இலங்கைச் செய்திகள்


சொந்தமண்ணில் கால் பதித்த கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள்

சிறைச்சாலை பஸ் தாக்குதல் : காரைதீவைச் சேர்ந்த தமிழ் சிறைச்சாலை உத்தியோகத்தர் பலி

வவுனியாவில் மேலும் 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல்

கறுப்பு துணியால் கண்ணைக் கட்டியவாறு கிளிநொச்சியில் போராட்டம்

காணாமல் போன உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பேரணி

மனித சங்கிலி போராட்டத்தில் குதித்துள்ள மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள்

ஜனாதிபதி இன்று யாழ்.விஜயம்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா அதிருப்தி..!









சொந்தமண்ணில் கால் பதித்த கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள்

01/03/2017 கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சுமார் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
விமானப்படையினர் வசமிருந்த பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் இன்று முற்பகல் திறந்துவிடப்பட்டதை அடுத்து, சொந்த காணிகளுக்குள் மக்கள் கால்பதித்துள்ளனர். 
நன்றி வீரகேசரி 










சிறைச்சாலை பஸ் தாக்குதல் : காரைதீவைச் சேர்ந்த தமிழ் சிறைச்சாலை உத்தியோகத்தர் பலி

28/02/2017 களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மட்டக்களப்பு, காரைதீவைச் சேரந்த இளைஞரெருவரும் பலியாகியுள்ளார்.
குறித்த தாக்குதலில் களுத்துறை சிறைச்சாலையில் கடமை புரியும் மட்டக்களப்பு காரைத்தீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான 24 வயதுடைய தர்மீகன் சிவானந்தம் என்ற இளைஞரே இவ்வாறு உயிரழந்தவராவார்.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் மற்றுமெரு சிறைச்சாலை உத்தியோகத்தரான விஜயரத்ன என்பவர் உயிரிழந்துள்ளதுடன் இரு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் சமயங் உட்பட 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி










வவுனியாவில் மேலும் 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல்

28/02/2017 வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக கடந்த 22 ஆம் திகதி இருவர் இனம் காணப்பட்டு அதி தீவிரசிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மேலும் 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல்  தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன் தினம் இருவருக்கும் நேற்று மூவருக்குமாக மொத்தம் ஏழுபேர் இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், 
கடந்த 22ஆம் திகதி இனங்காணப்பட்ட 25 வயதுடைய ஹெப்பிட்டிக்கொலவ பகுதியைச் சேர்ந்த குழந்தை கிடைத்து ஒரு கிழமையான தாயார் தொடர்ந்தும் அதி தீவிரசிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 37 வயதுடைய பூவரசம்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர் பன்றிக்காச்சல் ஏற்பட்டவர்களை பார்வையிடுவதற்கு கர்ப்பிணிதாய்மார்கள், சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துவரவேண்டாம்  என்று மேலும் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 









கறுப்பு துணியால் கண்ணைக் கட்டியவாறு கிளிநொச்சியில் போராட்டம்

04/03/2017 கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி காலை  ஆரம்பிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை கிழமை 13ஆவது நாளாக தொடர்கின்றது. 
யாழ்ப்பாணத்திற்கு  ஜனாதிபதி இன்று உத்தியோகப்பூர்வ  விஜயம்  ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கறுப்பு  துணியால் கண்ணைக் கட்டியவாறு   போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
  எமது உறவுகளுக்கு இன்னமும் பதிலளிக்காது  இந்த அரசு  பாரா முகமாக  இருக்கின்றது என்பதனைக்  சுட்டிக்காட்டவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கறுப்பு  துணியால் கண்ணைக் கட்டியவாறு   போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  விடயத்தில்  இனியும் காலம் தாமதிக்க  வேண்டாம் எனவும்  இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜ.நா. கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும் போராட்டத்தினால் ஈடுபட்டவர்களினால் வலியுறுத்தப்பட்டது.
தமக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 











காணாமல் போன உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பேரணி

04/03/2017 வவுனியாவில் கடந்த 9 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இன்று (04) காலை வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆதரவு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
குறித்த பேரணி வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி புகையிரத நிலைய வீதியூடாக, மணிக்கூட்டுக்கோபுரம் வழியாக பசார் வீதி சென்று, இலுப்பபையடியூடாக நீதிமன்ற வழியாக போராட்டம் இடம்பெறும் இடத்தினை சென்று நிறைவடைந்தது.
குறித்த பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதிவழங்கு, சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய் போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு பெருமளவான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாக சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம. தியாகராசா, இ. இந்திரராசாவும் கலந்து கொண்டனர்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு. சுரேஸ்பிரேமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதிக்கு தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
நன்றி வீரகேசரி 











மனித சங்கிலி போராட்டத்தில் குதித்துள்ள மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள்

04/03/2017 மட்டக்களப்பில்   12  ஆவது நாளாக தொடரும்   வேலையற்ற  பட் டதாரிகளின்  போராட்டமானது  தற்போது மனித  சங்கிலி  போராட்டமாக மாறியுள்ளது .
இன்றய தினம்  இலங்கை தமிழ் ஆசிரியர்  சங்கத்தினர்  தங்களத்து  ஆதரவை தெரிவித்ததை அடுத்து  இந்த மனித சங்கிலி  போராட்டத்தையும்  முன்னெடுத்துள்ளனர் .
சில தினங்களுக்கு  முன்  அரசாங்க அதிபரை  சந்திக்க  சென்ற போது  பட் டதாரிகள் ஏமாற்றமடைந்ததையடுத்து  சில அசம்பாவித  சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது. 
இதைத்தொடர்ந்து  பட்டதாரிகளின் இந்த  போராட்டத்துக்கு  பலத்த  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போலிஸாரும் பெருமளவு  குவிக்கப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 










ஜனாதிபதி இன்று யாழ்.விஜயம்

04/03/2017 யாழ்ப்­பா­ணத்­திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வட­மா­காண ஆளுநர் அலு­வ­ல­கத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள "ஜனா­தி­ப­திக்கு தெரி­வி­யுங்கள்" எனும் மக்கள் குறைகேள் நிலை­யத்தை திறந்து வைக்­க­வுள்ளார்.
அத்­துடன் வலி­.வ­டக்கில் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பொது­மக்­க­ளது காணிகள் விடு­விப்புஇ விமானப் படை­யி­ன­ருக்­கான விமா­னத்­தளம் அமைப்­பது தொடர்­பான காணி சுவீக­ரிப்பு குறித்து முக்­கிய கலந்­து­ரை­யா­டல்­க­ளில் ஈடு­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இக் கலந்­து­ரை­யா­டலில் முப்­படைத்தள­ப­தி­களும் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர், வட­பி­ராந்­தி­யத்­திற்கு பொறுப்­பான முப்­படைத் தள­ப­திகள்இ யாழ்.மாவட்ட இரா­ணுவ கட்­டளை தள­பதி ஆகியோர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.
வலி­.வ­டக்கில் இரா­ணுவம் கைய­கப்­ப­டுத்தி வைத்­துள்ள பொது­மக்­க­ளது காணிகள் விடு­விப்பு தொடர்­பா­கவும், பலாலி உயர் பாது­காப்பு வல­யத்­தினுள் விமா னப் படை­யினர் தமக்­கான தள­மொன்றை அமைப்­ப­தற்­கான காணி சுவீ­க­ரிப்பு தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­க­ளிலும் ஜனா­தி­பதி, முப்­படை தள­ப­திகள், மற்றும் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளர்கள் ஈடு­ப­ட­வுள்­ளனர்.
இந்த  முக்­கிய கலந்­து­ரை­யா­டலை அடுத்து இரா­ணு­வத்தின் 10ஆவது ரெஜிமண்ட் பொறியியல் பிரி­வி­னரின் சாத­னைகள் தொடர்­பான பரி­ச­ளிப்பு நிகழ்­வு­க­ளிலும் ஜனா­தி­பதி மற்றும் ஏனைய அதி­கா­ரிகள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். இதனை தொடர்ந்து மு.ப. 11 மணி­ய­ளவில் யாழ்ப்­பாணம் பிர­தான வீதியில் அமைந்­துள்ள வட­மா­காண ஆளுநர் அலு­வ­ல­கத்தில், மக்கள் தமது பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஜனா­தி­ப­திக்கு தெரி­விக்கும் "ஜனா­தி­ப­திக்கு தெரி­வி­யுங்கள்" எனும் மக்கள் குறைகேள் நிலை­ய­மொன்றை திறந்து வைக்­க­வுள்ளார்.
இந்­நி­கழ்­வி­லேயே தெல்­லிப்­பழை பகு­தியில் மீள்கு­டி­ய­மர்ந்த மக்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்­டங்­களின் உறு­திப்­பத்­தி­ரங்­க­ளையும் வழங்கி வைக்­க­வுள்ளார்.
இந் நிகழ்­வுக்கு யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், வட­மா­காண முத­ல­மைச்சர், வட­மா­காண சபை உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருக்கும் பொது­மக்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. 
இதன்­ பின்னர்   நிகழ்­வு­களை நிறைவு செய்யும்   ஜனா­தி­பதி மாலை 3 மணி தொடக்கம் மாலை 3.55 மணி­வரை மீண்டும் பலாலி உயர் பாது­காப்பு வல­யத்­தினுள் முக்­கிய கலந்­து­ரை­யா­டலில் ஈடு­ப­ட­வுள்ளார். பின்னர் நான்கு மணிக்கு விமானம் மூலம் கொழும்­புக்கு புறப்­பட்டு செல்­ல­வுள்ளார்.
இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­ப­தியின் யாழ்.விஜ­யத்தின் போது காணி விடு­விப்பு தொடர்­பான முக்­கிய அறிவிப்­புக்கள் ஜனா­தி­ப­தியால் வெளி­யி­டப்­ப­டலாம் எனவும் பெரிதும் எதிர்­பார்க்­கப்­ப­டு­வதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.   நன்றி வீரகேசரி 












இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா அதிருப்தி..!

04/03/2017 இலங்கையின் நல்லிணக்கம் செயற்பாடுகள் மற்றும்  நீடித்த சமாதானத்திற்கான செயற்பாடுகள் மந்தகதியில்  இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமை ஆணையகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 
எதிர்வரும் 22ம் திகதி ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமை ஆணையக கூட்டத் தொடரில், ஆணையாளர் சயிட் அல் ஹுசைன் தாக்கல் செய்யவுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான பரந்தளவிலான மூலோபாய வழிமுறைகளோ அல்லது சமாதான செயற்பாடுகளுக்கான ஸ்திரத்தன்மையோ ஏற்படுவதற்கான வேகமான சாத்தியங்கள் தென்படவில்லை எனவும் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் மனித உரிமைகள் செயற்பாடுகள் மற்றும் புதிய அரசியலமைப்பு சீர்திருத்த விவகாரங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த விடயம் வரவேற்கக்கூடிய தொன்றெனவும், புதிய அரசியலமைப்பு உருவாக்குதல் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் சிறப்பான செயற்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம், போரில் மீண்டோருக்கான நல்லிணக்க செயற்பாடுகள், இடம்பெயர்ந்தவர்களின் காணிகளை மீளளித்தல், காணாமல் போனோருக்கான தனியான ஆணையகம் அமைத்தல் போன்ற விடயங்களில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் போர்க்குற்றம் குறித்த உண்மையை நிலைநாட்டுவது போன்ற செயற்பாடுகள் மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்படுவதுடன், ஏற்பட்ட இன முறுகளுக்கான நீண்டகால சமாதான செயற்பாடுகள் வகுக்கப்படவில்லை என விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு 17 மாதங்களுக்கு முதல் கொடுக்கப்பட்ட  நிபந்தனைகள் இன்னும் முழுமை நிலையை பெறாமை, பாதிக்கப்பட்ட மக்களை முழுமையான தீர்விற்கு இட்டு செல்லாமை மற்றும் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரனைகளை திருப்திகரமாக முன்னெடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை காண முடியவில்லை.
அத்தோடு நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கையின் முன்னெடுப்புகள் போதுமானதாக இல்லை எனவும் இலங்கை வகுத்ததாக கூறப்படும் திட்டங்கள் முழுமைபடாத நிலையை உணர்த்துவதாக மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் ஒழுகுப்படுத்தப்பட்ட நல்லிணக்க ஏற்பாடுகள் மற்றும் உண்மையை நிலைநாட்டுவதற்கான யுக்திகளை நடைமுறை படுத்துவதற்கு முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாத நிலையில் இதுவரைகாலமும் பெற்றுக்கொண்ட வெற்றிகள் வீண்விரயமாகிவிடும் என இலங்கைக்கு, ஐக்கியநாடுகளின் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி