கவி விதை - 15 - ஆசான் - -- விழி மைந்தன் --

.


பொன்னிறப் புல்  வெளிகளுக்கு மத்தியில் இருந்த  சிறிய ஊர் அது. ஊரின் நடுவில் ஒரு ஆரம்பப் பாடசாலை.

அந்தப் பாடசாலையில் ஆசிரியராக அவர் இருந்தார்.

மாபெரும் போர் ஒன்றின் வடுக்களைச் சுமந்த தேசம் அது. இறுதியில் வெற்றியைக் கண்டிருந்தாலும் அந்தத் தேசத்தின் மனநிலை, பாரத யுத்தத்தில் வென்ற தருமனின் மன நிலையை ஒத்திருந்தது அப்போது.

யுத்தத்தில் தந்தையை அல்லது தாயை அல்லது இருவரையும் இழந்த பல குழந்தைகள் அவ்வூரின் ஆரம்பப் பாடசாலையில் படித்தனர். எஞ்சியவர்களும் வீடு வாசல்களை இழந்திருந்தனர். மனதளவில் எல்லாக் குழந்தைகளும் வடுவுற்றிருந்தனர்.

அக்குழந்தைகளின் வகுப்பு ஒன்றைக் காலையில் இருந்து இரவு வரை அவர் கவனித்தார்.

அனிச்சம் பூவிலும் அதிகமான மென்மையுடன்  தனது குழந்தைகளை அவர் நடத்தினார்.

அவர் கையில் தடி எடுத்து யாரும் அறிந்ததில்லை. அதிர்ந்து பேசிக் கேட்டதில்லை. ஆனால், அவரின் சொல்லுக்கு மந்திரத்திலென்ன வசப் பட்டனர் குழந்தைகள். அவர் வகுப்பின் கல்வி அடை  பேறுகள் மிகவும் உச்சமாய் இருந்தன.

"மொக்குக்" குழந்தை ஒன்றை அவர் வகுப்பிலே  கண்டு பிடிக்க முடியவில்லை.

தயாரிப்பு இல்லாமல் எந்தப் பாடமும் அவர் எடுத்ததில்லை. அவரது அறையில் இரவு வெகு நேரம் வரை விளக்கு எரிவதைக் கண்டவர் பலர்!

அவர் பாடங்கள் வகுப்பறையில் இருப்பதில்லை. ஒரு நாள் மரத்தடியில் கற்பிப்பார். ஒரு நாள் வயலுக்குக் கூடிப் போவார். ஒரு நாள் ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்வார். இன்னொரு நாள் வானத்து மேகங்களை அளந்து கொண்டு அமர்ந்திருப்பார் குழந்தைகளோடு.

"குழந்தைகளே, அதோ அந்த மேகம் எதைப் போல இருக்கிறது?" என்று கேட்பார்.

"பறவை போல!" என்று கத்துவான் வான்யா.

 ஆசிரியர் புன்னகை செய்வார்.

"விரைவான, அழகான கற்பனை வான்யா. பறவை போல இறக்கைகள் இருப்பது சரி தான். ஆனால், தலை எங்கே?"

"இல்லை, வீடு போல!" என்பான் வான்யா.

சீறிப் பாயும் காட்டாறு போல விரைந்து திசை மாறுவது அவன் சிந்தனை. ஆசிரியருக்கு அது தெரியும்.

"ஒரு கார் போல!" என்பான் கோல்யா.

"இல்லை, மேசை போல!" என்பாள்  ஓல்கா.

சாஷா மௌனமாய் இருப்பாள். பிறகு மெதுவாக வாய் திறப்பாள்.

"குன்றின் சரிவில் மிண்டி நிற்கிறது காளை. பாருங்கள், அதன் கொம்புகளை! பாருங்கள் அதன் கிளப்பிய வாலை! மிகுந்த கோபத்துடன் அது குன்றை முட்டுகிறது. பெரிய பாறையை நகர்த்தப் போகிறது!"

அவ்வளவு நேரமும் வந்த கற்பனைகள் மறைய, பாறையை மிண்டும்  முரட்டுக் காளையைக் காண்பர் குழந்தைகள்.

புராதனமான சைபீரிய நதி போல ஆழமாகவும் அமைதியாகவும் நகர்வது சாஷாவின் சிந்தனை. எளிதில் திசை திருப்ப முடியாதது. ஆசிரியருக்கு அதுவும் தெரியும்.

"குழந்தைகளே, நாங்கள் இப்போது யானையும், காளை  மாடும் வரைவோமா?"

இப்படியே பாடம் தொடரும்.

திரும்பி வரும் போது, அவசரக் காரனான வான்யாவின் காலில் முள் தைத்து விடும்.

ஆசிரியர் துடித்துப் போவார்.

வான்யா  தாயை இழந்தவன், அவன் தந்தை இரவு வேலை செய்பவர் என்பது அவருக்குத் தெரியும். 

முள்ளை  அகற்றி, மருந்திட்டு, உணவூட்டி, தூங்கச் செய்து, தோளில்  சுமந்து அவன் வீட்டில் விட்டு வருவார்.

இன்னொரு நாள், வில்லோ மரங்கள் வட்டமாக வளந்த மொட்டைக் குன்றின் உச்சியில் அமர்ந்து கதை சொல்வார்கள்.


"குழந்தைகளே, இவ்விடத்தில் நடந்த கதை ஒன்றைச் சொல்லட்டுமா?


சில ஆண்டுகளுக்கு முன் நடந்த மாபெரும் தேச பக்திப் போரிலே, எங்கள்  நாட்டுக்கு ஆரம்பத்தில் தோல்வி மேல் தோல்வியே கிடைத்தது.


எல்லை தகர்த்து உள்  நுழைந்த எதிரிகள், மிக வேகமாக முன்னேறி வந்தனர்.

இந்த இடத்துக்கு இளைஞனான இயந்திரத் துப்பாக்கிவீரன் ஒருவன் வந்தான்.

இந்தக் கிராமத்தை எதிரிகள் கடந்து செல்வதைத் தடுப்பதற்காக, அவன் இந்தக் குன்றில் தனது இயந்திரத் துப்பாக்கியை நிறுவினான்.

பாதையில் எதிரிகளின் மோட்டார் சயிக்கிள்கள் தோன்றின. அவர்களை வீரன் கொன்றொழித்தான்.

இந்தக் குன்றின் மீது டாங்கியை ஏவினார்கள் எதிரிகள்.

அதோ அந்த மரங்களின்  அருகே வந்து அது தனது பீரங்கியிலிருந்து தீயைக் கக்கியது.

வெடி ஓசை ஓய்ந்த பின்னர், பாதையில் மீண்டும் மோட்டர் சயிக்கிள்கள் தோன்றின.

குன்று மீண்டும் உயிர் பெற்றது.

மறுபடியும் மறுபடியும், இந்தக் குன்றைப்  பணியச் செய்யப் பார்த்தனர் எதிரிகள்.


 செல்களும் வெடி குண்டுகளும் இந்தக் குன்றின் மீது மழை போல் பொழிந்தன.

ஆனால், எப்போதெல்லாம் பாதையில் எதிரிகளின் மோட்டர் சயிக்கிள்கள் தோன்றினவோ, அப்போதெல்லாம் குன்றில் இருந்து ஒற்றை இயந்திரத் துப்பாக்கி அவர்களைக் கொன்று குவித்தது.

பலத்த இழப்புகளின் பின் பாதையை மாற்றினர் எதிரிகள். இந்தப் பாதையை விடுத்துச்  சுற்றுப் பாதையால் இந்தக் கிராமத்தைக் கடந்து சென்றனர். "

ஆசிரியர் நிறுத்துவார்.

"வீரனுக்கு என்ன நடந்தது? " என்று விழி விரியக் கேட்பர் குழந்தைகள்.

"வீரன் தப்பி விட்டான். இன்னும் பல போர்க் களங்களில்  போர் செய்தான். போர் நமக்கு வெற்றியுடன் முடிந்த பிறகு, தனது ஊரில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்!"

"இது மிகவும் நல்ல கதை. மறுபடியும் சொல்லுங்கள்!" என்று கத்துவான் வான்யா.

"சந்தோஷமான முடிவுகள் எனக்குப் பிடிக்கும்!" என்று புன்னகை செய்வாள் சாஷா.

ஆசிரியன் சொல்வார்.

"குழந்தைகளே, இந்த ஸ்டெப்பி  வெளி இன்றைக்கு அமைதியாக இருக்கிறது. மரங்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. வானம் நிர்மலமாயிருக்கிறது. இந்த அமைதிக்கும் சந்தோஷத்திற்கும் சில வருடங்களுக்கு முன் பேரபாயம் நேர்வதற்கிருந்தது என்பதை மறக்காதீர்கள். எத்தனையோ வீரர்கள்  குருதி சிந்தி இந்த நிலத்தை உங்களுக்குக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். இதோ நீங்கள் நிற்கும் இந்த மண்ணிலே உயிர் பறிக்கும் உலோகங்கள் தூவப் பட்டிருக்கின்றன. இன்றைக்குச் சந்தோஷமாகப் பாடுகிற பறைவைகளின் காதுகள் வெடி ஓசைகளால் புண் பட்டுப் போயிருக்கின்றன. ஆகவே, இந்த அமைதியையும் நிம்மதியையும் இன்னும் அதிகமாக நேசியுங்கள்."

குழந்தைகள் சிந்திப்பர்.

அந்தப் பாடசாலையிலே வருட இறுதி வருகிறது.

ஐந்து வருடங்களாக ஆசிரியர் அரவணைத்து வழி நடத்திய வான்யாவும் சாஷாவும் கோல்யாவும்  மற்றக் குழந்தைகளும் ஆரம்பப் பள்ளியை நிறைவு செய்யும் நாள்.  நடுநிலைக் கல்விக்கு அவர்கள் வேறு பாடசாலை செல்லவேண்டும்.

ஆசிரியர் ஆண்டு இறுதிக் கொண்டாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்கிறார். வழமை போலவே, கற்றல் நிறைந்த விளையாட்டுகள் நிறைந்ததாக அது  இருக்கிறது. கடைசியாக ஆசிரியரின் உரையுடனும், இரவு உணவுடனும் அது நிறைவு பெறுகிறது. குழந்தைகள் வீடு செல்கின்றனர்.

அடுத்த நாள் தகவல் வருகிறது -  அவர்களது ஆசிரியர் கடும் சுகவீனம் உற்றிருப்பதாக!

குழந்தைகள் வைத்திய சாலை செல்கின்றனர்.

ஆசிரியர் கட்டிலில் படுத்திருக்கிறார். நினைவு தவறி விட்டது. சுவாசம் வேகமாகவும் ஒழுங்கின்றியும் இருக்கிறது. கவனிக்கும் வைத்தியர்களின் முகங்கள் இருண்டிருக்கின்றன.

கட்டிலின் பக்கத்தில் தலை குனிந்து நிற்கிறார் பாடசாலை முதல்வர். அவரிடம் வான்யா  கேட்கிறான்:

"என்ன சுகயீனம், எங்கள்  ஆசிரியருக்கு? எப்படி இவ்வளவு மோசமானார்  திடீர் என்று?"

முதல்வர் சொல்கிறார்:

"குழந்தைகளே, உங்கள் ஆசிரியர் மிகப் பெரிய போர் வீரர்.


மாபெரும் தேச பக்திப் போரிலே, நாட்டைக் காப்பதற்காக அவர் போர் முனைக்குச் சென்றார். பல போர்க் களங்களிலே  எதிரிகளைக் கொன்று குவித்தார்; விரட்டி அடித்தார். தாமும் பல காயங்கள் பட்டார். அவர் பெயர் கேட்டாலே எதிரிகள் நடுநடுங்க வைத்தார். 

கையிலே தடி எடுத்தறியாதவரும் மலரிலும் மென்மையாக உங்களை நடத்தியவருமான உங்கள் ஆசிரியரா கொலைத் தொழிலில் இவ்வளவு வல்லவராயிருந்தார் என்று நீங்கள் வியப்பது புரிகிறது.

அவர் மிகப் பெரிய போர் வீரர். ஆனால் போர் வெறியர் அல்ல.

அம்பை அதனுடைய வேகத்திற்காக அவர் விரும்பவில்லை.  வாளை  அதனுடைய கூர்மைக்காக அவர் கொண்டாடவில்லை. போர் வீரனை அவனுடைய மறத்திற்காக அவர் மதிக்கவில்லை. ஆயுதங்களும் ஆண்மையும் எதனைக் காப்பாற்றி நின்றனவோ, அதைனையே அவர் நேசித்தார். இந்தத் தேசத்தின் ஆத்மாவை நேசித்தார்.

இந்தக் கிராமத்திற்கு எதிரிகள் வந்த போது, ஒற்றை மனிதராக அவர் நின்று  எதிரிகளை விரட்டி அடித்தார். அந்தக் கதையை ஒரு வேளை  அவர் உங்களுக்குக் கூறி இருப்பார். ஆனால், கதையில் வரும் வீரன் தான்தானென்று கூறி இருக்க மாட்டார்.

