ஈக்குவடோரை உலுக்கிய 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சி 77 பேர் உயிரிழப்பு ; 588 பேர் காயம்
நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 246 ஆக உயர்வு : 2500 பேர்காயம்
ஆப்கான் தலைநகரில் தற்கொலைக் குண்டு தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு; 327 பேர் காயம்
ஈக்குவடோரை தாக்கிய பூமியதிர்ச்சியில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொகை 413 ஆக உயர்வு
இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம்
ஈக்குவடோரை உலுக்கிய 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சி 77 பேர் உயிரிழப்பு ; 588 பேர் காயம்
18/04/2016 ஈக்குவடோரை கடந்த சனிக்கிழமை இரவு தாக்கிய 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சியில் சிக்கி குறைந்தது 77 பேர் பலியானதுடன் 588 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இது ஈக்குவடோரை 1979 ஆம் ஆண்டிற்கு பின்னர் தாக்கிய மிகப் பெரிய பூமியதிர்ச்சியாகவுள்ளது.
மேற்படி பூமியதிர்ச்சி வட நகரான டுயிஸ்னியிலிருந்து சுமார் 27 கிலோமீற்றர் தொலைவில் 19.2 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கியுள்ளது.
அந்தப் பூமியதிர்ச்சியால் அது மையங்கொண்டிருந்த பிராந்தியத்திலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் தொலைவிலுள்ள குவேகில் நகரிலுள்ள பாலம் அழிவடைந்துள்ளதுடன் பிராந்திய கட்டமைப்புகளுக்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாலிக்கு பயணத்தை மேற்கொண்டிருந்த ஈக்குவடோர் ஜனாதிபதி ராபயல் கொர்ரியா, இந்த பூமியதிர்ச்சியையடுத்து தாய்நாடு திரும்பியுள்ளார். அவர் தனது நாட்டில் அவசரகால நிலைமையொன்றைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
"இது மிகவும் வேதனை மிக்க தருணமாகவுள்ளது. நாட்டு மக்களை அமைதியுடனும் ஐக்கியத்துடனும் இருக்க கோருகிறேன். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள நாம் பலமாக இருப்பது அவசியமாகவுள்ளது" என அவர் கூறினார்.
“வீதிகளையும் மருத்துவமனைகளையும் மீள நிர்மாணிக்க முடியும். ஆனால் இழந்த உயிர்களை நாம் மீளப்பெற முடியாது. அதுவே மிகவும் வேதனை தரும் இழப்பாகவுள்ளது" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேற்படி பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிராந்தியங்களைச் சென்றடைவது சிரமமாகவுள்ளதால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகளை அறிய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பூமியதிர்ச்சியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொர்தோவிஜோ பிராந்தியத்திலுள்ள பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளதாகவும் அங்குள்ள குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் நிலைமையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் பூமியதிர்ச்சி காரணமாக பிறிதொரு நகரான பெடர் னேல் முழுமையாக தரைமட்டமாகியுள்ளதாக அந்த நகரின் மேயர் கப்றியல் அல்சிவார் தெரிவித்தார்.
இந்தப் பூமியதிர்ச்சியையடுத்து பிறப்பிக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மேற்படி பூமியதிர்ச்சி தொடர்பில் அயல் நாடான பெருவின் வட கடற்கரைப் பிராந்தியங்களிலும் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 246 ஆக உயர்வு : 2500 பேர்காயம்
18/04/2016 தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில்நேற்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளதுடன் 2500 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கானவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எஸ்மரல்டாஸ், லாஸ் ரியோஸ், மனாபி, சாண்டா எலினா, கயாஸ், சாண்டோ டோமின்கோ உள்ளிட்ட 6 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் அங்கு முழு வீச்சில் நடந்து வருகின்றன. மீட்பு பணியில் 10 ஆயிரம் ராணுவ வீரர்களும், 3,500 பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கம் நடந்த இடத்தில் இருந்து மக்களை மீட்பதற்காக 80 பேருந்துகள் மற்றும் 5 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்பு படையினரால் தேடுதல் பணியில் ஈடுபட இயலவில்லை.
சனிக்கிழமை ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை விட 20 மடங்கு அதிக சக்திவாய்ந்ததாக ஈகுவேடாரில் இருந்ததாக லண்டன் நார்த்ஈஸ்ட் ஓபன் பல்கலைக்கழகத்தில் பிளானிட்டரி ஜியோ சயின்ஸ் துறை ஆராய்ச்சியாளர் டேவிட் ரொத்தேரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஆப்கான் தலைநகரில் தற்கொலைக் குண்டு தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு; 327 பேர் காயம்
20/04/2016 ஆப்கானிஸ்தானிய தலைநகர் காபூலில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் குறைந்தது 30 பேர் பலியானதுடன் 327 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தற்கொலைக் குண்டுதாரியொருவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது. மேற்படி தாக்குதலின் போது துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் கேட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமது குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக தலிபான் தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர். பாதுகாப்பு அமைச்சுக் கட்டடம் மற்றும் இராணுவ வளாகங்கள் அமைந்திருந்த பிராந்தியத்துக்கு அண்மையிலுள்ள குடியிருப்புப் பிரதேசத்தில் சனசந்தடிமிக்க காலை வேளை இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டின் பிரதான உளவு முகவர் நிலையமான தேசிய பாதுகாப்பு பணியக கட்டடத்துக்குள் ஊடுவியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதல்களைத் தொடர்ந்து அந்தப் பிராந்தியத்துக்கான வீதிகள் பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து ஒரு சில நூறு யார்கள் தூரத்தில் அந்நாட்டு ஜனாதிபதியின் அலுவலகம் அமைந்துள்ளது. இது மூர்க்கத்தனமான தாக்குதல் என குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி அலுவலகம், இந்தத் தாக்குதலால் பாதுகாப்பு படையினரின் தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கான தீர்மானம் பலவீனமடைய மாட்டாது எனத் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி
ஈக்குவடோரை தாக்கிய பூமியதிர்ச்சியில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொகை 413 ஆக உயர்வு
20/04/2016 ஈக்குவடோரைத் தாக்கிய பூமியதிர்ச்சியில் சிக்கி பலியானவர்கள் தொகை 413 ஆக உயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈக்குவடோரின் பசுபிக் பிராந்திய கடற்கரையை கடந்த சனிக்கிழமை தாக்கிய இந்த பூமியதிர்ச்சியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் பலியானவர்கள் தொகை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த 7 தசாப்த காலத்தில் ஈக்குவடோர் எதிர்கொண்ட பாரிய பூமியதிர்ச்சியாக இது விளங்குகிறது. இந்த அனர்த்தத்தில் சிக்கி சுமார் 2,500 பேர் காயமடைந்துள்ளனர்.
பூமியதிர்ச்சி தாக்கி இரு நாட்கள் கடந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட் கிழமை பின்னிரவு கடற்கரை நகரான மான்டாவிற்கு அருகில் இடிந்து விழுந்த ஹோட்டலொன்றின் இடிபாடுகளின் கீழிருந்து 9 மாத மற்றும் 3 வயதுடைய இரு பாலகிகள் உட்பட 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களிலான மீள் நிர்மாணப்பணிகளுக்கு பல பில்லியன் டொலர் பெறுமதியான நிதி தேவைப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி ராபயல் கொர்ரியா குறிப்பிட்டுள்ளார்.
நன்றி வீரகேசரி
இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம்
20/04/2016 'இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூபா மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்" என ஃபிடெல் காஸ்ட்ரோ தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஃபிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஏற்றுக்கொள்வார் என அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பும் அதன் நிமித்தமாக ஃபிடெல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையும் இந்த உலகுக்கு ஒரு ஆணித்தரமான செய்தியை தெரிவித்திருக்கிறது.
"கியூபாவின் மூத்த தலைவர்கள் மறைந்தாலும்கூட அந்நாட்டின் புரட்சிகர சிந்தனை தலைமுறைகள் கடந்து நிற்கும்" என்பதே அச்செய்தி.
நேற்று கியூபா காங்கிரஸ் கூடி கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பை 84 வயதான ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைப்பது என்ற முடிவை எடுத்தது.
முக்கிய முடிவு எட்டப்பட்ட அந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், ஃபிடெல் காஸ்ட்ரோ கியூபா அரசு தொலைக்காட்சியில் தோன்றினார்
தலைநகர் ஹவானாவில் உள்ள பாரம்பரிய அரங்கில் ஃபிடெல் காஸ்ட்ரோ உரையாற்றினார். அவர் பேச்சை கேட்க குழுமியிருந்த விருந்தினர்கள் சிலர் காஸ்ட்ரோவின் உணர்ச்சிகரமான உரையைக் கேட்டு கண்ணீர் சிந்தினர்.
அவர் பேசியதாவது: இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூபா மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்.
நான் விரைவில் 90 வயதை தொட்டு விடுவேன். அதன்பின்னர் நானும் மற்ற வயோதிகர்களைப் போலவே இருப்பேன். காலம் என்னை மறையச் செய்யும். ஆனால், கியூபாவின் கம்யூனிஸ்டுகள் இந்த புவியில் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்வர்.
கம்யூனிஸ சித்தாந்தத்தை உத்வேகத்துடன் அதற்குண்டான உரிய மரியாதையுடனும் பின்பற்றினால் மனித குலத்திற்கு ஆகச் சிறந்த பொருளாதார, கலாச்சார நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை உணர்த்தலாம். நமது கோட்பாடுகளை நிலைநிறுத்த சமரசமின்றி போராட வேண்டும். நன்றி வீரகேசரி