த அச்சுக்கூடத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்யும் அவனது கால்களை மூங்கில் குச்சிகளுக்கு உவமிக்கிறார் ஜெயகாந்தன். அங்கிருக்கும் அந்த அச்சு இயந்திரத்தின் உயிரும் அதில்தான் இருக்கிறது என்கிறார்.
இந்த ஒற்றை வரி, கதையின் இறுதியிலும் வேறு ஒரு வடிவத்தில் வருகிறது.
தொடர்ந்தும் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கும் அவனுக்கு தனது பெயரும் மணமகனின் இடத்தில் வரக்கூடாதா என்ற ஆசை பிறக்கிறது. அச்சுக்கு வந்த ஒரு அழைப்பிதழுக்கு அச்சுக்கோர்த்து மணமகன் பெயர் வருமிடத்தில் தனது பெயரை வைத்து அச்சடித்தும் பார்க்கிறான். அகம் மகிழ்கின்றான். திருமண அழைப்பிதழ்களே அவனுக்கும் திருமண ஆசைக்கான  வழியைத் திறக்கிறது. முதலாளியிடம் சொல்லி அதற்கான ஏற்பாடுகளுக்கும் தயாராகின்றான். எதிர்பாராமல் அவனுக்கு குடலிறக்க உபாதை (Hernia ) வந்து சத்திரசிகிச்சைக்கு ஆளாகின்றான். அவனது உடல் வைத்திய மாணவர்களின் ஆராய்ச்சிப்பொருளாகிறது. அந்த ஆஸ்பத்திரியை விட்டு அவன் வெளியேறும்போது, டாக்டர் சொல்லும் புத்திமதி: " நீ... கல்யாணம் செய்துகொள்ளாதே! உனக்கே தோணாது... யாராவது கட்டாயப்படுத்தினாலும்...!"
இச்சிறுகதையை " ஆம், இரண்டு 'டிரெடில்' களும் இயங்க ஆரம்பித்துவிட்டன"  என்று முடிக்கிறார் ஜெயகாந்தன்.
அந்தத்தொழிலாளியின் திருமண ஆசை நிராசையாகிறது சோகரஸம் கொண்ட  இச்சிறுகதையில். இக்கதையை கூர்ந்து படித்தால் ஜெயகாந்தனின் குசும்புத்தனமும் தெரியவரும்.  அச்சுப்பிசாசு தொடர்பான கிண்டல். ( மன்னிக்கவும் என்னால் அந்த வரிகளை இங்கு சொல்ல முடியாது)
பிணக்கு
கைலாசம்பிள்ளை - தர்மாம்பாள் தம்பதியருக்குள் எதிர்பாராதவிதமாக வந்துவிடும் பிணக்கு,  திருமண பந்த உறவை கேள்விக்குட்படுத்துகிறது. பேரன், பேத்தியும் கண்டுவிட்ட  அந்த முதிய தம்பதியர்  ஒரு நிலவுக்காலத்தில் முற்றத்திலிருந்து கடந்துபோன தேன்நிலவுக்காலத்தை நனவிடை தோய்ந்து பரஸ்பரம் ஸ்பரிஸிக்கையில் அந்தக்கிழவருக்கு - ஆகாச வெளியில் கவிந்து மிதந்து செல்லும் மேகத்திரள்கள் நிலவினருகே வரும்போது ஒளிமயமாகவும், விலகிச்செல்கையில் கரிய நிழற்படலங்களாகவும் மாறி மாறி வர்ண ஜாலம் புரிகின்றன.
அவருக்கு அந்த  இதமான சூழலில் அந்த பழைய நினைவா வரவேண்டும்? மனைவியிடம் எதனைச்சொல்லவேண்டும் எதனைச்சொல்லக்கூடாது என்ற எண்ணமேயின்றி தனக்கிருந்த பழைய பெண்ணுறவை சொல்லிவிடுகிறார். வந்தது வினை. இதுதான் விதியா...?!.
தன்னிடத்தில்  மாத்திரமே  இருக்கவேண்டிய  கணவனின்  தாம்பத்திய உறவு,   மற்றும் ஒரு பெண்ணுடனும் ஏற்கனவே பகிரப்பட்டிருக்கிறது என்பதை  அவர் வாயாலேயே கேட்டபின்னர்,  அவரை முற்றாகவே புறக்கணித்துவிடுகிறாள் தர்மாம்பாள். அந்தப்புறக்கணிப்பு அவளது மரணம்வரையிலும் நீடிக்கிறது.