அந்தச் சண்டையில், எதிரிகளின் குண்டுகள் அவரது முள்ளந்தண்டின் அருகில் புதைந்தன. அவரது இதயத்தைச் சுற்றிக் காயங்கள் பட்டன. ஷெல் குண்டுச் சிதறல்கள் அவரது நுரையீரலைச் சிதறடித்தன.

போரின் பின் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவரது வாழ்வுக்கு ஐந்து வருடம் கெடு  வைத்தார்கள். தமக்கு மிஞ்சி இருந்த நேரத்தை இந்த நாட்டின் எதிர்காலச் செல்வங்களை உருவாக்க அவர் அற்பணித்தார். தனது உடல் நிலை பற்றிப் பேசுவதை அறவே நிறுத்தி, தனது பொன்னான இதயத்தை முழுவதும் குழந்தைகளுக்கே கொடுத்தார்.


"இவ்வளவு நாளாக, போரின் கொடிய வடுக்களைத் தாங்கிய ஒரு மனிதர், உயிர் பறிக்கும் உலோகத் துண்டுகளைத் தனது உடலிலே சுமந்த ஒரு மனிதர், தேசத்தைக் காப்பாற்றப் போர் முனைக்குச் சென்று, குருதியையும் இறப்பையும் கண்டு, நுரையீரலில் பட்ட கொடிய காயங்களால் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர், உங்களுக்குக் கற்பிக்கிறார், உங்களுடன் மிக மிக  மென்மையாகப் பழகுகிறார், உங்களை வயலுக்கும் காட்டுக்கும் கூட்டிச் செல்கிறார், உங்கள் காலில் தைத்த சிறு முள்ளையும்  உங்களுக்கு வலிக்காமல் எடுத்து விடுகிறார் என்று, குழந்தைகளே, உங்களுக்குத் தெரியாது."

முதல்வர் குழந்தைகளை வெளியே அழைத்து வருகிறார்.

அடுத்த நாள் காலையிலே பனித் திரளை விலக்கிக் கொண்டு ஸ்டெப்பி  வெளிகளுக்கு மேலே எழுகின்ற சூரியன், கிராமத்து ஆரம்பப் பாட சாலை மண்டபத்தில் செங்கொடியால் போர்த்திய ஆசிரியரின் உடல் வைக்கப் பட்டிருப்பதைப் பார்க்கிறது.

அந்தக் கிராமத்தில் இருந்த மனிதர்கள் அனைவரும், ஆண்கள் பெண்கள் முதியவர் குழந்தைகள் பேதமின்றி அங்கே  கூடியிருக்கின்றனர்.


இரண்டு நாட்களின் முன் வருட இறுதியில்  ஆசிரியர் தன்  குழந்தைகளுக்கு ஆற்றிய உரையை ஒலிபெருக்கியிலே போட்டிருக்கிறார்கள்.


ஆசிரியரின் உரை காற்றில் மிதந்து வருகிறது.

" என் இனிய குழந்தைகளே! கோடைக் காலம் முடிந்து விட்டது. இது விடை பெற்றுக் கொள்ளும் நேரம். மரங்களின் உச்சிகளின் சூரியனுடைய கடைசிக் கிரகணங்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஆற்றங்கரை வில்லோ  மரங்களில் வானம் பாடிகள் கூடு கட்டுகின்றன. வயல்களில் 'ட்றக்டர்' களின் முழக்கம் கேட்கிறது.  எதிர் காலத்திலே ஒருநாள் நீங்கள் உங்கள் பள்ளிப் படிப்பை முடித்து முழு மனிதர்களாகச் சமூகத்தினுள் பிரவேசிப்பீர்கள். உங்களை நான் வாயார மனமார வாழ்த்துகிறேன். ஆண்மை நிறைந்த தேசத்தின் உண்மையான மனிதர்களாக, நேர்மையும் கனிவும் கொண்ட இதயமும், தெளிவான அறிவும், தங்கக் கைகளும் படைத்தவர்களாக, உங்கள் ஒவ்வொருவரையும் நான் பார்க்கிறேன்."

கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரிய ஜனக் கூட்டத்திலே ஆறாகப் பெருகாத கண்கள் இருக்கவில்லை.