அக்காவின் ஆதங்கம் - சிறுகதை - V.S. கணநாதன்

.

அன்று காலை மோகன் கிறீஸ்தவ  ஆலயத்துக்குப் போக  லம்ரோடு  பஸ் நிலையத்தில் நின்றான். வழக்கமாய் வரும் 848  நம்பர்  வண்டி தாமதமாயிற்றே என்று வருந்தும்போது,   அவன் எதிரே ஒரு புத்தம் புது டொயோடா   கார் வந்து நின்றது

அதை ஓட்டிய யுவதி கண்ணாடியைக் கீழே இறக்கினாள்.  “நீங்கள் ஆலயத்துக்குத் தானே  செல்கிறீர்கள்,”  என்றாள்
அது கேள்வியா அல்லது கூற்றா? You are going no என்று ஊரில் சொல்கிற மாதிரி  இருந்தது அவள்  பேச்சு.   

என்ன, கடும், யோசனை?”

 “ஆமாம்கிறீஸ்தவ ஆலயத்துக்குப்  போக வேணும், ” என்று அழாக் குறையாய் கூறினான்.

முன் கதவைத் திறந்து அவனை அமரச் சொன்னாள்.

கார்  ரேடியோவில் இயேசு பாட்டு கேட்டவன்,  கொஞ்சம் தைரியம் அடைந்து  ஸீட்டில் உட்கார்ந்தான்



போகும் போது அவள் ஒன்றும் பேசவில்லை.  ஆனால்  பஸ் செல்லும்  வெல்லிங்டன்  ரோடு வழியில் போகமல் வேறு பாதையில் கார்  பறந்ததுஅய்யய்யோ!    அம்மா சொன்னவா முன்பின்  தெரியாதவரோட  போகாதே  என்று.  என்ன செய்ய?

 “உன் முகம்  ஏன் வியர்த்திருக்கு?”  என்று கேட்டாள்,
இங்கே  என்னை  இறக்குங்கோ! தயவு செய்து இறக்குங்கோ!!”
ஐந்து  நிமிடம் பேசாமல் இரு,”  என்று அதட்டினாள்.
அவன் பயத்தில் கண்களை மூடினான்.  செல் போன்லே 000   அமத்த அவனுக்குத் தைரியம் வரவில்லை.

இருந்தாப்போல  கார்  பிரேக்  போட்ட  சத்தம்  கேட்டதும்,  அவன் கதவைத்  திறந்தான். தப்பினேன்  பிழைச்சேன்  ஏசுவே, என்று  நினைத்தவனுக்கு,  ஆச்சரியத்தில் மூச்சுத்   திணறியது.  அவன்  ஞாயிறு தோறும்  கும்பிடும்  கோயில்  வாசல்முன்  கார்  நின்றது.  அவளுக்கு  நன்றி  கூடச் சொல்ல  மறந்து  உள்ளே  ஓடினான்.

எல்லோரும்  முழங்காலில் மண்டியிட்டுக்  கண்களை மூடிப்  பிரார்த்தனை  செய்த பின்னர்,  தத்தம் இருப்பிடத்தில்  அமர்ந்தனர்.
ரெவெரென்ட்  மைக்கேல்  தாம்ஸன்  மேடையில் ஏறிப் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.  அவர் குரல் கணீரென்று வாசல்  வெளியே  நின்றவர்க்கும்  எட்டியது.  “நாங்கள் அனைவரும் பிற நாடுகளிலிருந்து  இங்கு  வந்து  குடியேறினவர்கள்.  ஆகவேஎல்லா மதத்தினரையும் இனத்தவரையும் மதித்துஅவர்கள் மனம் கோணாமல், நாம் ஒற்றுமையாக இந்தப் பொன்னான  அவுஸ்த்திரேலியாவில்  வாழ  வேண்டும்.   இயேசு நாதர்  போதித்தபடி  எங்கள் அயலவரை  எங்கள்  சகோதரராக  நினைத்து  அன்புடன்  வாழ்வோமாக.”
பாதிரியாரின்  பிரசங்கம்  முடிந்த பின்னர், மோகன் எழுந்து  தனக்கு  உதவிய  அந்த இளம் பெண்ணைத்  தேடினான்அவளிடம் அநாகரிகமாகப்  பேசியதை  நினைத்து  அவன்  மனம் வேதனைப்பட்டது. அவளை ஆலய வாசலில் கண்டு,  அங்கே  விரைந்தான் . “மன்னிக்கவும்.  இங்கே  என்னைக் கூட்டி வந்ததுக்கு மிக்க நன்றி.”

அவள் உடனே தன் பெற்றோரை  அவனுக்கு   அறிமுகப்  படுத்தினாள். அவள்  தந்தை, தங்கள் வீடு அந்த  ஆலயம் பக்கத்தில் இருப்பதால் தன் மனைவியுடன்  நடந்தே வந்திடுவார் என்றும்தாங்கள் கிரேக்க நாட்டு வம்சா  வழியினர் என்றும் ஒரே மூச்சில் கூறினார். “என் மகள்  மேரி ஓர்  மருத்துவ மனையில் நர்சாகப்  பணிபுரிகிறாள்.  கடந்த நான்கு மாதங்களாய் வேலைக்கு சென்றுவர வசதியாய் இருக்கும் என்று ஜாக்சன் ரோட்டில் வாழ்கிறாள்.”

அப்பா,   நீங்கள்  அவருக்கு முதல் சந்திப்பிலே என்னைபப்  பற்றிக்  கூற வேண்டாம்,”   என்று சொல்லிச்  சிரித்தாள்.  அவள்  சிரிக்கையில் அவள்  பல் வரிசை முத்துப்போல் தெரிந்தது.

உங்களுக்கு  ஏதும்  உதவி  வேண்டுமானால்  நீங்கள்  என்னை  இந்த  நம்பரில்  தொடர்பு  கொள்ளலாம்,” என்று சொல்லித்  தன் விசிட்டிங் கார்டைக்  கொடுத்தார்.  பின்னர் மூவரும் அவனிடம் விடை பெற்றுச் சென்றனர்.

மோகன்  கொழும்பிலிருந்து வந்த பொறியியலாளன்.  மெல்பேர்ன் நகரில்  பாலம்  கட்டும்  கம்பனியில்  பணி புரிந்தான்.  இங்கு வந்தவனுக்கு எல்லாம் புதுசாக இருந்தது.  ஊரில் அம்மா சமைத்துப்  போடுவாஅக்கா அவன் துணிமணி தோய்த்து,  இஸ்திரி போடுவா.   தம்பி இருவர் மோகனுக்கு எடுபிடி வேலை செய்வர்.  ராசாவாக ஊரில் திரிந்தவனுக்கு  அவுஸ்திரேலியா வந்ததும், தானே எல்லா வேலையும் செய்ய ஒரு நாள் போதாத மாதிரித் தோன்றியது.

சாயந்திரம் வீடு திரும்பியதும், உடுத்த துணியைக் களுவிக் காயப்போடுவான். அடுத்த நாள் உடுக்கிறதை இஸ்திரி போட்டு, சமையலை ஆரம்பிப்பான். சமைத்த காய்கறிகளை இரு கூறாய்ப் பிரிப்பான். பெரிய பங்கைச் சாதத்துடன் சாப்பிட்ட  கையோடு, மீதியை அடுத்தநாள் மதிய உணவுக்கு ஒரு பெட்டியில் அடைத்துக்  குளிர்ப்பெட்டியில்  வைத்த பின்னர், கழுவின பாத்திரங்களை ஒதுக்கி, படுக்க இரவு பதினொன்றரை மணியாகிடும்.  
காலையில் ஈரத் தலையைத்  துடைக்க நேரமில்லாமல் ஆறிப்போன டீயை அரை மனதுடன் அருந்தி,  இரண்டு வாழைப் பழங்களை விழுங்குவான்.  குளிர்சாதனப்  பெட்டியில் இருக்கும் மதிய உணவை ஒரு ஹாண்ட்பாகில் வைத்து வேலைக்குக்  கிளம்ப மணி ஏழாகிடும்.

அம்மா அக்காவின் அருமையை இப்போதான் அவன் உணர்ந்தான்வந்ததுக்கு  அவர்களுக்கு கடிதம் எழுதக் கூட  நேரம்  இல்லாமல் இருந்தது.  நான்கு வராங்களுக்கு ஒரு தடவை அடுத்த வீட்டு மாமிக்கு  போன் பண்ணி  அம்மாஅக்காவோட பத்து  நிமிடம் பேசமுன் செல் போன் சார்ஜ் தீர்ந்துடும். மாதச் சம்பளம் வாடகைக்கும், போக்கு வரத்து செலவுக்கும், மீதி உணவுக்கும் மட்டுமட்டாக இருந்தது. இதென்ன நொண்டிச் சாக்கு என்று அவன் உள் மனது உறுத்த, தலையணையை  முகத்தில் அழுத்திப் படுத்தான்

வேலைக்குச் செல்ல மோகன் காலை 7.20க்கு  வரும் 693  நம்பர்   பஸ்ஸில் வழக்கமாக ஏறுவான். ஓக்லே  ரயில் நிலையத்தை அடைந்ததும் அவன் அங்கிருந்து  மெட்ரோ  ரயிலில்  பிரயாணம்  செய்து, மெல்பௌர்ன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்குவான். வழக்கம் போல் ஒரு நாள் காலை 693 நம்பரைப் பிடிக்க விரைந்து நடந்தான். அவனருகே ஓர் கார் வந்து நின்றது.  
       
நீங்கள் எங்கே போகணும்?”  என்று ஓர் பெண் குரல் கேட்டது.
ஆலயத்தில் அறிமுகமான மேரி என்று அவளைப் பார்க்க  முன்னரே உணர்ந்தான்.  தூரத்து இடத்தை சொன்னால் அவள் போயிடுவாள் என்ற  நினைப்பில்,  “நான் ஓக்லே ரயில் நிலையத்துக்கு போறேன்,” என்று நடந்தவாறு பதில் அளித்தான்.  

மெல்லக்  கார் அருகில் நகர்ந்தது. "ஏறுங்கள். நானே உங்களை ரயில் நிலையத்தில் இறக்கிவிடறேன்எனக்கு அந்தப்பக்கம் போக வேண்டிடியிருக்கிறது.”

இவள் ஏன் தன்னைத் துரத்தி துரத்தி வாறாள்சரி   இன்றைய மட்டும் போனால் தவறில்லை என்று எண்ணியவன்நன்றி கூறி அவள் பக்கத்தில் அமர்ந்தான்.

சீட் பெல்டை போடுங்கள் ,” என்று சற்று உரத்துச் சொன்னாள்.
இவள் யார் என்னை அதட்ட?   பெல்டை போட்டு அவளைக்  கடைக் கண்ணால் பார்த்தான். அவள் யாருடனோ ஏதோ பாஷையில் போனில் பேசி விட்டு வண்டியை ஓட்டினாள்

ஸ்டேஷன் வந்ததும்,   அவன் கையைத் தொட்டு,  “இன்று மழை நாள். இந்தாங்கோ, இந்தப் பிளாஸ்டிக் ரேன்கோட்டை அணியுங்கள்," என்றாள்வெளியே மழை ஆரம்பிக்கவும் அவள் வற்புறுத்தலுக்கு இணங்கி நன்றி கூறினான்.  அவன்  அவசரமாக அதை அணிந்து கொண்டிருக்கையில், "நான் தினமும் இந்த வழியே செல்வேன். ஆட்சேபனை இல்லை என்றால், நானே வந்து உங்கள் வீட்டிலிருந்து கூட்டிச்  செல்கிறேன். விலாசத்தைத் தாங்கோ,”  என்றாள்

அவன் மறுமொழி கூறாமல் ஒரு அசட்டுச் சிரிப்புடன் விறுக்கென்று நடந்தான். இனிமே வேறு பாதையில் போக வேண்டியதுதான்.

அடுத்த நாள் வேளைக்கு வீட்டிலிருந்து கிளம்பினான். அப்பாடா இன்று அவளைத்  தவிர்க்கலாம் என்று நினைத்தான். ஆனால்  அலுவலகத்தில்  சிகூரிட்டி இருவர் டியூட்டி மாறமுன் டீ அருந்திக்கொண்டிருந்தனர்.  வேறு   ஒருத்தரையும் காணவில்லை. "மேனேஜர் எட்டு மணியளவில்தான் வருவார்,” என்றான்  ஒருவன்.  

மேரியின் தொல்லையைத் தவிர்க்க மேலும் இரண்டு நாட்கள் அதிகாலை கிளம்பிய மோகனுக்கு அலுப்புத்  தட்டியது. வீட்டில் எத்தனையோ வேலைகளிருக்க இங்கே சும்மா நேரத்தைக் கழிக்கிறேனே, என்று வருந்தினான்.

ஆகவே, வெள்ளிக்கிழமை முந்தியபடி 7.20 வண்டியில் ஏற பஸ் நிலையத்துக்குச்  சென்றான். அவள் வந்தால் திடமாக மறுப்புக் கூறுவேன். அத்தோடு அவள் தந்த  ரேன்கோட்டைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
நல்ல வேளை அன்று அவள் கார் வரவில்லை. அதேமாதிரி ஞாயிற்றுக்கிழமை ஆலயத்துக்கும் அவள் வரவில்லை. அவள் பெற்றோரைக்  கண்டவன், வேறு பக்கமாய் உட்கார்ந்தான்

திரும்பி வீட்டுக்கு வந்த மோகனுக்கு ஏதோ மனதை உறுத்தியது. அவன் பிரார்த்திக்கும் போதும் அவ்வப்ப அவள் முகம் வந்து வந்து போனது என்று உணர்ந்த மட்டில் ஆச்சரியமடைந்தான்.
திங்கட்கிழமை காலை வழக்கம் போல் நடந்தான். அவள் காரைக்  காணாது அவனுள் ஓர் ஏக்கம் எழுந்தது. ஒரு வாரமாய் அவள் அவன் கண்ணில் தென்படவில்லை. அவளுக்கு என்ன ஆயிட்டுது?
அடுத்த வாரமும் அவளை ஆலயத்தில் காணாமல் அவன் மனம் தத்தளித்தது. அவன் பிரார்த்தனை எல்லாம் அவளைப்  பற்றியே இருந்தது. எதேச்சையாய் அவள் பெற்றோரைக் கண்டவன், அவர்களிடம் சென்று மேரியின் சுகத்தைப்  பற்றி  விசாரித்தான்.

அவள் நல்லாய்த்தான் இருக்கிறாள், என்றார் தகப்பன். ஆனால் ஞாயிறு தோறும் இனிமேல் அவளுக்கு வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ஆகவே அவள் திங்கள் மாலை இங்கே வந்து பிரார்த்தனை செய்வாள்.
மோகன் அவளின் போன் இலக்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். அன்றிரவு அவளுக்கு போன் பண்ணினான். உங்களை ஒரு வாரத்துக்குமேல் காணவேயில்லை.”

நான் அதி காலை கிழம்பிடுவேன். நிறைய வேலை இருக்கு.
அப்படி என்ன வேலை?”

இப்போ ஒரு ஸ்பெசல் நோயாளிக்கு சிகிச்சை நடக்குது. அது என்னால் தான் முடியும் என்று மேற்றன் சொன்னா.
என் வீட்டுக்கு, நீங்கள் எதிர்வரும் சனிக்கிழமை தேநீர் அருந்த வாங்கோ, என்று அழைப்பு விடுத்தான்.

அவள் ஒரு கணம் பேசவில்லை.
அவன் மனதில் பலவித ஏக்கங்கள் உண்டாகின.
அடுத்த ஞாயிறு நீங்கள் ஆலயம் சென்ற பின்னர் என் வேலை இடத்துக்கு வாங்கோ. நாங்கள் அங்கே சாவகாசமாகப் பேசலாம், என்றாள்.

உங்கள் நோயாளி இருப்பாரே.
அவர் ஒன்றும் சொல்ல மாட்டார், என்று கூறித் தன் வேலை விலாசத்தைச் சொன்னாள்.  

மோகன் மெட்ரோ ரயில் வண்டி சீட்டில் உட்கார்ந்து அவளைப் பற்றி யோசித்தபடி இருந்தான். ஜோடிகள் பலர் ரயிலில் ஏறினர். ஒருவருக்கு ஒருவர் அன்னியோன்யமாக பேசுவதையும் ஆனந்தமாக கண் சைகை காட்டுவதையும் கவனித்தான்.

அக்கா எழுதிய கடிதம் முழுதும் வாசிக்க வேண்டும் என்று நினைத்துப்  பாக்கெட்டில் இருந்ததை எடுத்தான். அதில் பாதி அதைச் செய்யாதே இங்கே போகாதே என்று இருந்தது. அக்காவின் ஆதங்கத்தை நினைத்து அவன் சிரித்தான்.

எதிரில் இருந்தவன், காதல் கடிதமோ?” என்று கேலியாய்  கேட்டான்.
இல்லே, என் அக்காவிடமிருந்து வந்திருக்கு.
அப்போ நிறைய நல்ல புத்திமதி சொல்லியிருப்பாள்.
அவன்  சொன்னதை பொருட்படுத்தாது, மீண்டும் வாசிக்க ஆரம்பித்தான்.
நீ ராஜன் அண்ணாமதிரி அய நாட்டு பெண்ணை கட்டிநியோ நாங்க செத்தோம் என்று நினை. கடிதத்தில் நிறைய எழுத்துப் பிழை. ஆனால் கார சாரமாய்  சொல்ல வேண்டியதை அக்கா எழுதித் தள்ளுவா. ஏன் அக்கா இப்படி திட்டிறாய்? சிலர் நல்லவர்கள் என்று நினைத்த உடனே மேரி அவன் மனதில் தோன்றினாள். அவனை அறியாமலே அவனுக்கு  அவள் மேல் ஒரு பாச உணர்வு ஏற்பட்டது.
மெல்பௌர்ன் சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும் அவன் இறங்கி தன் பணியிடத்துக்குச் சென்றான். அன்று அவனுக்கு வேலையில் மனம் ஓடவில்லை. அவன் மேலதிகாரி, ”உடம்புக்கு ஏதும் அசௌகரியமா?” என்று கேட்டார்.

இருக்கையில் இருந்து எழுந்து, அப்படி ஒன்றும் இல்லை,” என்றான்.  
அவர் சிரித்தவாறு,  “நீ என்னோட பேசும் போது எழுந்திருக்க வேண்டாம். ஆனால் வேலையை நன்றாய் செய்தால் அது எனக்கு சந்தோசம்,” என்றார்.

மேரி  சொன்னபடி அன்று ஜபம் முடிந்ததும், அவள் பணிபுரியும்  இடத்தைத்  தேடி மோகன் சென்றான். அது ஒரு பெரிய கட்டிடம். மூன்றாம் மாடி என்று ஒருவர் சொல்லி அவனைக் கூட்டிச்  சென்றார். ஒரே நிசப்பதம். வெள்ளைச்  சிவர்கள். வெள்ளை உடுத்த தாதிமார் அங்கும் இங்கும் அவசர அவசரமாகச்  சென்றனர். எங்கேயோ ஆடு கத்தினமாதிரி அலறல் கேட்டது.

இரண்டாம் நம்பர் வார்டில் மேரி ஏதோ வேலையில் மூழ்கி இருந்தாள். அவள் வெள்ளை அணி அவளைத் தேவதையோ என்று நினைக்க அவனுக்குத் தோன்றியது. அறைக் கண்ணாடி ஊடா  நடப்பதைக்  கவனித்தான். ஒருவர் அவனுக்குத் தெரிந்த முகம் போல் இருந்தது. சேச்சே! எனக்கு  இந்த  ஊரில்  எல்லாம் புது முகங்கள்.
தலையில் கட்டுப்போட்டிருந்த அந்த  நோயாளிக்கு மேரி உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். இருந்தாப் போலே அவன் தன்  வாயில்  இருந்ததைத்  துப்பினான். பாவம் மேரிமுகம் முழுதும் பசை பசையாயிருந்தது. அதை ஒரு கையால் துடைத்த வண்ணம், மீதியை அவனுக்கு ஊட்டி அவன் வாயைத் துடைத்தாள்.  
 
திரும்பினவள், யதேச்சையாய் மோகனய்க் கண்டாள்அவள் முகம் சிவந்தது. உடனே தன் கைகளையும் முகத்தையும் தண்ணீரில் அலம்பித்  துடைத்தபின்அவனருகே விரைந்து வந்தாள்.
அந்தாளுக்கு கன்னத்துலே ஓர் அறை கொடுங்கோ. அல்லது பட்டினி போடுங்கோ. அப்படித்தான் அம்மா ராஜன் அண்ணாக்கு செய்தா அவர் சின்னப்  பிள்ளையாய் இருந்த ..."
ராஜன் இப்போ பெரியவன். முப்பத்தைந்து  வயது  மனிதனை நான் அடிக்கலாமா? அதுவும் என் ஆசைக் கணவரை?”
மோகனுக்குத் தலை சுத்த, அவள் கையைப் பிடித்தான். “நீங்கள் என்ன விசர் அலட்டுறீங்கள்?”

அன்றிரவு அவனுக்குத்  தூக்கமே வரவில்லை. எழும்பி கொஞ்சம் தண்ணீர் குடித்தான். மேரி சொன்ன விபரத்தை நினைத்து கண்ணீர் விட்டான்.
ராஜன் ஓர் கார் விபத்தில் அடிபட்டு, இப்பதான் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு வருது. அந்த விபத்து நடக்க சில வாரங்களுக்கு முன்னம், அவரிடம் இருந்த உங்கள் படத்தைக் காண்பித்து, தன் தம்பி வருவான் கெதியில். நாங்கள் அவனுக்கு வேண்டிய உதவி பண்ணவேண்டும்  என்று கூறினார்.”

***