கொழும்பு வடக்கில் மனதுக்கு இதமானதொரு சூழல்
சீனாவின் காலடியில் இலங்கை மண்டியிட்டமைக்கான காரணத்தை விளக்குகிறார் கெஹலிய
ஜனாதிபதி சட்டத்தரணி சுரேந்திரன் காலமானார்
சாவகச்சேரி மீட்கப்பட்ட தற்கொலை அங்கி சம்பவத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இரு இலங்கையர் சம்பந்தமா ?
சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி கொள்வோம் : ஜனாதிபதி வாழ்த்து
65 ஆயிரம் வீடுகளை பெறுபவர்களின் பெயர், விபரங்கள் இதோ
கொழும்பு வடக்கில் மனதுக்கு இதமானதொரு சூழல்
11/04/2016 கொழும்பு வடக்கில் 275 மில்லியன் ரூபா செலவில் மீள்நிர்மாணிக்கப்பட்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இதனை அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை முதல்வர் முஸம்மில் ஆகியோர் திறந்து வைத்தனர்.7.5 ஹெடேயர் பரப்பளவைக் கொண்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா, 275 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பூங்கா, 24 கடைகள் மற்றும் ரெஸ்டுரட் வசதிகளையும் கொண்டமைந்த இக் கடற்கரைப்பூங்கா வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் கவரும் வகையில் அமையப்பெற்றுள்ளமை இதன் விசேட அம்சமாகும். நன்றி வீரகேசரி
சீனாவின் காலடியில் இலங்கை மண்டியிட்டமைக்கான காரணத்தை விளக்குகிறார் கெஹலிய
12/04/2016 உலக பொருளாதாரத்தில் சீனா அசைக்க முடியாத சக்தியாக உருவாகிவருகின்ற யதார்த்தமே அரசாங்கத்தை சீனாவின் காலடியில் விழ வைத்ததுள்ளதென முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகர்த்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் சீனாவுக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேந்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு துறைமுக நகர்த்திட்டத்தை நிறுத்துவதாகவும் இலங்கை சீனாவின் கொலணியாக மாறியுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியினர் கூறியதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை.
எமது முன்னைய அரசாங்கம் சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்தபோது எதிர்க்கட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்தது.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. சீனாவை கடுமையாக விமர்சித்த ஐக்கிய தேசிய கட்சி இன்று அதன் காலடியில் விழுந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதனை நாம் ஆராயவேண்டும்.
அதாவது உலக பொருளாதாரத்தில் சீனா அசைக்க முடியாத சக்தியாக உருவாகிவருகின்றது என்ற யதார்த்தமே அரசாங்கத்தை சீனாவின் காலடியில் விழ வைத்தது. இதுதான் யதார்த்தமாகும் என அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
ஜனாதிபதி சட்டத்தரணி சுரேந்திரன் காலமானார்
12/04/2016 பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி இரத்தினவடிவேல் சுரேந்திரன் நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் காலமானார். கொழும்பு விவேகானந்த சபையின் தலைவராகவும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை உறுப்பினராகவும் விளங்கிய சுரேந்திரன், சட்டத் தொழிலில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப்பெற்ற பெருமைக்குரியவர். அமரர் ஆறுமுகம் இரத்தினவடிவேல் தம்பதிகளின் மூத்த மகனும், அமரர் சட்டத்தரணி வேலுப்பிள்ளை முருகேசு தம்பதிகளின் மருமகனுமாவார்.
திருமதி ரேணுகாதேவியின் (பாலர் பாடசாலை அதிபர்) அன்புக் கணவரும், பிரசாந்தன், பவித்திரா, காலஞ்சென்ற பிரதர்சனி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
பிரசெல்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டங்களில் முதுமாணிப்பட்டம் பெற்ற சுரேந்திரன், இலண்டன் பல்கலைக்கழகத்தில் உயர் சட்ட ஆராய்ச்சிப்பீடத்தில் ஆராய்ச்சி செய்திருப்ப துடன், ஐக்கிய நாடுகள் சட்டபீடத்தில் சர்வதேச வர்த்தக சட்டத்தில் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.
2004 இல் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார். இலங்கைச் சட்டக் கல்லூரியில் பரீட்சகராகவும் இருந்த இவர் வெளிநாடுகளிலும், இலங்கையிலும் நடந்த பல சட்ட மாநாடுகளிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் விரிவுரைகளும் நிகழ்த்தியுள்ளார். காணி மோசடி மற்றும் தேசவழமைச் சட்ட சீர்திருத்தக்குழு அங்கத்தவராகவும், இலங்கை சட்டத்தரணிகள் சபைச் சட்டக்குழுவின் தலைவராகவும் இருந்தார்.
யாழ்.மத்திய கல்லூரியின் புகழ்பூத்த பழைய மாணவரான இவர், அக்கல்லூரியின் மாணவ தலைவராக இருந்ததுடன் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையே நடந்த ஆங்கிலதினப் போட்டி யிலும் முதற்பரிசு பெற்றவர்.
பூதவுடல் அன்னாரின் கொள்ளுப்பிட்டி கார்வில்ஸ் பிளேஸ் இல.12 இல் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டு, நாளை புதன்கிழமை மதியம் 12 மணிக்கு கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 12.30 மணியளவில் தகனக்கிரியைகள் இடம்பெறும். நன்றி வீரகேசரி
சாவகச்சேரி மீட்கப்பட்ட தற்கொலை அங்கி சம்பவத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இரு இலங்கையர் சம்பந்தமா ?
13/04/2016 சாவகச்சேரி பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவருடனும் தொடர்பு பேணப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
அதன்படி குறித்த சம்பவத்துடன் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி கொள்வோம் : ஜனாதிபதி வாழ்த்து
13/04/2016 நற்குணங்களை மேலோங்கச் செய்யும் புத்தாண்டாக அமைய மனமார பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாந்தியும் சமாதானமும் நிறைந்த சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது,
இலங்கை வாழ் தமிழ் இந்துக்களினதும் சிங்கள பௌத்தர்களினதும் மிக முக்கியமான தேசிய கலாசார விழாவாகவே சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. இவ்விரு இனத்தவர்களும் தத்தமது கலாசார தனித்துவங்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கி இப்பண்டிகையினை கொண்டாடுவதே வழமையாகும். இது இலங்கையின் மேற்குறிப்பிட்ட இரு இனங்களுடன் இணைந்து ஏனைய இனத்தவர்களும் கூட ஒருவகையில் கொண்டாடும் தேசிய பண்டிகையாகவும் அமைந்துள்ளது.
நம் நாட்டின் முக்கிய கலாசார பண்டிகையாகிய சித்திரைப் புத்தாண்டு தனி மனித வாழ்க்கையையும் மனித சமூகத்தையும் புதுப்பித்து புத்துயிரூட்டி மனநிறைவையும் மகிழ்ச்சியையும் பெற்றுக் கொடுப்பதோடு புதிய சிந்தனைகளுடன் புதிய வாழ்க்கைக்கும் வழிவகுத்து வருகின்றது.
இப்புத்தாண்டின் போது ஒட்டுமொத்த சமூகமும் குறிப்பிட்ட ஒரு சுப நேரத்தில் உணவு சமைத்து உண்பது என்ற விடயம் ஏனைய எந்தவொரு குறிப்பிட்ட இனத்தவர்களிடமும் காணமுடியாத ஒரு அற்புதமான அம்சமாகும். அத்தோடு புத்தாண்டானது அர்ப்பணிப்பு, பாராட்டுதல், பகைமை மறத்தல், பெரியோரைக் கனம் பண்ணுதல், பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வடிவமாகும். சித்திரைப் புத்தாண்டில் இந்நற்குணங்களைப் புரிந்து அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து கலாசார உரிமைகளை பேணிப் பாதுகாத்தவாறு மனமகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.
சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ ராசிக்கு பயணிப்பதை குறித்து நிற்கின்ற அற்புதமான ஒரு பண்டிகையாகவும் சித்திரை வருடப்பிறப்பை குறிப்பிடலாம். புத்தாண்டுடன் புதுப்பொலிவுபெறும் இயற்கையுடன் எமது தொடர்புகளையும் புதுப்பிக்கும் ஓர் அபூர்வ சந்தர்ப்பமாகவும் இப்புத்தாண்டு அமைகின்றது. விருந்தோம்பல் மூலம் அனைவரையும் ஒன்றிணைக்கின்ற மங்களகரமான இந்நிகழ்வை தேசிய நல்லிணக்கத்திற்கு வலுவூட்டுகின்ற ஒரு முக்கிய பண்டிகையாகவும் கொள்ளலாம்.
இவ்வேளையில் அனைத்து இல்லங்களிலும் மங்கள ஒளி பிராகாசித்து அனைவரின் முகங்களும் மகிழ்ச்சியில் மலர்ந்து பகைமை உணர்வு தணிந்து தம் அயலவர்களை கருணை உள்ளத்துடனும் கனிவு மனதுடனும் பார்க்கப்பழகும் நற்குணங்களை மேலோங்கச் செய்யும் புத்தாண்டாக இச்சித்திரைப் புத்தாண்டு அமைய வேண்டுமென மனமார பிரார்த்திப்பதோடு சாந்தியும் சமாதானமும் நிறைந்த சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இப்புத்தாண்டில் நாம் அனைவரும் உறுதி கொள்ளுவோம். நன்றி வீரகேசரி
65 ஆயிரம் வீடுகளை பெறுபவர்களின் பெயர், விபரங்கள் இதோ
15/04/2016 வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் பெயர் விபரங்கள் இணையத்தளம் ஊடாக பகிரப்பட்டுள்ளன.
இந்த பெயர் விபரங்கள் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் ( resettlementmin.gov.lk ) இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் முதல் கட்டமாக யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, மருதங்கேணி மற்றும் சண்டிலிப்பாய் பிரதேசங்களுக்கான வீட்டுப் பயனாளிகளின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
65 ஆயிரம் வீடுகளுக்கு உரித்துடைய பயனாளிகளை தெரிவு செய்யும் பணிகள் பிரதேச செயலக மட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலகங்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வீடமைப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பயனாளிகள் தொடர்பிலான மீளாய்வுக்காகவும், உறுதிப்படுத்தலுக்காகவும், அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையை எடுத்துக் காட்டுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நன்றி வீரகேசரி