இலங்கைச் செய்திகள்


உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில்

உலக வங்கி  இலங்கைக்கு 1340 மில்லியன் அமெரிக்க டொலர்  கடனுதவி

வவுனியா வந்தார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விஷேட பிரதிநிதி

இலங்கை வந்­துள்ள அவுஸ்­தி­ரே­லிய அருன்ட்டா போர்க்­கப்பல்

இடமாற்றங்களை இரத்துச்செய்யக்கோரி மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் 

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பறிபோனது மற்றுமொரு தமிழ் இளைஞனின் உயிர் ; வடமராட்சி சம்பவத்தின் முழு விவரம்..!






உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில்

13/07/2017 இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னனின் கோரிக்கைக்கு அமைவாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடானது இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசூரியன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழர் ஆராச்சி மாநாட்டில் இவ் உலக தமிழர் பண்பாட்டு இயக்கமானது உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்ட நோக்கமானது தமிழின் மொழி பண்பாடு கலாச்சாரங்களை பேணி பாதுகாத்து அதனை உலகிற்கு எடுத்துச் செல்வதற்காகவே இவ் அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் நாட்டில் பின்னர் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலமைகளால் இவ் அமைப்பானது புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்பட்டு வந்திருந்தது.
இதன்படி உலகளவில் இதுவரை தமிழ்நாடு, ஜேர்மன், பாரிஸ், மலேசியா, சுவிற்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உட்பட  பன்னிரன்டு நாடுகளில் நடாத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் கடந்த பன்னிரன்டாவது மாநாடானது இந்தியாவில் தமிழ்நாட்டில் நடாத்தப்பட்டிருந்த போது அங்கு கலந்துகொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னன் இதனை யாழ்ப்பாணத்திலும் அனைத்து தமிழர்களையும் ஒன்றினைக்கும் வகையில் நடாத்த வேண்டும் என கோரியிருந்தார். 
அதற்கமைவாக யுத்தத்திற்கு பின்னர் தற்போது இம் முறை இவ் நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளோம். இரண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இந் நிகழ்வானது எதிர்வரும் 5ஆம் 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 100 ற்கும் மேற்பட்ட புலம்பெயர் நாட்டவர்களும் இவ் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். 
இந் நிகழ்வின் சிறப்பு தலைவராக தமிழ்நாடு பாண்டிச்சேரி பல்கலைகழகத்தின் பேராசிரியர் பஞ்ச இராமலிங்கம் கலந்துகொள்ளவுள்ளார்.
இந் நிகழ்வுக்கு அனைத்து தமிழ் மக்களும் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார். 
இதேவேளை இவ் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இவ் மாநாட்டின் ஊடக ஒருங்கினைப்பாளர் செந்தில்வேலர் மற்றும் உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளைத் தலைவர் அருணாசலம் சத்தியானந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.   நன்றி வீரகேசரி 











உலக வங்கி  இலங்கைக்கு 1340 மில்லியன் அமெரிக்க டொலர்  கடனுதவி

12/07/2017 உலக வங்கியானது இலங்கைக்கு 1340 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி மற்றும் தொழிநுட்ப உதவியாளர்களை இரண்டாவது முறையாகவும் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் கீழ் வழங்கத் தீர்மானித்துள்ளது. 
இந்தக் கடன் உதவியானது மூன்று வருட கால வரையறையை கொண்டதுடன் இதற்கு முன்னரும் இலங்கை 660 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவியை கடந்து 2014 -2017 ஆண்டு கால எல்லைக்குள் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கி நிர்வாகிக்கும் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே குறித்த கடனுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 














வவுனியா வந்தார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விஷேட பிரதிநிதி

12/07/2017 இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் இன்று வவுனியாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் இம்மாதம் 10 தொடக்கம் 14ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு விஷேட சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.
குறிப்பிட்ட விஜயத்தின்போது பிரதம நீதி அரசரின் பணிப்புரைக்கு அமைவாக இன்று வவுனியா மேல் நீதிமன்ற கேட்போர் கூடத்தில் மாலை 5 மணியளவில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரி. எல். ஏ. மனாப் மற்றும் வவுனியா,மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிகளுடன் எமர்ஷன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
குறிப்பிட்ட சந்திப்பிலே தற்கால நீதிமன்ற சூழ்நிலைகள், மற்றும் சட்டம் தொடர்பில் விஷேடமாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 












இலங்கை வந்­துள்ள அவுஸ்­தி­ரே­லிய அருன்ட்டா போர்க்­கப்பல்



11/07/2017 அவுஸ்­தி­ரே­லிய கடற்­ப­டைக்கு சொந்­த­மான "அருன்ட்டா" போர்க்­கப்பல் நேற்று கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது. இலங்கை–அவுஸ்­தி­ரே­லிய நாடு­களின் பாது­காப்பை  பலப்­ப­டுத்தும் வகையில் இந்த விஜயம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இந்த  ஆண்டில் இது­வ­ரை­யி­லான கால­கட்­டத்தில் வருகை தரும் 25 ஆவது போர்க்­கப்பல் இது­வாகும். 
 அவுஸ்­தி­ரே­லிய கடற்­ப­டைக்கு சொந்­த­மான போர்க்­கப்­ப­லான எச்.எம்.ஏ.எஸ். அருன்ட்டா போர்க்­கப்பல் நான்கு நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு நேற்­றைய தினம் இலங்கை கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது. 
நேற்றுக்காலை வந்­த­டைந்த இந்த போர்க்­கப்­பலை இலங்­கையின் கடற்­படை மர­பு­க­ளுக்கு அமைய இலங்கை கடற்­ப­டை­யினர் வர­வேற்­ற­துடன் இரு­நாட்டு கடற்­படை அதி­கா­ரிகள் இடை­யிலும் உத்­தி­யோ­க­பூர்வ சந்­திப்­புகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. மேலும் அருன்ட்டா போர்க்­கப்­பலின் தள­பதி மற்றும் உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு இடை­யி­லான சந்­திப்­பு­களும் நேற்று பிற்­பகல் கடற்­படை தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்­றன. 
அருன்ட்டா கப்­ப­லா­னது 118 மீற்றர் நீளமும் 14.8 மீட்டர் அக­லமும் கொண்­ட­துடன் 10  தற்­கா­லிக படை­க­ளையும் ஆயு­தங்­க­ளையும் கொண்­டுள்­ளது. நான்கு நாட்கள் இலங்கை கடல் பரப்பில் நிற்கும் அருன்ட்டா கப்­ப­லா­னது குறித்த காலத்தில் இலங்கை கடற்­ப­டை­யுடன் கூட்டு பயிற்­சி­க­ளையும் முன்­னெ­டுக்­க­வுள்­ளது.   
கலை ,கலா­சார, விளை­யாட்டு நிகழ்­வு­க­ளிலும் இரு­நாட்டு கடற்­ப­டை­யினர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.  அருன்ட்டா போர்க்­கப்­பலில் 24 உயர் அதி­காரிகள் உள்­ளிட்ட 190 கடற்­ப­டை­யினர் வருகை தந்­துள்­ளனர். மேலும் இலங்கை–அவுஸ்­தி­ரே­லிய பாது­காப்பு உறவை பலப்­ப­டுத்தும் வகையில்  இக் கப்பல் வருகை தந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­ன்றது. 
மேலும்  இந்த ஆண்டில் இது­ரை­யான ஏழு மாத காலத்தில் சர்­வ­தேச நாடு­களை சேர்ந்த 25 போர்க்­கப்­பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளன. இதற்கு முன்னர் பிரான்ஸ், அமெரிக்க, ரஷ்ய, சீன, இந்திய, பாகிஸ்தான் நாடுகளின் போர்க்கப்பல்கள் இந்த ஆண்டில் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி











இடமாற்றங்களை இரத்துச்செய்யக்கோரி மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

10/07/2017 மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை இடமாற்றக்கோரியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இரண்டு பிரதேச செயலாளர்களின் இடமாற்றங்களை இரத்துச்செய்யக்கோரியும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டது.
ஊழலுக்கு எதிரான மக்கள் பேரணியும் நியாயமான அதிகாரிகளின் இடமாற்றத்தினை இரத்துச் செய்வதற்குமான வேண்டுகோள் என்னும் தலைப்பில் இந்த கவனயீர்ப்பு போராட்டமும் பேரணியும் நடைபெற்றது.
மட்டக்களப்பில் ஊழல்களில் ஈடுபடுவோரை மாவட்டத்தில் இருந்துவெளியேற்ற வேண்டும் என்பதுடன் அவர்களுக்கான தகுந்த தண்டனைகளும் வழங்கப்படவேண்டும். அதற்காக அனைவரும் இணைந்து போராட முன்வரவேண்டும் என பொது அமைப்புகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டமும் பேரணியும் நடாத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் வாகரை மற்றும் செங்கலடி பிரதேச மக்களும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பான முறையில் சேவையாற்றிவரும் இரண்டு பிரதேச செயலாளர்களை இடமாற்றம் செய்ய மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு இதன்போது கடுமையான எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்பில் வெளிவரும் ஊழல்கள் தொடர்பில் உரியவர்கள் கவனத்தில் கொண்டு அவர் வெளியேற்றப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாரிய ஊழல் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும்போது அது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். ஆனால் ஊழலுடன் சம்பந்தப்பட்டவரை வைத்துக்கொண்டு ஊழல் தொடர்பில் விசாரணை செய்யமுடியாது எனவே மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்து ஊழல் விசாரணைகள் நடாத்தப்படவேண்டும் எனவும் இங்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிரதேச செயலாளர்கள் ஊழல் செய்கின்றார்கள் மோசடி செய்கின்றார்கள் என்று ஒரு மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகின்றார் என்றால் அது தொடர்பில் அவரையே விசாரணை செய்யவேண்டும் எனவும் மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது மட்டு. அரசஅதிபரின் சாதனை மதுபோதையில் முதலிடம், வறுமையில் முதலிடம், ஊழல்செய்யும் அதிகாரிகளின் அதிகாரத்தினை கட்டுப்படுத்துவது யார், நல்லாட்சி அரசாங்கம் ஊழலுக்கு சார்பானதா, மட்டக்களப்பு மக்கள் அரசியல் அநாதைகளா? மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரும் வெளிநாட்டு பணம் எங்கே? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதான வாயில் பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டதுடன் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கலகமடக்கும் பொலிஸார் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடாத்தும் வாகனமும் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்தன.   நன்றி வீரகேசரி 










பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பறிபோனது மற்றுமொரு தமிழ் இளைஞனின் உயிர் ; வடமராட்சி சம்பவத்தின் முழு விவரம்..!

10/07/2017 வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் வீதியில் 6 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் குறித்த சம்பவம் நடந்துள்ளது.துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலையை சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் இடுப்பு மேற்பட்ட வயிற்று நெஞ்சு பகுதியில் சூட்டுக்காயம் காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
“சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும்,லொறி மணலுடன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விசாரணையில் முடிவதைந்த பின்னரே குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையாக தகவல்களைத் தெரிவிக்க முடியும்.”-என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 10 நாள்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து வந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றன. நேற்று மதியம் உணவு உட்கொண்ட பின் யாழ்ப்பாணம் சென்றுவந்து மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்திய அவர் வல்லிபுரம் கோயிலுக்குச் சென்று வருகின்றேன் என்று கூறிச் சென்றார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 
மேலும், அவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் மீண்டும் வெளிநாடு செல்லவிருந்தார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது.மந்திகை வைத்தியசாலைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் வாகனத்தினை மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மந்திகை வைத்தியசாலைப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்து காங்கோசன் துறை மூத்த பொலிஸ் அத்தியட்சிகர் மகாசிங்க, காங்கேசன்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட 50 பொலிஸாரும் அவர்களுடன் இரு வாகனங்களில் சிறப்பு அதிரடி படையினரும் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
அதேவேளை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெல்லியடியில் அமைந்துள்ள அவரது வீட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது. சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் முகத்தை துணியால் மூடிக் கட்டியவாறு தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது. 
துன்னாலையில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஒன்றும் இனந்தெரியாதோரால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மூவர் கைது செய்யப்பட்டு ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் விடுவிக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவன் மற்றும் முபாறக் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


நன்றி வீரகேசரி








No comments: