அஞ்சலிக்குறிப்பு வாழ்வின் துன்பியல் அரங்காற்றுகையில் கானல் திரைக்குப்பின்னால் வாழ்ந்த எழுத்தாளர் கே. விஜயன் முருகபூபதி


அடுத்தடுத்து  எம்மிடமிருந்து  விடைபெறுபவர்களின்   வரிசையில் இலக்கிய   நண்பர்  கே. விஜயனும்  அண்மையில்   இணைந்துகொண்டு எம்மிடமிருந்து  அகன்றுவிட்டார்.
இவருடைய   பெயரில்  சென்னையில்  ஒரு  திரைப்பட  இயக்குநர் இருந்தார்.   ஜெயகாந்தனின்   நண்பர்.    அதனால்  ஈழத்து  எழுத்தாளர் விஜயனை   நான்   காணும்   சந்தர்ப்பங்களில்  "  எப்படி  இயக்குநர்  சார்?" என்று   வேடிக்கையாக  அழைப்பதுண்டு.
கே. விஜயன்  என்ற  பெயர்   ஈழத்து  இலக்கிய  உலகிலும் தமிழ்ப்பத்திரிகைச்சூழலிலும்   நன்கு  பிரசித்தி  பெற்றிருந்தது.
சிறுகதை,  தொடர்கதை,   நாவல்,  கட்டுரை,  விமர்சனம்,  பத்தி எழுத்துக்கள்,   கலை  இலக்கிய  நிகழ்ச்சிகள்  பற்றிய விவரணச் சித்திரம்   என  நிறைய  எழுதிக்குவித்தவர்தான்  விஜயன்.   அத்துடன் வீரகேசரி,   சுடரொளி  ஆகிய  பத்திரிகைகளிலும்  பணியாற்றியவர்.
நான்   எழுதத்தொடங்கிய  காலத்திற்கு  முன்பே  எழுதியவர். இவருடைய   தொடர்கதை  ஒன்று  மித்திரன்  நாளிதழில்  வெளியான சமயத்தில்    அதனை (Proof Reading)  ஒப்பு நோக்கியிருக்கின்றேன். அச்சமயத்தில்   அவர்  வெள்ளவத்தையில்   ஒரு ஆடைத்தொழிற்சாலையில்  பணியிலிருந்தார்.
இலங்கையில்  தேசிய  இலக்கியம்,   மண்வாசனை,  பிரதேச  மொழி வழக்கு   முதலான  சொற்பதங்கள்  பேசுபொருளாக  இருந்த  அக்கால கட்டத்தில்   விஜயன்,  கொழும்பு  வாழ்  மக்களின்  பேச்சுத்தமிழில் தமது   கதைகளை   எழுதியவர்.



    1977 - 1987   காலப்பகுதியில்   கொழும்பிலிருந்து  வெளியான தினகரன்,   வீரகேசரி,  ( தினபதி ) சிந்தாமணி  ஆகிய   பத்திரிகைகளின் வாரப்பதிப்புகளில்   இலக்கிய  பத்தி  எழுத்துக்கள்  பரவலாக அறிமுகமாகியிருந்தன.    சிந்தாமணி   ஆசிரியர்  எஸ்.டி. சிவநாயகம்    இலக்கிய  பீடம்   என்ற  தலைப்பில்  பத்தி  எழுதினார். தினகரனில்    எஸ். திருச்செல்வம் -  எஸ்.தி. பக்கம்  என்ற   தலைப்பில் எழுதினார்.
வீரகேசரி   வாரவெளியீட்டில்  இலக்கியப்பலகணி,   ரஸஞானி  என்ற  புனைபெயரில்  நான்  எழுதிவந்தேன்.
அதற்கெல்லாம்   முன்னர்,  எச். எம். பி. மொஹிதீன்,  தினகரன் வாரமஞ்சரியில்  அபியுக்தன்,   அறிஞர்கோன்      தலைப்புகளில் எழுதினார்  இலங்கை  வானொலியில்  நிகழ்ந்த  ஊழல்கள் பற்றியெல்லாம்  அதில்  அம்பலப்படுத்தினார்.   அத்துடன்  சில அரசியல்வாதிகளையும்  சீண்டினார்.   அதனால்  வெகுண்ட  அன்றைய   கல்வி   அமைச்சர்  அல்ஹாஜ்  பதியுதீன்  முகம்மத் லேக்ஹவுஸ்   மேலிடத்திற்குச்சொல்லி , மொஹிதீனின்  அந்த பத்திஎழுத்துக்களை    தடைசெய்தார்.
   பின்னாளில்  மொஹிதீன்    அபியுக்தன்   என்ற    பெயரிலேயே    ஒரு மாத   இதழையும்   சிறிதுகாலம்     வீம்புக்கு    நடத்தி    ஓய்ந்துபோனார்.
எஸ்.தி. , தினகரனில்   எழுதிய  சில  பத்தி  எழுத்துக்களினால்  அலை யேசுராசா,   புதுவை  இரத்தினதுரை  முதலானோரும்  தமிழ்க்கதைஞர் வட்டத்தினரும்   கோபமுற்ற   செய்திகளும்  உள்ளன.
     மொஹிதீன், அறிஞர்கோன்   எழுதியபொழுது,   வித்துவான்   ரஃமான் எரிச்சலுற்று  "  அது  என்ன ?  அறிஞர்கள்  சூப்பிய  ஐஸ்கிறீம்  கோனா ?  " என்று   எள்ளிநகையாடினார்.
  எனது   இலக்கியப்பலகணியில்  முடிந்தவரையில்  விவகாரத்துக்குரிய  சர்ச்சைகளை   நான்  உருவாக்காமல் இருந்தமைக்கு   எனது  இயல்புகள்  மட்டுமல்ல,  எனக்கு  வீரகேசரி  ஆசிரியர்கள்    . சிவநேசச்செல்வனும்,    பொன். ராஜகோபாலும்  இட்டிருந்த   கடிவாளமும்   ஒரு  காரணம்தான்.
    அதனால்  எனது  பத்தியில்  " ரஸமும்  இல்லை.   ஞானமும்  இல்லைஎனச்சொன்னவர்களும்  வாரம்தோறும்  அந்தப்பத்திகளை படிக்கத்தவறவில்லை.
இந்நிலையில்  நெல்லை. . பேரன்   என்ற  இலக்கியவாதி மல்லிகையில்   மாதம்தோறும்  தான்  கலந்துகொண்ட  கலை, இலக்கிய  நிகழ்ச்சிகளை  பதிவுசெய்துவந்தார்.
நெல்லை..பேரன்   நெல்லியடியில்  நடந்த  ஷெல்வீச்சில் குடும்பத்துடன்   கொல்லப்பட்டார்.
தினபதி -   சிந்தாமணி    நின்றுபோனது.
எஸ்.தி. ( எஸ். திருச்செல்வம்)  யாழ்ப்பாணம்  சென்று  ஈழமுரசு, முரசொலி  பத்திரிகைகளை   நடத்திவிட்டு,  கனடாவுக்கு  புலம் பெயர்ந்தார்.
எச். எம். பி. மொஹிதீன்   காலமானார்.
நான்   அவுஸ்திரேலியாவுக்கு  1987  இல்  புலம்பெயர்ந்தேன்.
இந்தப்பின்னணியில்   எம்  அனைவரினாலும்  ஏற்பட்டிருந்த  அந்த வெற்றிடத்தை    நிரப்பியவர்தான்    கே. விஜயன்.
இவர்   வீரகேசரியில்,   தினக்குரலில்,   ஞானம்  இதழில் பத்திஎழுத்துக்களை   தொடர்ந்து  எழுதினார்.   அதனால்  தனக்கு புனைபெயர்களையும்    சூட்டிக்கொண்டார்.
அவருடைய   புனைபெயர்கள்:   ஸ்ரீமான்  சஞ்சாரி,   ஆந்தையார், மின்மினி.   அத்துடன்   படித்ததும்  கேட்டதும்   ( ஞானம்) இலக்கியச்சிந்தனகள்  ( தினக்குரல்)  முதலான  பத்திகளையும் கொழும்பில்  நடக்கும்  குறும்பட  விழாக்கள்,   நூல்வெளியீட்டு நிகழ்வுகள்,    இலக்கிய  கருத்தரங்குகள்,   மாநாடுகள்  பற்றியெல்லாம் அடிக்கடி    எழுதியவர்   விஜயன்.
அவருடைய   இந்தப் பத்தி  எழுத்துக்களில்   அங்கதம்,   ஏளனம், நையாண்டி,   கோபம்,  எரிச்சல்,  விவாதம்,  பாராட்டு,   விமர்சனம்  யாவும்   ஒரேசமயத்தில்   இரண்டறக் கலந்திருக்கும்.   அதனால்  இவர் ஒரு    கலகக்காரனாகவும்    பார்க்கப்பட்டார்.
விஜயன் , ஒரு  இலக்கியக்கூட்டத்திற்கு  வந்தால்  மிகவும் நிதானமாகவும்   எச்சரிக்கையுடனும்  பேசுபவர்கள்  மேடையில் வார்த்தைகளை   அளந்துதான்   உதிர்ப்பார்கள்.
  விஜயன்   கொழும்பு  புதினங்களை   மட்டுமன்றி,  தமிழ்நாடுவரையும் சென்று   செய்திகள்  சேகரித்து வந்து  எழுதுவார்.    நாமக்கல்லில் கு. சின்னப்பபாரதி   அறக்கட்டளை   விருது  வழங்கும் விழாவுக்கும்   பயணித்து,  ஞானம்  இதழில்  எழுதியவர்.
அவருடைய   எழுத்துகள்  சில  சந்தர்ப்பங்களில்  வரம்புமீறி செல்வதைப்பார்த்துவிட்டு , ஞானம்  ஆசிரியர்  ஞானசேகரனுடன் தொடர்புகொண்டு  எனது  கருத்துக்களையும்  சொல்லியிருக்கின்றேன்.
ஆனால்,  விஜயன்  மற்றவர்களின்  கருத்துக்கள்  குறித்து அலட்டிக்கொள்ளாமல்   தொடர்ந்தும்  தமது  பாணியிலேயே எழுதிவந்தவர்.   சிரிக்கச் சிரிக்கப்பேசும்  இயல்புகொண்டவர்.
தமது  சொந்தவாழ்வில்  சோகரசத்துடன்  வாழ்ந்தவர்கள் எப்பொழுதும்   சிரிக்கும்  இயல்புள்ளவர்கள்.   மற்றவர்களை சிரிக்கவைத்தே  தமது  துயரங்களை   மறப்பவர்கள்.   அல்லது  மறக்க முயற்சிப்பவர்கள்.   விஜயனும்  இந்த  ரகம்தான்.
அவரை   பெரும்பாலும்  பத்திரிகை  அலுவலகங்களிலும் மண்டபங்களிலும்,   வீதியோரங்களிலும்தான்  சந்தித்து உரையாடியிருக்கின்றேன்.
ஏதாவது  புதிய  கலை,  இலக்கிய  செய்தியுடன்தான்  அவர் உரையாடலை   தொடங்குவார்.
அவருக்கு   இலக்கிய  நண்பர்களும்  இருந்தார்கள்.   எதிரிகளும் இருந்தார்கள்.
ஆனால்அவர்  யாருக்காகவும்  சமரசம்  செய்துகொள்ளாமல்  தனக்கு    சரியெனப்பட்டதையெல்லாம்  எழுத்தில்   பதிவுசெய்தார். அவருக்குச் சரியெனப்பட்டவை  மற்றவர்களுக்கு சரியெனப்படவில்லை.    அதுதான்  பிரச்சினை.
ஒரு    சந்தர்ப்பத்தில்  இலக்கியவாதிகளுக்கிடையில்  தொடரும் பிரச்சினைகள்    பற்றி  அவருடன்  வெள்ளவத்தை  காலிவீதியில் உரையாடிக்கொண்டிருந்தபொழுது,  "  பூபதி    எங்குதான்    பிரச்சினை இல்லை.    குடும்பத்தில்,   நட்புவட்டத்தில்,   மதபீடங்களில், பாடசாலைகள்,    பல்கலைக்கழகங்கள்,  அரசியல்  கட்சிகள்,  அரசுகள், தொழிற்சங்கங்கள்,   அமைப்புகள்  எங்கும்  நீக்கமற நிறைந்திருப்பதுதானே   பிரச்சினைகள்."    என்று   சமாதானம் சொன்னார்.
அவுஸ்திரேலியாவில்  நான்  பெரிதும்  மதித்த  ஓவியர்   (அமரர்) செல்வத்துரை   அய்யா  (படைப்பாளி   அருண்   விஜயராணியின் தந்தையார்)    அவர்களை   1997   ஆம்   ஆண்டு  எனது   நூல்வெளியீட்டு நிகழ்ச்சியில்   பாராட்டி   கௌரவித்த  செய்தியை   வீரகேசரியில் பணியிலிருந்த   நண்பர்  விஜயனுக்கு  படங்களுடன் அனுப்பியிருந்தேன்.   அத்துடன்  ஓவியர்  அய்யா  இலங்கை செல்வதை    அறிந்து  அவருக்கு  விஜயனின்  பெயரையும்  குறிப்பிட்டு வீரகேசரி    முகவரியும்  கொடுத்துவிட்டிருந்தேன்.
 அவரும்    விஜயனை  சந்தித்தார்.   விஜயன்,  ஓவியர்  அய்யாவுடன் ஒரு   நேர்காணல்  நடத்தி  கட்டுரை  எழுதினார்.
இறுதியாக   சில  வருடங்களுக்கு  முன்னர்  எனதும்  நண்பர் நடேசனினதும்   மொழிபெயர்ப்பு  நூல்  வெளியீடு   பண்டாரநாயக்கா ஞாபகார்த்த   சர்வதேச    மாநாட்டு  கருத்தரங்கு   மண்டபத்தில் நடந்தபொழுது    சந்தித்தேன்.
அச்சமயம்   அவர்  வீரகேசரியில்  இல்லை.   சுடரொளிக்கு மாறிவிட்டதாக   அறியமுடிந்தது.
எழுத்தை,  அதுவும்  பத்திரிகைத்தொழிலை   மாத்திரம்  நம்பிவாழும் ஒருவர் , எமது  தமிழ்சமூகத்தில்  எத்தகைய  சவால்களையும் நெருக்கடிகளையும்,    தோல்விகளையும்  ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கிறார்கள்    என்பதை அனுபவ பூர்வமாகத்தெரிந்திருப்பதனால்,    தமிழ்ப்பத்திரிகையாளர்களின் வாழ்க்கை     இலங்கையிலும்  சரி  தமிழ்நாட்டிலும்  சரி  ஒருவகை துன்பியல்   நாடகம்  என்றே   சொல்வேன்.
அவர்கள்    வாழ்க்கை,   சுவரில்  அடிபட்ட  பந்து போன்றதல்ல, ஒவ்வொருவர்   காலிலும்   உதைவாங்கிய   உதைபந்தாட்டப் பந்துபோன்றதுதான்.
விஜயனும்    பத்திரிகை   உலகில்  உதைபட்ட   பந்துதான்.
ஆயினும்,  அவர்  ஆளுமையுள்ள  இலக்கியப்படைப்பாளி. அந்தப்பக்கம்    சிறப்பானது.    எனினும்  அங்கும்  அவர் துன்பியலைத்தான்   சந்தித்தார்.
எழுபத்தியைந்திற்கும்     மேற்பட்ட  சிறுகதைகள்  பதினைந்துக்கும் மேற்பட்ட    தொடர்கதைகள்  எழுதியவர்.   விடிவுகால  நட்சத்திரங்கள்,  மனநதியின்   சிறு   அலைகள்,   அன்னையின்  நிழலில்  முதலான   நாவல்களை   வரவாக்கிய   விஜயன்,    எழுதிய மற்றும்    ஒரு   நாவல்   மனித  நிழல்கள்.   விரசேரி    பிரசுரம்    நடத்திய   பிரதேச  நாவல்போட்டியில்  கொழும்பு  பிரதேச  சிறந்த நாவலாக   தெரிவாகி    பரிசுபெற்றது.
வாழ்க்கைப்போராட்டத்தில்   உழன்றவேளையில்   தமது படைப்புகளின்     மூலப்பிரதிகளையும்   தொலைத்துவிட்ட துர்ப்பாக்கியசாலி.    ஒரு  படைப்பாளி   தனது   படைப்பின் மூலப்பிரதியை    தொலைத்தல்    என்பது   ஒரு   தாய்   தனது குழந்தையை    தொலைத்துவிடும்     துன்பியலுக்கு  ஒப்பானது.
எனினும்  தொலைந்துபோன  ஒரு  நாவலின்  தன்மை,   அதன் பாத்திர வர்ப்புகளின்    குண  இயல்புகளை    நினைவில்  சுமந்து,  அந்த நாவலை   மீண்டும்   எழுதி    அச்சேற்றியவர்   விஜயன்.   அந்த நாவலை   பூபாலசிங்கம்    புத்தகசாலை   அதிபர்  நண்பர்   ஸ்ரீதரசிங் வெளியிட்டுக் கொடுத்ததாகவும்   தகவல்.
2003   ஆம்    ஆண்டு    எனது  பறவைகள்  நாவலுக்கு   இலங்கையில் தேசிய   சாகித்திய   விருது  கிடைத்தவேளையில்,  அதனைப்பெற்றுக்கொள்ளச் சென்றிருந்தேன்.   அந்த   விருது  வழங்கும்   விழாவுக்குப்பின்னர்,   கொழும்பு  தமிழ்ச்சங்கத்தில் எனக்காக  ஒழுங்குசெய்யப்பட்ட  பாராட்டு  நிகழ்வு  அப்போதைய சங்கத்தின்   தலைவர்  முன்னாள்   தினகரன்  ஆசிரியர்  சிவகுருநாதன்  தலைமையில்  நடந்தது.   அதில்  கம்பவாரிதி ஜெயராஜ்,   மல்லிகைஜீவா, பேராசிரியர் சோ. சந்திரசேகரம், கலாநிதி   கனகசபாபதி  நாகேஸ்வரன்  ஆகியோர்  உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சிக்கு  வந்திருந்த  விஜயன்,  அதில்  உரையாற்றிய நாகேஸ்வரனின்   நீண்டுபோன   கருத்துரையால்  சினமுற்று   தமது அங்கதப்பாணியில்  அவரை   விமர்சித்து  ஸ்ரீமான்  சஞ்சாரி  என்ற புனைபெயரில்    தினக்குரலில்   எழுதியிருந்தார்.
அந்தப்பிரதி  நான்  அவுஸ்திரேலியா  திரும்பிய   பின்னர்   என்வசம் வந்தது.   பின்னர்,   இலங்கை   சென்றவேளையில்  விஜயனை சந்தித்தபொழுது,   அதுபற்றிக்கேட்டேன்.  "   கூட்டங்களில்  நீண்டநேரம் பேசி   சலிப்பேற்படுத்துபவர்களை   இனம்  காண்பிக்கவேண்டும். அப்பொழுதுதான்   அவர்களை  அடுத்த  நிகழ்ச்சியில்  பேச அழைக்கும்பொழுது   முற்கூட்டியே  எச்சரிக்க  முடியும்.   அதுவும் ஒருவகையில்   பத்திரிகையாளனின்    சமுதாயக்கடமைதான் "   என்றார்
இன்று  விஜயன்  இல்லை.   அதனால்  அவர்  பாணி   எழுத்துக்களுக்கு வெற்றிடம்    தோன்றிவிடலாம்.
விஜயனின்   மறைவுச்செய்தியும்  தாமதமாக  கொழும்பு இலக்கியவாதிகளிடம்    சென்றடைந்திருக்கிறது.
தெரிந்தவர்களும்   செய்தியை   உரியநேரத்தில்  மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவில்லை   என்பதை  அறியமுடிந்தது.   ஆயினும் சிலரின்  முகநூலிலும்  கொழும்பு  பத்திரிகைகளிலும்  அவருடைய மறைவின்   பின்னர்  அஞ்சலி -  அனுதாபச்செய்திகள்  வந்தன.
அதில்  ஒன்றைப்படித்துவிட்டு,  பதட்டத்துடன்  கொழும்பு  நண்பர்கள் வதிரி சி. ரவீந்திரன்,    மேமன்கவிதிக்குவல்லை கமால்    ஆகியோருடன்   தொடர்புகொண்டேன்.
விஜயனின்   மறைவும்  துன்பியல்  நிகழ்வானது  வருத்தம் அளிக்கிறது.   தாமதமின்றி  நல்லடக்கமானார்.
அவர்   தமது  சில  படைப்புகளை  தொலைத்துவிட்டது போன்று நாமும்   அவரை   இலங்கை  மண்ணுக்குள்  தொலைத்துவிட்டோம்.
தமிழ்ப்பத்திரிகை  உலகம்,   பத்திரிகையாளர்களுக்கு  ஓய்வூதியம் வழங்கும்   திட்டத்தை   அறிமுகப்படுத்தவேண்டும்.   அரசுகள்  மாறுகின்றன.    அதிகாரங்கள்  மாறுகின்றன.
ஆனால்,  அரசுகள்  பற்றியும்  அமைச்சர்கள்  பற்றியும்  பக்கம் பக்கமாக    பத்திரிகைகளில்  எழுதிக்குவித்த  பத்திரிகையாளர்களின் வாழ்வில்   மட்டும்  மாற்றங்களே  இல்லை.   அவர்களை  நம்பி வாழ்ந்த   குடும்பங்களின்  வாழ்விலும்  மாற்றங்கள்   இல்லை.
ஊடகத்துறையில்   சாதனையாளர்  விருதுகளுக்கு  மாத்திரம் குறைவில்லை.
அல்லும்   பகலும்  பத்திரிகைத்தொழிலில்  அர்ப்பணிப்புடன் இயங்கியவர்களின்    வாழ்க்கையும்  எமது  தமிழ்  சமூகத்தில் தொலைந்துகொண்டுதான்   இருக்கிறது.
நண்பர்    விஜயனுக்கு  அஞ்சலி  என்ற  ஒற்றை   வார்த்தையில் அனுதாபம்   தெரிவிக்கும்பொழுது  மனம்  கூசுகிறது.   எமது  சமூகம் இப்படித்தான்   எங்களை  மனம்கூசச் செய்துகொண்டிருக்கிறது.
---0--