மரணப்படுக்கையில் மகன், மருமகள், பேரப்பிள்ளைகளிடமிருந்து  பால் அருந்தினாலும், கணவர் தரும்போது உட்கொள்ளாமல் உமிழ்ந்துவிடுகிறாள். கணவர் தந்த பால் அவளது கடைவாயில் வழிகிறது.
மரணிக்கும்போதும் அவரை அவள் மன்னிக்கத்தயாரில்லை.
" இவளுக்கு என் கையாலே கொள்ளிகூட வைக்கமாட்டேன் " என சபதமேற்கிறார் கிழவர்.
இந்த பிணக்கு என்ற கதையில் வானத்திலிருக்கும் நிலவும் ஒரு பாத்திரம்தான். பாத்திரங்களை முழுமைப்படுத்தியதிலும் ஜெயகாந்தன் வெற்றி கண்டவர்.
அதனால்தான் அவர் படைத்த கங்காவும், லலிதாவும், கோகிலாவும், சாரங்கனும் , திருட்டு முழி ஜோசப்பும், ஹென்றியும், ஓங்கூர் சாமியாரும், சாமுண்டியும்  இன்னும் பலரும் நினைவில் நிற்கிறார்கள். அவர்கள் மட்டும் அல்ல அவரது பல சிறுகதைகள், நாவல்களின் பெயர்களும்   இன்றும் நினைவில் தங்கியிருக்கின்றன. இந்தக்கதையில் நினைவு பற்றியே ஜெயகாந்தன் ஒரு பந்தி எழுதியிருக்கிறார். கதையின் இறுதியில் " ஆம், அதே நிலவுதான்" என்று முடிக்கிறார்.
மனிதர்கள் மாறுவார்கள். நினைப்புகள் மாறும். நிலவுமட்டும் மாறவேயில்லை  என்ற  ஆழமான செய்தியை ஜெயகாந்தன் தருகிறார்.
நந்தவனத்தில் ஒர் ஆண்டி
இந்தக்கதையைப்படித்த அருட்டுணர்வில்தானோ இயக்குநர் பாலா பிதாமகன் படம் எடுத்தார் என்றும் இந்த வாசகர் வட்டத்தில் ஒருவர் குரல்  எழுப்பினார். பாலா மட்டுமல்ல, கே. பாலச்சந்தர் உட்பட பல இயக்குநர்களை பெரிதும் பாதித்தவர்தான் ஜெயகாந்தன். பல திரையுலக  நட்சத்திரங்களினாலும் இயக்குநர்களினாலும் விரும்பிப்படிக்கப்பட்டவர். நேசிக்கப்பட்டவர்.
இடுகாட்டுக்கு  வரும் குழந்தைப்பிணங்களை அடக்கம் செய்யும் வெட்டியான் எனப்படும் ஆண்டி என்பவனின் கதைதான் நந்தவனத்தில் ஓர் ஆண்டி. அந்த இடுகாட்டிலேயே  குடிசை  அமைத்துக்கொண்டு மனைவி முருகாயியுடன் வசிக்கும் அவன் விரும்பிப்படிக்கும் சித்தர் பாடல்: " நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதாமாய்க் குயவனை வேண்டிக் கொண்டுவந்தான் ஒரு தோண்டி, அதைக்கூத்தாடிக் கூத்தாடிப்போட்டுடைத்தாண்டி..."
அந்தப்பாடலின் ரிஷிமூலம் தெரியாத அவனுக்கு அந்தப்பாடல் மீதான ஈர்ப்பு வந்தது அவள் மனைவி முருகாயி கருத்தரித்த பின்னர்தான். அவள் தான் கர்ப்பமாகியிருக்கும் தகவல் சொன்ன நாளன்றுதான் அந்தச்சாலை வழியே சென்ற காவி தரித்த பண்டாரம் ஒருவன் தன்னை மறந்த லயத்தில் அந்தப்பாடலைப்பாடிக்கொண்டு சென்றான்.
