அவுஸ்திரேலியாவில் புதிய பத்திரிகை எதிரொலி


ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் புலம்பெயர்ந்த காலம் முதல் எத்தனையோ தமிழ்பத்திரிகைகள், பல்வேறு தமிழ் இதழ்கள் - சஞ்சிகைகள் என்று தொடராக ஆரம்பித்து பெரும்பாலும் எவையும் நிலைத்ததில்லை. காலப்பெருஞ்சுழலின் உக்கிரமான வேகத்துக்கு முகம்கொடுக்க முடியாமல் காணாமல்போய்விட்டன. பொதுவிலே இன்று அச்சு ஊடகங்களின் இருப்பெனப்படுவது பாரிய கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற விடயம். ஆஸ்திரேலியாவின் பல முன்னணி அச்சு ஊடகங்கள் தங்கள் பத்திரிகை வடிவங்களை சிறிதாக அமைத்துக்கொண்டுவிட்டன.

இன்னும் சில ஆண்டுகளில் தாங்கள் முற்று முழுதாகவே இணையத்துக்கு குடிபெயர்ந்துவிடப்போவதாக அறிவித்தும்விட்டன.


இவ்வாறு எழுதப்பட்ட ஆசிரியத்தலையங்கத்துடன் மெல்பனில் இம்மாதம் ( ஜூலை 2017) முதல் எதிரொலி என்ற பத்திரிகை 12 பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இந்த நாட்டில் ஏற்கனவே வெளியான தமிழ் ஏடுகளின் ஆயுள் காலத்தையும் சொல்லி,

முன்னணி பத்திரிகைகளுக்கு நேர்ந்துள்ள நிலைபற்றியும்

சுட்டிக்காண்பித்துக்கொண்டு, தமிழ் வாசகர்கள் மீதான ஆழ்ந்த நம்பிக்கையுடன்

வெளியாகியிருக்கும் எதிரொலி மெல்பனிலிருந்து தனது காலடியை

எடுத்துவைத்துள்ளது.

மெல்பனிருக்கும் விக்ரோரியா மாநிலத்திலிருந்து முன்னர் சங்கங்களின் செய்தி ஏடுகள்

வெளியாகின. அத்துடன் தமிழ் உலகம், உதயம், ஈழமுரசு முதலான பத்திரிகைகளும்

வரவாகின. மரபு, அவுஸ்திரேலிய முரசு, அக்கினிக்குஞ்சு முதலான கலை இலக்கிய

இதழ்களும் வெளியாகி மறைந்தன.

அக்கினிக்குஞ்சு இணைய இதழாகியது. இவை தவிர தமிழ் அவுஸ்திரேலியன்,

தமிழ்க்குரல், கலப்பை முதலான இதழ்களையும் அவுஸ்திரேலியா தமிழ் வாசகர்கள்

சந்தித்தனர்.

அந்த வரிசையில் தற்பொழுது இணைந்துள்ளது எதிரொலி.

இந்த கடல்சூழ் கண்டத்தில் இலங்கை இந்தியத்தமிழர்கள் வாழ்கின்றமையால்,

Australia, அவுஸ்திரேலியா எனவும் ஆஸ்திரேலியா எனவும் அழைக்கப்படுவதையும்

அவதானிக்கின்றோம். அதே போன்று Melbourne தமிழில் மேல்பேர்ண், மெல்பன்,

மெல்போர்ண் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது, எழுதப்படுகிறது.

எதிரொலி, ஆஸ்திரேலியா - மெல்பேர்ண் என்றே பதிவுசெய்யத்தொடங்கியிருக்கிறது.

இவற்றில் எது சரி, எது பிழை என்ற பட்டிமன்றம் அவசியம் இல்லை.

2

"அவுஸ்திரேலியா எங்கிருக்கிறது..?" எனக்கேட்ட தமிழக வாசகர்களும்

இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் அறிந்திருப்பது ஆஸ்திரேலியா

தான்.

12 பக்கங்களில் வெளியாகியிருக்கும் எதிரொலி முதல் இதழிலிலேயே கனதியான

விடயதானங்களுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறது.

சமகால இலங்கை தமிழர் அரசியலும் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின்

குடிசன மதிப்பீடு 2016, குடியுரிமை விண்ணப்பங்கள் புதிய சட்டத்தின் படி...?

முதலான தகவல் பத்திகளும் இடம்பெற்றுள்ளன.

பின்னோக்கிச்செல்கிறதா தமிழகம்...? ( தமிழகத்திலிருந்து டான் அசோக்) வித்திய

சொல்லும் பாடம் ( தாயகத்திலிருந்து அம்மான்) குள்ள நரிக்கூட்டமும் வெளுக்கும்

சாயமும் (தயாளன்), அன்றும் இன்றும் கலாசாரமும் பண்பாடும் (

கிளிநொச்சியிலிருந்து தமிழ்க்கவி அம்மா) இவ்வருட இறுதிக்குள் தேர்தலை சந்திக்கும்

பிரித்தானியா ( லண்டனிலிருந்து நடேசன்) கங்காரு நாட்டுக்காகிதம் (

மெல்பனிலிருந்து முருகபூபதி) முதலான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ள

எதிரொலியில் ஆயுர்வேதம் என்ற பகுதியில் சில மருத்துவக்குறிப்புகளும்

இடம்பெற்றுள்ளன.

தமது எதிர்காலத்தை தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்காக மாத ராசி பலனும்

சொல்லப்பட்டிருக்கிறது. வண்ணத்தில் அச்சாகியிருக்கும் எதிரொலியின் எதிர்காலம்

எப்படி இருக்கும் என தற்போதைக்கு சொல்ல முடியாது போனாலும்,

வெளியாகியிருக்கும் முதல் இதழ் இணைய ஊடகங்களை நாடியிருக்காத -

நம்பியிருக்காத மூத்த தலைமுறை தமிழ் வாசகர்களுக்கு பயனுள்ளதாகவே

அமைந்துள்ளது.

இந்த நாட்டில் எதிரொலி எத்தகைய வாசகர்களின் தேவைகளை

பூர்த்திசெய்யப்போகிறது...? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இலவசமாக வழங்கப்படும் எதிரொலியின் மின்னஞ்சல்:

ethirolimelbourne@gmail.com





No comments: