படித்தோம் சொல்கின்றோம்: கானா பிரபா எழுதிய ' அது எங்கட காலம் ' நேற்றிருந்த வீட்டினிலே நிலைத்திருக்கும் எங்கட காலம் முருகபூபதி


மனிதவாழ்வில்  மூன்று  காலங்கள்  முக்கியமானவைஇறந்த காலம், நிகழ்காலம்,  எதிர்காலம்இதுபற்றி  ஆரம்பப் பாடசாலையிலேயே சொல்லித் தந்துவிடுவார்கள்.
இறந்த காலமானது, நிகழ்காலத்தில்  பின்தொடர்ந்து வந்து கணங்கள்தோறும்  நினைக்கத்தூண்டுவதுஅந்தக்கணங்களும்  கடந்துவிடும்போது  இறந்தகாலத்தில் மேலும் ஒரு அங்கம் இணைந்துவிடும்.   எதிர்காலம்  நிச்சயமற்றது. நினைப்பது ஒன்று நடப்பது வேறு ஒன்றாகவும் மாறிவிடும்.
அதனால்தான்  இறந்தகாலமென்பது  ஒவ்வொருவர் வாழ்விலும் வசந்த காலமாகவோ -  வலிநிறைந்த காலமாகவோ - அடிக்கடி நினைத்துப் பார்க்கத்தூண்டும்  நனவிடை  தோய்தலுக்கு உகந்த பொற்காலமாகவோ மனதில் சாசுவதமாக  நீடித்து  நிலைத்துவிடுகிறது.   கானா. பிரபாவின் அது எங்கட காலம்  நூல் முழுமையாகவே இறந்த காலத்தை நனவிடைதோய்தலாக  சித்திரிக்கும் அழியாதகோலங்களாக  பதிவாகியிருக்கிறது.






    அவுஸ்திரேலியாக் கண்டத்தின்  கங்காரு தேசத்தின்  அந்நிய சுவாத்தியத்தில்  கணினி யுகத்தில் புகலிடம்பெற்று வாழநேரிட்ட  பின்னரும்,    இலங்கையின்   வடபுலத்தில் அனைத்துத் தமிழ்ப்பாண்பாட்டுக்கோலங்களும்  குடியிருந்த   கிராமத்திலிருந்து வந்த  அவரிடத்தில்       பால்யகாலத்து நினைவுகள் அலையலையாக மோதிக்கொண்டிருக்கின்றன. " இறந்தகாலத்திற்கே  உரித்தான பலம்  நினைவாற்றல்தான்" என்பதை  இந்தநூலின் ஒவ்வொரு அங்கமும் சொல்லிக்கொண்டிருக்கிறது.
சொர்க்கமே  என்றாலும்  அது  நம்நாட்டைப்போல வருமா...? அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே !!!   ஞாபகம்  வருதே ஞாபகம் வருதே....!!!
முதலான  பாடல்வரிகளைப்போன்று  கானா. பிரபாவின்  உள்ளத்தில்  தொடர்ச்சியாக  ஊற்றெடுத்த  நினைவுக்கோலங்களில் சில பகுதிகள்தான் இங்கு தொகுக்கப்படுகின்றன. தொகுக்கப்படாத மேலும் பல பக்கங்கள் இருக்கலாம் என்பதையும் எம்மை ஊகிக்கத்தூண்டும்  நூலாகவும் மலர்ந்திருப்பதுதான்  அது எங்கட காலம்.
அந்தக்காலம்  எப்படி இருந்தது...? என்பதை சொல்வதற்கும் ஒரு கலை தெரிந்திருக்கவேண்டும். கானா. பிரபா ஒரு கலாரசிகர்,  தேர்ந்த வாசகர். வாசகர்களை உடன் அழைத்துச்சென்று,  தான் தரிசித்த காட்சிகளை அவர்களும் உள்வாங்கத்தக்கவிதமாக எழுதும் வல்லமைபெற்ற   படைப்பாளுமை  கொண்டவர்.
ஏற்கனவே அவர் தமது பயணக்கதைகள் நூல்களில் எம்மை உடன் அழைத்துச்சென்றிருப்பவர். கம்போடியா - இந்தியத்தொன்மங்களை நோக்கி - (2009) பாலித்தீவு - இந்துத்தொன்மங்களை நோக்கி - (2015) ஆகிய நூல்களை படித்திருக்கின்றோம்.   அவரது பாலித்தீவு பயணக்கதையை படித்துவிட்டு  நானும் அங்கு சென்று சுற்றிப்பார்த்தேன்.
தற்பொழுது அவருடைய நூல் வரிசையில் மூன்றாவதாக வந்துள்ள அது எங்கட காலம் அவர் முன்னர் அனுபவித்த இலங்கையின் வடபுலத்து கிராமத்தை நோக்கி எம்மை அழைத்துச்செல்கிறது.
அவருடைய கூர்ந்த  அவதானம்,  இவருடைய இந்த நூலை படித்ததினால்  மாத்திரம்  எனக்கு வரவில்லை. ஏற்கனவே தொடர்ச்சியாக  இவரது பத்திகளை இவரது வலைப்பதிவில் படித்துவந்தமையாலும்  இவர் இணைந்திருக்கும்   A.T.B.C வானொலி (அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)  ஊடகத்தில் இவர்  நடத்தும்  நிகழ்ச்சிகளினாலும் நான் பெற்றுக்கொண்ட  அவதானம்.
புகலிடத்தில்  அடிப்படை வசதிகளுடன் அனைத்தும் இருந்தும்  ஏதோ ஒன்றைத்தொலைத்துவிட்ட  சோகத்துடன்தான் தாயகத்தைவிட்டு வந்துள்ள  ஒவ்வொருவரும் வாடிக்கொண்டிருக்கின்றனர்.
எம்மைக்கடந்துசென்ற அந்த  இறந்தகாலத்தை - முக்கியமாக   பால்யகாலத்தை  நினைத்துப்பார்ப்பதில்  தனிச்சுகம் இருக்கிறது. அந்தச்சுகத்தை  நனவிடைதோய்தலாக  எல்லோராலும் வாய்மொழிக்கூற்றாகச்சொல்ல  முடியும்ஆனால்,  எழுத்தோவியமாக  அனைவராலும்  உயிர்த்துடிப்புடன் பதிவுசெய்யமுடியாது.
இந்த நூலை வாசகர்களின் கரத்தில் தந்திருக்கும் கானா. பிரபா,  எழுத்தாளர், வானொலி ஊடகவியலாளர், பயணஇலக்கியங்கள் படைக்கும்  யாத்ரீகன்.  வலைப்பதிவூடாக வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிவரும்  படைப்பூக்கமுள்ள  அயராத செயற்பாட்டாளர்.
ஒரேசமயத்தில்  இந்தத்துறைகள் அனைத்திலும்  தீவிரமாக இயங்கும் இவரிடத்தில்  குடியிருக்கும்  நினைவாற்றல்,  அவதானம், கற்றதையும் பெற்றதையும் நேயர்களிடமும் வாசகர்களிடமும் பகிர்ந்துகொள்ளும் பண்புகள்தான்   இந்தநூலின் பலம்.
கணினியுகத்தின் வரப்பிரசாதத்தினால்  ஈராயிரத்தின் தொடக்கத்தில் இணையத்தில் நேர்ந்த மற்றும் ஒரு புரட்சியின் வடிவம் (Blogs) வலைப்பதிவுகள்
கானா. பிரபாவும் தமது வாழ்வை எழுதுவதற்கு இந்த ஊடகத்தை தக்கவாறு பயன்படுத்திக்கொண்டமையால்,  அவர் பிறந்து தவழ்ந்து விளையாடி வளர்ந்த  அன்றைய  இணுவையூரை  எமக்கு தமது வலைப்பதிவின் ஊடாக  அறிமுகப்படுத்திவருகிறார்.
அதனைப்பார்க்க  சந்தர்ப்பம் கிட்டாத வாசகர்களுக்கு இந்த நூல் நல்வரவு.    வருடாந்தம்  தீர்த்தமாடும் தெய்வங்கள் குடியிருக்கும் கோயில்களும்பல்சுவைதரும்  மாங்கனிகளை பெற்றெடுக்கும் மாஞ்சோலைகளும் - பண்டிகைகளுக்கு  குறைவில்லாத இல்லங்களும்கல்வி வளர்ச்சிக்கு  தேவைப்பட்ட  டியூட்டரிகளும் - பாதுகாப்பு என்ற போர்வையில்   முளைத்த  இலங்கை - இந்திய இராணுவத்தின் காவலரண்களும்  கொண்ட  அன்றைய காலத்தை  நேசத்துடனும் பரவசத்துடனும்  வலிகளுடனும்  இரைமீட்டுகிறார். எப்படித்தான் அது இருந்தாலும் " அது எங்கட காலம்தான்" என்று  பேருவகையோடு தனது  நினைவுச்சிறையில் பாதுகாத்த ஒவ்வொரு காட்சிகளையும் புள்ளிகளாக  இட்டு  கோலங்களாக  வடிவமைக்கிறார்.
இந்த அழியாத கோலங்களில் குடும்பங்கள், உறவுகள்,  உள்ளுர் வெளியூர்ச் செய்திகள்,  பண்பாட்டுக்கோலங்கள்,  பால்யகாலத்துக் குறும்புகள்,  அவ்வேளையில்  ஊருக்குள் அறிமுகமான ஆடைகள் சம்பந்தப்பட்ட   நவநாகரீக மாற்றங்கள்,  ஓடித்திரிந்த சைக்கிள்கள்,  உண்டு சுவைத்த   தமிழர்பண்டிகை  பலகாரப் பட்சணங்கள்,   பெற்றவர்களிடமும்   உறவுகளிடமும்  கிடைத்த கைவியளம் - காவலரண்களில்   சந்திக்கநேர்ந்த   'கண்டங்கள்' - வாசிப்புக்குத்தேவையான  இலக்கிய இதழ்களை வாங்குவதற்காக அம்மம்மாவுடன்   சேர்ந்து  நடத்திய   மாங்காய் வர்த்தகம் - ஊரில் இராணுவத்திற்கு  பயந்து  அந்நியம்  ஓடிய இடத்தில்  ஏஜன்ஸிகாரனால் ஏமாற்றப்பட்டு,  ரஷ்யாவின்  பனிவனாந்திரத்தில்  அநாதராவாக மடிந்துபோகும்  தோழனின்  நினைவுகள்  - உறவுக்கு  அர்த்தம்சொன்ன தேவராச  அண்ணர் வாழ்ந்த வீட்டுக்கும் அந்தக்குடும்பத்திற்கும் நேர்ந்த  பேரவலம் - பாடசாலை  இல்ல விளையாட்டுப்போட்டிகள் - வண்டில்  சவாரிகள் - யாழ்ப்பாணச்சித்தர்கள்  பற்றிய  சித்திரிப்பு  என்று  ஒவ்வொரு  அங்கமும்  எளிமையான  வார்த்தைகளினூடே   அந்த  இறந்த காலத்திற்கே  எம்மை   அழைத்துச்செல்கின்றது.
இந்தப்பதிவுகள்  வாசகர்களின்  நெஞ்சத்துக்கு நெருக்கமானவையாகவே  தொடர்ந்து வாழும். ஏனென்றால் அது கானா. பிரபாவின்  காலம் மட்டுமல்ல,  அது எங்கட காலமாகவும்  எம் நெஞ்சமதில் வாழ்கிறது.
இவ்வாறு  இலக்கியப் பிரதியாளர்களிடமும் கலைஞர்களிடமும்  மாத்திரம்தான்  நனவிடைதோயும்  இந்த இயல்பு இருக்கும் என்ற முடிவுக்கும்  நாம் வந்துவிடமுடியாது . திரைப்பட இயக்குநர்களிடமும் இருந்திருக்கிறது.
அதனால்தான்  நாம்  பாலுமகேந்திராவின்  அழியாதகோலங்கள்  சேரனின் ஆட்டோகிராஃப் ஆகிய திரைப்படங்களை பார்த்து ரசித்தோம்.  அவை அவர்களின் கதையை மாத்திரம் பேசவில்லை. எமது கதைகளையும்  சேர்த்தே  பேசியிருக்கின்றன.
இந்தத்தொகுப்பில்  மாங்கனிகளைப்பற்றி ஒரு அங்கம் வருகிறது. அதனைப்படித்தபோது மகாகவி பாரதி புதுவையில் வாழ்ந்த காலத்தில் அங்கிருந்த மாந்தோப்பிலிருந்து குயில் பாட்டு  எழுதிய  சரித்திரம்தான்  நினைவுக்கு வந்தது.
கானா. பிரபா  தமது இணுவையம்பதியின் மாங்கனிகளை பற்றிச்சொல்லும்போது  இந்தியா உட்பட   பல சர்வதேச செய்திகளையும்  அழைத்துவருகிறார். "மாற்றிடை விரும்பாத நிரந்தர சோடிகளாக  யாழ்ப்பாணத்து  பிட்டும்  மாம்பழமும்"  என்ற சித்திரிப்பு நல்லதோர்  விவரணம்.
விலாட்டு,  அம்பலவி, செம்பாட்டான், கறுத்தக்கொழும்பான்,  வெள்ளைக்கொழும்பான்,  பாண்டி  என்று  எத்தனை வகையில் மாம்பழங்கள் என்பதையும் அவற்றின் ருசிபேதங்களையும் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய  " மாம்பழமே " நூல்  பற்றிய அறிமுகத்தையும்   அதில்   இழையோடியிருந்த  அங்கதத்தையும் அதனூடாக   பிரித்தானிய  ஏகாதிபத்தியத்தின்  எதிர்வினைகளையும்  ஹைதராபாத்தில்  வருடாந்தம்  நடக்கும்  மாம்பழக்கண்காட்சியையும்  ஒட்டுமாங்கன்றுக்கு  பிரசித்திபெற்ற  தமது  பூர்வீகத்தையும்  அழகாக  அந்த  அங்கத்தில் பதிவுசெய்து,    அதனை சர்வதேசத்  தரம்வாய்ந்த ஆக்கமாக  உயர்த்தியிருக்கிறார்.
அந்த அங்கத்தின் இறுதியில்: " உயரே  மாமரக்கொப்புகளுடே  கடந்து நிலத்தில்  தெறித்துத்  திசைக்கொன்றாய் சிதறிப்போகும் வெம்பல் மாங்காய்காய்களாய்  எம் சமூகம்"  - என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.
புத்தரும்  காந்தியும் தோன்றிய திசையிலிருந்து அமைதிகாக்கும் போர்வையில் - வந்த ஆக்கிரமிப்பு இராணுவத்தின் சீக்கிய சிப்பாய்க்கு அவர் செய்யது பீடி வாங்கிக்கொடுக்க  அலைந்த  கதையும் சொல்லப்படுகிறது.
அவுஸ்திரேலியா முதலான நாடுகளில் சிறுவர்களிடத்தில்  சிகரட், மதுபானம்  விற்பனை  செய்யமுடியாது. அதற்கு இங்கு சட்டத்தில் இடமில்லை. ஆனால்,  இலங்கையில்  ஒரு பள்ளிச்சிறுவனிடம் பணம் கொடுத்தனுப்பி  தனக்குப்பிடித்தமான " செய்யது பீடி வாங்கிவா" - என்று அந்த இந்தியச்சிப்பாய் சொன்னபோது,  அங்கிருந்த  இராணுவக் கெடுபிடி  எத்தகையது என்பதையும் சொல்கிறார்.
அந்தச்சிப்பாய்க்காக  செய்யது பீடி தேடி அலைந்திருக்கும் கானா. பிரபா,  மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் பாடசாலை மாடிப்படிக்கட்டில் தவறி விழுந்தவேளையில் மனிதாபிமானத்துடன் முதலுதவி செய்ய முன்வந்த  சரவணன் என்ற இந்திய சிப்பாயையும் நினைவு கூர்ந்துள்ளார்.
அந்தச்சிப்பாய் "  உனது பெயர் என்ன ?  என்று ஆங்கிலத்தில் கேட்கும்பொழுது,   " பிரபா " என்ற பெயருள்ள இவரால் எப்படி அந்த வினாவை  ஜீரணித்துக்கொள்ள முடிந்திருக்கும்...? என்று நாம்தான் யோசிக்கின்றோம்ஆனால்,  இவர்  என்னசெய்தார்...? என்பதை இந்த நூலைப்படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு காலத்தில்  வடபுலத்தின் வர்த்தக பொருளாதாரத்திற்கு ஊற்றுக்கண்ணாக விளங்கிய அண்ணாகோப்பி,  மில்க்வைற் தொழிலகங்கள் பற்றியும் விபரிக்கிறார். பலருக்கும் வாழ்வளித்த பெருந்தகை அண்ணா கோப்பி நடராசா மாமாவையும் அமைதிகாக்க வந்தவர்கள் விட்டுவைக்காமல் பலாலி முகாமில் தடுத்துவைத்த செய்தியும் சொல்லப்படுகிறது. அகதியாக்கப்பட்டவர்களை அரவணைத்த  முகாமாக அண்ணா தொழிலகம் மாறிய காட்சியையும் காண்பிக்கிறார்.
வண்டிச்சவாரி அங்கத்தில் எங்கள்  தேசத்தின் மகாகவி உருத்திரமூர்த்தி,  கிழக்கிலங்கை கவிவாணர் நீலாவணன்,  இலக்கிய ஆளுமைகள் தில்லைச்சிவன்,  வரதர் முதலானோரும் வருகின்றனர்.
பால்யகால  சிநேகிதர்களுடன் ஓடித்திரிந்து விளையாடியும் , டியூட்டரிகளில் சக மாணவிகளின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கித்தவமிருந்தும் ,  பெற்றோரையும்  சுற்றத்தையும் ஆழமாக நேசித்தும்,  சித்தம்போக்கு சிவன்போக்கு  என வாழ்ந்த ஞானிகளைத்தேடிச்சென்றும்  படிப்படியாக  வளர்ந்த  இந்த நூலின் ஆசிரியர்,   இலக்கியவாதிகளையும்  கண்டடைகிறார். இவ்வாறு  காலத்தால்  முழுமையடையும் கானா. பிரபாவின் இந்த நூல் யாழ்ப்பாணம்  ஜீவநதி வெளியீடாக வந்திருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஜீவநதி ஆசிரியர் பரணீதரனின் தந்தையார்,  எனது இனிய நீண்ட கால நண்பர் கலாமணியின் தலைமையில்  பலவருடங்களுக்கு முன்னர் எனது நூல்கள் மெல்பனில்  வெளியிடப்பட்டபொழுது,  அந்த நிகழ்வில் வரவேற்புரை  நிகழ்த்தியதுடன் பலவழிகளிலும் எனக்கு பக்கத்துணையாக  இருந்தவர் நண்பர் கானா. பிரபா. இன்று பரணீதரனின் ஜீவநதி வெளியீடாக அது எங்கட காலம் வாசகர்களின் கரங்களுக்கு வந்திருப்பது எனது மனதிற்கு நிறைவானது.
" அது எங்கட காலம், என்  வாழ்வின் கால்பங்கின் சுயசரிதமாக, எண்பதுகள், தொண்ணூறுகளில் என்னைச்சுற்றி வாழ்ந்த அடையாளமாக அமைகின்றது, இந்த நினைவுமீட்டல்களில் வாழ்ந்திருப்பவர்கள் பலர் இப்போது எம்மிடையே இல்லை. அந்த வெள்ளாந்தி மனிதர்களை, அவர்கள் இருந்த இருப்பை என் வாழ்வியலின் தரிசனத்தில் கொடுக்கிறேன்" என்று இந்த நூலின் நோக்கத்தை கானா. பிரபா சொல்கிறார்.
சமகாலத்தில் எனக்கு நம்பிக்கையளித்துவரும் இளைம்தலைமுறைப்  படைப்பாளர்களின் வரிசையில்  நண்பர் கானா. பிரபாவும் இணைந்துள்ளார்அதனால் மாத்திரமல்ல, அவரிடமிருக்கும் மனிதநேயமும்  என்னை  சிலிர்க்கச்செய்திருப்பதனாலும்  நம்பிக்கை தருகின்றார்.
தமது குழந்தை இலக்கியாவின் பிறந்த தினம் வரும்வேளைகளில் அந்த மகிழ்ச்சியை தனது குழந்தையிடம் மாத்திரம் வெளிப்படுத்தாமல்,  ஈழத்தில் வன்னியில் நீடித்த போரில் பெற்றவர்களை  இழந்த குழந்தைகள் பராமரிக்கப்படும் இல்லங்களைத்தேடிச்  சென்று,  அவர்களின் சில தேவைகளையும் கவனிப்பதில்  அக்கறை காண்பித்து,  மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருபவர்.
இலக்கியம்  படைப்பாளியின்  இருப்பை மாத்திரம் வெளிப்படுத்துவதல்ல,  அதற்கும் அப்பால் இலக்கியவாதி இயங்கவேண்டும்  என்பதையும்  வலியுறுத்துகிறது. அவ்வாறு இயங்கும் கான.  பிரபாவுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அது எங்கட காலம் நூலை அவுஸ்திரேலியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் -   நாம் இழந்த இலக்கிய சகோதரி  எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணிக்கே சமர்ப்பித்துள்ளார்.
---0---