அன்றிலிருந்து இடுகாட்டு ஆண்டிக்கும் அந்தப்பாடலே வேதவாக்காகிவிடுகிறது. இடுகாட்டை மரம் செடி, கொடி வைத்து நந்தவனம்போன்று ஆக்கிவிடும் அவன் அவற்றுக்கு தண்ணீர் விடும்போதும், சவமாக வரும் குழந்தைகளுக்கு புதைகுழி தோண்டும்போதும் உற்சாகமாகப்பாடும் பாடல் அதுதான். மகன் இருளன் பிறந்த பின்னரும் அந்தக்குழந்தையிடத்திலும் மகிழ்ச்சி பொங்க அந்தப்பாடலையே பாடுவான். இவ்வாறு  இடம் சந்தர்ப்பம் பாராமால்  இந்த இடுகாட்டு ஆண்டி பாடுவதனால் அங்கு வருபவர்கள் அவனை "ஒரு மாதிரியான ஆள்" என்று கணக்குப்போட்டுக்கொள்கிறார்கள்.
ஒருநாள் அவனது குழந்தை இருளனும் இறந்துவிடவும் அதற்காக குழிவெட்டும்போது அவனது வாயிலிருந்து அந்தப்பாடல் இல்லை. குமுறிக்குமுறி அழுகிறான்.  நிலத்தில்  அடக்கமான குழந்தைகள் எல்லாம் புதைகுழியிலிருந்து எழுந்து வந்து நர்த்தனம் புரிவதுபோன்ற பிரமைக்கு ஆளாகின்றான். அந்த சிசுக்களின் மத்தியில் அவனது சிசுவும் தோன்றுமா என்ற எண்ணத்தில் தேடுகிறான்.
அதன் பின்னர் இடுகாட்டுக்கு பிணங்கள் வரும்போதெல்லாம் அவனிடமிருந்து அந்தப்பாடல் இல்லை. கதறி அழுகின்றான்.
"ஆனால், இப்பொழுதும் ஊரார் அவனை ஒரு மாதிரி என்றுதான் சொல்லுகிறார்கள். " என்று கதையை முடிக்கிறார்,   "சமூகம் என்பது நாலுபேர்" என்ற  தலைப்பிலும் ஒரு குறுநாவல் எழுதியிருக்கும் ஜெயகாந்தன்.
ஜெயகாந்தன் 1985 களிலேயே ஆக்க இலக்கியம் படைப்பதை நிறுத்திவிட்டபோது, " ஏன் இப்பொழுது நீங்கள் எழுதுவதில்லை..?" என்று வரும் கேள்விகளுக்கு " இதுவரையில் எழுதியிருப்பதையே படியுங்கள்" எனச்சொல்லி வந்தவர்.
அதுதான் ஜெயகாந்தன்.
அவர் கடந்த 2015 இல் மறைந்தார். அவர் எழுதுவதை நிறுத்திய காலத்தில் பிறந்தவர்களும் தற்போது அவரைப்படிக்கிறார்கள்.
அதுதான் ஜெயகாந்தன்.
மெல்பன் வாசகர் வட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் ஜெயகாந்தனை தேடித்தேடிப்படிப்பதையும் அறியமுடிந்தது. அதற்கான வாயிலை மெல்பன் வாசகர் வட்டம் திறந்துகொடுத்திருக்கிறது என்ற மனநிறைவுடன் குறிப்பிட்ட மூன்று கதைகளையும் நாற்பத்தியைந்து வருடங்களின் பின்னர் எனது ஊருக்கு ரயிலில் திரும்பி வரும்போது மீண்டும் படித்தேன்.
ஒரு பகல்நேர பசஞ்சர் வண்டி என்ற தலைப்பிலும் ஜெயகாந்தன் ஒரு நல்ல சிறுகதை எழுதியிருக்கிறார்.
வாசகர் வட்டத்தின் சந்திப்பிலிருந்து விடைபெறும்பொழுது, கனடாவில் வதியும் ஜெயகாந்தனதும் எனதும் நல்ல நீண்ட காலநண்பர் கனடா மூர்த்தி இயக்கித்தயாரித்த உலகப்பொதுமனிதன் ஜெயகாந்தன் ஆவணப்படத்தின் பிரதியை பாருங்கள் என்று கொடுத்துவிட்டு வந்தேன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
---0---











No comments: