"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார்"
என்னும் பாரதியின் கவிதை வரிகளையே தாரக மந்திரமாக ஏற்று நாற்பது
ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வெளியான மல்லிகை
மாத இதழ், தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த ஜோசப் சலூன்
என்ற சிகையலங்கார நிலையத்திலிருந்து வெளியாகி, பின்னர் மானிப்பாய் வீதிக்கும் கே.கே.எஸ். வீதிக்கும் இடையில் ( ராஜா
தியேட்டருக்கு பின்புறமாகச் சென்ற) சிறிய
ஒழுங்கையிலிருந்த சிறு கட்டிடத்தில் அமைந்த
மல்லிகைக்கான பிரத்தியேக அலுவலகத்திலிருந்து வெளியானது.
மல்லிகை முதலாவது இதழ் 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி
வெளியானபோது அதன் விலை 30 சதம்தான் என்பதை அறியும்போது ஆச்சரியம்தான்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு
காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த மல்லிகையும் எமது மக்களைப்போன்று
வடக்கில் உருவான அசாதாரண சூழ்நிலைகளையடுத்து கொழும்பில் ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு
இடம்பெயர்ந்து -- இறுதியில் அங்கிருந்தே
சில வருடங்களுக்கு முன்னர் தனது ஆயுளையும்
நிறைவுசெய்துகொண்டது.
மல்லிகை ஆசிரியரும்
வெளியீட்டாளருமான டொமினிக்ஜீவா பின்னாளில்
மல்லிகை ஜீவா என்றே பரவலாக
அறியப்பட்டவர்.
ஒரு சிகையலங்காரத் தொழிலாளியாக வாழ்ந்து, பொதுவுடைமைக்கருத்துக்களினால்
ஈர்க்கப்பட்டு, அரசியல்வாதியாகிவிடாமல், இலக்கியவாதியாக தன்னை வளர்த்துக்கொண்டவர்
ஜீவா.
சிறுகதை எழுதிக்கொண்டிருந்தவர்
எவ்வாறு ஒரு இலக்கிய இதழை துணிந்து நடத்த முன்வந்தார் என்ற கதையை தனது சுயசரிதையிலும் விபரித்திருக்கிறார். இந்தச்சரிதை
ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் வரவாக்கியவர்
அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் 'நல்லைக்குமரன்' குமாரசாமி.
முழுநேர எழுத்தாளராக ஈழத்து இலக்கிய உலகில் அறிமுகமான
ஜீவா, இதழாசிரியராகவே தனது
வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். போர் நெருக்கடி மிக்க, மின்சாரம் தடைப்பட்டிருந்த காலப்பகுதியிலும் அச்சுத்தாளுக்கு பெரும்
தட்டுப்பாடு நிலவிய சூழலிலும் யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளியானது.
அப்பியாசக்கொப்பித்தாளிலும் மல்லிகை அச்சாகியதை மறந்துவிடமுடியாது.
ஆயினும், அன்றைய அசாதாரண சூழ்நிலைகளோ- காகிதத்தட்டுப்பாடோ - வாழ்வாதார நெருக்கடியோ
இல்லாத இந்த கணினி யுகத்திலும் கொழும்பிலிருந்து வெளியான மல்லிகை, அதன்
ஆசிரியராலேயே நிறுத்தப்பட்டதும் ஈழத்து
இலக்கிய உலகில் மறக்கமுடியாத செய்தியாகும்.
மல்லிகை பொன் மலரை ( 50 ஆவது ஆண்டு நிறைவு மலரை) மல்லிகை ஆசிரியரின் மகன்
திலீபனும் கவிஞர் மேமன் கவியும் வெளியிட
ஆவன செய்துவருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இலங்கை கலாசார அமைச்சின் சாகித்திய
மண்டலம் உருவானவேளையில் தமிழில் சிறுகதை
இலக்கியத்திற்கான விருதை முதல் முதலில் பெற்றவரும் டொமினிக் ஜீவா என்பதும்
முக்கியமான தகவல். அவர் குறிப்பிட்ட
விருதைப்பெற்றுக்கொண்டு யாழ். ரயில் நிலையத்தில் வந்திறங்கியபொழுது, அக்காலப்பகுதியில் யாழ். மேயராக
இருந்த துரைராஜா என்பவரின் தலைமையில் யாழ்நகர மக்களின் சார்பில் மகத்தான வரவேற்பும் அளிக்கப்பட்டது. அவ்வாறு யாழ். மக்களின் அபிமானத்திற்கு
ஆளாகியிருந்த டொமினிக் ஜீவா, போர் நெருக்கடியாலும்
விமர்சிக்கப்படவேண்டிய சில அரசியல்
அழுத்தங்களினாலும் கொழும்புக்கு இடம்பெயர்ந்து மல்லிகையை
வெளியிட்டார்.
மல்லிகை பற்றி இலங்கை பாராளுமன்றத்திலும் விதந்து
பேசப்பட்டிருக்கும் தகவலை பாராளுமன்ற குறிப்பேட்டில் ( ஹன்சார்ட்) பார்க்க முடிகிறது.
இலங்கையில்
பாரதி என்னும் இந்தத்தொடரை எழுதும் முருகபூபதி உட்பட பல
இளம் தலைமுறையினரை 1970 காலப்பகுதியில்
இலக்கிய உலகிற்கு தமது மல்லிகை ஊடாக அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். சில பிரதேச
சிறப்பிதழ்களையும் மல்லிகை வெளியிட்டிருப்பதுடன் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில்
வதியும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுடன் மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு
மலரையும் 2000 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது.
தேசத்தின் கண், சாகித்திய ரத்னா உட்பட பல விருதுகளையும் பெற்றிருக்கும் மல்லிகை ஜீவா முழுநேர எழுத்தாளராக, இதழாசிரியராக வாழ்ந்து, தற்பொழுது கொழும்பின் புறநகரில் ஓய்விலிருந்தவாறு, தமது எஞ்சிய
காலத்தில், முந்திய காலம் பற்றி
நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார்.
அவர் தற்பொழுது 90 வயதை நெருங்குகிறார்.
மல்லிகை ஜீவா அவர்களை பாரதியின்
புதிய ஆத்திசூடியின் வெளிச்சத்திலும் அடையாளம் காணமுடியும்.
ஏறு போல் நட - ஓய்தலொழி - குன்றென நிமிர்ந்து நில் - சிதையா
நெஞ்சுகொள் - சுமையினுக்கு இளைத்திடேல் - தூற்றுதல் ஒழி - தோல்வியிற் கலங்கேல் -
ரௌத்திரம் பழகு - வெடிப்புறப்பேசு - முதலான
குணாதிசயங்கள் இருந்தன. இந்த
அருங்குணங்கள் மல்லிகைஜீவாவிடமும்
நீடித்திருந்தவை என்பது பரகசியம்.
இலக்கிய இதழை யாழ். மண்ணில்
மலரவைக்கவேண்டும் என்ற எண்ணக்கரு அவரது மனதில் விதைக்கப்பட்டவேளையில் என்ன பெயர்
சூட்டலாம்...? என்று தனது இலக்கிய
நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.
இதயம் - கமலம் - மலர் - செந்தாரகை
- கலைஞன் முதலான பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு, இறுதியில் ஜீவாவே மல்லிகை என்ற பெயரை தேர்வுசெய்துள்ளார்.
மல்லிகை வெண்மையானது. வாசம் நிரம்பியது. ஏழை முதல் செல்வந்தன் வரையில் நல்ல
நிகழ்வுகளுக்கும் துயர நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுவது, அதனால் எளிமையானது முதலான அபிப்பிராயங்களே அவர் மனதில் எழுந்திருக்கின்றன.
மல்லிகை வெளிவரத்தொடங்குவதற்கு
முன்பே ஜீவாவும் வெண்ணிற ஆடைகளையே அணியத்தொடங்கிவிட்டார். அவரை வெள்ளை நேஷனல்
வெள்ளை வேட்டியுடன்தான் எங்கும் காணலாம். அவர்
சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள், கூட்டங்களில் மாத்திரம் தோளிலே சிறிய சிவப்பு துண்டை அணிந்திருப்பார்.
இலங்கையில் மல்லிகை இலக்கிய உலகில்
மணம்பரப்பிய காலம் ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் பொற்காலம் எனலாம். குறிப்பாக பாரதிஇயல் ஆக்கங்களுக்கு
மல்லிகை முன்னுரிமை வழங்கியது.
