03/03/2017 ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடந்த 2015ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட, சிரியாவின் பாரம்பரியமிகு பல்மைரா நகரை ரஷ்ய படைகளின் உதவியுடன் சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.
சிரியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரால் கைப்பற்றப்பட்ட, அந்நாட்டின் பழமையான பாரம்பரியம் மிக்க பல்மைரா நகரானது தற்போது முழுமையாக சிரிய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2015 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் கைப்பற்றிய பல்மைரா, 2016 மார்ச் மாதம் சிரிய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது. பிறகு டிசம்பர் மாதமளவில் மீண்டும் தீவிரவாதிகள், அந்நகரை கைப்பற்றி அந்நகரிலிருந்த புராதன சின்னங்களை உடைத்து அழித்தனர்.
இந்நிலையில் தீவிரவாதிகளை, பல்மைராவிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றும் முயற்சியில் ரஷ்ய ஆதரவு படையுடன் இணைந்து சிரிய இராணுவம் நடத்திய உச்சகட்ட தாக்குதலினால், குறித்த நகரிலிருந்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த அனைவரும் வெளியேறியுள்ளனர். 
இருப்பினும் குறித்த நகரை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக, நகரின் பல முக்கிய இடங்களில் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
தற்போது பல்மைரா நகரம் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ள விடயத்தை, சிரிய  மற்றும் ரஷ்ய தரப்புகள் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.