தமிழகத்திலிருந்து
இறக்குமதிசெய்யப்பட்ட வணிக இதழ்கள் சினிமாத்தாரகைகளின் வண்ணப்படங்களை
வெளியிட்டுக்கொண்டிருந்த சூழலில், இலங்கையில் மல்லிகை கலை, இலக்கியவாதிகள், கல்விமான்கள், அறிஞர்கள்
முதலானோரின் முகங்களை முகப்பில் பதிவுசெய்து, அவர்கள் பற்றிய விரிவான கட்டுரைகள் அல்லது நேர்காணல்களை வெளியிட்டுவந்தது.
காலப்போக்கில் குறிப்பிட்ட
அட்டைப்பட அதிதி கட்டுரைகள் நான்கு பாகங்களில் தொகுப்பாக - சுருக்கமாகச்சொன்னால்
ஆவணப்பதிவாகவே வெளிவந்தன.
இவற்றுக்குப்பின்னாளிருந்த மல்லிகை
ஜீவாவின் அயராத உழைப்பு போற்றுதலுக்குரியது.
இலங்கையிலும் தமிழகத்திலும் பல
சிற்றிதழ்கள் சிலரது ஆர்வத்தின் நிமித்தம் கூட்டு முயற்சியாகத்தான் வெளிவந்துள்ளன.
இடையில் அவை குழுமோதல்களினால் அற்பாயுளிலும் மறைந்தன. அத்தகைய இதழ்களுக்கென நீண்ட பெயர்ப்பட்டியல் உண்டு.
பொதுவுடைமையில் நம்பிக்கை
வைத்திருந்த மல்லிகை ஜீவா, தமது மல்லிகை
விடயத்தில், கூட்டுச்சேர்தல்
- கூட்டுறவு அடிப்படை - குழுவாக செயற்படல்
முதலான வழிமுறைகளை பின்பற்றவில்லை.
அதனாலும் மல்லிகை 45 ஆண்டுகளுக்கும் அப்பாலும் கடந்து
வந்து இலக்கிய மணம் பரப்பியது.
1967 நவம்பரில் வெளியான
மல்லிகையின் அட்டைப்படம் மனுக்குலத்தின் சாதனையை சித்திரித்திருந்தது. அமெரிக்கா
விண்வெளிக்கு அப்பல்லோவை அனுப்பி
சந்திரனில் பூவுலக மனிதன் கால் பதித்த செய்தியை பதிவுசெய்தது.
பாரதியார் என்றோ " சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்"
என்று பாடிவிட்டார். பாரதி மறைந்து 46 வருடங்களின் பின்னர் அவரது தீர்க்கதரிசனம் பலித்த 1967 ஆம் ஆண்டில் இச்சாதனையை விதந்து பாராட்டி ஜீவா குறிப்பு எழுதியிருந்தார்.
உலக வல்லரசுகளான அமெரிக்காவும்
ருஷ்யாவும் எதிர் எதிர் துருவங்களாக இருந்த அக்காலப்பகுதியில் புரட்சியின்
விளைநிலமான சோவியத் ருஷ்யாவை ஆதர்சமாக்கொண்டிருந்த ஜீவா, அமெரிக்காவின் விண்வெளிச்சாதனையை புகழ்ந்து குறிப்புகள் எழுதிய அதே (1967 நவம்பர்) இதழில் அரைநூற்றாண்டு
யுகப்புரட்சியின் தாக்கங்களும், மகாகவி பாரதியும்
சோவியத் ஜனனமும் முதலான கட்டுரைகளையும்
வெளிவரச்செய்திருந்தார்.
" மனிதன் இம்மண்ணில் தோன்றிய நாளிலிருந்தே விண்ணை
நோக்கித்தனது ஆச்சரியங்கலந்த சிந்தனையை உலவவிட்டதுண்டு. தனது அறிவுக்கே
அப்பாற்பட்ட கோள்களையும் அண்டவெளி அற்புதங்களையும் பற்றித் தனது கற்பனைப்புரவியை
தட்டிப்பறக்க விட்டதுண்டு" எனத் தொடக்கும் ஜீவாவின் குறிப்பு - காலங்காலமாக
எமது தமிழ்க்குழந்தைகளுக்கு அம்புலியை காண்பித்து சொல்லப்பட்ட
கற்பனைப்புனைவுக்கதைகளையும் விபரித்திருந்தது.
குழந்தைக்கும் காதலிக்கும் சந்திரனை உவமைப்படுத்தி கவிஞர்கள்
பாடல்கள் இயற்றியவேளையில் பாரதியோ " சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் " என்று விஞ்ஞானபூர்வமாக அறிவியல்
கண்கொண்டு பாடல் இயற்றினார்.
50 ஆண்டுகள் என்பது சரித்திர வளர்ச்சிப்போக்கில் ஓர்
அணுவுக்குச்சமானம். ஆனால், இந்த இருபதாம்
நூற்றாண்டின் இரண்டாவது பத்துக்களுக்கு பின்வந்த ஐம்பது வருடங்களும் உலக
சரித்திரத்தின் சகல அம்சங்களையுமே திசை
திருப்பும் ஆண்டுகளாக வந்து வாய்க்கப்பெற்றுள்ளன என்பதைச் சரித்திரமும் அரசியலும்
தெரிந்தவர்கள் இன்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.
இதற்குக்காரணமாக அமைந்ததுதான் நமது மகாகவி பாரதி
அன்றே இனங்கண்டு கவிக்குரல் கொடுத்துப்போற்றிய ' ஆகா வென்றெழுந்தது பார்
யுகப்புரட்சி ' என்ற 1917 இல் ரஷ்யாவில்
நடைபெற்ற மகத்தான மனிதகுல விடுதலைப்புரட்சியாகும்" எனத்தொடங்கப்பட்டிருந்த
அக்கட்டுரையின் இறுதியில் பாரதியின் குறிப்பிட்ட கவிதை முழுமையாக
பிரசுரிக்கப்பட்டிருந்தது.
தன்னிகரற்ற இக்கவிஞரின்
தெரிந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பொன்று 1963 இல் சோவியத் யூனியனின் மிகப்பெரும் புத்தக வெளியீட்டு ஸ்தாபனங்களில் ஒன்றான
புனைகதை கவிதை வெளியீட்டகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் தகவலையும் சோவியத்தில் பாரதியின் கவிதைகள் கட்டுரைகள்
மாத்திரமின்றி திருக்குறளும் சிலப்பதிகாரமும் ரஷ்ய மொழிகளில் வெளியாகியிருக்கும்
செய்தியையும் ' மகாகவி பாரதியும் சோவியத் ஜனனமும்' என்ற கட்டுரை பதிவுசெய்துள்ளது.
1966 முதல் மல்லிகையில்
பாரதியியல் ஆக்கங்கள் ஏராளமாக வெளியாகியிருக்கின்றன. இலங்கை படைப்பாளிகள்
மட்டுமன்றி தமிழகத்தவர்களும் அதில் அடிக்கடி பாரதி பற்றி எழுதியுள்ளனர்.
பாரதி நூற்றாண்டு காலத்தில்
மட்டுமல்லாது அதற்கு முன்பிருந்தே தொடர்ச்சியாக பாரதியின் சிந்தனைகளுக்கும் அவை
தொடர்பான வாதப்பிரதிவாதங்களுக்கும் மல்லிகை கனதியான களம் வழங்கி வந்திருக்கிறது.
பாரதி நூற்றாண்டு வரவிருக்கும்
செய்தியை 1981 ஆம் ஆண்டிலிருந்து
ஒவ்வொரு மல்லிகை இதழ்களிலும் குறிப்புகளாக
வெளியிட்டு, எம்மவர்களை அதனை நோக்கிச்சிந்தித்து எழுதுவதற்கும் இயங்குவதற்கும்
வழிகாட்டியிருக்கிறது மல்லிகை.
பாரதி நூற்றாண்டை முன்னிட்டு நாம்
செய்யவேண்டியது என்ன என்பது பற்றி பேராசிரியர் கைலாசபதியும் பயனுள்ள கட்டுரை
எழுதியிருந்ததுடன், தமிழகம் செய்யத்தவறிய
விடயங்களையும் (பிறிதோர் கட்டுரையில்) குறிப்பிட்டிருந்தார்.
"சிங்களத்தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்" என்று பாரதி
வர்ணித்த தேசத்தில் இனமுறுகல் தோன்றி - விடுதலைப்போராட்டம்
எழுச்சியுறத்தொடங்கியிருந்த காலகட்டத்தில், மல்லிகையில்
வெளிவந்த கைலாசபதியின் கட்டுரைகளில் " இலங்கையிலும் இந்தியாவிலும் பாரதிக்காக
என்ன நடந்தது...???என்ன நடக்கவில்லை !!! " என்ற கருத்தியலே தொனிப்பொருள்.
அடுத்த அங்கத்தில் அந்தத்
தொனிப்பொருளின் உள்ளடக்கம்
தொடர்பாகப் பார்ப்போம்.
(தொடரும்)